ஆசிரியர் – அரசு ஊழியர் போராட்டம் வெல்லட்டும்!
தமிழ் நாடு ஆசிரியர்-அரசு ஊழியர் கூட்டு நடவடிக்கை குழு(JACTO-GEO) முன்னரே அறித்தபடி 08-05-2018 அன்று தமிழ் நாடு தலைமைச் செயலக முற்றுகை போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது. அரசு பேச்சு வார்த்தைக்கு வரும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து இருந்த நிலையில், தற்காலிகமாக போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
தமிழக காவல் துறை தமிழ் நாடு முழுக்க தேடுதல் வேட்டை நடத்தி போராட்டத்தை ஒடுக்கும் விதமாக சங்க நிர்வாகிகளை முன்னெச்சரிக்கையாக கைது செய்தது. சென்னைக்கு பேருந்து,தொடருந்து என வந்து இறங்கிய ஆசிரியர்-அரசு ஊழியர்களை அடையாள அட்டையை கேட்டு பரிசோதித்து பார்த்து அங்கேயே கைது செய்து அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஒருங்கிணைய விடாமல் தடுத்தது. அத்தனையும் மீறி ஆசிரியர்-அரசு ஊழியர் சங்க உறுப்பினர்கள் தலைமைச் செயலகத்தை நோக்கி ஊர்வலம் சென்று முற்றுகை செய்ய முயன்றபோது ஆங்காங்கே கைது செய்யப்பட்டு மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தஞ்சாவூர் அரசு பள்ளி ஆசிரியர், மாற்றுத் திறனாளி தியாகராஜன் மரணமடைந்து விட்டார். இந்நிலையில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து வரும் 20-05-2018 அன்று அறிவிக்கப்படும் என ஆசிரியர்-அரசு ஊழியர் கூட்டு குழு(JACTO-GEO) தெரிவித்துள்ளது.
2018 ஆண்டு தமிழக அரசின் கடன் சுமார் 3.5 லட்சம் கோடி, ஜி.ஸ்.டீ அமல்படுத்திய பிறகு மாநில அரசின் வரிவிதிப்பு அதிகாரமும் இழந்துவிட்ட நிலையில், சாராய விற்பனையில்தான் தமிழக அரசு வருவாய் ஈட்டுகிறது. ஆசிரியர்-அரசு ஊழியர்களை தவிர, போக்குவரத்து துறை ஊழியர்கள், செவிலியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், மின்சாரத்துறை ஒப்பந்த தொழிலாளர்கள் என்று அரசின் அனைத்து துறைகளின் ஊழியர்களை பராமரிக்க முடியாமல் மாநில அரசு தடுமாறிவருகிறது. ‘உலகமய – தனியார்மய’ கொள்கையும் மத்திய அரசிடம் அதிகார குவிப்பும் இந்த நெருக்கடியான சூழலுக்கு அடிப்படை காரணிகளாக உள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இந்த நிலையில், பின் வரும் முக்கிய கோரிக்கைகளுக்கு ஆசிரியர்-அரசு ஊழியர் கூட்டு குழு(JACTO-GEO) நடத்தும் அனைத்து போராட்டங்களுக்கும் தமிழ்த் தேச மக்கள் முன்னனி தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.
- 2003 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு அமல்படுத்திய புதிய ஓய்வூதிய
- திட்டத்தை கைவிடு. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்து.
- 21 மாத ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்கிடு
- குறைந்த பட்ச சம்பளம் ரூ.18,000 என நிர்ணயித்திடு
- தற்காலிக ஊழியர்களை முறைப்படுத்து(Regularize)
ஆசிரியர்-அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்காமல், பொது சமூகத்தின் உளவியலை, ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு எதிராக திருப்பி விடும், காவல்துறையைக் கொண்டு போராட்டத்தை ஒடுக்கும் தமிழக அரசை தமிழ்த் தேச மக்கள் முன்னனி வன்மையாகக் கண்டிக்கிறது. ஆசிரியர்-அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக பேசித் தீர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது.
# மக்கள் முன்னணி