மன்னர்களை உயர்த்திப் பிடிப்பதற்குப் பெயர் தேசியமா? தோழர் பெ.மணியரசனுக்கு சில கேள்விகள்

அண்மையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பிற்கால சோழர்களை அவர் தம் சமற்கிருத ஆதரவுக்கு எதிராகவும் பார்ப்பனச் சார்புக்கு எதிராகவும் விமர்சனம் செய்து அம்மன்னர்கள் மீது தமக்கு மதிப்பில்லை என்று பேசினார். உடனே, அதற்கு எதிர்வினையாக அறிக்கை வெளியிட்ட தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், இராசராச சோழனின் பேரரச பெருமைகளை விளக்கிவிட்டு, திருமாவளவன் தமிழ் மன்னர்களை விமர்சித்து சிங்கள பெளத்தத்திற்கு தமிழர்களை மதம் மாற்றுவதாக விமர்சனம் செய்து, அதை தமிழினத்திற்கு செய்யும் இரண்டகமாக சொல்கிறார்.
- மன்னர்களுக்கு எதிரி இல்லையா தேசியம்?
தோழர் மணியரசனுக்கு தேசியம் என்ற கோட்பாடு தொடர்பில் இருக்கும் தவறான புரிதலின் விளைவே இவ்வறிக்கையாகும். தேசியத்தை இனப்போராட்டமாகவும் இனப் பெருமிதமாகவும் இன அடையாள மீட்பாகவும்மட்டும் புரிந்து கொண்டு அதன் சாறமாக இருப்பது சனநாயகம் என்பதை உள்வாங்காத கண்ணோட்டம்தான் இராசராசனுக்கு பேரரரசப் புகழாரம் சூட்டுவதில் வந்து முடிகிறது.
உலகின் முதல் தேசிய விடுதலைப் போராட்டம் பிரெஞ்சுப் புரட்சியாகும். அது பிரெஞ்சு மன்னனுக்கு எதிராக பிரெஞ்சு மொழி பேசும் மக்கள் நடத்தியதே அது. பிறப்பால் எவரும் மன்னனாகவும் அடிமையாகவும் இருக்க முடியாது என்பதே அதன் சாறம். பதினாறாம் லூயி மன்னனுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த பிரெஞ்சு மக்கள் அவரை இறுதியில் கொலையும் செய்தனர். அதுதான் பிரெஞ்சு புரட்சி.
தன் மொழி பேசும் மன்னன் என்பதற்காக அவன் துதி பாடிக் கொண்டிருக்குமா தேசியம்?
அமெரிக்க விடுதலைப் போராட்டம் என்பது ஆங்கிலம் பேசும் மக்கள் ஆங்கில பேசும் பிரித்தானிய மன்னனுக்கு எதிராக நடத்திய போராட்டம்தான்.
ஜார் மன்னனுக்கு எதிராக ரசியப் புரட்சியும் மன்னராட்சிக்கு எதிராக நேபாளப் புரட்சி வெடித்ததுதான் வரலாறு.
ஒருவேளை பிரெஞ்சு புரட்சிக் காலத்தில் தோழர் மணியரசன் பாரிசில் இருந்திருந்தால், சொந்த இன மன்னனுக்கு எதிராக பிரெஞ்சுக்காரர்கள் போராடுவதைக் கண்டித்து பிரெஞ்சு இனத்திற்கு இரண்டகம் செய்கிறார்கள் என்று சொல்லி இருப்பாரோ? அல்லது
2000 ஆண்டில் நேபாளத்தில் இருந்திருந்தால் சொந்த இன மன்னனுக்க்கு எதிராகப் புரட்சி நடத்துவது எவ்வளவு பெரிய குற்றம் என்று எழுதியிருப்பாரோ?
ஒருவேளை இராசராச சோழன் ஆட்சியின் கீழ் தமிழர்கள் இன்று வாழ்ந்து கொண்டிருந்தால் தோழர் மணியரசன் பேரரசனுக்குப் புகழ்பாடி மன்னராட்சியை வலுப்படுத்தியிருப்பாரா? இல்லை மக்களாட்சிக்காக மக்களின் பக்கம் போராடியிருப்பாரா?
மன்னராட்சியை, மன்னர் கால சிந்தனை முறையை, மன்னர் கால முடிவெடுக்கும் முறையை, மன்னர்களின் கொடி, கொற்றம், ஆலவட்டம் அனைத்தையும் அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைத்த வரலாற்றுப் பாய்ச்சலை தேசியமே நிகழ்த்தியது.
கெடுவாய்ப்பாக, இந்திய தேசியமும் இந்து தேசியமும் சிங்கள தேசியமும் மன்னர் கால அழுக்கு மூட்டைகளை தமது தலையில் தூக்கி வைத்துக்கொண்டு பழம்பெருமையில் மூழ்கின. அதுபோல் தமிழ்த்தேசியத்தையும் மன்னர் பெருமதிங்களில் மூழ்கடிப்பது எவ்விதத்திலாவது அறிவுடைமை ஆகுமா?
- மன்னர்கள் யார்?
மன்னர்கள் கொள்ளைக்காரர்கள். மன்னர்கள் ஆக்கிரமிப்பாளர்கள். பேரரசன் என்றால் அவன் அடுத்த நாட்டை ஆக்கிரமித்தவன். மன்னர் காலத்தில் மக்கள் முதன்மைப்படுத்தப் படவில்லை. மன்னர்களைப் போல் ஒரு தனிமனிதன் முடிவெடுப்பது இன்று ஏற்கப்படுவதில்லை. வரலாற்றை மன்னர்களின் வீர தீரங்களாகவும் படையெடுப்புகளாகவும் போர் சாகசங்களாகவும் புரிந்து கொண்டது ஒரு காலம். வரலாற்றின் படைப்பாளர்களாக மக்களை முன்னிறுத்தி அதில் பொருளாக்க கருவிகளின் வருகையையும் போர்க் கருவிகளின் பங்கையும் பொருத்திப் பார்க்கும் முறைக்கு வரலாற்று அறிவியலாளர்கள் எப்போதோ வந்துவிட்டார்கள். இராசராசன் என்ற தனி மனிதன் எத்தனை ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தான் என்பதைப் பொருத்து வரலாற்றின் போக்கு இருப்பதாக நாம் புரிந்து கொள்வதில்லை.
- வெஸ்ட்பாலியா உடன்படிக்கை கேள்விப்பட்டதுண்டா?
இன்றைய உலக ஒழுங்கு எதன் மீது கட்டப்பட்டுள்ளது? தோழர் மணியரசன் அடிக்கடி சொல்லும் ’தமிழர் இறைமை’ என்பதற்கான கோட்பாட்டு அடிப்படைகளைத் தந்தது எது? சங்க இலக்கியமா? இராசராச சோழனா? இல்லை. வெஸ்ட்பாலியா உடன்படிக்கை! இது குறித்து நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை இங்கே பகிர்கிறேன்.
( கட்டுரையின் சுட்டி : https://peoplesfront.in/2021/02/24/%e0%ae%90-%e0%ae%a8%e0%ae%be-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/)
” ஐ.நா. வின் வேர்கள் ,கிபி 1648 இல் இன்றைய ஜெர்மனியில் உள்ள வெஸ்ட்பாலியா நகரில் போடப்பட்ட அமைதி உடன்படிக்கையில் ( Treaty of Westphalia) உள்ளன. 30 ஆண்டுகாலப் போரை முடிவுக்கு கொண்டுவந்த உடன்படிக்கை அது. புனித ரோமானியப் பேரரசும் ஜெர்மன், ஸ்பெயின், நெதர்லாந்தில் உள்ள பற்பல சிற்றரசுகளும் போர் நிறுத்தத்திற்காக தம்மிடையே போட்டுக்கொண்ட உடன்படிக்கை.
அதுவரை காலமும் தர்மமாகவும் வீரமாகவும் வெற்றி வாகையாகவும் பார்க்கப்பட்ட நாடுபிடித்தல் வரலாற்றில் முதல் முறையாக ‘ஆக்கிரமிப்பு’’ என்று பார்க்கப்பட்டது. ஓர் அரசை இன்னொரு அரசு ஆக்கிரமிப்பது கூடாது. சிறியது – பெரியது என்ற வேறுபாடின்றி ஒவ்வோர் அரசுக்கும் இறைமை உண்டு. ஒரு நாட்டை இன்னொரு நாடு ஆக்கிரமிப்பது என்பது அந்நாட்டரசின் இறைமை மீறல் என்று முடிவுசெய்யப்பட்டது. இறைமை கொண்ட ஓர் அரசின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிசக்திகள் தலையிட முடியாது. மனித குல வரலாற்றில் ஆக்கிரப்பு, சுரண்டல், போர் வெறி ஆகியவற்றிற்கு எதிரான முக்கியமானப் பாய்ச்சல் இது. அமைதிக்கும் பெரியது சிறியது வேறுபாடின்றி நாடுகளுக்கு இடையேயான சக வாழ்வுக்குமான அடிப்படைகளைக் கொண்டுள்ளது என்பதும் மெய்தான்.
புதுமக் காலப் பன்னாட்டு உறவுகளுக்கான அடிப்படைகளை வெஸ்ட்பாலியன் அமைதி உடன்படிக்கையே வழங்கியுள்ளது. இதுவே இன்றைய அரசுகளுக்கு உரிய இறைமை, அரசுகளை மையமிட்ட உலக ஒழுங்கு ஆகியவற்றுக்கான கோட்பாட்டு அடித்தளமாகும். “.
மன்னர்கள் எந்தளவுக்கு அந்நிய நாட்டின் மீது படையெடுப்புகளை நடத்தினார்களோ அந்தளவுக்கு அவர்கள் வீர பராக்கிரமர்களாகப் போற்றப்பட்டார்கள். பேரரசன் என்ற புகழாரமே அவன் ஆட்சி எல்லையின் விரிவாக்கத்தில் இருந்து பெறப்பட்டதாகும்.
பிரித்தானிய பேரரசு, இந்தியப் பேரரசு, அமெரிக்க வல்லரசு என்று சொல்லிப் பாருங்கள். எவ்வளவு கசப்பாக இருக்கிறது! ஆனால், சோழப் பேரரசு என்று சொல்லும் போது மட்டும் பெருமிதமா? தேசிய ஊழியில் வாழும் மக்களுக்கு இதில் என்ன பெருமிதம் இருக்க முடியும்?
மன்னர்கள்தான் சனநாயகத்தின் முதற்பெரும் எதிரிகள்! விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட முதலாளித்துவக் கட்சிகள் பெரும்பாலும் மன்னர் ஆட்சி கலாச்சாரத்தையும் மன்னர் கால முடிவெடுக்கும் முறைகளையும் தலைவர்களை மையமிட்ட புகழ்ச்சி துதிபாடல்களையும் கொண்டிருக்கக் கூடியவை என்ற திறனாய்வை தமிழ்த்தேசிய நோக்கில் முன்வைத்திருக்க வேண்டிய தோழர் மணியரசனோ இராசராச சோழனுக்கு குடைபிடித்துக் கொண்டிருக்கிறார்!
- சிங்கள பெளத்த பேரினவாதமும் பெளத்தமும் ஒன்றா?
தோழர் திருமாவளவன் சிங்கள புத்த மதத்திற்கு தமிழர்களை மாற்றிட வெளிப்படையாகவும் அந்தரங்கமாகவும் பல முயற்சிகளை செய்கிறார் என்றும் அது தமிழினத்திற்கு செய்யும் இரண்டகம் என்றும் தோழர் மணியரசன் சொல்கிறார். இதற்கு உரிய சான்றுகளை அவர் சொல்லவில்லை. சிங்கள புத்த பிக்குகளுடன் தொடர்பில் இருப்பதை இனவழிப்பை ஆதரிப்பதென்று சொல்கிறார் அவர்.
இந்தியாவில் இந்து மதத்தில் இருந்து வெளியேறி பெளத்திற்கு மாறும் பண்பாட்டு எழுச்சி அயோத்திதாசர் தொடங்கி அம்பேத்கர் வரை பலராலும் முன்னெடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தலித் மக்களிடையே சாதி இழிவில் இருந்து வெளியேறுவதற்கு பெளத்தம் ஒரு தெரிவாக இருக்கிறது. இந்த வரலாற்றுப் பின்புலத்தைக் கருத்தில் எடுக்காமல் பெளத்த மத மாற்றத்தை ஒருவர் ஆதரித்தால் அது தமிழினத்திற்கு செய்யும் இரண்டகம் என்கிறார் தோழர் மணியரசன்.
மணிமேகலை காப்பியத்தை சிங்கள புத்த மதக் காப்பியம் என்று சொல்லி எரிக்க சொன்னாலும் சொல்வார் போலும்!பெளத்தம் தமிழருக்கு எதிரானதா? ஐம்பெருங்காப்பியங்களில் பெளத்த, சமணக் காப்பியங்கள் தானே. திருக்குறளே பெளத்தம் அல்லது சமண நூல் என்றுதானே ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். தமிழ் பெளத்தம் ஈழத் தமிழர்களிடையே நிலவியதற்கான வரலாற்று சான்றுகளை பிரெஞ்சு ஆய்வாளர் பீட்டர் ஷாக் சொல்லியுள்ளாரே. உண்மையில் சிங்கள – ஈழத் தமிழர் முரண்பாட்டுக்கான தொடக்கமே தேரவாத பெளத்த சிங்களர்களுக்கும் மகாயான பெளத்த தமிழர்களுக்கும் இடையிலான முரண்பாடாகவே உருப்பெற்றது. மகாவம்சம் இயற்றப்பட்டதும் இந்த முரண்பாட்டுப் பின்புலத்தில்தான்.
இந்துத்துவத்தையும் இந்து மதத்தையும் பிரித்துப் பார்த்து, பின்னர் ஆரிய இந்து – தமிழ் இந்து என பிரித்துப் பார்க்க சொல்லும் தோழர் மணியரசன், பெளத்தம் என்று வந்தால்மட்டும் சிங்கள பெளத்த பேரினவாதத்தையும் பெளத்த மதத்தையும் பிரித்து பார்க்க மறுப்பது ஏன்?
தோழர் மணியரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கைக்கு திட்டவட்டமான உள்நோக்கங்கள் உண்டு. அதை கால ஓட்டத்தில் தமிழ் மக்கள் புரிந்து கொள்வார்கள்.
தமிழர்களே, தமிழர்களே என்று அறைகூவி அழைத்து அவர் சொல்ல வருவது யாதெனில் திருமாவளவன் நேற்றைய புரட்சியாளராம்! சீமான் இன்றைய புரட்சியாளராம்!
ஈழ ஆதரவு அரசியல் பரப்பையும் தமிழ்த்தேசிய அரசியல் பரப்பையும் முழு குத்தகைக்கு எடுத்திருக்கும் சீமானைத் தவிர வேறு யார் இந்த பரப்புக்குள் வர முற்பட்டாலும் அவர்களுக்கு இரண்டக முத்திரை குத்தும் நோக்கம் சீமானுக்கு இருந்தால் பரவாயில்லை, தோழர் மணியரசனுக்கு ஏன் இந்த சீமான் மார்கெட்டிங் வேலை?