சிக்கந்தர் தர்கா பிரச்சனை: இந்துப் பெரும்பான்மைவாதத்தை முறியடிக்கும் அரசியல் என்ன? பகுதி – 2

சிக்கந்தர் தர்கா யாருடைய இறை நம்பிக்கை?
சிக்கந்தர் தர்காவில் ஆடு கோழி பலியிடக் கூடாது என்ற நிலைப்பாட்டுக்கு மறைமுகமாக ஒத்துழைப்புக் கொடுத்தது அறநிலையத்துறை. இதன் மூலம் இந்துப் பெரும்பான்மைவாதத்திற்கும் வைதீக மேலாதிக்கத்திற்கும் துணைபோனது. நீதிமன்ற தலையீட்டுக்கு முன்பே காவல் துறையின் வழியாக நேர்த்திக் கடன் செய்யப் போனவர்களை தடுத்து நிறுத்தியது தமிழ்நாடு அரசுதான்.
ஏற்கெனவே நீதித்துறையை விழுங்கிவிட்ட சங்கிகள் ஆடு கோழி பலியிடுவதற்கு எதிராக தாம் விரும்பிய தீர்ப்பை பெற்றுவிட்டார்கள்.
நானும் மதுரையைச் சேர்ந்த பண்பாட்டு ஆய்வாளர் தோழர் காளிங்கனும் சிக்கந்தர் தர்காவுக்கு கடந்த ஜுலை மாதத்தில் சென்றிருந்தோம். கூடவே அதே மலையில் இருக்கும் காசி விசுவநாதர் ஆலயத்திற்கும் சென்றோம். அப்போது, ஓர் இசுலாமிய பெண் கறுப்பு மேலோடையுடன் கையில் ஒரு குச்சியுடன் நெல்லித் தோப்பை தாண்டிய மலையில் ஏறி வந்து கொண்டிருந்தார். நாங்கள் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தோம்.
அவரின் தோற்றம் 45 வயது மதிக்கத்தக்கது. சுமார் 5 அடி உயரம், நல்ல கறுப்பு நிறம்
என்னம்மா வேண்டுதலா? என்றார் காளிங்கன்.
ஆமாம், மகளூக்கு திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக வரேன். பக்கத்து வீட்டுல சொன்னாங்க..நாலஞ்சு வாரம் போய் வாங்க….கல்யாணம் முடிவு ஆகிடும்னு சொன்னாங்க.
அவர் பேச்சில் மலையில் ஏறிவரும் களைப்பும் மூச்சிறைச்சலும் இருந்தது.
தனியாக வந்திருக்கீங்களே என்றார் கானிங்கன்.
”இங்கே போக வேண்டாம்னு வீட்ல சொல்றாங்க..நான் என்ன சிக்கந்தர்கிட்டயா கேக்குறேன், சிக்கந்தர் வழியா அல்லா கிட்டதானே கேட்கிறேன்” என்று வாஞ்சையுடன் தனது ஏரணத்தைப் பேசினார்.
சரிங்க அம்மா போய்ட்டுவாங்க என்று சொல்லிவிட்டு நாங்கள் மலையில் இருந்து இறங்கினோம்.
”ஏகத்துவ வழிபாட்டை வலியுறுத்துவோர் தர்கா வழிபாட்டை ஏற்றுக்கொள்வதில்லை. அதேநேரத்தில் ஏகத்துவ வழிபாடு அவுலியாவை வழிபடுவதை ஏற்க வில்லை. ஆனால் அவுலியா வழியாக அல்லாவிடம் கேட்பதை அனுமதிக்கிறது” என்று எடுத்துச்சொன்னார் மதுரையைச் சேர்ந்த தோழர் ரபீக் ராஜா. இது ஒரு வகையில், ஏகத்துவ வழிபாட்டாளர்களும் தர்கா வழிபாட்டாளர்களும் இணக்கம் காணுவதற்கான புள்ளி என்று புரிந்துகொள்ள முடிந்தது.
தர்கா வழிபாடு அவுலியாக்களை தேடிச் செல்வது என்பது இந்திய சூபி முறையின் பகுதியாகும். மேற்காசியாவில் சூஃபி பிரிவு கிடையாது. இது ஒரு தகவலுக்குதான். இந்துத்துவம் முன்வைக்கும் பெரு மதங்களுக்கு இடையிலான சண்டை என்ற வாதத்திற்குப் பலியாவோர் தெரிந்து கொள்வதற்காகத்தான் இதை சொல்கிறேன்.
கருத்தாயுதம் என்ற நூலில் மறைந்த மனித உரிமை செய்ற்பாட்டாளர் பாலகோபால் ஒரு குறிப்பை சொல்லியுள்ளார். உண்மையான கள ஆய்வு ஒன்றை செய்தால் இந்தியாவில் மசூதிகளைவிடவும் தர்காக்கள் அதிகமாக இருக்கக் கூடும் என்று சொல்கிறார். எது எப்படியோ, தர்காவுக்கு சென்று வழிபடும் முறை இந்திய இசுலாமியர்களில் கனிசமானோரிடம் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
திருப்பரங்குன்றம் எந்த திசையில் இருக்கிறது? முருகன் கோயில் மலைஅடிவாரத்தில் இருக்கிறதா? மலை உச்சியில் இருக்கிறதா? என்பதை கூட அறியாதவர்கள் எல்லாம் பாசகவின் திருப்பரங்குன்ற அரசியலுக்குள் இழுத்துவரப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள இந்துக்கள் எல்லோரும் திருப்பரங்குன்றம் சென்றிருப்பார்கள் என்று சொல்லிவிட முடியுமா? முருகனை வழிபடுவதில் ஈடுபாடுடையவர்கள் அவரவர் இருக்கும் வட்டாரத்தில் உள்ள முருகன் கோயிலுக்கு போய் வந்திருப்பர். இது ஒரு புறமிருக்கட்டும்.
தமிழ்நாட்டில் உள்ள இசுலாமியர்கள் எத்தனை பேர் சிக்கந்தர் தர்காவுக்கு போய் வந்திருப்பர்? எத்தனை பேருக்கு சிக்கந்தர் தர்காவில் ஈடுபாடும் நம்பிக்கையும் இருக்கும்? மெக்காவுக்கு செல்ல வேண்டும் என்பது போல் சிக்கந்தர் தர்காவுக்கு வாழ்நாளில் ஒருமுறையாவது போய் வர வேண்டும் என்று இசுலாமியர்கள் கருதுகிறார்களா? இசுலாமியர்கள் புனிதத்தை கெடுக்கிறார்கள் என்று சங்கிகள் சொல்கிறார்கள். நீங்கள் சிக்கந்தர் தர்காவுக்குப் போயிருக்கிறீர்களா? உங்களுக்கு ஏதாவது வேண்டுதல் உண்டா? என்று உங்களுக்கு தெரிந்த இசுலாமியரிடம் கேட்டுப் பாருங்களேன்!.
அப்படியென்றால் சங்கிகள் வெறுப்பை பரப்புவது யாரை நோக்கி?
சிக்கந்தர் தர்காவில் ஈடுபாடு கொண்ட இசுலாமியர்கள் பெரும்பாலும் மதுரை, விருதுநகர் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் கேரளாவில் இருந்தும் வருகிறார்கள். இதன் பொருள் மதுரையில் உள்ள எல்லா இசுலாமியர்களும் சிக்கந்தர் தர்காவுக்கு சென்று மன்றாடுகிறார்கள் என்றல்ல, அதில் கனிசமானோர் சிக்கந்தர் தர்காவில் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பர். அவர்கள் பல ஆயிரம் பேரா? சில இலட்சம் பேரா? என்பது யாருக்கும் தெரியாது.
சிக்கந்தர் மீது ஈடுபாடு கொண்டவர்களில் இந்துக்கள் என்று அரசமைப்பு சட்டத்தால் அடையாளப்படுத்தப் படுபவர்களும் உண்டு. நீ இந்து என்பதால் முருகனைதான் வழிபட வேண்டும் என்றும் சிக்கந்தரிடம் போகக் கூடாது என்றும் சொல்வதற்கு காடேஸ்வரனும் வானதியும் அண்ணாமலையும் யார்? இவர்கள் தான் இந்துக்கள் என்று அறியப்படுவோரின் இறை நம்பிக்கைக்கு எசமானர்களா?
அப்படியென்றால், மதுரை, விருதுநகர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து இந்துக்களும் சிக்கந்தர் தர்கா சென்று வழிபடுகிறார்களா? என்றால் அதுவும் இல்லை. அந்த வட்டாரத்தில் உள்ள இந்துக்களில் கனிசமானோர் சிக்கந்தரிடம் ஈடுபாடு கொண்டிருக்கிறார்கள். திருப்பரங்குன்றத்தில் இருக்கும் இந்துக்கள் சிக்கந்தர் தர்கா வழிபாட்டோடு ஏதோ ஒரு வகையில் உறவு வைத்திருப்பர். அவர்கள் ஆயிரக்கணக்கானோரா? இலட்சக்கணக்கானோரா? என்பது யாருக்கும் தெரியாது.
பொதுவில் தர்காக்களோடு இந்துக்களுக்கு தொடர்பு இருக்கிறது. நோய் தீர்த்தல், மனச் சிதைவில் இருந்து மீளுதல் ஆகியவற்றுக்கு தர்கா நோக்கி வருகிறார்கள்.
சிக்கந்தர் தர்காவில் மொட்டை அடிப்பது, காது குத்துவது, ஆடு, கோழி பலியிடுவதிலும் இந்துக்களும் இசுலாமியர்களும் இருக்கிறார்கள். நோய் தீர, திருமணம் ஆக, பிள்ளைபேறுக்காக சிக்கந்தரிடம் முறையிட்டு அந்த வேண்டுதல் நிறைவேறினால் நேர்த்திக் கடன் செய்யும் பொருட்டு ஆடு, கோழி பலியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு கிராமங்களில் மக்களிடையே ஒரு பழக்கம் உண்டு. ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் சாமி கேட்கப் போவர். அப்போது பெரும்பாலும் ஏதாவது வேண்டுதல் பாக்கி இருக்கிறது, அந்த நேர்த்திக் கடனை முடித்தால் இந்தப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று பூசாரி உடுக்கு அடித்து சொல்வார். ஆமாம் அந்த வேண்டுதல் பாக்கி இருக்கிறது என்று சொல்லிவிட்டு அந்த நேர்த்திக் கடனை நிறைவேற்றுவர். நேர்த்திக் கடனை எவரும் பாக்கி வைக்க மாட்டார்கள்.
சிக்கந்தரிடம் மனம் உருகி வேண்டியவர்கள் தமது நேர்த்திக் கடனை செய்வதற்காக அங்கே செல்கிறார்கள். அதை தடுப்பதற்கு ஆர்.எஸ்.எஸ் – இந்து முன்னணி – பாசகவினர் யார்?
இவர்கள் சிக்கந்தரிடம் சென்று வழிபடும் இந்துக்கள் – இசுலாமியர்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கிறார்கள். ஆடு, கோழி பலியிட்டு வழிபடுவது இசுலாத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பழக்கம் அல்ல. அதேபோல் சிக்கந்தர் தர்காவுக்கும், ஏர்வாடி தர்காவுக்கும் சென்று ஆடு, கோழி பலியிடுவது அந்த வட்டாரத்தில் உள்ள இந்துக்களிடையே நிலவும் பழக்கமாகும். அனைத்து இந்துக்களிடமும் இருக்கும் பொதுவான நம்பிக்கையோ பழக்கமோ அல்ல.
முருகன் கோயில் – தர்கா என்ற அளவில் இந்து – இசுலாமிய வழிபாட்டுத் தலங்கள் இவை என்பதால் விரிந்த பொருளில் இந்து – இசுலாமிய முரண்பாடுதான். அதே நேரத்தில் சிக்கந்தர் தர்கா வழிபாடு இந்துக்களிடையேயும் இசுலாமியர்களிடையேயும் இருக்கும் நம்பிக்கையாகும். இந்து – முஸ்லிம் பிரச்சனையாக இதை காண்பித்து முஸ்லிம்கள் ஒரு சமுதாயமாக இந்து வழிபாட்டுத் தலத்தின் புனிதத்தைக் கெடுக்க முயல்வதாக சித்திரிக்கிறார்கள்.
உண்மையில் இந்து – முஸ்லிம் முரண்பாடு என்பதைவிட இந்துக்களில் உள்ள ஒரு பிரிவினருக்கும் மற்றும் இசுலாமியர்களில் உள்ள ஒரு கனிசமானோருக்கும் இருக்கும் வழிபாட்டு உரிமை மீது பெருமதங்களின் சட்டகங்களைக் கொண்டு நடத்தப்படும் தாக்குதல் இதுவாகும்.
வெறும் பல ஆயிரம் பேரோ அல்லது சில இலட்சம் பேரோ நம்பிக்கையுடன் வழிபடக் கூடிய சிக்கந்தர் தர்கா என்றாலும் அவர்களது வழிபாட்டு உரிமை இந்துப் பெரும்பான்மைவாதத்தின் பெயரால் மீறப்படலாகாது. சிறுபான்மையினரின் உரிமையைப் பேணிப் பாதுகாப்பதில்தான் சனநாயகம் உயிர்த்திருக்க முடியும்.
நம்முடைய சமூக பண்பாட்டு வாழ்வில் பல தரப்பட்ட நம்பிக்கைகளுக்கு இடம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரே வீட்டிலேயே வெவ்வேறு நம்பிக்கைகளைக் கொண்டவர்களும் நம்பிக்கையில்லாதவர்களும் சேர்ந்து வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம். புதுமக்கால சனநாயக விழுமியங்களில் சனநாயகம் என்பது பெரும்பான்மைவாதமோ அல்லது தலையெண்ணும் புள்ளிவிவரமோ அல்ல. சிறுபான்மையினரின் உரிமையையும் பாதுகாப்பையும் பேணிப் பாதுகாப்பதுதான் சனநாயகம்.
பெரும்பான்மையின் விருப்பத்தை செயல்படுத்துவது சனநாயகம் என்று தவறாகப் புரிந்து கொண்டுள்ள ஒரு சமூகத்தில் பெரும்பான்மைவாதமும் சிறுபான்மையினரின் உரிமையை மறுப்பதும் சிறுபான்மையினர் பெரும்பான்மையினருக்கு விட்டுக்கொடுக்க வேண்டும், சிறுபான்மையினர் உரிமை என்பது பெரும்பான்மையினர் காட்டும் பெருந்தன்மை என்று கருதுவதும் சட்ட நெறிகளின்படி தவறு என்பதை எடுத்துச்சொல்லாமல் இந்துத்துவ அரசியலை நாம் முறியடிக்க முடியாது.
இவற்றை தமிழ்ச் சமூகம் கற்றுக் கொள்வதற்கு ஆர்.எஸ்.எஸ். – இந்து முன்னணி – பாசகவினர் அமைத்துக் கொடுத்திருக்கும் நல்லதொரு களம்தான் திருப்பரங்குன்றம். இதில் நாம் எவ்வித தயக்கமும் இன்றி பாசகவின் பெரும்பான்மைவாத ஏரணத்தை எதிர்த்து நின்று அது சனநாயகத்திற்கு எதிரானது என்று முன்வைத்து மக்களிடம் ஓர் உரையாடலை நடத்த வேண்டும். இது கடினமானதாக தெரியலாம். ஆனால், இதை தவிர வேறு வழி எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
- தோழர் செந்தில்
இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டுமானால் ஆண்டாண்டு காலமாக அந்தப் பகுதியில் வாழ்ந்துக்
கொண்டிருக்கும் பகுதி மக்களின் ஆலோசனையும் ஆதரவும் தேவை.
அதற்கு இந்தச் சிக்கலை உண்மையாக
உறுதியோடு தீர்க்க விரும்பும் தனி நபர்கள், சனநாயக அமைப்புகள், கட்சிகளின் முன்னணி செயல்பாட்டாளர்களின் தெரிந்து எடுத்த குழு உறுப்பினர்கள் களத்திற்குச் சென்று அங்குள்ள எல்லா
தரப்பு மக்களையும் (வயது,பாலினம், சாதி, மதம், மொழி என்று பல தரப்பட்ட)
சந்தித்து அவர்களுடைய அனுபவம்,
ஆலோசனை, அறிவுரையோடு அவர்களோடு இணைந்து ஒரு திட்டத்தை உருவாக்கிக் கொண்டு
நடைமுறை படுத்துவது தான் நல்ல
தீர்வாக இருக்கும் என்று நம்புகிறேன்.