ஓட்டுத் திருடர்கள் நாட்டை ஆளலாமா?

20 Sep 2025

கருத்தரங்கம்

நாள்: 27-9-2025, சனி, மாலை 5:30 மணி

இடம்: 3 வது தளம், diet in Restaurant, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி காவல் நிலையம் அருகில், வடபழனி

தலைமை: தோழர் கண்ணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

உரை:

தோழர்கள்

சசிகாந்த் செந்தில், நாடாளுமன்ற உறுப்பினர், காங்கிரசு கட்சி

க.அய்யநாதன், மூத்த ஊடகவியலாளர்

மதுர் சத்யா, துணைத் தலைவர், தென் சென்னை மாவட்டம், ISCUF

செந்தில், மாநில ஒருங்கிணைப்பாளர், ததேமமு

இது வேலியே பயிரை மேய்ந்த கதை.

”ஓட்டுகளைத் திருடித்தான் பிரதமானார் மோடி” என்று அடுக்கடுக்கான சான்றுகள் வந்து குவிகின்றன. ஆனால், தேர்தல் ஆணையமோ உரிய விளக்கம் தர மறுத்து குற்றம் சுமத்துபவர்களையே கூண்டில் ஏற்றப் பார்க்கிறது.

தேர்தல் ஆணையர் பாசக காரரைப் போல் பேசுகிறார். பாசக தலைவர்களோ தேர்தல் ஆணையர் போல் பதிலளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலிலேயே இந்த வாக்குத் திருட்டு கண்ணுக்கு தெரிய தொடங்கிவிட்டது. 2019 ஜூலை 2 அன்று 64 முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் 83 புகழ்பெற்ற கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார்கள். தேர்தல் சுதந்திரமாகவும் கண்ணியமாகவும் நடைபெறவில்லை என்றும் தேர்தல் ஆணையத்தின் பாகுபாடு காட்டாமை, நம்பகத்தன்மை, திறன் மீது கடந்த காலங்களில் அரிதினும் அரிதாகவே ஐயங்கள் எழுந்துள்ளன என்றும் இடித்துரைத்தார்கள்.

இதே அமைப்பினர் தேர்தல்கள் மீதான குடிமக்கள் ஆணையம் ஒன்றை உடனடியாக அமைத்தனர். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் கணிணி, புள்ளியியல், தேர்தல் மேலாண்மை உள்ளிட்ட துறைசார் வல்லுநர்கள் அடங்கிய இவ்வாணையம் இரு ஆய்வறிக்கைகளை முன்வைத்தது. அதில், கணிசமான அளவுக்கு வாக்காளர் நீக்கம் நடந்திருப்பதை அம்பலப்படுத்தினர். VVPAT சீட்டுகளை எண்ணிப் பார்க்க வேண்டும், யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை வாக்களிப்பவர் தெரிந்து கொள்ள வழிவகை இல்லாத நிலையில் சனநாயக நெறிமுறைகளோடு இது ஒத்துப் போகவில்லை என்று சுட்டிக்காட்டினார்கள்.

2024 மக்களவை தேர்தல் முடிந்தவுடன் Vote for Democracy (VFD) என்ற அமைப்பு தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்தது. சுமார் 5 கோடி வாக்குகள் திணிக்கப்பட்டுள்ளதை அது அம்பலப்படுத்தியது. அதன்படி 15 மாநிலங்களில் 79 மக்களவை இடங்களில் பாசக பெற்றுள்ள வெற்றி மோசடியானது என்று குற்றஞ்சாட்டியது. தமிழ்நாட்டிலும் பாசக பெற்ற வாக்குகளுக்குப் பின்னால் மோசடி நடந்துள்ளது, இலட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்றது VFD. VFD தனது ஆய்வை முன்வைத்து ஜூலை 19, 2024 இல் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியது.

2024 நவம்பரில் மராட்டிய தேர்தல் முடிந்தவுடன் அதன் முடிவுகளை ஆய்வு செய்தது நியூஸ் லாண்ட்ரி ஊடகம். முகவரிகளை சரிபார்க்காமலே ஏராளமான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதை அது அம்பலப்படுத்தியது.

VFD அமைப்பு மராட்டிய தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்து மக்களவை தேர்தலுக்கும் மாநிலத் தேர்தலுக்கும் இடைப்பட்ட காலத்தில் ( 7 மாதம்) 46.7 இலட்சம் வாக்காளர்கள் அதிகரித்திருப்பது பெருத்த ஐயத்தை ஏற்படுத்துகிறது என்று தேர்தல் ஆணையத்தை அம்பலப்படுத்தியது.

இதற்கெல்லாம் தேர்தல் ஆணையம் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகளும் இவற்றுக்கு செவி கொடுக்காமலே இருந்து வந்தன.

வாக்குரிமைப் பறிப்பு:

இவ்வாண்டு மே மாதம் வரை பீகாரில் வாக்காளர் சரிபார்ப்பு பற்றி வாய் திறக்காமல் இருந்த தேர்தல் ஆணையம் திடீரென்று ஜூன் 24 அன்று பீகாரில் சிறப்பு தீவிர சரிபார்ப்பு ( SIR) செய்யப்போவதாக அறிவித்தது. வாக்காளர் சரிபார்ப்பு என்ற பெயரில் மறைமுகமாக குடியுரிமை திருத்தச் சட்டததைச் செயல்படுத்தப் பார்க்கிறது பாசக அரசு.

பீகாரில் மட்டும் 18 வயதுக்கு மேற்பட்டோர் 8 கோடியே 18 இலட்சம் பேர் இருக்கும் நிலையில் வெறும் 7 கோடியே 24 இலட்சம் பேரிடம் இருந்து மட்டுமே விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது தேர்தல் ஆணையம். இதுவரை இறந்தவர்கள், புலம் பெயர்ந்தவர்கள் என்று சொல்லி 65 இலட்சம் பேரது பெயர்களை நீக்கியுள்ளது தேர்தல் ஆணையம். சுமார் 1.5 கோடி பேர் வரை வாக்குரிமை இழக்க வாய்ப்புள்ளது.

இந்நாட்டு குடிமக்களின் வாக்குரிமையை பறிக்கும் SIR நடவடிக்கை பீகாரோடு முடியப்போவதில்லை, மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளம் என அனைத்து மாநிலங்களிலும் நடக்கவிருக்கிறது.

பெங்களூர் மத்திய தொகுதி:

கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி காங்கிரசு கட்சி 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் நடந்த மோசடிகளை உரிய சான்றுகளுடன் அம்பலப்படுத்தியது.

2024 மக்களவை தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் மொத்தம் உள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளில் 7 இல் காங்கிரசு வெற்றி பெற்றிருந்தது. ஆனால், எட்டாவது சட்டமன்ற தொகுதியான மகாதேவபுரா தொகுதியில் பாசக பெற்ற வாக்குகளைக் கொண்டு பெங்களூர் மத்திய தொகுதியில் பாசக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மகாதேவபுரா தொகுதியில் 1,14,000 வாக்கு வேறுபாட்டில் காங்கிரசு தோல்வி அடைந்தது. அதில் 1,05,000 வாக்குகள் ஐந்து வழிகளில் திருடப்பட்டுள்ளன. போலி வாக்காளர் அட்டையுடன் 11965 பேர், ஒரே முகவரியில் ஏராளமானோர் என்ற வகையில் 10452 பேர், தவறான முகவரியில் 40,009 பேர், தவறான புகைப்படத்துடன் 4132 பேர், படிவம் 6 ஐ தவறாகப் பயன்படுத்தி வாக்களித்தவர்கள் 33692 பேர் என ஐந்து வழிகளில் இந்த வாக்கு திருட்டு நடந்துள்ளது.

பல்வேறு தொகுதிகளிலும் இதுபோல் முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளன என்று காங்கிரசு கட்சி சொல்லியுள்ளது. இதன்மூலம் நரேந்திர மோடி மோசடி செய்தே மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏறியுள்ளார் என்ற குற்றச்சாட்டை காங்கிரசு கட்சியும் சொல்லத் தொடங்கியுள்ளது.

தில்லுமுல்லு திருத்தங்கள்:

இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பது போல் பாசகவின் சட்டத்திருத்தங்கள் இருந்து வருகின்றன.

2023 ஆம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்ற அரசமைப்பு ஆயம், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய குழு தேர்தல் ஆணையரைப் பரிந்துரை செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஆனால், பாசக 2023 திசம்பர் மாதம் ( மக்களவைத் தேர்தலுக்கு 5 மாதமே இருக்கும் போது) தேர்தல் ஆணையரை பணியமர்த்துவதற்கான புதிய சட்டத்தை இயற்றியது. அதன்படி பிரதமர், உள்துறை அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் அடங்கிய குழு தேர்தல் ஆணையரை பணியமர்த்த வேண்டும். அதாவது ஆளுங்கட்சியை சேர்ந்த இருவர், எதிர்க்கட்சியில் இருந்து ஒருவர்! தந்திரமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அக்குழுவில் இருந்து அகற்றி உச்சநீதிமன்ற தீர்ப்பைக் குப்பைக் கூடைக்கு அனுப்பியது பாசக அரசு.
அரியானா தேர்தல் முடிந்தவுடன், 2024 திசம்பர் மாதம் பஞ்சாப் – அரியானா உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில், சிசிடிவி கேரமா பதிவுகள், படிவம் 17C உள்ளிட்ட தேர்தல் ஆவணங்களை அவ்வழக்கின் வழக்கறிஞருக்குப் பகிருமாறு தீர்ப்பளித்தது. ஒரே வாரத்தில், இந்த ஆவணங்களைப் பொது மக்களுக்குப் பகிரக் கூடாது என்று தேர்தல் நடத்தை விதி 93 ஐ திருத்தியது பாசக.
மே 2025 ஆம் ஆண்டு சிசிடிவி பதிவுகளை தேர்தல் முடிந்து 45 நாட்கள் மட்டுமே பாதுகாத்து வைப்பது என்று விதிகளை திருத்தியது. முன்னதாக, 3 மாதத்தில் இருந்து ஓராண்டு வரை பாதுகாத்து வைக்கும் முறை இருந்தது.
வெளிப்படைத்தன்மையைக் குழி தோண்டி புதைப்பதன் மூலம் வாக்குத் திருட்டை மூடி மறைக்கப் பார்க்கிறதா தேர்தல் ஆணையம்?

குடைசாயும் குடியரசு:

நாடாளுமன்ற அமைப்பு முறையை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருக்கிறது பாசிச மோடி அரசு. மக்களவை, மாநிலங்களவை, அமைச்சரவை, நாடாளூமன்ற நிலைக் குழு ஆகியவற்றை செல்லாக்காசு ஆக்கியது. ஆர்.பி.ஐ, சிபிஐ, அமலாக்கத் துறை, என்.ஐ.ஏ. ஆகியவற்றைக் கைப்பற்றியதன் வரிசையில் தேர்தல் ஆணையத்தை முழுவதுமாக கைப்பற்றிவிட்டது. நாடாளுமன்ற சனநாயகத்தின் உயிர் போன்ற கூறுதான் தேர்தல் சனநாயகம். இப்போது இந்தியாவில் தேர்தல் சனநாயகத்தை விழுங்கிக் கொண்டிருக்கிறது பாசிசம்!

”ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு” என்ற வரலாற்று உரிமையைப் போகிற போக்கில் பறிக்கப் பார்க்கிறது பாசிசம்.

மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களின் ஆட்சி இதுவல்ல.

வாக்குகளை திருட்டியவர்கள்தான் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.

வாக்குத் திருடர்கள் இனியும் பதவியில் நீடிக்கலாமா? தன் விருப்பம் போல் சட்டங்களை இயற்றுவதற்கும் திட்டங்களை தீட்டுவதற்கும் இவர்களை அனுமதிக்கலாமா?

சிறிலங்கா, வங்க தேசம், நேபாளம் என இந்தியாவை சுற்றி உள்ள நாடுகளில் மக்கள் எழுச்சிகளின் காலம் நடப்பதை பார்த்து வருகிறோம்.

அத்தகைய ஒரு மக்கள் எழுச்சியின் வழியாக வாக்குத் திருடர்களைப் பதவியில் இருந்து ஓட ஓட விரட்ட வேண்டும்!

பதவியில் இருந்து இறக்குவது மட்டுமின்றி கூண்டில் ஏற்றவும் வேண்டும்!

அணிதிரண்டு வாரீர்! ஓர் அரசியல் எழுச்சிக்கு அணியமாவோம்!

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW