வேளாண் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிரான தேவனஹள்ளிப் போராட்டம் வெற்றி!

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை
கர்நாடகாவில் உள்ள தேவனஹள்ளி தாலுகாவில் சன்னராயப்பட்டண ஹோப்ளியில் 13 கிராமங்களை வெளியேற்றிவிட்டு சுமார் 1777 ஏக்கர் நிலங்களைத் தொழில்துறை வளர்ச்சியின் பெயரால் கர்நாடக அரசு கையகப்படுத்த முனைந்ததை எதிர்த்து நடைபெற்ற போராட்டம் வெற்றியடைந்துள்ளது.
கடந்த ஜூலை 15 ஆம் நாள் அன்று கர்நாடக அரசு நிலங்களைக் கையகபப்டுத்துவதற்கான அரசாணையை திரும்பப் பெற்றுவிட்டது. முந்தைய பாசக அரசால் இத்திட்டம் கொண்டு வரப்பட்டதில் இருந்தே அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரசு கட்சி, தான் ஆட்சிக்கு வந்தால் இத்திட்டத்தைக் கைவிடப் போவதாக அறிவித்தது. மாறாக ஆட்சிக்கு வந்த பின் முந்தைய அரசு போட்டுத் தந்த பாதையிலேயே பயணித்தது.
சம்யுக்த ஹோராட்டா கர்நாடகா என்ற கூட்டமைப்பு (விவசாயிகள், தொழிலாளர்க்ள், தலித் மக்கள் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழ் ) இப்போராட்டத்தை முன்னெடுத்தது. சுமார் 1200 நாட்கள் நடைபெற்ற இப்போராட்டம் ஆட்சியாளர்களின் அனைத்து எதிர் முயற்சிகளையும் முறியடித்து வெற்றியடைந்துள்ளது.
முதலில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து அடிபணியச் செய்ய முடியுமா? என்று முயன்று பார்த்து தோற்றுப் போனது சித்தராமையா அரசு.
பின்னர், மூன்று கிராமங்களில் உள்ள 495 ஏக்கர் நிலங்களை மட்டும் விடுவித்து அக்கிராம மக்களை போராட்டத்திற்கு வெளியே கொண்டு செல்ல முயன்றனர். இதுவும் போராட்டத்தைப் பிளவுபடுத்த முடியவில்லை.
இதை தொடர்ந்து, கையளிக்கப்படும் ஒவ்வொரு ஏக்கருக்கும் இழப்பீடாக 10,771 சதுர அடி நிலம் கொடுக்கப்படும் என்று ஆசை காட்டப்பட்டது. ஆசைக்கு இணங்க விவசாயிகள் மறுத்துவிட்டனர்
போராட்டம் கர்நாடகம் தழுவிய போராட்டமாக விரிவடைந்தது. நாடு தழுவிய அளவில் ஆதரவு பெருகியது. தேவனஹள்ளியில் இருந்து பெங்களூரு நோக்கிப் போராட்ட மையம் மாறியது. முதலமைச்சர் சித்தராமையாவின் இல்லம் நோக்கி திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ் தலைமையிலான கலைஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள் உள்ளிட்ட குடிமைச் சமூகத்தினர் போராட்டத்திற்கு ஆதரவாக ஊர்வலம் போயினர். காங்கிரசு கட்சியின் அகில இந்திய தலைமையான ராகுல் காந்தியை நோக்கி கோரிக்கை எழுப்பப் பட்டது.
இப்போராட்டத்தில் முன்னணியில் நின்றவர்கள் கடந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாசகவுக்கு எதிராகவும் இந்தியா கூட்டணியின் குறிப்பாக காங்கிரசு கட்சியின் வெற்றிக்கு உழைத்தவர்கள். அதேநேரத்தில், மக்கள் கோரிக்கைகளில் உறுதியானப் போராட்டத்தை நடத்தி, காங்கிரசு கட்சிக்கு உரிய அழுத்தத்தை ஏற்படுத்தி இப்போராட்டத்தில் வெற்றியும் கண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் போராட்டும் ஆற்றல்களுக்கும் சரி ஆட்சியாளர்களுக்கும் சரி தேவனஹள்ளிப் போராட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
பாசிச எதிர்ப்புக் களத்தில் இடது சனநாயக ஆற்றல்கள் பாசிசம் அல்லாத ஆளும் வகுப்பு கட்சிக்ளுடன் ஐக்கியம் – போராட்டம் என்ற உறவு நிலையை எப்படி பேணுவது? என்பதற்கு இப்போராட்டம் ஓர் எடுத்துக்காட்டாகும்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து அதன் மூலம் கிடைக்கும் ஆதரவைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தபின் அதே கொள்கை செயல்படுத்தும் ஆளும் வகுப்பு கட்சிகளின் மோசடி இப்போராட்டத்தில் முறியடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை ஆளும் திமுகவும் பரந்தூர் விமான நிலைய விரிவாக்க எதிர்ப்பு, மேல்மா – சிப்காட் எதிர்ப்பு உள்ளிட்ட மக்கள் கோரிக்கைகளுக்கு முகம் கொடுத்து மக்களுக்கு எதிரான தமது அறிவிப்புகள், நடவடிக்கைகள், திட்டங்கள் ஆகிய்வற்றைத் திரும்பப் பெறுவதற்கு சற்றும் தயங்கக்கூடாது.
தேவனஹள்ளி போராட்ட வெற்றியைக் கண்டு தமிழ்த்தேச மக்கள் முன்னணி பெரிதும் மகிழ்கிறது. பாசிச எதிர்ப்புக் காலகட்டத்தில் இடது சனநாயக ஆற்றல்கள் வலுப்பெற வேண்டும் என்ற ஊக்கத்தை இப்போராட்டம் வழங்குகிறது. இப்போராட்டத்தின் வெற்றிக்கு உழைத்த சம்யுக்த ஹோராட்டா கர்நாடகா உள்ளிட்ட அமைப்புகள், ஆற்றல்கள் அனைவரையும் தமிழ்த்தேச மக்கள் முன்னணி வாழ்த்துகிறது.
தோழமையுடன்,
தி. செந்தில்குமார்,
ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்த்தேச மககள் முன்னணி