வெள்ளை நிறம் எனும் மன நோய்! – வ. ரமணி

26 Apr 2025

அண்மையில்  மார்ச் 8 உழைக்கும் பெண்கள்தின நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுமாறு பெண் தோழர் ஒருவர் அழைத்தார். அழைப்பை ஏற்று வருவதாகக் ஒப்புக்கொண்டு நிகழ்விற்கு புறப்பட்டேன்.

 மக்கள் மீதும் குறிப்பாக பெண்கள் மீதும் பற்றுகொண்டு நீண்டகாலமாக சமூக சேவையாற்றும் அழகிய கறுப்பு நிறமுடைய கச்சிதமான முக வடிவமும் கொண்ட முற்போக்கு சிந்தனையாளரான மரியா என்கிற ஒரு பெண் ஆளுமை அந்த நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார். எனக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டதை ஏற்று, நான் உற்சாகத்துடன் உள்ளே சென்று அரங்கிற்குள் அமர்ந்திருக்கும் அத்தனைப் பெண்களையும் கவனித்தேன்.  எனக்கு பெரும் வியப்பு, இருந்த நாற்காலிகள் அனைத்தும் நிரம்பியிருந்தன. ஏராளமான பெண்கள் மிகவும் பொறுப்புணர்வோடு அமர்ந்து கூட்டத் தயாரிப்பு வேலைகளை செய்துகொண்டிருந்தனர். பெரு மகிழ்ச்சியோடு அவர்களிடம் அறிமுகமாகிக் கொண்டேன்.

அரங்கத்தில் இருந்தவர்களில் பெரும்பாலும் மேல் நடுத்தர வர்க்க பெண்கள் மற்றும் அடித்தட்டு உழைக்கும் பெண்கள் எனக் கலந்து பங்கேற்றிருந்தனர். அவர்கள் அனைவருமே அரசியல், கட்சி  என்ற நெருங்கிய தொடர்பு இல்லாத புதிய பெண்கள். மேல் நடுத்தர வர்க்கப் பெண்கள் ஒவ்வொருவரும் மாநிறம் மற்றும் ஓரளவு வெள்ளை நிறத்திலும் உள்ளவர்கள். இவர்களில் பல பெண்கள் அரசுத் துறைகளில் பணிபுரிபவர்கள்.

அடித்தட்டு உழைக்கும் வர்க்க பெண்கள் கறுப்புநிறம் மற்றும் மாநிறத்திலும் உடைகள் மிக எளிமையாகவும் இருந்த பெண்களைக் கண்டேன். ஆண்கள் இல்லாத பெண்கள் நிறைந்திருந்த அரங்கத்தில் மிகவும் சுதந்திரமாக எடுத்த வேலைகளை அவரவர்கள் செய்துகொண்டிருந்தனர். இடையிடையே பெண்களுக்கான தன்னம்பிக்கை பாடல்களை பாடி உற்சாகம்  ஊட்டினர். 

நான் பேசுவதற்கு முன்பு, எஸ்தர் என்ற ஆசிரியர் தொடக்கவுரை ஆற்றினார். அவர், நடுத்தர வயது உடையவர். கருப்பு நிறமுடைய அழகிய வட்டமுகம் கொண்ட சுறுசுறுப்பான அவரின் வேலையும் அழகும் பலரையும் ஈர்த்தன. அவரின் சிரிப்பும் அழகிய வெள்ளை நிறப் பற்களும் கறுப்பு நிறத்திற்கு மேலும் மெருகூட்டியது.

அத்தோடு மார்ச் 8 உழைக்கும் பெண்கள் தினம் என்று ஏன் அழைக்கிறோம்? என்பது குறித்து பெண்களின் போராட்ட உரிமை முழக்கங்களை, வரலாறுகளை சுருக்கமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்த அவரின் பேச்சாளுமை எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. உரையை முடித்துவிட்டு என் அருகில் வந்து அமர்ந்தார். சிறப்பான உரை என்று வாழ்த்துக் கூறினேன். 

அடுத்து உழைக்கும் மகளிர் தின வாழ்த்துக்களைக் கூறி, என் உரையைத் தொடங்கினேன். உழைக்கும் பெண்கள் தின வரலாறு, குறிப்பாக கம்யுனிஸ்ட் தலைவர்கள் கிளாரா ஜெட்கின், ரோசா லக்சம்பர்க், கொலண்டாய், குருப்ஸ்கயா உள்ளிட்டோர் தலைமை தாங்கிய பெண் தொழிலாளர் போராட்டம் தொடங்கி சோவியத் அரசு சட்டம் இயற்றி மார்ச் 8 பெண்களுக்கான நாளை உலகம் அங்கீகரித்தது வரை கூறினேன். அடிமை முறைக்கு மட்டுமின்றி பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்தவர் இயேசு கிறிஸ்து என்றும் அவர் ஒரு போராளி என்றும் பதிவு செய்தேன்.

அத்தோடு, குடும்பம் தாண்டி பெண்கள் சமூகத்திற்கு எவ்வாறு பங்களிப்பு செய்ய வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைத்தேன். அடுத்து, திருப்பூர் கார்மென்ட்ஸ் தொழிலாளர்கள் – சுமங்கலி திட்டம், வரதட்சணை கொடுமை, நவீன பெண் சிசுக் கொலை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல சிக்கல்களை சுட்டிக் காட்டினேன். “பெண்களுக்கு சம ஊதியம், சமத்துவம், சமமான அதிகாரம்” என்ற அம்சத்தை முதன்மையாக்கி இறுதியில் பெண்களின் தன் ஆளுமை குறித்தும் சங்கமாய் சபையோடு எவ்வாறு ஒன்று சேர வேண்டும் என்பது குறித்தும் அழுத்தமாக அதே சமயம் ஆர்ப்பரித்து என் உரையை முடித்தேன்.

அப்பாடா எப்படியோ பேசிவிட்டோம் புரிந்ததோ இல்லையோ பார்க்கலாம் என்று அமர்ந்தேன். இயல்பாகவே என் உரை அடித்தட்டு உழைக்கும் பெண்களுக்கு ஏற்றதாக அமைந்து  இருந்தது. அவர்களின் கர ஓசை என் கருத்துக்கு ஏற்பளித்தது. 

எனக்கு அடுத்ததாக பேராசிரியருமான, இளம் வயது பெண் ஒருவர் பேசத் தொடங்கினார். தூங்கிக் கொண்டிருந்த அத்தனை பெண்களும் விழித்துக் கொண்டனர். ஒரே சிரிப்பும் மகிழ்ச்சியும் பொங்க அவரை வரவேற்றனர். அறிமுகப்படுத்திய பெண் பேச்சாளரின் அழகைப் பற்றி வர்ணித்து கூட்டத்தை உற்சாகப்படுத்தினார். சொல்லியது போல, அவர் மிகவும் அழகாகவும் வெள்ளை நிறத்திலும் இருந்தார். அவரின் அழகைக் கூட்டும் விதமாக மேக்கப்பும் செய்து இருந்தார். 

மிகச் சிறப்பான பேச்சாற்றல் உள்ளவர் என்பதை அவர் உரையாற்றிய போது உணர்ந்தேன். பெண்களின் மனதைக் கவர்ந்த வண்ணம் மிகவும் நயமாக, மெல்லிய குரலில் நிதானமாகப் பேசினார். பைபிளில் உள்ள இயேசுவின் கதையை வரிக்கு வரி எடுத்துக் கூறினார். கூட்டத்தினர் அசையாமல் மிகவும் உற்சாகத்தோடு உரையைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

என் அருகே அமர்ந்திருந்த ஆசிரியர் என்னிடம் கிசுகிசுத்தார், “பாத்தியா கூட்டம் எப்படி அசையாமல் கேட்கிறது? நீயோ, நானோ பேசிய போது யாரிடமும் சுவாரசியம் இல்லை, நீ எவ்வளவு உலக விசயத்தை வரலாறை அரசியலை சொன்னாய், அதெல்லாம் இவர்கள் காதில் வாங்கினார்களா என்றுத் தெரியவில்லை, ஆனால் அந்த பெண் பேசுவதை எவ்வளவு கவனிக்கிறார்கள் அவற்றில் பெண்களுக்கான அரசியல் செய்தி எதுவும் இல்லை ஆனாலும் கவனிக்கிறார்கள் ஏன் தெரியுமா? 

அவர் வெள்ளையாகக் கலராக இருக்கிறாள்? அதான் விடாமல் பார்க்கிறார்கள். அவர் என்ன மாதிரி புடவை அணிந்துள்ளார் என்ன மாதிரி காதணி போட்டுள்ளார், என்ன கலரில் ஜாக்கெட், லிப்ஸ்டிக் போட்டுள்ளார் என்று கவனிக்கிறார்கள் எந்த மேக்கப்பும் போடாத கறுப்பு நிறமுள்ள உன்னையும் என்னையுமா பார்ப்பாங்க!? அதுமட்டுமா, என்னிடம் பேசும் பலர், என்னிடம் பெயரைக் கேட்பார்கள் பின் மாவட்டத்தைக் கேட்பார்கள் பின் ஊரைக் கேட்பார்கள் பின் சாதியைத் தெரிந்து கொள்வார்கள் நான் இத்தகைய மனிதர்களையெல்லாம் பார்த்தாச்சு. அதனைக் கண்டுகொள்வதே இல்லை என்று வெள்ளந்தியாகப் படடவென்று சிரித்துக்கொண்டே கூறினார்.

நான் அவரை வியப்பாகப் பார்த்தாலும், உள்ளுக்குள் ஆழமாக யோசித்தேன் அப்பெண்ணின் வலிகளை துயரத்தை..

கூட்டம் முடிந்த நிமிடத்தில் கூறியது போல உரையாற்றிய அப்பெண்ணின் அழகை ரசிக்கத் தொடங்கிவிட்டனர். “நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்” எனக் கூறி எல்லோரும் சென்று அவரிடம் செல்பி எடுத்துக் கொண்டனர். நானும் அருகில் சென்று “மிகச் சிறப்பாக உரையாற்றினீர்கள் அருமை” என்று ஆரத்தழுவி கைக் கொடுத்தேன்.

ஆசிரியர் எஸ்தர் இத்தகைய நெருக்கடிகளை எவ்வாறு எதிர்கொண்டிருப்பார்?  இவர் போன்ற இன்னும் எத்தனை பெண்கள், கலராக இல்லை என்றும், கறுப்பு நிறம் என்ற காரணத்திற்காகவும் மனரீதியாக வேதனை அடைந்திருப்பார்கள்? புறக்கணிக்கப்பட்டிருப்பார்கள்? அதற்காக அழகுநிலையங்களை நோக்கி செல்லும் பெண்களின் எண்ணிக்கை எத்தனை? போன்ற கேள்விகள் வரிசையாக எழுந்தன. எத்தகைய ஆளுமையாக இருந்தாலும் கறுப்பு என்ற தோல் நிறம், உடல், முக அமைப்பு, உயரம், குட்டை, குண்டு, ஒல்லி போன்ற உருவ அமைப்புகளை மையமிட்டு அன்றாடம் கேலி கிண்டலாகவும் நக்கல் நையாண்டியாகவும் துச்சமென தூக்கி எறிந்து ஒருவரின் மனதை புண்படுத்துகிறோமே என்றுகூட உணராமல் தாழ்த்தி பேசும் பேச்சுக்கள் எத்தனை எத்தனை? ஆண்களும் பெண்களும் சந்திக்கும் சிக்கலாக இருந்தாலும் மனிதர்களை எடைபோடுவதில் நிறம் எனும் தோற்றம் முக்கியப் பங்காற்றத்தான் செய்கிறது. கறுப்பு நிறம், வெள்ளை நிறம் இரண்டும் பெண்களிடம் எத்தகையத் தாக்கத்தை, வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை உணர முடிந்தது.

இந்த சமூகம் கட்டமைக்கும் “வெள்ளை அழகு” எனும் மனநோய் அது குறித்த கருத்தாக்கம்  பிபோக்கு சிந்தனையும் ஒவ்வொருவர் மனதிலும் அழுக்கு போன்று ஒட்டிக்கொண்டிருக்கிறது? நிறப் பாகுபாடு குறித்த உரையாடல்கள் அன்றாடம் நாம் வாழும் பொது இடங்கள், குடும்ப உறவுகளில், உற்பத்தியில், விற்பனையில், முதலாளித்துவ நுகர்வு லாபத்தில், அழகுப் பொருட்களில், விளம்பரங்களில், பணியிடங்களில், நிறுவனங்களில், ஊடகங்களில், அரசியல் அதிகாரத்தில், பள்ளிக்கூடத்தில், கல்லூரிகளில், காதலில், திருமணத்தில், வரதட்சணையில் நட்பில் சண்டை சச்சரவுகளில், கலை இலக்கியத்தில், சினிமாக்களில், பாலின ஈர்ப்பில், உரையாடலில், விளையாட்டில், நாடகங்களில் போன்ற பல்வேறு தளங்களில் கறுப்பு நிறம், வெள்ளை நிறம் வகிக்கும் உளவியல் ஆதிக்கம் ஒவ்வொன்றின் சம்பவங்களும் காட்சியாக என் கண்முன் வந்துசென்றன. அறிவியல் ரீதியிலும் இயற்கையாகவே உடல் உழைப்பால் வெயிலின் தாக்கத்தாலும் உடலில் உற்பத்தி செய்யப்படும் மெலனின் எனும் ஹார்மோன் செய்யும் மாற்றத்தைப் பற்றி சமூகத்தில் பேசுபொருளாக்க வேண்டும் என எண்ணினேன்.

தமிழ்நாட்டில் வசிக்கும் பெரும்பாலானோர் கறுப்பு மற்றும் மாநிறத்தைக் கொண்டவர்கள்தான். எல்லா இனத்திலும் சாதியிலும் உள்ளவர்களில் பெரும்பாலானோர் கறுப்பு நிறத்தவர்களே. பல்வேறு இனக்குழுக்களின் கலப்பு, இடப்பெயர்வு, உழைப்பு, தட்பவெப்ப நிலை, போன்ற பல்வேறு காரணங்களால் மனிதர்களின் நிறங்கள் மாறியிருக்கிறது. கடந்த காலத்தில்கூட நிறம்குறித்த பாகுபாடு செல்வாக்கு செலுத்தாத நிலையில் குறிப்பாக 90களுக்குப் பிறகு முதலாளித்துவ சந்தை வளரும் வேளையில் அனைத்தும் அதை மையமிட்டதாக மாற்றப்படுவதால் ஒவ்வொரு வீட்டிலும் இதன் தாக்கத்தைப் பார்க்க முடியும்.

குழந்தை பிறப்பில் கறுப்பு

“காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு” என்ற பழமொழிக்கு ஏற்ப தோற்றம், நிறத்தை வைத்துதான் சமூகத்தில் அழகு என்பது தீர்மானிக்கப்படுகிறது. அது வர்க்கம், அந்தஸ்து, வாழ்க்கைமுறை போன்ற காரணங்கள் அடிப்படையாக தீர்மானிக்கிறது. தனக்கு பிறக்கும் குழந்தை அழகாகவும், கலராகவும் பிறக்க வேண்டும் என்ற ஆசை இல்லாதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லலாம். உழைத்து உழைத்து கருத்துப்போன அடித்தட்டு உழைக்கும் வர்க்க மக்களில் இந்த ஆசையும் எதிர்பார்ப்பும் இருக்கும். ஆனால், அது தீர்மானகரமான பாத்திரம் வகிக்காது. ஆனால் நடுத்தரவர்க்கத்தில் தீர்மானகரமான பாத்திரம் வகிக்கும். கணவனும் மனைவியும் அடர் கறுப்பு நிறத்தில் இருந்தால் தாழ்வுமனப் பான்மையிலிருந்து நம்மைப் போன்று குழந்தையும் கறுப்பாக பிறக்கக் கூடாது என்று அதற்காக விளம்பரங்களைப் பார்த்து ஏதேதோ சாப்பிடத் தொடங்குகிறார்கள். குழந்தை பிறந்தவுடன் கறுப்பாக இருக்கிறதா? வெள்ளையாக இருக்கிறதா? என்றுதான் முதலில் பார்க்கிறார்கள். இளஞ்சிவப்பு நிறத்தில் வெள்ளையாக இருந்தால் தாயின் முகத்திலும் உறவினர்களின் முகத்திலும் அவ்வளவு மகிழ்ச்சி பொங்கும். கறுப்பாக பிறந்திருந்தால் முகத்தை சுழித்துக்கொண்டு “பிள்ளையப் பெத்திருக்கா பாரு கரிக்குட்டியை” என்று பெண்கள் நொடித்துவிட்டு செல்வார்கள். காதின் நிறத்தை வைத்து கறுப்பாக இருக்குமா? வெள்ளையாக இருக்குமா எனக் கூறி தாயின் மனதில் ஒரு பீதியை ஏற்படுத்திவிடுவார்கள். என்னதான் குங்குமப் பூ போன்றவற்றை சாப்பிட்டாலும் தாயின் தந்தையின் நிறத்தில்தானே குழந்தை பிறக்கும்?. வீட்டில் அடர் கறுப்பு நிறத்தில் இருக்கும் குழந்தைகள் பெரும்பாலும் மன அழுத்தத்தை சந்திக்கின்றனர். பெற்றோர்கள் உறவினர்கள் அக்குழந்தையை எடுத்துக் கொஞ்சுவதிலும் சரி,  பாராட்டுவதிலும் வேறுபாடு இருக்கிறது. கறுப்பாக இருக்கும் சிறுமி சிறுவர்கள் தன் உடன் பிறந்த தங்கை/தம்பி/அண்ணன்/அக்கா/ யாராவது ஒருவர் வெள்ளையாக இருந்தால் நாம் ஏன் வெள்ளையாக பிறக்கவில்லை? என்று வருத்தப்பட்டு அம்மாவிடம் கேட்கும் பிள்ளைகளைக் காண்கிறோம். அக்குழந்தைகள் தனிமைப்படுவதும் அதற்காக வருந்துவதும் இன்றைய இளம் தலைமுறையிடம் அதிகமாகவே காணப்படுகிறது.

கறுப்பாக இருக்கும் குழந்தைக்கு கரிக்குட்டி, கரியா, கறுப்பா, கரிவாயா, கறுவாச்சி, கறுப்பி, போன்ற பல பட்டப்பெயர்களை மக்கள் சூட்டுவார்கள். ஆனால் வெள்ளையாக இருப்பவர்களுக்கு வெள்ளையன், அழகு என்ற பெயர்தான் அங்கீகாரமாக இருக்கும். கறுப்பானவர்கள் பெரியவர்களாக வளர்ந்தபின்பும் இதே கேலி, கிண்டல், நக்கல் அவமதித்தல், (இவன்/இவள்) நான் பொண்ணு கொடுக்க மாட்டேன் என்பதும், என் மகளை கட்டிக்கொடுக்க மாட்டேன், கருப்பா இருக்கும் இவளை யார் சீய்ப்பா? யாரும் கல்யாணம் பண்ணிக்கமாட்டாங்க என்பது வரை அனிச்சையாகவே மக்களின் வாழ்வில் கறுப்பு நிற பேதம் சிந்தனையில் செல்வாக்கு செலுத்திக்கொண்டிருக்கிறது.

விதிவிலக்காக கறுப்பாக இருக்கும் பெண்ணை ரசிப்பது என்றால் அவள் லட்சணமான முக வடிவமைப்பைப் பெற்றிருந்தால் எல்லோரும் கொஞ்சுவார்கள். “கறுப்பாய் இருந்தாலும் கலையாக, லட்சணமாக இருக்கிறாள் அவளுக்கு என்ன கொறைச்சல்?” என்று கதைப்பார்கள். இதுபோன்ற அன்றாடம் நம் வாழ்வில் பல கண்ட கேட்ட சம்பவங்கள் என் நினைவிற்குள் வந்துசென்றன.

பள்ளிகளில் கறுப்பு நிறம்

சாதி பேதம் பாராது ஒரே மாதிரியான உடை உடுத்த நெறிமுறைகளை வகுக்கும் பள்ளிகளிலேயே குறிப்பாக தனியார் பள்ளிகளில் ஆசிரியர் முதற்கொண்டு பள்ளி மாணவர்கள் வரை சிகப்பாய் இருக்கும் மாணவிகள் மாணவர்கள மீது ஒரு தனிப்பாசம் வெளிப்படுத்துவதை பார்க்கலாம். பல ஆசிரியர்களின் அணுகுமுறையில் அழகோடு இணைந்து உள்ளூர சாதி எண்ணம் இழையோடுவதையும் காண முடியும். அதுவும் கறுப்பாய் இருக்கும் மாணவியை/மாணவனை பின் இருக்கையிலும், அழகாய் இருக்கும் மாணவ, மாணவிகளை முதல் இருக்கையிலும் அமரச் செய்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வகுப்பிற்கு கிளாஸ் லீடர் ஆக்குவது வரை பின்புலம் தோற்றம் நிறம் தீர்மானிக்கிறது.  

அவற்றில் தலித் பழங்குடி மாணவர்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. தொடக் கூடாது என்று தள்ளி நிற்க சொல்வதும், அருகில் நிற்காதவாறு நீளமான குச்சியால் தீண்டுவது, அடிப்பது அருகில் வராமல் பார்த்துக் கொள்வது வரை ஒவ்வொரு சிறு அசைவிலும் தீண்டாமையை கறுப்பு நிறப் பாகுபாடு மிக நுண்ணிய அளவில் வெளிப்படுவதை பார்க்க முடியும். நன்கு படித்து சிறப்பான மதிப்பெண் எடுத்திருந்தால் கூட அந்த மாணவ, மாணவிக்கு உரிய அங்கீகாரமோ கிடைத்திருக்காது. சோப்பு  போட்டு குளித்து விட்டு வா? என்பதுமான ஏளனங்கள் அவமானங்களை சந்திக்கும். சிறு வயதில் ஒவ்வொரு குழந்தையும் இது போன்ற அவலத்தை எதிர்கொண்ட அந்த நாட்கள் நினைவில் வந்து போயின.

பள்ளி மாணவர்களை தனித்தனியாக அமர வைப்பதிலும் வெள்ளையாக இருப்பவர்கள் ஒருபுறமும், கறுப்பாக இருப்பவர்கள் ஒருபுறமும், சாதியாகவும் பிரித்து அமர வைக்கும் சாதிய மனோபாவம் ஆசிரியர் மனங்களிலேயே ஊறிக்கிடக்கிறது. அண்மையில் பல செய்திகள் வருவதைப் பார்த்திருப்போம். தலித் மற்றும் பழங்குடி மாணவர்களை கழிவறையைக் கழுவச் சொல்லும் அவலம் சமத்துவத்தை போதிக்க வேண்டிய பள்ளிகளிலே மேலோங்கியிருக்கிறது. இவ்வாறு குழந்தைப்பருவத்திலேயே பாகுபாட்டை கண்டுணர்ந்து வளரும் குழந்தைகளின் மனதில் தன்னம்பிக்கையும் துணிச்சலும் குறைந்து அம்மாணவர்கள் சக மாணவர்களோடு பழகத் தடை ஏற்படுத்தும், தாழ்வுமனப்பான்மைக்கு தள்ளும் சூழலே ஆசிரியர்களிடமும் பள்ளி மாணவர்களிடமும் நிலவுகிறது இதனை சரிசெய்திடும் விதமாகவே நாம்  சாதி பேத நிற பாகுபாடற்ற  பாலினப் பாகுபாடற்ற சமத்துவகக் கல்வி வேண்டும் என்று கூறுகிறோம்.   

காதலில் கறுப்பு நிறம்

காதலில் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் அழகாகவும் வசதி வாய்ப்பும் அடக்கம் ஒடுக்கமாகவும் இருக்கும் பெண்களைத்தான் தனக்கு மனைவியாக வர வேண்டும் என்று பெரும்பாலான ஆண்கள் விரும்புகிறார்கள். அதாவது வெள்ளையாக உள்ள பெரும்பாலான பெண்கள் கருப்பாக உள்ள ஆண்களை தேர்வு செய்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்ளலாம். பொண்ணு பார்க்க அழகா இருக்கிறாளா? என்றுதான் தொடங்குவார்கள்.  பெண்ணை பார்த்தவுடன் கறுப்பாக இருந்தால் வேண்டாம் என்று நிராகரிக்கும் போக்கும் ஆண்களிடம் அதிகம் இருக்கிறது. ஆனால் பெண்கள் அவ்வாறு

கறுப்பு நிறம் கொண்ட ஆண்களை புறக்கணிப்பது மிக மிக குறைவு என்று சொல்லலாம்.

கறுப்பாக உள்ள பெண்ணை அப்படியே ஒரு ஆண் தேர்ந்தெடுத்தாலும் காதலிக்கும் போது கறுப்பு தெரியாமல் இருக்கும். அதே திருமணத்திற்குப் பின் கறுப்பு நிறத்தை வைத்து திட்டும் சண்டைகளை நிறையப் பார்க்கலாம். பல கறுப்பு அல்லது மாநிறம் உடைய பெண்களை முதலில் காதலித்துவிட்டு பின் ஏமாற்றிவிடுவதில் இந்த நிறம் செல்வாக்கு செலுத்துகிறது. கலராக வசதியாக இருக்கும் பெண்ணை நோக்கி பெரும்பாலான ஆண்கள் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து நகர்கிறார்கள். விதிவிலக்காக சில பெண்களும் வசதியை மையமாக வைத்து இத்தகைய தவறை செய்கிறார்கள். “டேய் என் பிகர் வராடா?, மச்சான் உன் பிகர் மொக்க பிகர்? இதபோய் தேர்வு செய்திக்கியே? விட்டுட்டு வேற அழகான பிகரை பாருடா? என்கிற கேலி கிண்டலை இளம் ஆண்களிடம் பார்க்கலாம். வெள்ளையாக அழகாக இருக்கும் பெண்ணாகவோ ஆணாகவோ இருந்தால் அவர்களை அத்தனை பேரிடமும் அறிமுகப்டுத்துவது எல்லோர் முன்பும் காட்டிக்கொள்வதில்  அவ்வளவு பெருமிதத்தை உணர்வார்கள். அவற்றிலும் நகரம் கிராமம், பட்டிக்காடு, மாடர்ன் என்ற பின்புலம் வசதியான பையனா? என்ன சாதி என்று கண்டுபிடித்து வாழ்க்கையை தேர்வு செய்வதில் இன்றைய தலைமுறையின் சுயநலம் அதிகமாகவே இருப்பதை பார்க்கலாம்.  

திருமணத்தில் கறுப்பு நிறம்

திருமணம் என்றாலே ஒரு பெண்ணை இன்னொரு ஆணிடம் மூன்று முடிச்சு போட்டு அனுப்பிவிடுவது அதாவது விற்பது போன்றது. அவள் காலம் முழுக்க கணவனுக்கும் அக்குடும்பதிற்கும் கட்டுப்பட்டவள். திருமணம் என்று வந்தாலே அப்பெண்ணின் விருப்பம் நசுக்கப்படும். அடுத்து காதலிக்கவோ சாதி மறுத்து காதலித்து திருமணம் செய்யவோ இச்சாதிய ஆணாதிக்க பிற்போக்கு சமூகம் அனுமதிக்காத சூழலே இன்றைய நவீன உலகிலும் நீடித்துக்கொண்டிருக்கிறது.

அடர் கறுப்பு நிறமுடைய ஒரு பெண்ணுக்கு அவ்வளவு எளிதில் காதலும் திருமணமும் அமைவதில்லை. அதற்காக அவள் ஏங்கிக் கொண்டிருப்பாள். அவற்றிலும் படிக்காத பெண்ணாக இருந்தால் சொல்லவே தேவையில்லை. இவளுக்கு எவனாவது மாட்ட மாட்டானா?  எப்படியாவது கரை சேர்த்துவிடுவோம் ஒரு கடமை முடியும் என்ற சலிப்போடு பெற்றோர்கள் வரம் தேடுவார்கள். அவ்வாறு, பெண் தேடி வரும் மாப்பிள்ளையோ நிறத்தை பார்த்தும் படிப்பை பார்த்தும் யோசித்து சொல்கிறோம் என்று சென்றுவிடுவார்கள். மாப்பிள்ளை வீட்டாரோ “எங்கெங்கோ நாமும் பொண்ணு தேடுனோம் கிடைக்கல, இதையும் விட்டுட வேண்டாம். கறுப்பாக இருந்தா என்ன? வரதட்சணை நிறைய போட சொல்லி கேட்போம் போதாதா” என்று முடிவெடுத்து அழைப்பார்கள். கறுப்பு நிறத்தை படிப்பை மனதில் வைத்து வரதட்சணையின் அளவை கூடுதலாக கேட்கும் பண்பாட்டு வழக்கம் இன்றும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பார்க்கலாம். அசிங்கமாக இருக்கிறாய் என்ற காரணத்தாலும் வரதட்சணை கொடுக்க முடியாத குடும்ப வறுமையாலும் எத்தனையோ ஏழைப் பெண்களின் திருமணக் கனவுகள் கானல்நீராய் போனதை பார்த்திருப்போம்.  கறுப்பு நிறப் பெண்களின் வாழ்க்கை என்று யோசித்தபோது இன்னொரு உரையாடல் என் நினைவுக்கு வந்தது.

அன்றொரு நாள் ஷேர் ஆட்டோவில் பூந்தமல்லி நோக்கி நான் பயணித்துக் கொண்டிருந்தேன். ஷேர் ஆட்டோவிற்குள் வெள்ளை நிறத்தில் இரு பெண்கள் அமர்ந்திருத்தனர். அடுத்த நிறுத்தத்தில் கறுப்பு நிறமுடைய நடுத்தர வயதுடைய ஒரு பெண்ணும் அவரின் மகளும் பரபரவென பேசிக்கொண்டே ஆட்டோவிற்குள் ஏறினர். பேச்சிலே தெரிந்தது அவர்கள் வெள்ளந்தியானவர்கள் என்று. வானகரம் மீன் மார்க்கெட் போக வேண்டும் என்று பேசியபடியே ‘‘நீங்க எங்க இறங்கனும்?”  என்று அருகில் இருந்த பெண்ணிடம் பேச்சுக்கொடுத்தனர். அதற்கு பதில் சொன்ன அப்பெண்ணிடம் என் மகளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்க்க முடியுமா? தெரிந்தால் சொல்லுங்க?” என்றார். அதற்கு எதிரில் இருந்த பெண்ணோ, தண்டையார்பேட்டையில் தெரிந்தவங்களோட பையன் ஒருத்தன் இருக்கான், ஆனா..? என்று இழுத்தார். “சொல்லுங்க உடனே பார்த்துடலாம் என்ன ஆனா?” என்று வெள்ளந்தியான அந்த பெண்  கேட்டார். மீண்டும் இழுத்தபடியே வெள்ளந்தி தாயின் முகத்தைப் பார்த்துக்கொண்டே “அந்தப்  பையனோட அம்மா பொண்ணு கலராக அழகாக இருக்கனும் என்று அதுமாதிரி பொண்ணு தேடுறாங்க.. நீங்க கறுப்பா இருக்கீங்க அதான் யோசிச்சேன்?” என்றார்.

அதற்கு வெள்ளந்தியான அப்பெண்ணோ கலரா சோறு போடுது, வேணும்னா பொண்ணுக்கு சந்தனக் கலர் பெயிண்ட் அடிச்சிடலாமா? நான் கறுப்புதான் என் பொண்ணு மாநிறமா இருப்பாள். இருந்தாலும் கேட்டுப் பாருங்க?“ என்று கிண்டலாக சொல்லியதுடன் கறுப்பாக இருப்பவங்க தான் வயது தெரியாமல் தோளில் சுருக்கம் விழாமல் வயதானாலும் அப்படியே இருப்பாங்க. கலராக இருக்கிறவங்க சீக்கிரம் தோள் சுருங்கி வயதாக அசிங்கமாகவும் தெரிவாங்க தெரியுமா உங்களுக்கு? கறுப்புதான் எப்பவும் ஒரே மாதிரி இருக்கும் அழகா? என்று பட்டென்று பதில் சொன்னார். ஆட்டோவில் இருந்தவர்கள் எல்லோரும் ஆமாம் ஆமாம் என்று சொல்லி சிரித்தனர். இறங்கும் இடம் வந்தவுடன் மகளிடம், இந்நேரத்துக்கு மீன் கிடைக்குமோ இல்லையோ வேகமாக போ என்று இறங்கிச் சென்றனர். அன்றிலிருந்து இன்றுவரை அந்த உரையாடல் என் மனதைவிட்டு நீங்கவில்லை.   

ஊடகங்களில் கறுப்பு நிறம்

இன்றைய நவீன உலகில் இயற்கை கொடுத்த அழகைவிட செயற்கை அழகுதான் வேலையை, பொறுப்பை, உயர் பதவியை இருத்தலையே தீர்மானிக்கும் ஆபத்தான பாகுபாடு அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. குறிப்பாக ஊடங்களில் பார்த்தோமேயானால், செய்தி சேகரிக்கும் நிருபர்களில் பெண்கள் கறுப்பு நிறமுடையவர்கள் அங்கம் வகிக்கிறார்கள். ஆனால், செய்தி வாசிப்பாளர்  என்று வரும் பொழுது இன்றைக்கும் வெள்ளை நிறத்தில் உள்ள பெண்களைத்தான் காண முடிகிறது. செல்வாக்கு பெறாத சில விசுவல் மீடியாக்களில் தொலைக்காட்சிகளில்  கறுப்பு மற்றும் மாநிறம் உடைய பெண்கள் செய்தி வாசிப்பாளராக இருக்கிறார்கள். ஆனால் பிரதான தொலைக்காட்சிகளில் வெள்ளை நிறப்பெண்களையே செய்திவாசிப்பாளராக நியமிக்கும் நிற பேத சிந்தனை தீவிரமாக ஆதிக்கம் செலுத்துகிறது. இவை எங்கும் பேசப்படுவதில்லை குறிப்பிடத்தக்கது.

ஆட்சி அதிகாரத்தில் கறுப்ப நிறம்

வேறு எந்த இடத்தில் நிற பேதம் வேலை செய்கிறதோ இல்லையோ ஆட்சி அதிகாரத்தில் நிச்சயமாக முக்கியப் பங்கு வகிக்கிறது. அது அரசியல்வாதிகளின் வாழ்க்கை செல்வாக்கு, அந்தஸ்து பதவி உயர்வு வரை நீடித்துக்கொண்டே செல்லும். இன்றைக்கு இந்திய தமிழ்நாட்டில் கறுப்பு நிறமுடைய பெண்கள்  எத்தனை பேர் உயர்மட்ட ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்படுகிறார்கள்? வசதிபடைத்த வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள்தான் போட்டி போட முடியும். வெள்ளை நிறத்திலும் பார்ப்பதற்கு ஈர்க்கக் கூடியர்வகளாகவும் இருப்பவர்களை பார்த்துதான் தேர்தலில் பங்கெடுக்க அனுமதிக்கிறார்கள். கறுப்பு நிறப் பெண்கள் கணிகமானோர் இருக்கும் எல்லை அடிமட்ட உள்ளாட்சி நிர்வாகங்களில் தான் என்பதைக் காணமுடியும். ஆக, திறமை என்பதையும் தாண்டி, பர்சனாலிட்டி, அழகு, தோற்றம், நிறம் போன்றவற்றை குறித்த வெள்ளை நிற மேலாதிக்க உணர்வு மேலோங்கியிருப்பதை கருத்துருவாக்கம் செய்யும் இத்துறையில்தான் கூடுதலாக காணமுடியும்.

இன்றைக்கும் தேர்தலில் வேட்பாளர்கள் வெற்றிபெறுவதற்கும் பிரச்சாரத்திற்கும் வெள்ளை நிற நடிகைகளை கவர்ச்சியான பெண்களை உத்தியாக பயன்படுத்தப்படுவதை பார்க்கலாம். இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தியின் அழகும் ஆளுமைத் திறனும் பேசுபொருளாகியதுபோல, தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் அழகும் ஆளுமையும் பேசுபொருளானதுபோல தற்போது குடியரசுத்தலைவராக இருக்கும் திரௌபதி முர்மூ என்பவரின அழகு இங்கு பேசப்பட்டதில்லை. இதுபோன்ற பல்வேறு துறைகளில் நிலவும் கறுப்பு நிறும்,வெள்ளை நிறம் குறித்த கருத்தாடல்கள் நினைவுக்குள் நிழலாடின.

இத்தகைய பாகுபாடுகள் பகை முரணாக இல்லையென்றாலும் மனிதர்களுக்கிடையே ஆண் பெண் பாலினத்திற்கு இடையே ஏன் பெண்ணுக்கு பெண்ணுக்கு இடையே பல  கசப்பான உணர்வுகளை துயர சம்பவங்களை  சுமந்த வண்ணம் மெல்லிய இழைபோல படர்ந்து இன்றைய முதலாளித்துவ நுகர்வு காலகட்டத்தில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.  இத்தகைய நிற வேறுபாடுபாடு சிந்தனையை அன்னியப்படுத்துதலை எவ்வாறு களையப் போகிறோம்? இதற்கான செயல்பாடு என்ன? என்ற எண்ணம் என்னை வாட்டியது. 

நிறத்தின் வரலாறு

உண்மை என்னவோ மனித குலத்தின் ஆதிக்க குலமான நமது மூதாதையர்கள் ஆப்பிரிக்க மக்கள் அழகான கறுப்பினத்தவர்கள். அவர்களது உடல் காடு, மழை வெயிலிலே உழைத்தே கறுமை நிறமாகிப் போனவர்கள் “உழைப்பின் நிறமே கறுப்பு,  கறுப்பு என்பது அழகு, கறுப்பு என்பது எதிர்ப்பு” என்பதை உலகிற்கு உணர்த்தியவர்கள்.

ஆனால் பிற்காலத்தில் ஐரோப்பியர்களின் கலாச்சாரம், பிரிட்டிஷ் கலாச்சாரம் போன்றவற்றால் வெள்ளைதான் அழகு என்று ஆக்கப்பட்டுள்ளது.  வெயிலின், உழைப்பின் நிறத்தை அசிங்கம் என்று ஆக்கியுள்ளனர். நிறம் என்பதும் இங்கு அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. அது அடிமை முறையோடும் ஆதிக்கத்தோடும் அதிகார வர்க்கத்தோடும் இந்தியாவில் சாதியோடும் இணைந்தே இயங்குகிறது.

குறிப்பாக, தமிழ்நாட்டில் “வெள்ளை நிறத்தில் உள்ளவர்கள் பொய் சொல்லமாட்டார்கள்” என்ற உளவியல் உயர் சாதிய மேல் ஆதிக்கமாக செல்வாக்கு செலுத்திவருகிறது. கிழிந்த, அழுக்கான உடை அலங்கோலமான தோற்றமும் கொண்ட ஒருவரை இச்சமூகம் முகம் சுழித்து இழிவாகத்தானே பார்க்கிறது. தமிழ்நாட்டில் இது முதன்மையான சிக்கலாக இல்லை என்றாலும் தலித் மக்கள் பழங்குடியினர், பெண்கள் உள்ளிட்டோர் அன்றாடம் எதிர்கொள்ளும் சிக்கலாகவும் ஒவ்வொரு இடத்திலும் மனித உறவுகளில் ஊடாடி மனித மனங்களை உடைத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக வரதட்சணையை தீர்மானிப்பதிலும் திருமணத்திற்குப் பெண்ணை தேர்வு செய்வதிலும் குடும்ப வாழ்வில் தீர்மானகரமான பாத்திரம் வகிக்கிறது கறுப்புத் தோலின் நிறம். உண்மையில் அழகு என்பது நிறத்தில் அல்ல, குணத்திலும் பண்பிலும் இயல்பிலும் துணிச்சலிலும் அநீதியை எதிர்ப்பதிலும்தான் இருக்கின்றன என்பதை அழுத்தமான உரையாடலாக மாற்ற வேண்டும் என்று தோன்றியது.

பெண்களை அறியாமலேயே ஆக்கிரமித்திருக்கும் இந்த உளவியல் சிக்கல் தீர்க்க வேண்டிய ஒன்று என்று ஆழ்ந்த சிந்தனை என்னை அசைத்துப் பார்த்தது.  அருகில் வந்த பெண் ஒருவர் என்னை உலுக்கி “தேநீர் அருந்தலாம் வாங்க” என்று அழைத்தார் சட்டென்று விழித்துப் பார்த்து அவரைப் பின்தொடர்ந்தேன்.

கூடி நின்ற பெண்களுக்கிடையில் கலகலவென்ற சிரிப்புகளுக்கிடையில் சூடான சுவையான தேநீர் அருந்தியதில் மீண்டும் மகளிர் தின நிகழ்வு குறித்த நினைவிற்குத் திரும்பினேன். மார்ச் 8 உழைக்கும் பெண்கள் தினத்தில் உழைப்பாளிகளின் நிறமான கறுப்பு நிறம் குறித்தும் பெண்களின் ஆளுமையை முடக்கும் நிறப் பாகுபாடு குறித்தும் பண்பாட்டுத் தளத்தில் நாம் உரையாடலை நடத்திட வேண்டும் என்று யோசித்தவாறு கறுப்பழகிகளோடு ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டு அழகான அந்த தருணத்தை அசைபோட்டபடி பேருந்தில் பயணித்தேன்.

வ. ரமணி

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW