தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25 (பகுதி-2): – தோழர் சமந்தா

இந்த அறிக்கையோட முன்னுரையில மத்திய அரசு தமிழ்நாட்டோட ஒத்துழைச்சு செயல்படலன்னு சொல்லியிருக்காங்க. தமிழ் நாட்டுக்கு நியாயமா கிடைக்கவேண்டிய நிதி ஆதாரங்களை பகிர்ந்துகொள்ளாத மத்திய அரசு நீட் (NEET), புதியக் கல்விக் கொள்கை (NEP 2020) போன்ற கொள்கைகளை கட்டாயமாக்கி, கடன்களுக்கு வரம்பிடுவதன் மூலமா வளர்ச்சியைக் கட்டுப்படுத்துதுன்னு சரியா சுட்டிக் காட்டிருக்காங்க. ஆனா அது பத்திய விரிவான தகவல்களை அறிக்கையில தேடுனாலும் கண்டுபிடிக்கமுடியல. மத்திய அரசுக்கும் தமிழ்நாட்டுக்கும் (மாநில அரசுகள்) இடையிளான உறவுகளோட கடந்தகால நெலைமைகளையும், நடப்புநிலையையும் வெளக்குறதுக்கு கொறைஞ்சது ஒரு அத்தியாயத்தையாவது ஒதுக்கனும்னு கேட்டுக்குறோம். ஆய்வறிக்கையோட முக்கியமான அம்சங்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட்டுருக்காங்க. அதுல “பணவீக்கம் என்பது பெரும்பாலும் ஒரு பணவியல் நிகழ்வாக இருப்பதால்” என்று குறிப்பிடப்பட்டுருக்கு. இது தவறான புரிதலுக்குத் தான் வழிவகுக்குது. பணவீக்கம் பெரும்பாலும் பணவியல் நிகழ்வா மட்டுமே இருந்துச்சுன்னா, பொழக்கத்துல உள்ள பணத்தோட வரத்தையும், கிராக்கியையும் வட்டிவீதம் மூலமா மத்திய வங்கிகள் கட்டுப்படுத்துவதன் மூலமே பணவீக்கத்தை குறைக்கமுடிஞ்சிருக்கும். ஆனா மத்திய வங்கிகள் என்ன தான் மெனக்கெட்டாலும் பணவீக்கம் கொறையமாட்டிங்குதே. விரிவான ஆய்வறிக்கையில பணவீக்கத்தின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த நியாய விலைக் கடைகளின் அவசியத்தை சரியா குறிப்பிட்டுருக்காங்க.
2023-24ல் மேட்டூர், பவானிசாகர், அமராவதி, வைகை, கிருஷ்ணகிரி, சாத்தனூர் உள்ளிட்ட முக்கிய நீர்த்தேக்கங்களிலிருந்து திறந்துவிடப்படுற நீர், போன ரெண்டு, மூனு ஆண்டுகளை விட கணிசமாகக் குறைஞ்சுருக்குறதையும் அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கு. கால நிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கான பல சரியான பரிந்துரைகளை அறிக்கைவ்கொடுத்துருக்கது வரவேற்கத்தக்கது.
அறிக்கை விவசாயத் துறையில எந்திர மயமாக்கத்தை ஊக்குவிச்சுருக்கு. விவசாயத் துறையில மாற்றத்தை ஏற்படுத்த, கூட்டுறவு இயக்கங்கள் மற்றும் விவசாயிகள்-உற்பத்தியாளர்கள் அமைப்புகள் (FPOs) போன்ற நிறுவனங்களையும் அரசு வலுப்படுத்தனும்னு முன்மொழியுற இந்த அறிக்கை தொழில்துறையிலும் அதற்கீடான முயற்சிகளை பரிந்துரைக்க தவறிடுச்சு.
ஆட்டோ மொபைல், வாகன உறுதிபாகங்களின் ஏற்றுமதியில முன்னணியில் இருக்கும் தமிழ்நாடு மின்-வாகனங்களையும் அதிக அளவுல உற்பத்தி செய்யனும்னு பரிந்துரைச்சிருக்கு. தொழில்துறைவளர்ச்சியைத் தக்கவைக்குறதுக்கு பணியாளார்களின் திறனை மேம்படுத்தும் பயிற்சிகள் கொடுக்கனும்னு வலியுறுத்தப்பட்டுருக்கு.
2005-2023க்கு இடைப்பட்ட காலத்துல தமிழ்நாட்டின் வறுமை 36.54%லிருந்து 1.43%ஆக குறைஞ்சிருக்கதா வறுமையை ரொம்ப குறைச்சுக் காட்டுறிக்காங்க. வறுமையில பட்டினி கெடக்குறவங்களையும் வறுமைக்கோட்டுக்கு மேல இருப்பதா காட்டுற மாதிரி வறுமைய அளவிடுற அளவுகோலான வறுமைக்கோட்டை தரைமட்டமாக்கித் தான் இந்திய அரசு இதுவரைக்கும் வறுமைய பேனாவுலயே கொறைச்சுக்கிட்டு வந்துச்சு. இப்போ நிட்டி ஆயோக் வளர்ந்த நாடுகள்ல பயன்படுத்துற பல பரிமாண வறுமைக்குறியீட்டின் மூலமா தான் இந்தியாவின் வறுமையைக் கணக்கிடுது. இந்த பல பரிமாண வறுமைக்குறியீடு மக்களோட நுகர்வைக் கணக்குலே எடுத்துக்குறது இல்ல. அதுனால வறுமை குறைச்சு மதிப்பிடப்படுது.
பட்டதாரிகளிடையே வேலைவாய்ப்பின்மை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகமாக இருப்பதை அறிக்கை சுட்டிக் காட்டுது. தமிழ்நாட்டுல 24.3% பெண் பட்டதாரிகள் வேலையில்லாமல் இருக்காங்க, அதே நேரத்தில் முதுகலை பட்டம் பெற்ற பெண்களிடையே வேலைவாய்ப்பின்மை 11.6% ஆக காணப்படுது. தமிழ்நாட்டில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் தகுதி பெற்ற பெண்கள்ல 7.4% பேர் வேலையில்லாமல் இருக்காங்க. புதுமைப் பெண் போன்ற திட்டங்களுடன், பணியாளர்களில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐகளில் பெண்களை மையமாகக் கொண்ட படிப்புகளில் அரசு முதலீடு செய்யலாம். பெண்கள் தங்கள் பணியிடங்களிலும் நிறுவனங்களிலும் பாதுகாப்பாக உணருவதை மாநில அரசு உறுதி செய்யனும். பெண்களின் பொருளாதார பங்கேற்புக்கு ஆதரவான சூழலை உருவாக்க, பணியிடங்களுக்கு அருகில் அதிக குழந்தை காப்பகங்கள் மற்றும் ஆதரவு வசதிகளை அரசாங்கம் உருவாக்க வேண்டும். பெண்களின் பணியாளர் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நெகிழ்வான வேலைவாய்ப்புக் கொள்கைகள், இலக்கு திறன் பயிற்சி மற்றும் பாலினத்தை உள்ளடக்கிய பணியிடங்களில் கவனம் செலுத்துமாறு பரிந்துரை செஞ்சிருக்கு.
தமிழ்நாட்டுல ஆண் இளைஞர்களுக்கான தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 63.6% இலிருந்து 59% ஆகவும், பெண் இளைஞர்களுக்கான 26.8% இலிருந்து 23.8% ஆகவும் குறைந்துள்ளதுன்னு அங்கீகரிச்ச ஆய்வறிக்கை, உயர்கல்வியில சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே இதற்கு காரணம்னு அநியாயமா சப்பை கட்டுது. வலுவான சமூகப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் போன்ற திட்டங்களால் ஆதரிக்கப்படும் மாநிலத்தின் அதிக ஊதியங்கள், இளைஞர்களை கல்வியில் அதிக முதலீடு செய்யவும், அவர்களின் தகுதிகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வேலை வாய்ப்புகளைத் தேடவும் உதவுவதாகவும் பிரச்சினையை அது பிரச்சினையே இல்லாத மாதிரி திசைதிருப்பியிருக்கு.
இந்தியாவில் சுகாதார குறியீடுகளில் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படும் அதே வேளையில், பல முக்கிய சுகாதார அளவுருக்களில் சர்வதேச தரத்தை பூர்த்தி செய்ய தொடர்ந்து பாடுபட அறிவுறுத்தியிருக்கு ஆய்வறிக்கை.
ஏற்றுமதியை சார்ந்திருக்கும் தமிழ் நாட்டின் பொருளாதாரம் அதிக ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளானதாகக் குறிப்பிடும் பொருளாதார ஆய்வறிக்கை ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதே 1 டிரில்லியன் இலக்கை அடையுறதுக்கான முக்கிய உத்தியாகவும் குறிப்பிடுது.
இந்த பொருளாதார ஆய்வறிக்கை தமிழ் நாட்டின் பொருளாதார தற்சார்பினை ஊக்குவிப்பதற்கான எந்த கொள்கையையும் முன்மொழியல, அதோட வறுமை, வேலையின்மைப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் சரியான பரிந்துரைகளை செய்யல. தமிழ்நாட்டை புதிய தாராளமய பாதையிலயே முடுக்கிவிடுவதற்கான வழிகாட்டுதலைத் தான் கொடுத்துருக்கு.