காஸா விற்பனைக்கு அல்ல! -ரியாஸ்

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து வினோதமான அறிவிப்புகளை தினமும் வெளியிட்டு வருகிறார். ‘கனடா அமெரிக்காவின் 51வது மாநிலம்’, ‘கிரீன்லாந்து தீவின் கட்டுப்பாடு அமெரிக்காவின் கரங்களுக்கு வரும்’, ‘இந்தியாவிடம் அதிகப்பணம் இருக்கிறது, நாம் எதற்காக அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும்’ என்று வாயில் வந்ததை ட்ரம்ப் உளறிக் கொட்டும் நிலையில் பிப்ரவரி 5 அன்று ஃபலஸ்தீனின் காஸா நகரம் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் பல்வேறு தளங்களில் கடும் எதிர்ப்புகளை சம்பாதித்துள்ளன.
பதினைந்து மாதங்களாக காஸாவின் மீது இஸ்ரேல் நடத்திய கொடும் தாக்குதல்கள் சமாதான உடன்படிக்கையின் மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு வடக்கு காஸாவில் இருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் தங்கள் நிலங்களுக்கு திரும்பியுள்ளனர். ஃபலஸ்தீன மக்களின் நிலைகுலையாமையை கண்டு அதிசயிக்கும் சர்வதேச சமூகம் அவர்களுக்கு தார்மீக ஆதரவையும் மறுவாழ்விற்காக நேரடி உதவிகளையும் வழங்கி வரும் சூழலில் ஒரு முட்டாள்தனமான கருத்தை முன்வைத்துள்ளார் ட்ரம்ப்.
ஃபலஸ்தீன விவகாரத்தில் பன்னெடுங்காலமாக இஸ்ரேல் ஆதரவு போக்கை அமெரிக்கா மேற்கொண்ட போதும் அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர் ட்ரம்ப். தனது முந்தைய ஆட்சிக்காலத்தில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் இருந்த அமெரிக்க தூதரகத்தை ஜெரூஸலம் நகருக்கு மாற்றி அந்நகர் மீதான இஸ்ரேலின் உரிமை கோரலை ஏற்றுக் கொண்டவர் ட்ரம்ப். தற்போது ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் கொள்கைகளுக்கு உதவி புரியும் வகையில் காஸாவை ஆக்கிரமிக்கும் ஒரு திட்டத்தை வெளியிட்டுள்ளார்.
‘காஸாவின் நிலைத்தன்மையை உறுதி செய்ய அதனை அமெரிக்கா கையில் எடுக்க வேண்டும். அங்கு வாழும் 23 இலட்சம் மக்களையும் அண்டை நாடுகளான எகிப்து மற்றும் ஜோர்டானுக்கு அனுப்ப வேண்டும். காஸாவின் மக்களுக்கு அங்கு வசிப்பதற்கு விருப்பம் இல்லை. வாய்ப்புகள் கிடைத்தால் அவர்கள் அங்கிருந்து வெளியேறி விடுவார்கள். காஸாவின் உரிமையை நீண்ட காலத்திற்கு எடுத்துக் கொண்டு அதனை மத்திய கிழக்கின் ரிவேராவாக மாற்ற வேண்டும்’ என்று விசித்திரமான அறிவிப்பையும் திட்டத்தையும் வெளியிட்டார். ரிவேரா என்ற இத்தாலிய வார்த்தைக்கு ‘கடற்கரை’ என்று அர்த்தம். கடற்கரை நகரான காஸாவை சுற்றுலாத்தலமாக மாற்றப் போகிறேன் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
‘வளர்ச்சித் திட்டங்கள்’ என்றாலே ஏற்கெனவே குடியிருக்கும் மக்களை அப்புறப்படுத்திவிட்டு மேற்கொள்ளப்படும் திட்டங்கள் என்று விளக்கம் கொடுக்கும் அளவிற்கு உலகளவில் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. சர்வதேச நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருக்கும் இனப்படுகொலையை முன்னின்று நடத்திய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை அருகில் வைத்துக் கொண்டு ட்ரம்ப் வெளியிட்டுள்ள இத்திட்டம் சாதாரண வளர்ச்சித் திட்டம் அல்ல. ஒட்டுமொத்த ஃபலஸ்தீன பிரதேசத்தையும் அருகில் உள்ள அரபு நாடுகளின் பகுதிகளையும் அபகரித்து ‘அகண்ட இஸ்ரேல்’ உருவாக்க விரும்பும் சியோனிசவாதிகளுக்கு நேரடியாக உதவி செய்ய முன்வந்துவிட்டார் ட்ரம்ப். ‘புதிய மத்திய கிழக்கு’ என்ற பெயரில் தான் தூக்கித் திரியும் வரைபடத்திற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு ஒருவர் தயாராகி விட்டார் என்று சந்தோஷப்பட்டிருப்பார் நேதன்யாகு.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களை பலவந்தமாக வெளியேற்றுவது போர் குற்றமாகும் என்று சர்வதேச விதிகள் கூறுகின்றன. இனசுத்திகரிப்பிற்கான திட்டத்தை முன்வைத்திருக்கும் அமெரிக்க அதிபர் ஓர் போர் குற்றவாளியே!
ட்ரம்பின் திட்டத்தை பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வன்மையாக கண்டித்து தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர். திட்டத்தை ட்ரம்ப் அறிவித்த சில மணிநேரங்களிலேயே அமெரிக்க உள்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் ஆகியோர் ‘மறுகட்டமைப்பு பணிகள் நடைபெறும் வரை காஸாவின் மக்கள் தற்காலிகமாக வேறு இடங்களில் தங்க வைக்கப்படுவார்கள். பொதுவாக மறுகட்டமைப்பு நடைபெறும் போது மக்கள் வேறு இடங்களில்தானே தங்குவார்கள்’ என்று ட்ரம்பின் கூற்றுக்கு புது விளக்கம் அளித்தனர்.
‘ட்ரம்பின் கூற்று அபத்தமானது. காஸாவின் மக்கள் இத்திட்டத்தை நிறைவேற்ற அனுமதிக்க மாட்டார்கள்’ என்று ஹமாஸ் இயக்க மூத்த தலைவர் சமீ அபூ ஸுஹ்ரி கூறினார். ‘ஃபலஸ்தீன் மற்றும் மத்திய கிழக்கு குறித்த அறியாமையையும் குழப்பத்தையும் இத்தகைய அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. வாங்கி, விற்பனை செய்வதற்கு காஸா ஒன்றும் சொத்து அல்ல’ என்று மற்றொரு ஹமாஸ் தலைவர் இஸ்ஸத் அல் ரிஸ்க் தெரிவித்தார். ட்ரம்பின் திட்டத்தை ஃபலஸ்தீன விடுதலை இயக்கமும் ஃபலஸ்தீன் இஸ்லாமிக் ஜிகாத் இயக்கமும் நிராகரித்துள்ளன.
ஃபலஸ்தீன மக்களை அவர்களின் நிலங்களில் இருந்து வெளியேற்றுவதை நிராகரிப்பதாக கூறியுள்ள சவூதி அரேபியா இதில் பேரம் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்றும் கூறியுள்ளது. ஜோர்டான், ஈரான் ஆகிய நாடுகளும் ட்ரம்பின் திட்டத்தை நிராகரித்தன. இத்திட்டத்தை நிராகரித்துள்ள ரஷ்யா, இரு நாடுகள் தீர்வுதான் மத்திய கிழக்கில் தீர்வு கிடைப்பதற்கான ஒரே வாய்ப்பு என்றும் கூறியுள்ளது. ‘காஸா, ஃபலஸ்தீன மக்களுக்கு சொந்தமானது. அவர்களை வெளியேற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது, அது சர்வதேச விதிகளுக்கு எதிரானது’ என்று ஜெர்மனி கூறியுள்ளது. காஸாவின் மக்களை பலவந்தமாக வெளியேற்றும் திட்டத்தை சீனா, துருக்கி, பிரான்ஸ், ஸ்பெயின், அயர்லாந்து, இங்கிலாந்து, பிரேசில், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பும் கண்டித்துள்ளன.
காலனித்துவத்தையும் இன சுத்திகரிப்பையும் நிறைவேற்றத் துடிக்கும் ட்ரம்பின் திட்டங்களை ஃபலஸ்தீன மக்கள் வன்மையாக நிராகரித்துள்ளனர். எத்தனை இழப்புகளையும் பேரழிவுகளையும் படுகொலைகளையும் சந்தித்தாலும் தங்களின் நிலத்தை விட்டு ஒருபோதும் வெளியேற மாட்டோம் என்று அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர். ‘என்னையும் என்னுடைய குழந்தைகளையும் இருகூறாக வெட்டினாலும் இங்கிருந்து செல்லமாட்டோம்’ என்று அல் ஜஸீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஒருவர் தெரிவித்தார். ‘காஸாவின் பறவைகளுக்கு சிறகுகள் உள்ளன. ஆனால் அவை கூட இங்கிருந்து செல்ல விரும்பவில்லை’ என்று முகத்தில் அடித்தது போல் ட்ரம்ப்பிற்கு பதிலளித்துள்ளனர்.
உறுதியும் தியாகமும் நிலைகுலையாத்தன்மையும் கொண்ட ஃபலஸ்தீன மக்களுக்கு நீண்ட வரலாறும் அவர்களின் நிலத்துடன் பிணைக்கும் ஆழமான வேர்களும் உள்ளன. ஆனால் ரியல் எஸ்டேட் தரகர் போன்று பேசும் ட்ரம்ப் போன்றவர்கள் இதனை இன்னும் புரிந்து கொள்ளவில்லை. அனுபவம் கற்றுக் கொடுக்காத பாடத்தை அவமானம் கற்றுக் கொடுக்கும். அவ்வாறு பாடம் பயின்றதில் வல்லவர் நேதன்யாகு. இனி அவரின் சக மாணவனாக ட்ரம்ப் இணைந்து கொள்வார்.
பிப்ரவரி 21 அன்று வளைகுடா நாடுகளின் கூட்டமைபின் தலைவர்கள், ஜோர்டான் மன்னர் அப்துல்லாஹ் மற்றும் எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தாஹ் அல் ஸிஸி ஆகியோர் சவூதி தலைநகர் ரியாத்தில் ஒன்றுகூடி ட்ரம்பின் திட்டம் குறித்து ஆலோசித்தனர். சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், குவைத், கத்தார், மற்றும் பஹ்ரைன் ஆகிய ஆறு வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பே வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) என்று அழைக்கப்படுகிறது. கடந்த இருபது வருடங்களாக ஃபலஸ்தீன விவகாரத்தில் வெளிப்படையான சமரசம் மற்றும் தீர்வுகளை துருக்கி முன்னெடுத்து வந்த நிலையில் தற்போது அந்த இடத்தை மீண்டும் தன் பக்கம் திருப்புவதற்கு சவூதி முயற்சிக்கிறது. அரபு நாடுகள் ஆலோசனை முடிந்த உடனேயே ‘நான் ஆலோசனைதான் கூறினேன். திட்டத்தை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறவில்லை’ என்று அந்தர் பல்டி அடித்தார் ட்ரம்ப்.
சவூதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த சந்திப்பிற்கு முந்தைய தினம் ஜி-20 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களை சவூதி வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபைசல் பின் ஃபர்ஹான் சந்தித்து மற்ற அரபு நாடுகளுடன் இணைந்து சவூதி மேற்கொண்டு வரும் அமைதி நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் அவர் சந்தித்துப் பேசினார். ஃபலஸ்தீன விவகாரத்தில் கடந்த பல ஆண்டுகளாக நியாயமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் கத்தார் நாட்டின் அமீர் தமீம் பின் ஹமாத் தனது இந்தியா மற்றும் ஈரான் பயணத்தின் போது ஃபலஸ்தீன விவகாரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
காஸாவை ஆக்கிரமிக்கும் ட்ரம்பின் திட்டத்தை சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகள் வெளிப்படையாக நிராகரித்தாலும் தொடர்ந்து இந்த விவகாரத்தில் அவர்கள் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் 2020இல் இஸ்ரேலுடன் முறையான ராஜ்ஜிய உறவுகளை தொடங்கிவிட்டன. ‘இந்த உறவு கோமா நிலையில் உள்ளது. ஆனால் மரணித்து விடவில்லை’ என்று சில வளைகுடா நாடுகளின் ‘வல்லுனர்கள்’ இதற்கு வியாக்கியானமும் கூறுகின்றனர். பிப்ரவரி 17 முதல் 21 வரை துபாய் நகரில் நடைபெற்ற உணவு கண்காட்சியில் இஸ்ரேலிய நிறுவனங்களும் கலந்து கொண்டன.
1978 முதல் எகிப்தும் 1994 முதல் ஜோர்டானும் இஸ்ரேலுடன் அதிகாரப்பூர்வ உறவுகளை மேற்கொண்டு வருகின்றன. இஸ்ரேலுடன் வெளிப்படையான உறவுகளை சவூதி மேற்கொள்வதற்கான முழு முயற்சிகளை மேற்கொண்ட சமயத்தில்தான் இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டில் ஜனநாயக சக்திகள் மீது தொடர் வன்முறையை கட்டவிழ்த்து விடும் எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தாஹ் அல் ஸிஸி, ஃபலஸ்தீன விவகாரத்திலும் பெரும்பாலும் நயவஞ்சகத்தனத்தையே வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கு முன்னர் காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின் போது இந்த அரபு நாடுகளில் பெரும்பான்மையினர் கள்ள மௌனத்தையே வெளிப்படுத்தினர்,அல்லது வெறும் அறிக்கைகளுடன் ஒதுங்கிக் கொண்டனர். தாக்குதலுக்கு பின் காஸாவை நிர்மாணிப்பதற்கு பல பில்லியன் டாலர்கள் அளவிற்கு வாக்குறுதி அளித்தாலும் அவற்றை முழுமையாக நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இந்த நிலையில், ஃபலஸ்தீன விவகாரத்தில் இவர்கள் நீதமாக நடந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுவது இயல்பே!
ஒட்டுமொத்தமாக காஸாவை ஆக்கிரமிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ள நிலையில் அரபு நாடுகளின் மீது மீண்டும் கவனம் திரும்பியுள்ளது. பதினைந்து மாத தாக்குதலின் போது சவூதி உள்ளிட்ட அரபு நாடுகள் ஒரு துரும்பைக் கூட அசைக்காதது ஃபலஸ்தீன மக்களிடையே கடும் கோபத்தையும் அதிருப்பதியையும் ஏற்படுத்தியது. ஃபலஸ்தீன மக்கள் மட்டுமின்றி சர்வதேச சமூகமும் அரபு நாடுகளை நோக்கி கேள்விகளை எழுப்பின. இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் அரபு நாடுகள் இனி செயல்படுமா?
ட்ரம்பின் அறிவிப்பு குறித்து இந்தியா இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்களில் சிலவற்றை ஆதரித்தும் சிலவற்றை எதிர்த்தும் இந்தியா செயல்பட்டு வரும் நிலையில் கொள்கை அளவில் இரு நாடுகள் தீர்வை ஆதரிக்கிறது. ஆனால் நீதிக்கும் அநீதிக்கும் இடையிலான போராட்டத்தில் நடுநிலை என்ற நிலைப்பாட்டை கடைப்பிடிக்க முடியாது என்பதை இந்திய ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். – ரியாஸ்