சீமான் – மணியரசனின் அரசியல் பாதை – தோழர் செந்தில்

11 Feb 2025

திராவிடமா? தமிழ்த்தேசியமா? என்ற முரணின் மீது செயல்பட்டுக் கொண்டிருந்த நாதக ஒருங்கிணைப்பாளர் திரு சீமானும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் தோழர் பெ.மணியரசனும் பெரியாரின் பங்களிப்பு மீதான விவாதக் களத்தை கூர்மைப்படுத்தியுள்ளனர். அவர்கள் முன்னெடுத்துவரும் அரசியல் பாதை என்பது எவ்விதத்திலாவது காலப் பொருத்தமுடையதா? தமிழ்நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மை பயக்கக்கூடியதா? பாசிச பாசக ஆட்சி எதிர்ப்புக்கும் அது தமிழ்நாட்டின் மிது நடத்திவரும் தாக்குதல்களை எத்ர்கொள்வதற்கும் உதவுமா?

தமிழ்நாட்டின் மீதான பாசிச மோடி அரசின் தாக்குதல்கள்:

பாசிச மோடி – ஷா சிறுகும்பலாட்சியின் மூன்றாவது ஆட்சிக்காலம் இது. அரசியல்நிர்ணய சபையில் இந்துத்துவ ஆற்றல்கள் எதையெல்லாம் எதிர்த்து நின்றார்களோ? எவையெல்லாம் சங் பரிவாரங்களின் இலக்குகளாக இருந்தனவோ அவையெல்லாம் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே சந்தை, ஒரே பண்பாடு –  இந்துராஷ்டிரம் என்ற முழக்கத்தை சிறுகசிறுக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது பாசக. காசுமீருக்கு சிறப்பு தகுதி வழங்கும் ;பிரிவு  370 அதிரடியாக செயலிழக்க வைக்கப்பட்டது; முன்னேறிய பிரிவினருக்கு பொருளியல் அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு, குடியுரிமைச் சட்டத்தில் மதப் பாகுபாடு காட்டும் திருத்தம், அயோத்தியில் இராமர் கோயில் எனக் கட்டமைப்பு வகைப்பட்ட சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

”ஒரே தேசம், ஒரே தேர்தல்”, ”ஒரே தேசம், ஒரே சட்டம்” ( பொதுசிவில் சட்டம்) ஆகியவை மட்டும்தான் இந்துராஷ்டிரத்தை மெய்யாக்குவதற்கு இன்னும் எஞ்சியுள்ளவை என்று அவர்கள் தரப்பில் கொக்கரித்து வருகின்றனர்.

ஒரே தேசம் ஒரே மொழி என்பதில் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்று ஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ரவி குறை சொல்கிறார். மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் சர்வ சமக்ரா திட்டத்தின் கீழ் நிதி கொடுப்போம் என்றும் நீட் விலக்கு சட்ட வரைவுகளுக்கு ஒப்புதல் தர மறுப்பு என்றும்  தமிழ்நாட்டின் மரபான மாநில உரிமை அரசியலை பிரிவினைவாதமாக சித்திரிப்பது என்றும் தமிழ்நாட்டின் மிதான தனித்துவமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆர்.எஸ்.எஸ். இன் தொண்டையில் சிக்கிய முள் போல் இந்துக்களைப் பெரும்பான்மையாக கொண்ட் ஒரு மாநிலம் மொழிவழி அடையாளத்தை உயர்த்திப் பிடித்து இந்து, இந்தி, இந்துராஷ்டிரத்தை எதிர்த்துக் கொண்டிருப்பது சங்கிகளுக்கு உவப்பானதாக இல்லை. எனவே, தமிழ்நாட்டின் அரசியல் களத்தை எபப்டியேனும் குழப்பி, இந்த நிலைமையைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியமைக்க வேண்டும் என்று அவர்கள் முயன்று வருகின்றனர். ஒன்றிய அரசின் அதிகாரமும் பணபலமும் அவர்களுக்கு பெரிதும் துணை செய்து கொண்டிருக்கிறது.

சீமான் – மணியரசன் கட்டமைக்கும் முரண்பாடு:  

இத்தகைய நெருக்கடியான சமகால சூழமைவில்தான் திராவிடம்,        திமுக எதிர் தமிழ்த்தேசியம் என்ற முரண்பாட்டை சீமானும் மணியரசனும் கூர் தீட்டிவருகின்றனர். பாசிச பாசக அரசு எதிர் தமிழ்நாட்டு மக்கள் என்ற முதன்மை முரண்பாட்டை திசை திருப்பி திராவிடம் எதிர் தமிழ்த்தேசியம் என்றொரு களத்தைக் கட்டமைத்து வருகின்றனர். பாசிச பாசகவை எதிர்க்க வேண்டும் என்று கருதக்கூடிய ஆற்றல்களை திராவிடம் எதிர் தமிழ்த்தேசியம் என்று கூறுபோடும் முயற்சியாக இது அமைந்து வருகிறது.

திராவிடமும் ஆரியமும் ஒன்று, பங்காளிகள், கூட்டாளிகள் என்று வட்டார நடையில் சொல்லிக் கொண்டு எல்லா முரண்பாடுகளையும் சமப்படுத்தி வருகின்றனர்.

பாசிச பாசகவையும் அதனுடன் சமரசம் செய்துகொள்ளும் ஆளும் வர்கக தரப்பான திமுகவையும் நேர்ப்படுத்தும் அரசியலை மேற்கொள்கின்றனர்.  அதுவும்கூட வர்க்க நிலையில் ஆளும் வர்க்கம் என்பதால் இந்த சமரசம் செய்கின்றனர் என்று முன்வைப்பதற்கு மாறாக இன அரசியலாக இதை முன் வைக்கின்றனர்.

திராவிடம் என்று சொன்னாலும் அதன் உள்ளீடாக அவர்கள் சொல்வது தமிழ்நாட்டிற்குள் வாழும் தெலுங்கை வீட்டுமொழியாக கொண்ட சில சாதிகளைத்தான். திராவிட அரசியல் சாதி அரசியல் செய்வதாக விமர்சனம் வைக்கும் இவர்கள் சில சாதிகளை எதிரிகளாக சித்திரிக்கும் அரசியலை முன்வைக்க்கின்றனர். ( இதுமட்டுமின்றி ஒவ்வொரு மனிதனின் சாதியையும் இரத்த பரிசோதனை செய்தாவது கண்டுபிடிக்கத் துடிக்கும் பிற்போக்கு அரசியல் கலாச்சாரத்திற்கு வித்துட்டுள்ளனர்). இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தால்தான் அது தமிழ்த்தேசியம். மாறாக இவர்கள் முன்வைக்கும் இன அரசியல் என்பது உள் முரண்பாடுகளை பகையாக கட்டும் அரசியல் ஆகும்.

மேலும், திராவிட அரசியலில் இந்திய தேசியத்தோடு சமரசம் செய்து கொண்ட திமுக, திக உள்ளிட்ட பிரிவினரும் இந்திய தேசியத்தை மறுத்து தனித்தமிழ்நாட்டுக் கோரிக்கையோடு உடன்பாடு கொண்ட திவிக, தபெதிக உள்ளிட்ட பிரிவினரும் உள்ளனர். பொத்தாக பொதுவாக திராவிட எதிர்ப்பு அரசியலை முன்வைப்பதன் மூலம் அதற்குள் இருக்கும் இந்த முரண்பாட்டையும் சீமான் – மணியரசன் முன்னெடுக்கும் அரசியல் இல்லாது ஆக்குகிறது.

உண்மையில் முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்குப் பின்பு அதாவது 2009 க்குப் பின்னான காலப்பகுதியில் சரிவை சந்தித்துக் கொண்டிருந்தது திமுக.  இந்திய அரசுக்கு எதிரான தேசிய இன விடுதலை அரசியலை தீவிரமாக முன்னெடுத்திருக்க வேண்டிய காலப்பகுதியில் திராவிட எதிர்ப்பு அரசியலை முன்னுக்கு தள்ளியதன் மூலம் திமுக சரிவில் இருந்து மீண்டுடெழுவதற்குத்தான் இவர்கள் வழிவகுத்தனர்.      .

உடனடி பொருளில் முதன்மை முரண்பாட்டைப் பின்னுக்கு தள்ளி வேறொரு முரண்பாட்டை முன்னுக்கு கொண்டு வரும் வேலையை சீமான் – மணியரசன் செய்து வருகின்றனர்.

பாசிச எதிர்ப்பில் திமுகவின் நிலை

பாசிச பாசக ஆட்சி எதிர்ப்பில் திமுக சிலவற்றில் சமரசம் செய்து கொள்கிறது. சிலவற்றில் சமரசம் செய்ய மறுக்கின்றது. திமுக முதன்மையாக சமூகநீதி என்ற கேடயத்தைப் பாசகவுக்கு எதிராகப் பயன்படுத்துகிறது. முன்னேறிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது போன்றவற்றில் கொள்கை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுக்கிறது, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கு வழக்குகளில் சமரசம் செய்கிறது.  

நீட் எதிர்ப்பு, நியாயமான வரி பகிர்வைக் கோருவது, பேரிடர் நிதியைக் கோருவது, மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது போன்றவற்றில் கொள்கை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில், இந்துத்துவ தேசியம் என்ற பிரச்சனையைப் இந்திய தேசிய நிலைப்பாட்டிற்குள் நின்று மாநில சுயாட்சி என்ற நிர்வாகப் பிரச்சனையாக தீர்க்க நினைக்கின்றனர்.

பாசிச பாசகவின் இந்துராஷ்டிர நிகழ்ச்சி நிரலில் ஒரே உணவு, ஒரே உடை, ஒரே பழக்கவழக்கங்கள், குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து நிற்கிறது. அதேநேரத்தில் என்.ஐ.ஏ. என்ற நிறுவனத்தின் மூலம் ஊபா என்ற அடக்குமுறை சட்டத்தை ஏவி இசுலாமியர்களை பாசக சிறைப்படுத்திக் கொண்டிருப்பதை வேடிக்கைப் பார்க்கிறது. என்.ஐ.ஏ. அலுவலகத்தை தமிழ்நாட்டில் அமைக்கவிட்டது. என்.ஐ.ஏ சட்டத்தையும் அதில் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தையும் ஆதரித்தது.

பொருளியல் கொள்கையைப் பொறுத்தவரை தில்லியில் இருக்கும் போது அதானியின் ஏகபோகத்தை எதிர்ப்பதாக கூட்டத்தோடு கோவிந்தா போடும் திமுக தமிழ்நாட்டில் அதானியின் நிலக்கரி சுரங்க ஊழலுக்கு எதிராகக் கூட செயல்பட மறுக்கிறது. அதானியுடனான ஒப்பந்தங்களை ரத்து செய்ய மறுக்கிறது. 

கூட்டிக் கழித்துப் பார்த்தால் சமூகநீதி, மாநில உரிமை ஆகியவற்றில் பாசகவுக்கு ஓரளவுக்கு எதிர்ப்புக் காட்டும் அமைப்பாகவும் சட்டமன்ற தீர்மானங்கள், கடிதங்கள், நீதிமன்ற வழக்குகள் வாயிலாக எதிர்ப்பை வெளிப்படுத்தும் அமைப்பாகவும் இருந்து வருகிறது. இசுலாமியர்கள் மீதான அரச ஒடுக்குமுறைகளின் போது வேடிக்கைப் பார்த்தும், உலகமய, தாராளமய, தனியார்மய  கொள்கையை தீவிரமாக செயல்படுத்தியும் பாசகவின் கொள்கைகளோடு சமரசம் செய்து கொள்கிறது திமுக.

பாசகவுடன் ஒன்றுபடும் சீமான் – மணியரசனின் அரசியல்:

திராவிடத்திற்கான கருத்தியல் அடையாளமாக பெரியாரை முன்னிறுத்தி திராவிட அரசியல் எதிர்ப்பை பெரியார் எதிர்ப்பாக சீமானும் அவர் ஆசான் மணியரசனும் வளர்த்தெடுத்து வருகின்றனர். பெரியார் பார்ப்பனர் எதிர் பார்ப்பனரல்லாதோர் இயக்கத்தை முன்னெடுத்தார். பார்ப்பனரல்லாதோர் என்று சொல்வதற்குப் பதிலாக திராவிடர் என்ற் சொல்லை பெரியார் முன்வைத்தார். திராவிடர் அரசியல் என்பது பார்ப்பனர் எதிர் பார்ப்பனரல்லாதார் இயக்கமாக தமிழ்நாட்டில் வளர்ச்சிப் பெற்றது.

இந்நிலையில் பார்ப்பனர் ஆதிக்கத்திற்கு எதிரான திராவிட அரசியலை தமிழர் எதிர்ப்பாக முன்னிறுத்துவதன் மூலம்  திராவிட அரசியலை நேருக்குநேராக எதிர்கொள்ள முடியாமலும் தமிழ்நாட்டில் வாக்கரசியலில் வெற்றி பெற முடியாமலும் திணறி வரும் பாசகவுக்கு தமிழ்த்தேசியத்தின் பெயரால் எழுந்துவரும் திராவிட எதிர்ப்பு அரசியல் உவப்பளிக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது. எனவே தான், சீமானின் பேச்சுகளைக் கேட்டு பாசக தலைவர் அண்ணாமலை சான்று கொடுக்கிறேன் என்கிறார். தமிழிசை வரவேற்கிறார். ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி துகளக்கில் சீமானின் பேச்சுகளைப் போட்டு அகமகிழ்கிறார்.

பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பு அரசியலை தமிழர் எதிர்ப்பு அரசியலாக காட்டி பார்ப்பனரல்லாதார் அரசியலை தெலுங்கு ஆதரவு அரசியலாக சித்திரிக்கும் போக்கு பாசகவுக்கு பக்கத் துணையாக அமைகிறது என்பதை விளக்கத் தேவையில்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாசகவுக்கு முதன்மை முரண்பாடு தமிழ்த்தேசியக் கூறுகளைக் கொண்டிருக்கும் திராவிட அரசியல்தான்.  சீமானும் –மணியரசனும் திராவிட எதிர்ப்பைத் தமது முழுநேர அசியலாக கொண்டிருக்கின்றனர். இந்த இடத்தில் இவ்விரும் தரப்பும் ஒன்றுபடுகின்றனர்.

சுருங்கச் சொன்னால் கடந்த 11 ஆண்டுகளாக திராவிட அரசியலை உடைக்க முயன்றுவரும் பாசகவின் கையில் கிடைத்த கடப்பாரையாக சீமானும் – மணியரசனும் முன்னெடுக்க்கும் திராவிட எதிர்ப்பு அரசியல் அமைந்து கொண்டிருக்கிறது.

பாசக – திமுக – நாதக அரசியல் வழி:

பாசக தமிழ்நாட்டில் திராவிட அரசியலை எதிர்க்க பார்ப்பன ஆதரவு கருத்தை வெளிப்படையாகவும் நேராகவும் பேசுவதில்லை. பல காலமாக அதன் தலைமையாக பார்ப்பனரல்லாதோரை முன்னிறுத்தி வருகிறது.

திமுகவின் மாநில உரிமை அரசிய்லை எதிர்ப்பதற்கு பிரிவினைவாதம், தேச விரோதம் என்ற கருத்தைக் கட்டமைக்க முயல்கிறது.

திமுக ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையை கைவிட்ட போதிலும் திமுகவை இந்துக்கள் என்று அறியப்படும் மக்களுக்கு எதிரான கட்சியாக சித்திரிப்பதற்கு தொடர் முயற்சி செய்து வருகின்றது.

திமுக மீது இருக்கும் சமூகநீதி முத்திரையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் சிறுகுறு சாதிகளை அணிதிரட்டிக் கொள்வது, தலித் மக்களை அணி திரட்ட முயல்வது என்ற முயற்சியையும் செய்து வருகீறது. 

மொத்தத்தில் திமுகவை தேச விரோத, பிரிவினைவாத, இந்து விரோத, தலித் விரோத, ஊழல் மலிந்த கட்சி என்று கட்டமைக்க முயல்கிறது. அதேநேரத்தில், தன் மீது இருக்கும் பார்ப்பன ஆதரவு, தமிழர் விரோத கட்சி என்ற அடையாளத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று கடுமையாக முயல்கிறது.

அதிமுக, பாமக, புதிய தமிழகம், தேமுதிக, ஐ.ஜேக, புதியநீதிக்கட்சி போன்ற கட்சிகளைக் கையாள்வதன் மூலம் தமிழ்நாட்டில் திமுக எதிர்ப்பை மையப்படுத்திய அரசியல் களத்தை உருவாக்கி அந்த எதிர்ப்புக்கு தான் தலைமை தாங்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது பாசக.

இப்படியான கருத்தியலைப் பரப்பி தமிழ்நாட்டில் அரசியலை முன்னெடுக்க முயலும் அதேவேளையில், திமுக பிரமுகர்களுக்கு எதிராக அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவற்றைப் பயன்படுத்த தவறுவதில்லை.

திமுகவைப் பொறுத்தவரை பாசக ஆட்சியைப் பார்ப்பன ஆதரவு ஆட்சியாக முன்னிறுத்துகிறது. சனாதன எதிர்ப்பு என்ற முழக்கத்திற்குள் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பை முன்னெடுக்கிறது.  பாசக மாநில உரிமைகளுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு எதிரான கட்சி என்ற கருத்தை பாசகவுக்கு எதிராக கட்டமைக்க முயல்கிறது.

அதற்கு ஏற்றாற்போல் மாநிலத்திற்கு நிதி கொடுக்க மறுப்பதை அம்பலப்படுத்துவது, ஆளுநரின் அடாவடித்தனத்தை அம்பலப்படுத்துவது, கீழடி, தாமிரபரணி, கொடுமணல் ஆகியவற்றை உயர்த்திப் பிடிப்பதன் வழியாக பாசகவின் ஆரியப் பெருமிதத்திற்கு எதிராக தமிழர் தொன்மையை நிறுத்த முயல்கிறது திமுக.   

இந்த சூழமைவில்தான் திராவிடம் எதிர் தமிழ்த்தேசியம் , பெரியார் எதிர் பிரபாகரன் என்ற முரண்பாட்டை முன்வைத்து அரசியல் களத்தை சீமானும் மணியரசனும் கட்டமைக்க முயல்கின்றனர். 

ஆரியத்தையும் திராவிடத்தையும் ஒரே நேரத்தில் எதிர்ப்பதாகவும் பாசகவையும் திமுகவையும் எதிர்ப்பதாகவும் வாயால் சொல்லும் அதேவேளையில், நடைமுறை அரசியலில் அறிக்கைகளிலும் பேச்சுக்களிலும், கள செயல்பாட்டிலும் திமுக எதிர்ப்பையே முதன்மைப்படுத்துகின்றனர்.

முதன்மை முரண்பாடு ஏனைய முரண்பாடுகளின் வாழ்வையும் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் என்பது இயங்கியல் விதிகளில் ஒன்றாகும்.  முதன்மை முரண்பாட்டைக் காணத் தவறியும் அல்லது முரண்பாட்டின் குறித்த தன்மையைக் காணத் தவறியும் ஒரே நேரத்தில் இரண்டு முரண்பாடுகளை எதிரப்பதாக சொல்லிக் கொள்வதன் மூலம் முதன்மை முரண்பாட்டைத் தீர்ப்பதற்குப் பதிலாக முதன்மை முரண்பாட்டின் முதன்மை கூறுக்கு வலுசேர்க்கப்படுகிறது. அவ்வகையில் முதன்மை முரண்பாட்டின் முதன்மைக் கூறாக இருக்கும் பாசிச பாசகவுக்கு வலுசேர்க்கும் வேலையை சீமானும் மணியரசனும் செய்து வருகின்றனர்.. 

நாதகவின் துரோகமும் திமுகவின் சமரசமும் ஒன்றா?

தமிழ்நாட்டு அரசியலில் திமுக எதிர்ப்பை மையமாக வைத்துக் கொண்டு ஏனைய கட்சிகளை கையாண்டு வரும் பாசக, அதேநேரத்தில், சீமான் – மணியரசன் போன்றோரை தமது மறைமுக  சேம சக்தியாக பயன்படுத்திக் கொள்கிறது. திராவிடம் தமிழ்த்தேசியம் என்று இரு முகாம்களாக வலிந்து பிரித்தாலும்கூட இவ்விரு முகாம்களிலும் பாசக எதிர்ப்பில் அக்கறையுள்ள ஆற்றல்கள் இருக்கின்றனர். ஆனால், பாசிச பாசக எதிர்ப்பை முதன்மைப்படுத்தி ஓரே வரிசையில் அணிதிரட்டப்பட வேண்டிய இவ்வாற்றல்களை திராவிடம் எதிர் தமிழ்த்தேசியம் என்று பிளவுபடுத்துவதன் மூலம் பாசிச எதிர்ப்பு அணி சேர்க்கையில் சீமானும் – மணியரசனும் பிளவை ஏற்படுத்துகிறார்கள். இது பாசிச பாசக எதிர்ப்பு அரசியலுக்கு செய்யும் இரண்டகமாகும்.

திமுக ஆளும்வர்க்க கட்சி என்ற வகையில் கடந்த காலத்தில் பாசகவுடன்  கூட்டணி வைத்துள்ளது; மோடியின் ஆட்சிக் காலத்தில் கூட்டணி வைக்கவில்லை என்றாலும் பாசிச பாசக எதிர்ப்பை மேலோட்டமாகவும் மிதவாத தன்மையிலும் தேர்தல் அரசியல் நலனுக்கு உட்பட்ட அளவிலும் பேணிக் கொள்கிறது. மேலும் பாசக செய்துவரும் கட்டமைப்பு வகைப்பட்ட மாற்றங்களையும் சனநாயகத்தின் மீதான தாக்குதல்களையும் மேலோட்டமாக எதிர்த்து மாநிலத்தில் ஆட்சியில் நீடித்துக் கொண்டிருந்தால்போதும் என்ற அளவில் வரம்புக்குட்பட்ட வகையில் செயல்படுகிறது. எனவே பாசிச எதிர்ப்பு முகாமில் இருக்கக்கூடிய ஒரு சமரச சக்தியாக திமுகவை வரையறுத்துக் கையாள வேண்டிய தேவை இருக்கிறது.

இரண்டகமும் சமரமும் ஒன்றா? என்றால் சமரசத்தைவிடவும் தீமைபயக்க கூடியது இரண்டகமாகும். எடுத்துக்காட்டாக, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறிய தளபதி கருணா கிழக்கு தேசியத்தை முன்வைத்து தமிழீழத் தேசியத்தை வட்டார அடிப்படையில் பிளவுபடுத்துவதில் முனைப்புக் காட்டினார். அதாவது சிங்களர் எதிர் தமிழர் முரண்பாட்டைப் பின்னுக்குத் தள்ளி தமிழர் தாயகத்திற்குள்  வடக்கு – கிழக்கு முரண்பாட்டை முன்னுக்கு கொண்டுவர முயன்றார். பின்னர், சிங்கள ஆட்சியாளர்களுடன் கைகோர்த்து புலிகளைத் தோற்கடிக்க உதவினார்.

எப்படி கருணா சிங்களர் எதிர் தமிழர் முரண்பாட்டை மடைமாற்றி வடக்கு கிழக்கு முரண்பாட்டைக் கூர் தீட்டப் பார்த்தாரோ அது போல் பாசிச பாசக எதிர் தமிழ்நாட்டு மக்கள் என்ற முரண்பாட்டை மடைமாற்றி  தெலுங்கு எதிர் தமிழர் முரண்பாட்டை முன்னுக்கு கொண்டு வரும் வேலையை சீமானும் – மணியரசனும் செய்து வருகின்றனர்.

இதற்கு எதிர்வினையாக திமுக ஆதரவாளர்கள் சிலர் ( எடுத்துக்காட்டு மதிமாறன், பிரபாகரன் அழகர்சாமி, டான் அசோக்) பாசிச பாசக எதிர்ப்பை விட நாதகவை எதிர்ப்பதுதான் முதன்மையானது என்று கட்டமைக்க முயல்கின்றனர். இதுவும் பாசிச எதிர்ப்பு அணிசேர்க்கைக்குள் பிளவை ஏற்படுத்தும் இரண்டக வேலைதான்.

கருணாவின் செயல் இரண்டகமாகவும் ஈழ விடுதலைக்கு பெருந்தீங்கு விளைவிப்பதிலும் போய் முடிந்தது.

தமிழ்நாட்டிலும் இந்திய அரசியலிலும் திமுக வகிக்கும் பாத்திரம் ஈழத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடு நேரடியாக பொருந்திபோகாது என்றாலும் ஒர் எடுத்துக்காட்டுக்காக இது இங்கு எடுத்தாளப்படுகிறது.  ஈழ விடுதலைப் போராட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்த பல்வேறு தலைவர்களும் அவ்வப்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப வலிமையானத் தரப்பின் பக்கம் சாய்ந்து வந்தனர். அவர்கள் மிதவாதிகளாகவும் சமசர சக்திகளாகவும் செயல்பட்டனர். அண்மையில் மறைந்த மாவை சேனாதிராஜா போன்றவர்களை இதற்கு எடுத்துக்காட்டாக கொள்ளலாம். கருணாவோடு ஒப்பிடும்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் உள்ள சமரச தலைவர்களால் ஏற்பட்ட தீமை குறைவானதே.

பாசிச பாசக எதிப்பில் திமுகவின் சமரசத்தைவிடவும் நாதகவின் இரண்டகம் அதிக தீமை பயப்பதில் போய் முடியும்.

வடகிழக்கு இந்தியாவில் நடந்துவந்த தேசிய விடுதலைப் போராட்டங்களை இனக்குழுக்களுக்கு இடையிலான முரண்பாடாக மாற்றியதன் மூலம் தேசிய விடுதலைப் போராட்டங்களை ஒழித்தது போல தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் தமிழ்த்தேசிய அரசியலையும் முளையிலேயே கிள்ளி எறிய நினைக்கும் இந்திய அரசுக்கு மறைமுகமாக துணைசெய்யும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள சாதிகளுக்கு இடையிலான உள்முரண்பாட்டை கூர்மைப்படுத்தும் அரசியலை முன்னெடுத்தால் அது தமிழ்நாட்டுக்கு செய்யும் இரண்டகமே ஒழிய தமிழ்த்தேசிய அல்ல.

வல்லாதிக்க எதிர்ப்பை உள்ளடக்கி, இந்திய அரசுக்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதுதான் தமிழ்த்தேசியம். திமுகவை விடவும் அரசியல், பொருளியல் மற்றும் சமுதாயக் கொள்கைகளில் முற்போக்கான சனநாயக அரசியல் தான் தமிழ்த்தேசியம்.

இன்றைய கால சூழலில் தமிழ்நாட்டின் இருப்பையும் தனித்துவத்தையும் இல்லாதொழிக்க துடிக்கும் பாசிச பாசக அரசுக்கு எதிராக சனநாயக உள்ளடக்கம் கொண்ட தமிழ்த்தேசிய அர்சியலை முன்னெடுப்பதும் பாசிச பாசகவை ஆட்சியில் கீழிறக்கும் நோக்கில் சமரச சக்திகளையும் உள்ளடக்கிய பரந்த பாசிச எதிர்ப்பு அணிசேர்க்கைக்கு பாடுபடுவதும்தான் இக்காலத்தில் நாம் செய்ய வேண்டிய பணியாகும்.

RELATED POST
2 comments
  1. ஆக மொத்தத்தில் செந்தில் நீ தமிழன் இல்லை திராவிடன் என்று சொல்கிறார். இந்திய தேசத்தை காப்பற்ற முயல்கிறார்

    1. யாரை சொல்கிறீர்கள்? பதிலை தெளிவாக பதிந்தால் தெளிந்து கொள்வோம்

Leave a Reply to சுப்பிரமணியன் Cancel reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW