கேட்கிறதா இந்து முன்னணியின் அரோகரா? – தோழர் செந்தில்

05 Feb 2025

நேற்று பழங்காநத்தத்தில் ஒலித்த அரோகரா முருகனுக்கு விழுந்ததாக தொடங்கியுள்ளது. இது எதிர்காலத்தில் மோடிக்கு விழும் அரோகராவாக மாறக் கூடும். ஏனெனில், முருகனுக்கு அரோகரோ காலம் காலமாக சொல்லப்படுவதுதான்.  இந்து முன்னணியின் ஏற்பாட்டில் கூடியிருந்தோர் சொல்லிய அரோகரோ புதியது. அது நாடெங்கும் ஒலித்த ஜெய் ஸ்ரீராமின் தமிழ் வடிவம் போல் ஒலிக்கிறது.

நாதகவும் பாசகவும் ஒன்றென்று சொல்லும் திமுக அணியினர்

திமுகவும் பாசகவும் ஒன்றென்று சொல்லும் நாதக அணியினர்

திமுகவின் சாதிவெறி பாசிசம், திமுகவின் பொருளியல் பாசிசம் என்று சொல்லும் இடதுசாரி அணியினர்

இந்திய அளவில் பாசகவும் காங்கிரசும் ஒன்றென்று சொல்லும் மாயாவதிகளும் ஒவைசிகளும் இருக்கின்றனர்.

திரினாமுலும் பாசகவும் ஒன்றென்று சொல்லும் வங்கத்து சிபிஐ (எம்)

காங்கிரசும் பாசகவும் ஒன்றென்று சொல்லும் கேரளத்து சிபிஐ(எம்).

பாசிச பாசக என்று நிலைப்பாடு எடுத்தால் திரினாமூலையும் காங்கிரசையும் வங்கத்திலும் கேரளாவிலும் எப்படி வரையறுப்போம் என்ற நெருக்கடி  சிபிஐ(எம்) க்கு இருக்கிறது போலும். அனைத்து இந்திய கட்சி என்று தம்மை அழைத்துக் கொண்டாலும் மாநில அளவிலான கட்சி நலன்களை முன்னிலைப்படுத்தி நாட்டு நலனைப் பின்னுக்கு தள்ளும் போக்கு இது.

இவர்கள் எல்லோரும் பாசிச பாசகவை எதிர்ப்பவர்களாக தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.

இவர்கள் எல்லோரும் கருத்தில் கொள்ள வேண்டியது பாசிச பாசக தான் முதன்மை முரண்பாடு என்ற உண்மையையே ஆகும்!

பொருளியலிலோ அல்லது மத விசயங்களிலோ அல்லது தேசியக் கொள்கையிலோ பாசகவுடன் ஒத்த தன்மை கொண்ட ஏனைய அமைப்புகள் பலவும் இருக்கின்றன. ஆனால், அவை ஆட்சி அதிகாரத்தில் இல்லை. ஆட்சி அதிகாரத்தில் பாசகதான் இருக்கிறது. ஒன்றிய அரசு மிகப் பெரிய அதிகாரமிக்கது. அதனோடு ஒப்பிடும் போது மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சி ஒரு பொருட்டே கிடையாது.

மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் சமரசத்தை விமர்சிப்பது வேறு அப்படி விமர்சிக்கும் போது அதையும் பாசகவையும் நேர்ப்படுத்துவது வேறு. அப்படி நேர்ப்படுத்துவது என்பது அரசு, அரசு அதிகாரம், ஒன்றிய அரசு, அரசு இயந்திரம், அதற்குப் பின்னால் இருக்கும் ஏகபோக நிதிமூலதன ஆற்றல்கள் ஆகிய்வைப் பற்றிய புரிதல் இல்லாததன் வெளிப்பாடாகும்.

இங்கு மாவோவின் வழிகாட்டுதலான, கடும்போக்காளர்களை தனிமைப்படுத்தி முன்னேறிச் செல்வதே நமக்குப் பொருத்தமுடையதாக இருக்கும். சமரச சக்திகளை அம்பலப்படுத்தி முன்னேறும் உத்தி நம் நாட்டுக்கு உதவாது.

10 ஆண்டுகளுக்கு முன்பு ரத யாத்திரைக்கு வந்த வட நாட்டு ரதத்தை தென்காசியில் தடுத்து நிறுத்தி ஓட ஓட விரட்டிய தமிழ் மண்ணில் முருகனுக்கு அரோகரா என்று காவடி தூக்கி வருகிறது காவிக் கூட்டம். இந்த மாற்றம் எபப்டி நடந்தது?

கடந்த கால வரலாற்றின் பெறுபேறாய் பாசக தமிழ்நாட்டில் கால்பதிக்க முடியாமல் இருக்கிறது. ஆனால், சம கால அரசியல் அதிகாரம், பணபலம் ஆகியவற்றின் உதவியுடன் திமுக, ,காங்கிரசு போன்ற கட்சிகளின் சமரசத்தைப் பயன்படுத்திக் கொண்டு எப்படியேனும் தலையெடுக்க முயல்கிறது பாசக. மாவோ சொன்ன மூடக் கிழவன் கதை சங்கிகளுக்குத் தான் பொருந்தி போகிறது.

ஒன்றிய அர்சதிகார பலத்தில் இருந்த படி அவர்கள் அரசமைப்புச் சட்டத்தில் செய்து வரும் மாற்றங்கள் கட்டமைப்பு வகைப்பட்டவை. அவை சாதாரண்மானவை அல்ல, அவர்களே சொலது போல் ஆயிரம் ஆண்டுகள் நிலைக்கவல்ல மாற்றங்களை செய்து வருகின்றனர்.

திமுகவுக்குப் புகழாரம் பாடுவோரும் திமுகவையும் பாசகவையும் நேர்ப்படுத்துவோரும் பாசக கொண்டு வந்துள்ள அரசமைப்புச் சட்ட திருத்தங்களை திருத்தி எழுத முடியும் என்று நம்புகிறார்களா? இராமர் கோயிலோ, பிரிவு 370 ஓ, முன்னேறிய பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடோ யாராலும் இனி மாற்றியமைத்துவிட முடியாது. இத்தகையது தான் பாசக செய்து வரும் திருத்தங்கள்.

பல ஆண்டுகால உழைப்பின் விளைபயனை தைப்பூசத்திற்கு சில நாட்களுக்கு முன்பு அறுவடை செய்துள்ளது இந்து முன்னணி.

சம காலத்தில் செயல்படும் அரசியல் ஆற்றல்கள் இன்றைக்கு என்ன செய்யப் போகிறார்களோ அதுதான் எதிர்காலம் ஆகப் போகிறது. நேற்றையை பலனை அறுவடை செய்து கொண்டிருக்கும் நாம் இன்றைக்கு என்ன வினையாற்றுகிறோமா அதைத்தான் வருங்காலத்தில் இச்சமூகம் அறுவடை செய்யப் போகிறது.

திமுக ஆதரவு திமுக எதிர்ப்பு என்று அரசியலை மடைமாற்றாமல் பாசிச மோடி – ஷாவின் கும்பலாட்சிக்கு எதிரான அணி சேர்க்கைக்கு அணியமாக வேண்டும் என்பதை புரிந்து கொள்ள மறுப்போமாயின் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தீமைகளுக்கு நாமே பொறுப்புக்கூற வேண்டியவர்களாவோம்.

உடனே, விமர்சினமின்றி திமுகவை ஆதரிக்கச் சொல்கிறீர்களா? என்று திமுக எதிர்ப்பாளர்களும் திமுகவை ஆதரிப்பதை விட்டால் வேறு வழியென்ன என்று திமுக ஆதரவாளர்களும் வரிந்து கட்டிக் கொண்டு வருவார்கள். பாசக எதிர்ப்பை முதன்மைப்படுத்தாத திமுக ஆதரவும் பாசகவுக்கு துணை செய்யும்; பாசக எதிர்ப்பை முதன்மைப்படுத்தாத திமுக எதிர்ப்பும் பாசகவுக்கு துணை செய்யும்.

திமுகவை விமர்சனம் செய்யும் போது பாசகவோடு நேர்படுத்தவில்லை என்பதை தெளிவுபடுத்தி கருத்துருவாக்காவிட்டால் அது பண்டோரா பெட்டியைத் திறந்துவிட்டது போல் மொட்டையாக திமுக எதிர்ப்புக் கருத்துவருவாக்கத்தின் வழியாக பாசக பலனடைவதற்கு சேவை செய்யும். இது நாம் மேற்கொள்ள வேண்டிய ஒரு கடினமான செயலுத்தி தான். ஆனால், குறுக்கு வழிகள் ஏதும் இல்லை.

மேற்கு வங்கத்தில் ஆர்.ஜி. கர் மருத்துவமனைப் போராட்டமும் வங்க தேசத்தில் இந்துச் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவதற்கு எதிரானப் போராட்டமும் அதன் இறுதியான இலக்கில் மேற்குவங்கத்தில் பாசகவுக்கு சேவை செய்துவிடும் என்பதைப் பற்றி கவலையின்றி பாசிச எதிர்ப்பு ஆற்றல்கள் போராட்டக் களத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர் என்று மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மூத்த தோழர் ஒருவர் கவலை தோய்ந்த அக்கறையுடன் ஒரு கலந்துரையாடலில் பேசினார். ஏனெனில் அரசியல் அதிகாரத்தில் என்ன மாற்றத்தைக் கொண்டுவரும் என்பதைப் பற்றி கவலை இன்றி செய்யப்படும் அரசியல் எதிரிக்கு சேவை செய்வதில் போய் முடியும்.

அரசியல் அதிகாரம் என்பது பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் கருவி. அரசியல் என்பது அரசியல் அதிகாரத்தைக் கையில் எடுப்பதற்கான கலை. இதற்கு அப்பாற்பட்ட ஒரு நல்லெண்ண அரசியல் இருக்க முடியாது.

தமிழ்நாட்டில் பாசிச பாசக எதிர்ப்பில் மெய்யான அக்கறை கொண்டோரது உறக்கத்தை பழங்காநத்தத்தில் எழுப்பப்பட்ட அரோகரா முழக்கம் கலைக்குமா?

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW