மருத்துவர் – மக்கள் உறவு – மருத்துவர் கலைதாசன்

17 Jan 2025

கடந்த 2024 நவம்பர் மாதம் கிண்டி அரசு மருத்துவமனையில் பணியிலிருந்த மருத்துவர் பாலாஜி என்பவரை சிகிச்சை பெற்றுவந்த நோயாளியின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுபோன்ற தாக்குதல் நடப்பது இது முதல்முறை இல்லை. ஏற்கெனவே பல முறை, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

கடந்த 2023 ஆம் ஆண்டு சனவரியில் நெல்லை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. மார்ச் மாதம், வேலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பயிற்சி மாணவர் கடுமையான தாக்குதலுக்குள்ளானார். கடந்த 2024 ஆம் நவம்பர் மாதம் திருச்சி இ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர் மீது தாக்குதல் நடந்தது.

இது ஒருபுறம் என்றால் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் பதிவு செய்யப்படுவதில்லை.

நிதி ஆயோக் எனப்படும் அரசு ஆலோசனை மையம் வெளியிட்ட நலவாழ்வுக் குறியீட்டில், தமிழ்நாடு, சுகாதார அளவுகோல்களில் இரண்டாவது சிறந்த மாநிலமாக உள்ளது.

2021 ஆம் ஆண்டின் ஆராய்ச்சியின்படி காப்பீட்டுப் பயனாளிகள் அதிகமாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.

’மருத்துவச் சுற்றுலா ( medical tourism ) எனப்படும் மருத்துவத் தேவைகளுக்காக வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும் நோயாளிகளில் 40% (15 இலட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு மக்கள் ) சிகிச்சை எடுத்துக்கொள்ள தமிழ்நாட்டிற்கு வருகின்றனர்

இதைப் பார்த்தால் தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை சிறப்பாக செயல்படுகிறது எனத் தோன்றும் அதேவேளையில், கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் மட்டும் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவர்கள் மீதான தாக்குதல் நடைபெற்றுள்ளது.

தமிழ்நாட்டை விட்டு மற்ற மாநிலங்களிலும் இதே நிலைமைதான் உள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த வந்தனா தாஸ் என்ற இளம் அறுவை சிகிச்சை மருத்துவர், கடந்த 2024 நவம்பர் மாதம் ஒரு நோயாளியால் குத்திக்கொல்லப்பட்டார்.

“கேரளாவில் மருத்துவர்கள் மீது மாதம் ஐந்து தாக்குதல்கள் நடைபெறுவதாக பதிவாகியுள்ளது, மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களை உள்ளடக்கிய 200க்கு மேற்பட்ட தாக்குதல்கள் பதிவாகியுள்ளன” என இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) அறிக்கை கூறுகிறது.

கொரோனா பேரிடரின்போது மருத்துவப் பணியாளர்கள் மீது மட்டும் நாடு முழுவதும் நடந்த தாக்குதல்கள் 200க்கும் அதிகமாகும்.

இந்தியாவில் உள்ள பல்வேறு மருத்துவர் மற்றும் செவிலியர் சங்கங்கள்,  மருத்துவப் பணியாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது, மருத்துவப் பணியாளர்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் இந்தப் போக்கு மக்களின் சுகாதாரத்தைப் பாதிக்கும் என்றும்  இந்த அவசர நிலையை அரசு உணர்ந்து இதுபோன்ற குற்ற நிகழ்வுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்  என்றும் கோரிக்கைகள் விடுத்த வண்ணம் உள்ளன.

இதற்கு தீர்வாக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பல்வேறு விதமான  பரிந்துரைகள\ முன்வைக்கப் படுகின்றன. எடுத்துகாட்டாக நாடு முழுமைக்குமான மருத்துவர்கள் பாதுகாப்புச் சட்டம் ஒன்று வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும், நோயாளிகள் ஆயுதம் வைத்துள்ளார்களா? எனப் பரிசோதித்து மருத்துவமனைக்குள் அனுமதிக்க வேண்டும் போன்ற மேலோட்டமான, சாத்தியம் இல்லாத தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த பிரச்சனைக்குரிய தீர்வை நோக்கி நகரும்முன், பிரச்சனை பற்றியான சமூக அரசியல் பார்வையை ஆராய வேண்டிய தேவை இன்றியமையாததாகிறது.

தற்போதைய மருத்துவக் கட்டமைப்பு குறித்தும் கடந்த 80 ஆண்டுகளில் இந்திய மருத்துவத் துறையில் நடந்த மாற்றங்கள் குறித்தும்  மருத்துவத் துறையில் நடந்த வணிகமயமாக்கலின் விளைவுகள் குறித்தும் மருத்துவக் கல்வியில் நடந்தேறியுள்ள மாற்றங்கள் குறித்தும் மருத்துவத்தில் அதிகரித்துவரும்  தனியார் துறையின் போக்கு குறித்தும் தனியார் மருத்துவத் துறையில் அதிகரித்து வரும் நிதிமுதலீடுகள் குறித்தும் இதன் விளைவாக மருத்துவர்கள் – மக்கள் உறவில் அல்லது மருத்துவர் – நோயர் உறவில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்தும் ஆராயாமல் தீர்வை நோக்கி நகருவது இயங்கியல் பார்வையாக அமையாது.

நிதியாக்கம் ( Financialization)

மருத்துவத் துறையில் நடந்த வணிகமயமாக்கலின் விளைவுகளைப் புரிந்துகொள்ள நிதியாக்கல் குறித்து தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

நிதியாக்கம் (Financialization) என்பது 1980 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை ஏற்பட்ட நிதிமுதாலாளித்துவத்தின் (financial capitalism) வளர்ச்சியைக் குறிக்கும் சொல்லாகும்.

 இந்த காலகட்டத்தில் கடன்-முதலீட்டு விகிதங்கள் (debt-to-equity ratios) பல மடங்கு அதிகரித்ததோடு, பிற துறைகளை ஒப்பிடும்போது நிதி சேவைகள் தேசிய வருவாயில் அதிகரித்திருக்கின்றன.

சுருங்கக் கூறுவதானால் நிதியாக்கல் என்பது உற்பத்தி இல்லாமல் இலாபம் ஈட்டுவதைக் குறிக்கும்.

அதெப்படி உற்பத்தி இல்லாமல் லாபம்? 

காரல் மார்க்சின் கூற்றுப்படி உற்பத்தியில் முதலீடு செய்யப்பட்ட பணம் (M), ஒரு பண்டத்தை (C) உருவாக்கி, தொழிலாளியின் உழைப்புச் சக்தியின் காரணமாக அதிக மதிப்பை (M’) விளைவிக்கிறது. இந்த செயல்முறை “உபரி மதிப்பு” அல்லது அசல் முதலீட்டிற்கு கூடுதல் மதிப்பை உருவாக்குகிறது,

உற்பத்தி செயல்முறையிலிருந்து, மனித உழைப்பிலிருந்து  தொழிலாளர்களின் சுரண்டல்மூலம் பிறக்கும் உபரி மதிப்பானது முதலாளியின் மூலதனத்திற்கு இலாபமாக மாறுகிறது.

ஆனால், நேரடியாக நிதிபெருக்க வழிகளில் செய்யப்படும் முதலீடானது (பணம் (M)), உற்பத்தியே இல்லாமல் அசல் முதலீட்டைவிட அதிக செயற்கை மதிப்பை(M’) உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது

இந்த செயல்முறை உண்மையான மதிப்பை உருவாக்குவதைத் தவிர்த்து, செயற்கை மதிப்பு உருவாக்கத்திற்கு மூலாதாரமாக உள்ளது.

ஆக இந்த நிதியாக்கல் என்பது வணிகம் மற்றும் பொருட்கள் உற்பத்தியின் மூலம் ஈட்டும் இலாபத்தைவிட நிதிபெருக்க வழிகளின் மூலம் நடைபெறும் மூலதனச் சேர்க்கையின் ஒரு முறையாகும்.

1990களில் நடந்த தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கலின் செல்லக் குழந்தை நிதியாக்கல் எனலாம்.

இது சந்தை முதலீடுகள் மூலமாகவும், சர்வதேச கடன் கொடுக்கல் வாங்கல் மூலமாகவும் நடைபெறுகிறது.

உலகமயமாக்கலுக்குப் பின் சந்தை பொருளாதாரத்தில் ஏற்பட்ட அதீத முதலீடுகள் காரணமாக உலக நாடுகளின் மொத்த பொருளாதாரச் செயற்பாடுகளிலும், குறிப்பாக உற்பத்தி மற்றும் வேளாண் பொருளாதாரத்தின் மீதும் நிதிதுறையின் ஆதிக்கம் ஓங்கத்தொடங்கியது.

ஆனால், இந்த நிதிப்பெருக்க வழிகள் முறையாக செயல்படும்வரைதான் இந்த நிதியாக்கல் மூலம் ஏற்படும் செயற்கை இலாபம் ஈட்டுதல் நடைபெறும்; கடன் திருப்பிச் செலுத்துவதில் இடையூறு ஏற்படும்போதோ, இந்த நிதிப்பெருக்க வழிகள் முறியும்போதோ, இது பெரும் நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும் அபாயத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது,

நிதியின் செயற்கை மதிப்பை அளவுக்கு மீறி நெம்பியதால் அது அமெரிக்காவில் 2007-2010 பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்றதை  நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க அமெரிக்க அரசு பொருளாதாரத்தில் தலையிட்டு உற்பத்தியைப் பெருக்குவதில் ஈடுபட்டதை நாம் அனைவரும் அறிவோம்.

2024 இல் அட்லான்டிக் கவுன்சில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி , உலகின் மொத்த நிதி வர்த்தக மதிப்பு 600 டிரில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது.

இது  உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட இருபத்தேழு மடங்கு அதிகம்!

அதாவது 27 மடங்கு செயற்கை மதிப்பை இந்த நிதியாக்கல் உருவாக்கியுள்ளது.

எந்த நேரத்திலும் உடையக்கூடிய பண்புகொண்ட இந்த நிதியாக்கலை எதிர்த்து உலகின் பல்வேறு நாடுகளிலும் தொழிலாளர்கள், விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

2020-21 ஆம் ஆண்டு நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் இந்திய விவசாயத்தை நிதியாக்கலுக்கு திறந்துவிடுவதை எதிர்த்து நடந்த போரட்டம்  எனலாம்,

சரி, நாம் சுகாதாரத் துறைக்கு வருவோம்,

சுகாதாரத் துறையில் நிதியாக்கம் என்பது மூலதன உருவாக்கத்தின் ஒரு புதிய கட்டத்தை, முறையைக் குறிக்கிறது, இது முந்தைய தனியார்மயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கலின் விளைவாக உருவானது என்றாலும் அதிலிருந்து  சற்றே வேறுபட்டது.

சுகாதாரத் துறையில் நிதியாக்கம் என்பது உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு சுகாதார சேவையை ‘விற்கக்கூடிய’ மற்றும் ‘வர்த்தகம் செய்யக்கூடிய’ பண்டமாக மாற்றுவதைக் குறிக்கிறது.

இந்தியாவின் மருத்துவத் துறையில் 2001-02 ல் ரூ.31 கோடியாக இருந்த அந்நிய முதலீடு 2013-14 ஆம் ஆண்டுகளில் ரூ.3995 கோடியாக  அதிகரித்துள்ளது.

15 ஆண்டுகளில் 100 மடங்கைவிட அதிக உயர்வு.

சரி இந்த நிதியாக்கலுக்கு நிதி யாரிடமிருந்து, எங்கிருந்து வருகிறது?

நிதியாக்கல் தங்குதடையின்றி நடைபெறுவதற்கு நிதி கொடுக்கல் வாங்கல் நடைபெற வேண்டும். பணம் சுற்றோட்டத்தில் இருக்க வேண்டும், இதற்கு பெரும் சங்கிலித் தொடரான நிறுவனங்கள் தேவை. இந்த சங்கிலித் தொடரில் சுற்றமுதலீடு தேவை.

வளர்ச்சி மேம்பாட்டு நிதி நிறுவனங்கள் இந்தியாவின் கார்ப்பரேட் சுகாதாரத் துறையில் பெரும் பங்குகளை முதலீடு செய்துள்ளன.

யார்  இந்த வளர்ச்சி மேம்பாட்டு நிதிநிறுவனங்கள் ?

90 களுக்கு முன்புவரை இந்திய அரசு முன்வைக்கும் திட்டங்களுக்கு (எ.கா) சுகாதாரத் திட்டங்களுக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கும் உதவி அளிக்கும் முகமுடியில் கடனும் நிதி உதவியும் அளித்து வந்த உலக நாடுகளின் நிறுவனங்கள், 90 க்குப் பிறகு நடந்த உலகமயமாக்கலின் மூலம் நேரடி முதலீடுகள்(FDI- Foreign Direct Investment) செய்யத் தொடங்கின.

இந்த அந்நிய முதலீடுகளுக்கு தடையாய் இருக்கும் உள்நாட்டு சட்டங்களை, விதிமுறைகளை மாற்றியமைப்பதைப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக சாத்தியப்படுத்தத் தொடங்கினர்.

இதன் தொடர்சியாக 2000ஆம் ஆண்டு இந்திய அரசு அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையின் கீழ்,  சில துறைகளைத் தவிர, கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் (சுகாதாரத் துறை உட்பட) 100% அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதியளித்தது . பாதுகாப்புத் துறையில்கூட 74% அந்நிய நேரடி முதலீட்டையும், 100% அரசு வழியிலும் அனுமதிக்கிறது.

இந்த விதிமுறை மாற்றத்தால் இந்திய சந்தையை அந்நிய முதலீடுகளுக்கு திறந்து Text Box: இந்தியாவின் கார்ப்பரேட் ஹெல்த்கேரில் வெளிநாட்டு வளர்ச்சிமேம்பாட்டு நிதி நிறுவனங்களால் (Development Financing Institutions- DFI) செய்யப்பட்ட முதலீடுகளின் எண்ணிக்கை –
பிஐஐ (UK)	60
ஐ. எஃப். சி (உலக வங்கி) -	38
ஆசிய வளர்ச்சி வங்கி	21
புரோபர்கோ (பிரான்ஸ்)	14
டி. எஃப். சி (US)	8
டி. இ. ஜி (ஜெர்மனி)	7

அப்பல்லோ, மேக்ஸ், ஃபோர்டிஸ், நாராயணா, மணிப்பால், ஆசிய காஸ்ட்ரோஎன்டாலஜி நிறுவனம், கேர் மருத்துவமனைகள், சஹ்யாத்ரி மருத்துவமனைகள், ரிலிகேர் ஆய்வகங்கள், போர்டியா மருத்துவம், கிளவுட்நைன், ராக்லேண்ட் போன்ற பெருநிருவனங்களால் பெரும் நிதி பெறப்பட்டுள்ளது என ஆக்ஸ்பாம் அறிக்கை கூறுகிறது.

விடும் போக்கு தொடங்கியது.  சுகாதாரத் துறையில் முதலீடுகளின் அளவை 100 மடங்குக்கும் மேல் அதிகரித்ததை நாம் மேலே பார்த்தோம்.

இவை போன்ற வளர்ச்சி மேம்பாட்டு நிதி நிறுவனங்கள் இந்தியா  போன்ற மூன்றாம் உலக நாடுகளில் முதலீடு செய்வதன் மூலம் சுகாதாரத் துறையை கார்ப்பரேட்மயமாக்க உந்துகிறது.

எடுத்துக்காட்டாக, இந்தியாவில் IFC இன் கடந்த இருபது ஆண்டு செயல்பாடுகளைப் பார்த்தோமானால்

  • சர்வதேச நிதி நிறுவனத்தின் (IFC) கட்டுபாட்டில் இந்தியாவில் பொது-தனியார் கூட்டாண்மைகளை (PPPs) நிறுவுவதற்கான 7,624,377 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள 14 ஆலோசனைத் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன  (10 நிறைவுபெற்றும் நான்கு செயலிலும் உள்ளது)
  • IFC இன் 523 மில்லியன் அமெரிக்க டாலர்கள்  மதிப்புள்ள 18 நேரடி முதலீடுகளில் பதினொன்று மருத்துவத் துறையில் உள்ளன. இதில் இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகளான அப்பல்லோ, ஃபோர்டிஸ் மற்றும் மேக்ஸ் குழுமங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. மொத்தம் $200 மில்லியன்  மதிப்புள்ள ஏழு முதலீடுகள் அப்பல்லோவுக்கு மட்டும் தரப்படுள்ளன.
  • மருத்துவமனைகள், மருத்துவ விடுதிகள் ( clinic) மற்றும் நோயறியும் ஆய்வக நிறுவனங்களில் நிதி இடைத்தரகர்கள் மூலம் 23 முதலீடுகள் செய்யபட்டுள்ளன.
  • IFC இன் 78% நேரடி முதலீடுகள் செய்யப்பட்ட மருத்துவமனைகள் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் (மில்லியனுக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களில்) உள்ளன. ஏனெனில், அங்கு அதிக வருமானம் மற்றும் இலாபம் ஈட்ட முடியும்!

இந்த வளர்ச்சிமேம்பாட்டு நிதி நிறுவனங்கள் (DFI) ஒருபக்கமிருக்க, சர்வதேச தனியார் பங்கு நிறுவனங்கள்( Private Equity- PE), உள்நாட்டு பங்கு நிறுவனங்கள், சமீபகாலமாக பெருகி வரும் வென்ச்சர் கபிடல் எனப்படும் துணிகர முதலீடுகள்(Venture Capital) என பெரும் முதலீடுகள் இந்திய சுகாதாரத் துறையின் கார்ப்பரேட்மயமாக்கலை அதிவேகப்படுத்தி வருகின்றன.

கே.கே.ஆர், பிளாக்ஸ்டோன், கார்லைல் போன்ற சர்வதேச தனியார் சரியொப்பு (  ஈக்விட்டி – PE) நிறுவனங்களும் ரிலையன்ஸ், டாடா, ஆதித்யா பிர்லா, கிறிஸ்காபிட்டல் மற்றும் ட்ரூ நார்த் போன்ற உள்நாட்டு தனியார் பங்கு நிறுவனங்களும்

சுகாதார-தொழில்நுட்பம், டெலிமெடிசின், பயோடெக் மற்றும் மருத்துவ சாதனங்களில் சீக்வோயா கேபிடல், வார்பர்க் பிங்கஸ் போன்ற துணிகர முதலீட்டாளர்களும், (VC),. குவாட்ரியா, பிரமல், நார்த் ஆர்க், சமாரா போன்ற நிதி இடைத்தரகர்களும் இதில் அடங்குவர்.

2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் தனியார் பங்கு மற்றும் துணிகர மூலதன ஒப்பந்தங்கள் மூலம் 5.5 பில்லியன் டாலர் அதாவது ரூ.55,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

2019 முதல் 2023 வரை, இந்திய சுகாதாரத் துறையில் PE/VC இன் முதலீடுகள் 15 மடங்கு அதிகரித்துள்ளன.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள எந்த நிறுவனங்களுக்கும் பொதுமக்களின் சுகாதாரம் குறித்தோ, மருத்துவ துறை குறித்தோ, எந்த ஓர் அறிவும் , அக்கறையும் கிடையாது. இவர்களுக்கு இலாபம் வேண்டும். இலாபத்தைப் பலமடங்கு பெருக்க வேண்டும்.

 முதலீடு செய்து குறிப்பிட்ட இலாபம் ஈட்டிய பின் முதலீடுகளை விற்கவேண்டும். அவ்வளவே.

உலகிலுள்ள அதிக டாலர் பில்லியனர்களை கொண்டுள்ள நாடுகளில் இந்தியா 3 வது இடத்தை வகிக்கிறது.

இதில் சுகாதாரத் துறையில் இருக்கும் டாலர் பில்லியனர்களின்  எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் முன்னிலை வகிக்கிறது.

தரவரிசைதொழில் வகை2022 இல் இந்திய டாலர் பில்லியனர்களின் எண்ணிக்கை
1சுகாதாரம்32
2உற்பத்தி31
3தொழில்நுட்பம்16
4பலதரப்பட்ட தொழிற்சாலைகள்16
5ஃபேஷன் மற்றும் சில்லறை தொழில்கள்15

இந்தியாவின் சுகாதாரத்துறையில் இருக்கும் டாலர் பில்லியனர்களின் நிகர மதிப்பு – ரூ. 9.37 டிரில்லியன்.

மேற்படி விவரங்களின்படி அம்பானி, அதானி போன்ற உற்பத்தி தொழில்களில் உள்ள பில்லியனர்களை, சுகாரத்துறை பில்லியனர்கள் பின்னுக்கு தள்ளியுள்ளனர்.

இந்தியாவில் கார்ப்பரேட் மருத்துவத்துறை வளர்ச்சியை ஆதரிக்க, துரிதப்படுத்தப்பட்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிதி முதலீடுகள் வேண்டும் என நிதி ஆயோக் (2021) பரிந்துரைகளில் குறிப்பிடுகிறது.

சரி நிதியாக்கலை நம் கண்களால் பார்க்க முடியுமா?

அருவமாக வணிகத் துறையில் நடைபெறும் நிதியாக்கல் நேரடியாக நம் கண்களுக்குப் புலப்படாத ஒன்று. ஆனால், அதன் வெளிப்பாடுகள் இவ்வாறு இருக்கின்றன.

  1. மருத்துவத் துறையில் கார்ப்பரேட் மயமாக்கல் நிதியாக்கலின் மிகவும் முக்கியமான வெளிப்பாடாகும்.

கார்ப்பரேட்மயமாக்கல் என்பது கார்ப்பரேட் மருத்துவமனைகள் மட்டுமல்ல, சிறிய, தொண்டு மருத்துவமனைகள் மற்றும் அரசு பொது மருத்துவமனைகள் உட்பட முழு சுகாதாரத் துறையையும் பாதிக்கிறது.

இந்தியாவில், 2012 இல் இருந்து, கார்ப்பரேட் மருத்துவமனைகள், ஐந்தாண்டு காலத்தில், தங்களின் கூட்டு வருவாயை சுமார் 80% அதிகரித்து, 2017ல் ரூ.129 பில்லியனை எட்டியது.

2014 ஆம் நிதியாண்டில் ₹9,000 கோடியிலிருந்த அப்பல்லோவின் வருவாய் 2023 ஆம் நிதியாண்டில் இரு மடங்காய் உயர்ந்து சுமார் 17,800 கோடியை எட்டியுள்ளது. 

2023 நிதியாண்டில், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனம் ₹5,405 கோடி வருவாய் ஈட்டியது, இது 2013ல் இருந்த 3,200 கோடி வருவாயைவிட 1.5 மடங்கு அதிகமாகும்.

மேக்ஸ் ஹெல்த்கேர் வருவாய் 2023 இல் 4,200 கோடியாக உள்ளது, இது 2014 இல் 2,100 கோடியாக இருந்தது. 2018 இல் மேக்ஸ் ஹெல்த்கேரில் 50% பங்கை கேகேஆர் வாங்கியது, வெறும் நான்கு ஆண்டுகளில் முதலீட்டில் ஐந்து மடங்கு இலாபம் ஈட்டி, 2022 இல் நிறுவனத்தின் பங்குகளை விற்றது.

இதுபோன்ற  பங்கு விற்றல், வாங்கல் நிதி ஓட்டத்தின் உலகளாவிய பரிமாற்றங்கள் சுகாதாரத் துறையின் கார்ப்பரேட்மயமாக்கலுக்கு உதவுகின்றன.

2) இன்சுரன்சு எனும் காப்பீட்டுத் திட்டங்களின் அதிகரிப்பு இதன் மற்றொரு வெளிப்பாடாகும்- இந்திய மருத்துவக் காப்பீட்டுச் சந்தையின் மதிப்பு சுமார் $90 பில்லியன் அல்லது ரூ. 7.4 டிரில்லியன் ஆக உள்ளது. அரசு சுகாதார காப்பீட்டுத் திட்டங்களும் இந்த விரிவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன

3) புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகள் மூலம் சுகாதாரத் துறையை  டிஜிட்டல் மயமாக்குதல் என்பது மற்றொரு வெளிப்பாடாகும்.

சுகாதாரத் துறையில் நிதியாக்கத்தின் தாக்கங்கள்

1. மருத்துவக் காப்பீட்டின் வளர்ச்சி மற்றும் மக்கள் தங்கள்  கையில் இருந்து செய்யும் செலவுகள் அதிகமாகி வருகின்றன.

2. மருத்துவக் கட்டமைப்பு பொதுத் துறையிலிருந்து தனியார் துறைக்கு மாறுதல், அதிகரிக்கப்படும் பொது-தனியார் கூட்டாண்மை ( PPP ) முன்னெடுப்புகள்.

3.மக்களுக்கு நெருக்கமான, நோயை தடுக்கும் இடமாக இருக்கும் ஆரம்ப சுகாதார கட்டமைப்பு சிதைவது, சிறப்பு உயர்நிலை மருத்துவத்தின் பெருக்கம். இதன் மூலம்தான் இலாபம் ஈட்ட முடியும்.

4. தனியார் துறையின் கட்டுப்பாடுகள் நீக்கப்படுதல், ஒழுங்கு வழிமுறைகள் நீர்த்துப் போகச் செய்யப்படுதல்.

5. மிகைப்படுத்தப்பட்ட டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் அதற்கான ஒருங்கிணைந்த சந்தையை உருவாக்குதல்.

6.வணிகமயமாக்கப்பட்ட மருத்துவக் கல்வி மற்றும் கடனில் தள்ளப்படும் இளம் மருத்துவர்கள்.

7. சுகாதாரம் முற்றிலும் பண்டமாக பார்க்கப்படுகிறது, மருத்துவர்-மக்களுக்கு இடையில் இருந்த நம்பிக்கை அடிப்படையிலான உறவுகள் பரிவர்த்தனை உறவுகளாக மாற்றப்படுகின்றன.

மருத்துவத் துறையில் அந்நியமாதல்.

நிதியாக்கலினால் உந்தப்படும் கார்ப்பரேட்மயமாக்கல் சமூக சிதைவுக்கு வழிவகுக்கிறது, பல மட்டங்களில் மனிதர்களை தாம் செய்யும் வேலையில் இருந்து அந்நியமாக்குகிறது.

எந்தளவிற்கு என்றால், முதலீடு செய்யும் இந்த நிறுவனங்களுக்கு இலாப நோக்கு மட்டுமே முதன்மை. இலாபத்திற்காக கார்ப்பரேட் மருத்துவமனைகளில் இலக்கு முடிவுசெய்யப்படும். ஒரு மாதத்தில் சேர்க்க வேண்டிய நோயாளிகளின் எண்ணிக்கை, விற்கவேண்டிய மருந்தின் அளவு, செய்யவேண்டிய பரிசோதனைகளின் எண்ணிக்கை, அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை என எல்லவற்றிற்கும் இலக்குகள் நிர்ணயிக்கப்படும். 

இதனால், முதலீடு செய்பவர்களுக்கு மக்களின் ஆரோக்கியம் குறித்த எந்த ஓர் எண்ணமும் கிடையாது. முதலீட்டாளர்களுக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் மக்களூக்கும் என எல்லா மட்டங்களிலும் ஒருவருக்கொருவரை அந்நியப்படுத்தியுள்ளதுதான் இந்த முதலாளித்துவ கார்ப்பரேட் மயமாக்கலின் சாதனை.

மருத்துவர்கள் நோயாளிக்கான சிகிச்சை குறித்து முடிவு செய்வதற்கான சுதந்திரம் பறீக்கப்பட்டுவிட்டது. ஓர் இயந்திரத்தைப் போல் 8 மணி நேரம் வேலை செய்துவிட்டு, அடுத்து வரக்கூடிய மருத்துவரிடம் நோயாளியை ஒப்படைத்துச் செல்ல வேண்டும்.நடைபெறும் மருத்துவர் மீதான தாக்குதல் காரணமாக தற்காப்பு மருத்துவம் ‘Defensive Medicine’ , அதாவது அவசர சூழலில் முடிவு எடுக்காமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மருத்துவர்கள் கடைபிடிக்கும் முறையும் பெருகி வருகிறது.

நம்பிக்கை அடிப்படையில் இருக்க வேண்டிய, மருத்துவர் – மக்கள் உறவு வெறும் விற்றல் – வாங்கல் உறவாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு மருத்துவம் ஒரு பண்டமாக விற்கப்படுகிறது.

இதன்தாக்கம் பொதுமக்களிடையே ஒட்டுமொத்த மருத்துவத் துறை குறித்த அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது, அரசு மருத்துவமனைகளிலும்கூட இந்த நிதியாக்கலின் தாக்கம் பல்வேறு வகைகளில் வெளிப்படுகிறது, அது குறித்து நாம் பின்னர் பார்க்கலாம்.

30 ஆண்டுகள் பின்னோக்கிப் பார்த்தோமானால், நற்பெயர் மூலமும் குடும்பத் தொடர்புகள் மூலமுமே மருத்துவர்களை நாடிப் போகும் தன்மை இருந்தது, மருத்துவர் – மக்கள் உறவென்பது நம்பிக்கை அடிப்படையிலான உறவாக இருந்தது, இப்போது மருத்துவர்களின் பெயர்களை கார்ப்பரேட் மருத்துவமனைகளின் பெயர்கள் இடமாற்றியுள்ளன. நம்பிக்கையை இலாபம் கொன்றொழித்துள்ளது.

ஆக, இந்த மருத்துவக் கட்டமைப்பின் மாற்றம் மருத்துவமனைகளைத் தனியார்மயத்தை நோக்கித் தள்ளியும்  மருத்துவர்களை இந்த சங்கிலியில் கடைநிலையில் இருக்கும் ஒருபகுதியாகவும் மக்களை வெறும் நுகர்வோராகவும் மாற்றி இருப்பதுதான் இன்று நடைபெறும் மருத்துவர்கள் மீதான தாக்குதலுக்குப் பின்னுள்ள அடிப்படை காரணங்கள் ஆகும்.

அதுசரி, இது தனியார் மருத்துவமனைகளுக்குத்தானே, அரசு மருத்துவமனைகளில் என்ன நடக்கிறது.?

அடுத்தடுத்த பகுதியில், இந்திய மருத்துவக் கட்டமைப்பு கடந்து வந்த பாதை குறித்தும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் உண்மையில் என்ன செய்கின்றன என்பது குறித்தும் தமிழக மருத்துவக் கட்டமைப்பின் நிலை குறித்தும் தொடர்ந்து பேசுவோம். ~கலைதாசன்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW