செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், கண்ணகி நகர் – பெருகிவரும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்

03 Oct 2021

சென்னையிலிருந்து வெளியேற்றப்பட்டு பெரும்பாக்கம், கண்ணகி நகர், செம்மஞ்சேரியில் குடியமர்த்தப்பட்ட பூர்வக்குடிகளுக்கு இழைக்கப்படும் அநீதியின் தொடர்ச்சியே பெருகி வரும் பாலியல் குற்றங்கள்.

பெசன்ட் நகரிலிருந்து மறுக் குடியமர்வு என செம்மஞ்சேரி பகுதிக்குத் துரத்தப்பட்டவர் மகேஷ்வரி (30) இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் இரட்டை பெண் குழந்தைகளும் உள்ளன (9 வயது) (பெயர் மாற்றப்பட்டுள்ளன). மகேஷ்வரி தனியார் நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்துகொண்டிருக்கிறார். அவர், தனது மூன்று  குழந்தைகளுடன் செம்மஞ்சேரி குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வாழ்ந்து வருகிறார்.

அவரின் வீட்டருகே அவரின் சொந்த சித்தியின் குடும்பமும் அவர்களின் மருமகளின் தம்பி குடும்பம் என இரு குடும்பங்கள் வசித்து வந்துள்ளனர்.

எப்பொழுதும் ஒரே நேர பணி இல்லாமல் பகல் மற்றும் இரவு என மாறி மாறி செல்ல வேண்டிய நிர்பந்தம் காரணமாக குழந்தைகளை தனியாக வீட்டில் விட்டுச்செல்லும் கட்டாயம் இருந்துள்ளது. மேலும்  கொரோனா  காலத்தில்  பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் பகல் நேரத்தில் குழந்தைகள் தனியாகவே இருந்துள்ளனர். இந்நிலையில் இவருக்கு பக்கத்துவீட்டில் இருந்த சூரியா வயது (25) சிறு உதவிகள் செய்து சிநேகமாகியுள்ளார். சூரியா  நிரந்தர வேலையேதுமில்லாமல் நடன நிகழ்வுகள் வீடியோக்களில் ஆடுவதை செய்து வந்தவர். ஒரு கட்டத்தில் அக்கா என்று பாசமாக அழைத்த சூரியா இவர் பணிக்கு செல்லும் சமயங்களில் அந்த இரண்டு குழந்தைகளையும் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இப்படியான நேரத்தில்தான் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இச்சிறுமிகளுக்கு பாலியல் படங்களை காண்பிப்பது, அந்தரங்க இடங்களில் தொடுவது கிள்ளுவது என  தொடர்ந்துள்ளார்.  இதை வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியும் உள்ளார். இந்நிலையில் தமது குழந்தைகள் வழக்கத்துக்கு மாறாக இருப்பதையும் வலியால் துடிப்பதையும் அறிந்த மகேஷ்வரி இக்குழந்தைகளிடம் கேட்டபோது உண்மையை சொல்லியுள்ளனர்.

அதிர்ச்சியடைந்த மகேஷ்வரி சூரியாவிடம் போய் கேட்டதற்கு அப்படி இல்லையென்று மறுத்துள்ளார் பின்னர் ‘நன்பர்கள் கொடுத்த கஞ்சாபோதையில் செய்திருப்பேன், மன்னிக்கவும்’ என்று சாதாரணமாய் பேசியுள்ளார். உடனே மகேஷ்வரி எப்படி மூன்று நாளும் இப்படி நடக்கும் என கேட்க அதற்கு அவனிடம் எந்த பதிலும் இல்லாததால் தனது சித்தி வீட்டினரிடம் போய் முறையிட்டதற்கு அவர்கள் சூரியா தாயிடம் கேட்டுள்ளனர் அதற்கு அவங்க ‘இவனுக்கு இதே வேலையாப்போச்சி” என்று திட்டியது மட்டுமல்லாமல் ‘நீ இதை பெரிதுபடுத்தாதே அப்படி செய்தால் உன் குழந்தைகள் வாழ்க்கைதான் பாதிக்கும்’ என மகேஷ்வரியிடம் புத்திமதி கூறியுள்ளனர்.  இதை கேட்ட மகேஷ்வரி அதிர்ந்து போனார்.  யாருமே இல்லாத மகேஷ்வரிக்கு எல்லாமே தனது சித்தி குடும்பம் தான் என நம்பிருந்தவருக்கு தனக்கு உதவாமல் எதிராக நின்றதை ஜீரணிக்க முடியவில்லை. பின்னர் தோழமை என்ற  தன்னார்வ தொண்டு நிறுவன உதவியுடன் காவல்துறையை அணுக முடிவு செய்துள்ளார்.  தன்னுடன் யாரும் இல்லாத நிலையிலும் தான் மட்டுமே செம்மஞ்சேரி காவல்நிலையம் சென்ற போது ‘இங்கு புகாரளிக்க முடியாது’ என்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து சோழிங்க நல்லூர், அடையார் என அக்குழந்தைகளை கூட்டிக்க்கொண்டு அலைந்துள்ளனர். இறுதியாக ‘கிண்டி அனைத்து மகளீர் காவல் நிலையம் செல்லவேண்டும் அங்குதான் புகாரளிக்கவேண்டும்  உங்களை கூட்டிச்செல்லவேண்டுமென்றால் அதற்கு ஜீப்புக்கு டீசல் போட 5.000 ரூபாய்’ வேண்டும் என்று செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் கூறியுள்ளனர். பின்னர் நேரடியாக கிண்டி சென்று புகாரளித்தபோது அங்கும் போக்சோவில் POCSO வேண்டாம் வேறு பிரிவுகளில் வழக்கு போடலாம் நாளை வா! என அழைக்கழித்துள்ளனர். இறுதியாக அந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் மேலதிகாரிகளை தொடர்புகொண்ட பின்னரே போக்சோ சட்டத்தின் மூலம்  ஆகஸ்ட் 23 ம் தேதி  வழக்கு பதிவு செய்யப்பட்டு சூரியா  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதன் பின்னரும் மருத்துவ பரிசோதனை, விசாரனை என்ற பெயரில் மகேஷ்வரி கிண்டிக்கும் கண்ணகி நகருக்கும் அலைகழிக்கப்படுகிறார். பாதிக்கப்பட்ட இவருக்கு காவல் நிலையத்தில் அவமரியாதையும் இழுத்தடிப்புகளும் தொடர்கிறது. இவர் காவல்நிலையத்தில் தனது சொல்லையும் மீறி புகாரளித்ததால் சித்தி குடும்பத்தினர் இவரை  வீட்டிலிருந்து இழுத்து வீதியில் போட்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனர். காயங்களோடு காவல்நிலையத்தில் புகாரளித்தால் இவருக்கே புத்திமதி சொல்லி திருப்பி அனுப்புகிறது காவல்துறை.

இந்நிலையில் தோழர் இசையரசு மூலம் செய்தி அறிந்து கடந்த 18.09.21 அன்று தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பில் வழக்கறிஞர் தோழர்களோடு மகேஷ்வரியை சந்தித்து ஆறுதல் கூறி இவ்வழக்கில்  உடன் நின்று உதவுவதாக உறுதியளித்தோம். வழக்கு சம்மந்தமான சில சந்தேகங்களைக் கேட்க 21.09.21 அன்று அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு   மகேஷ்வரி அவரது கணவரையும் அழைத்துக்கொண்டு சென்றோம். அப்பொழுது அங்குள்ள பெண் காவலர்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தாயான மகேஷ்வரியையே எல்லா இடத்திலும் புகாரளிப்பாயா என எங்கள் கண்முன்னேயே திட்டினார். இது சரியான அணுகுமுறை இல்லை என்பதை காவல்துறையினரிடம் அறிவுறுத்தினோம். செப்டம்பர் 30 ஆம் தேதி  அக்குழந்தைகளிடம்  ஆலந்தூர் மகிளா நீதிமன்ற  நீதிபதி(164) ரகசிய வாக்கு மூலம் வாங்கினார். நீதிமன்றத்திற்கு குழந்தைகளோடு 12 மணிக்கு வந்த மகேஷ்வரி இரவு 9 மணிக்கு கண்ணகி நகருக்குத் திரும்பி செல்கிறார். குற்றம் சாட்டப்பட்டவனை ஒரு அறையில் அடைத்துவிட்டு பாதிக்கப்பட்டவரை இரவு பகல் என அலைய வைக்கிறது நமது நாட்டு சட்ட வழிமுறைகள்.  நீதிபதி இக்குழந்தைகளிடம் ரகசிய வாக்குமூலம் வாங்க காத்திருக்கையில்  இன்னொரு 13 வயது சிறுமி கண்ணகி நகர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பிலிருந்து இதே போன்ற வழக்கிற்காக வந்திருந்தார்  உடன்  வந்த காவலர் இப்பகுதியிலிருந்து இதுவரை 30 வழக்குகள் வந்துள்ளதாக கூறிய போது இப்பிரச்சினையின் தீவிரமும் ஆபத்தும் உணர்த்தியது.

தமிழக அரசே

  • பூர்வகுடி மக்களை சென்னையிலிருந்து வெளியேற்றி செம்மஞ்சேரி, பெரும்பாக்கத்தில் குடியமர்த்துவதை நிறுத்த வேண்டும். மனிதப்பேரவல்லமாக உள்ள அம்மக்களின் வாழ்வை மீட்டெடுக்க தமிழக அரசு பொறுப்பேற்கவேண்டும்
  • குழந்தைகளைப் பற்றி கணக்கெடுத்து உடனடியாக இடைநிறுத்தம் செய்யப்பட்ட குழந்தைகளின் கல்வி நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மாணவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போல பள்ளி, கல்லுரி வசதிகளை போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்திக்கொடுத்திட வேண்டும்.
  • வீடு வீடாகச் சென்று குழந்தைகளுக்கானக் குறைகளை அறிந்து அவற்றை போக்கும் வகையில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மன நல ஆலோசனை மையம் அமைத்திட வேண்டும்.
  • பெண்கள் சிறுவர் சிறுமிகளுக்கெதிரான குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
  • பாதிக்கப்பட்டவர்கள் அலைகழிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைத்து, செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், கண்ணகி நகர் பகுதி அருகே அனைத்து வசதிகளையும் கொண்ட போதுமான அளவு காவலர்களை கொண்ட   காவல்நிலையமாக மாற்றிடு.
  • பெற்றோர்  நகரத்துக்குள் வேலைக்கு செல்லும்போது குழந்தைகள் தங்குவதக்கு குழந்தைகளுக்கான காப்பகங்களை ஏற்படுத்திடு .
  • பெண்கள் சிறுவர் குற்றங்களைத் தடுக்க விழிப்புணர்ச்சி பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும்.

வருங்கால சந்ததிகளின் மனதில் அச்சத்தைப் போக்கி பாதுகாப்பு உணர்வை பொறுப்புடன் ஏற்படுத்த வேண்டும்.

 

தமிழ், சகிலா

தமிழ்த்தேச மக்கள் முன்னணி

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW