சர்வதேச பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக மோடி அரசின் கையாலாகாத்தனம்

29 Apr 2021

அதிகார ஆணவப்போக்காலும் அதீத அலட்சியத்தாலும் கரோனா இரண்டாம் அலை தாக்கத்தால் நாட்டையே சுடுகாடாக மாற்றிய ஆர் எஸ் எஸ்-பாஜக கும்பல் ஆட்சியாளர்கள் தங்களது தோல்வியையும் இயலாமையையும் மறைக்க இயலாதவர்களாக விமர்சனங்களைக் கண்டு தற்போது செய்வதறியாது விக்கித்து போயுள்ளார்கள்.

இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை தாக்குதலில் நாளுக்கு மூன்றரை லட்சம் மக்கள் தொற்று பாதிப்பிற்குள்ளாவதும் இரண்டாயிரத்திற்கும் குறைவில்லாத மரணங்கள் நிகழ்ந்து வருவதும்  ஆக்சிஜன் தட்டுப்பாட்டாலும்  தடுப்பூசி தட்டுப்பாட்டாலும் மக்கள் அவதியுறுவதையும் தலை நகர் தில்லி, மகாராஷ்டிரா குஜராத்தில் ஓயாமல் இரவு பகலாக தொற்றுக்கு மாண்டோர்களின் உடல்கள் எறிவதையும் சர்வதேச பத்திரிக்கைகள் தலைப்பு செய்திகளாக வெளியிட்டு வருகின்றன. இந்தியாவின் இந்த கோர நிலைமைக்கு பாஜக மோடி அரசின் திறனற்ற திமிர்தன ஆட்சியே காரணம் என இந்த பத்திரிக்கைகள் எழுதத் தவறவில்லை.

ஏப்ரல் 21 இல் வெளிவந்த இங்கிலாந்தின் கார்டியன் பத்திரிகையில்   “இந்தியாவில் நிர்வாக அமைப்பு சீர்குலைந்துவிட்டது” என்ற தலைப்பில் மோடி அரசின் தவறான செயல்பாடுகளை சாடியது.  கரோனா பாதுகாப்பு நடைமுறையின் முக்கிய அம்சமான சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டுவிட்டு மேற்குவங்கத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில்  பேசிய மோடி “என் வாழ்நாளில் இதுபோன்ற ஒரு கூட்டத்தை எந்த தேர்தல் பிரச்சாரத்திலும் பார்த்ததில்லை” என்ற பேச்சை மேற்கோள் காட்டி தொடங்கிற கட்டுரையில் இந்தியாவில் ஆம்புலன்ஸ்கள் வரிசையாக அணிவகுத்துச் செல்கிற நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பிரதமர் மோடியும் மேற்குவங்கத்தில் தொடர்ச்சியாக தேர்தல் பேரணி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள் என விமர்சிக்கிறது.அதுபோல இரண்டாம் அலை குறித்து முன்கூட்டியே சுகாதார வல்லுனர்கள் எழுப்பிய எச்சரிக்கைகளையும் மோடி அரசு அலட்சியப்படுத்தி புறக்கணித்தது என சாடுகிறது.

மேலும் குஜராத், உத்திர பிரதேச மாநிலங்களில் அரசு கூறுகிற கரோனா மரண எண்ணிக்கைகளும் உண்மை மரணங்களுக்கும் வேறுபாடு உள்ளதாக கூறுகிறது. இம்மாநில அரசுகள் மரணங்களை குறைத்து கூறுவதாக குற்றம்சாட்டுகிறது.

வரவுள்ள ஆபத்தை அறியாமல் இயல்பு நிலை திரும்புவிட்டதுபோல மோடி  அரசு மிகவும் அலட்சியமாக திறனற்று ஆட்சி செய்ததன்  விளைவாக இன்று நாடே பெரும் சுகாதார கட்டமைப்பு நெருக்கடிக்கு உள்ளாகிவிட்டதாக விமர்சிக்கிறது.

இதைப்போல அமெரிக்காவின் “நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொற்று நிபுணர் ரமணன் லஷ்மி நாராயணன் எழுதிய கட்டுரையில் கும்பமேளா கூடுகையும், மேற்கு வங்க தேர்தல் பிரச்சார கூட்டத்தையும் விமர்சித்து,இரண்டாம் அலைக்கு அரசு ஆயத்தாமாகததே இந்நிலைக்கு காரணம் என விமர்சிக்கிறார்.இந்தியாவில் தற்போது இரண்டாவது அலை கட்டுப்பாட்டை மீறி விட்டது என கவலையோடு எழுதியுள்ளார்.போபால் பேரழிவின் போது மாண்டவர்களை கூண்டோடு எரியூட்டிய நிகழ்வை தற்போது கரோனவால் மாண்டவர்களை எரியூட்டுகிற நிலையோடு ஒப்புமை செய்துள்ளார்.

இதைப்போல பிரான்ஸ் நாட்டின் லே மோண்டே’ நாளிதழும் பிரேசிலின் ‘ஓ குளோபோ’ நாளிதழும் ஜப்பானின் ‘ஜப்பான் டைம்ஸ்’ நாளிதழும் இஸ்ரேலின் நாளிதழும் ஹாரீட்ஸ்  இந்தியாவில் நிலவுகிற் ஆக்சிஜன் தட்டுப்பாடு,கொரோன மரண  கொடுமைகளை பதிவுசெய்துள்ளது.

உண்மையை மூடி மறைக்க முயல்கிற பாஜக –ஆர் எஸ் எஸ் கும்பல்.

“பெரும் வைரஸ் பேரழிவிற்கு இந்தியாவை இட்டுச் சென்று விட்டார் மோடி” என்ற தலைப்பில் பிலிப் செர்வேல் என்பவர் ஆஸ்த்திரேலிய பத்திரிக்கையில் மோடி அரசின் தோல்வியே இந்தியாவின் இந்த இக்கட்டான நிலைமைக்கு காரணம் என கட்டுரையையொன்றை எழுதினார்.மேலே நாம் குறிப்பிட்ட கார்டியன்,நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட விமர்சனக் கட்டுரை பாங்கிலே பிலிப்பின் கட்டுரையும் கடுமையாக மோடியை சாடியது.வலுவான பிரதமர் என்ற பிம்பத்தை கட்டமைக்கிற முனைப்பும் எதார்த்த நிலைமைக்கு மாறான அதீத நம்பிக்கையும் ஆணவமான செயலபாடுமே இந்தியாவை இந்த நிலைமைக்கு தள்ளிவிட்டுள்ளது என்ற உண்மையை எழுதினார்.மேலும் அதீத தேசியவாத அரசியல்,தடுப்பு மருந்து செலுத்துவதில் ஆர்வம் காட்டாமை,நெருக்கடி காலத்தில் பொருளாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது,சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தாமை போன்ற மோடி அரசின் மோசமான செயல்பாடுகளை அவரது கட்டுரை தோலுரித்தது.இந்த கட்டுரையை அப்படியே இந்தியா டைம்ஸ் பத்திரிக்கை இந்தியாவில் வெளியிட்டது.

விமர்சனங்களை கண்டு எப்போதுமே  அஞ்சி நடுங்குகிற ஆர் எஸ் எஸ் – பாஜக கும்பல், சர்வதேச பத்திரிக்கைகளில் தொடர்ச்சியாக மோடி அரசை கடுமையாக சாடி வருகிற விமர்சன தாக்குதல்களை கண்டு விக்கித்து நிற்கிறது. மோடியை   மையமிட்டு உருவாக்கி வைத்திருந்த வெற்று பிம்ப உருவாக்கத்தை சர்வதேச பத்திரிக்கைகள் சுக்கு நூறாக உடைப்பதை கண்டு துடிக்கிற ஆர் எஸ் எஸ் பாஜக தற்போது எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் வழக்கமான முட்டாள்தன எதிர்வினைகளை ஆற்றத் தொடங்கியுள்ளது.

எப்படியாயினும் மோடி பிம்பம் மீது உருவாகிவிட்ட  அவப்பெயரை துடைக்க வேண்டும் என்ற அவசர கதியில் தற்போது ஆஸ்திரேலியாவிலுள்ள இந்திய உயர் தூதரக ஆணையத்தின் மூலமாக ஆஸ்த்திரேலிய பத்திரிக்கையில் வெளிவந்த விமர்சனக் கட்டுரைக்கு மறுப்பு கடிதம் ஒன்றை எழுதியது.

உயர் ஆணையம் எழுதிய கடிதத்தில்,பிலிப் எழுதிய கட்டுரையில் கூறப்பட்டுள்ளது எதுவும் உண்மையில்லை எனவும் மக்களை பேரிடரில் காக்க மோடி அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது எனவும் கடிதத்தில் பட்டியளிட்டுள்ளது.

ஆக இனி உலகின் பல நாடுகளில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அந்தந்த நாடுகளில் வருகிற மோடி மீதான விமர்சனக் கட்டுரைக்கெல்லாம் மறுப்புக் கடிதம் எழுதுகுற கூடுதல் பொறுப்பை அயலுறவு அமைச்சகத்திற்கு மோடி வழங்கியுள்ளார்.அயலுறவு விவகாரத்தை கவனிக்க வேண்டிய அமைச்சகமும் தூதரக வேலையை பார்க்க வேண்டிய அலுவலகமும் தற்போது மோடியின் தனிச் செயலாளர் போல பத்திரிக்கை செய்திகளுக்கு பதில் கடிதம் எழுதிக் கொண்டுள்ளன.

ஒவ்வொரு நாட்டின் தலைவர்களும் வெவ்வேறு நாட்டு பத்திரிக்கைகளில் வருகிற விமர்சனங்களுக்கு, அயலுறுவு துறை மூலமாக  பதில் வழங்கி தன் மீதான “கலங்கத்தை” துடைக்க முயலலாம் என்பதற்கு கேலிக்குரிய வகையில் ஒரு வரலாற்று முன்னுதாரணம் ஆகி விட்டார் மோடி.

மோடி எனும் அதீத பிம்ப உருவாக்கமும்,வலுவான தலைவர் என்ற செயற்கையான பிரச்சாரமும் ஒரு அரசு நிர்வாகத்தை/இயந்திரத்தை, தனி மனித வழிப்பாட்டு அரசாக பாஜக மாற்றியதன் விளைவுதான் பாஜகவின் வெட்கக்கேடான  இந்த செயல்பாடுகளுக்கெல்லாம் மூல காரணம் ஆகும்.

வெளிநாட்டு பத்திரிக்கைகளை மிரட்டி பணிய வைக்க முடியாத மோடி அரசு  சமூக ஊடகங்களின் மோடியை விமர்சிக்கிற பதிவுகளை நீக்குவதற்கு துடியாய் துடிக்கிறது. மோடிஅமித்ஷா கும்பலாட்சி  மீதான விமர்சனங்கள் சரமாரியாக அதிகரித்து வருவதை பொறுக்க முடியாத ஆட்சியாளர்கள் ட்விட்டர் நிர்வாகத்தை மிரட்டி விமர்சன பதிவுகளை நீக்குகிறார்கள்.அதேபோல உத்திர பிரதேசதில் ஆக்சிஜன் தட்டுப்பாடு முற்றிலுமாக இல்லை எனவும்,ஆக்சிஜன தட்டுப்பாடு என வதந்தி பரப்புவோர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் என்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் எனவும்  உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாத் மிரட்டுகிறார்.கரோனா சூழலை பயன்படுத்தி மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்த தேச விரோதிகள் முயற்சிகின்றன  என ஆர் எஸ் எஸ் பொதுத் செயாலாளர் அறிக்கை விடுகிறார்.

இதுவரை மோடியை விமர்சிக்கிற இந்தியர்களுக்கு தேச விரோத சக்தி என பட்டம் வழங்கிய  பாஜக இம்முறை சர்வதேச பத்திரிக்கைகள் முதலாக உள்நாட்டு சமூக ஊடக விமர்சனங்கள் வரை மோடி அரசை விமர்சிப்போர்களுக்கு  என்ன பட்டம் வழங்குவது என குழம்பி உள்ளது. வேளாண் போராட்டத்தை பலவந்தமாக நசுக்கியதை கண்டித்த வெளிநாட்டவர்களை எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதீர்கள் என சொன்ன பாஜக இம்முறை,ஒட்டுமொத்த தேசத்தையும் சுடுகாடாக மாற்றிய தங்களது அரசாட்சியை விமர்சிப்போர்களை வன்மத்துடன் அதிகார செறுக்குடன் எதிர்வினையாற்றுகிறது.

வரலாற்றின் வர்க்கப் போராட்டத்தில் காலம்தோறும் அரசின் அனைத்து அடக்குமுறைகளையும் கடந்தே மக்கள் புரட்சி வெடித்துள்ளது.வரலாற்றின் முன்னாள் மோடியும் அமித்ஷாவும் எம்மாத்திரம்.வரலாற்றின் குப்பைதொட்டியில் இவர்களுக்கான இடம் உறுதியாகிவிட்டது.

 

– அருண் நெடுஞ்செழியன்

ஆதாரம்:

https://thewire.in/media/covid-19-india-surge-oxygen-global-media-reports-modi

https://scroll.in/latest/993388/baseless-malicious-india-slams-australian-newspaper-for-report-criticising-modi-for-covid-crisis

https://www.nbcnews.com/news/world/anger-twitter-withholds-posts-critical-indian-government-s-covid-response-n1265335

 

RELATED POST
1 comments
  1. நல்ல தொகுப்பு குறிப்பாக மோடி அரசு கூறிய கற்பனையான செய்திகள் விஞ்ஞானத்திற்கு புறம்பான அணுகுமுறை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது

Leave a Reply to Kennedy Cancel reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW