ஊரடங்கு தீர்வேயல்ல, பொதுச் சுகாதாரக் கட்டமைப்பைப் பலப்படுத்து! பொதுப்போக்குவரத்தை துவங்கு, ஊரடங்குக்கு முடிவு கட்டு!

18 Aug 2020

மதுக்கடைகளைத் திறக்கலாம், ஆனால் பொதுப் போக்குவரத்துக் கூடாதாம்!

ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடலாம். அரைசாண் வயிற்றுப் பிழைப்புக்காக மக்கள் பேருந்தில் பயணிக்க முடியாது!

நாளொன்றுக்குப் பொதுப்போக்குவரத்தை மட்டுமே நம்பியிருக்கும் கோடி்க்கணக்கானோர் வாழவழியென்ன? உயிரிருக்கும் வரை வயிறிருக்கும். வயிறு இருக்கும் வரை பசியெடுக்குமே!

இ-பாஸ் என்பது ஒரு முறையாம். ஆன் லைனில் விண்ணப்பமாம். சிவப்பு பட்டன், பச்சை பட்டன் என்பதை மட்டும் தெரிந்தவர்கள் இந்நாட்டில் கோடிக்கணக்கானோர் இருக்கிறார்கள் என்பது எப்போது கொள்கை வகுப்பாளர்களின் நினைவுக்கு வரும்.

திமுக தேர்தல் வேலைகளைச் செய்வதை தடுப்பதற்காக இ-பாஸ் கெடுபிடிகளைப் பயன்படுத்துகிறது அதிமுக என்கிறது திமுக!

இ-பாஸ் முறை இலகுபடுத்தப்பட்டு விட்டது என்கிறது அதிமுக அரசு! இவர்களுக்கெல்லாம் எள்முனையளவும் வெட்கமுண்டா? சரி, ஆதார் கார்டு இருந்தால் இ-பாஸ் கிடைக்கும். காசில்லாமல் வெறும் ஆதார் கார்டு மட்டும் இருந்தால் கார் வாடகைக்கு கிடைக்குமா?

நல்லது கெட்டது, கல்யாணம் காட்சி என்பதெல்லாம் வண்டி வாகனம் வைத்திருப்பவர்களுக்கும் காசிருப்பவர்களுக்கும் மட்டும்தான் வருமா? இத்தனைநாள் பேருந்தைப் பயன்படுத்தியவர்களெல்லாம் இந்த ஐந்து மாத காலமாக எத்தனை முறை துடிதுடித்துப் போய் இருப்பார்கள்!

ஒன்று பேருந்தை விடு! இல்லையென்றால் இ பாஸ் யாருக்கும் கொடுக்காதே! காரில் போகும் கனவான்கள் கொரோனா தடுப்புக்காக எத்தனைநாள் அடக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

தமிழக அரசு கொரோனா தடுப்புப் பணிகளை சிறப்பாக முன்னெடுக்கிறதாம். நோய் குணமாகும் விழுக்காடு அதிகமாகவும் சாவு விழுக்காடு குறைவாகவும் இருக்கிறதாம். சுதந்திர தின உரையில் முதல்வர் உதிர்த்த முத்துக்கள் இவை. நாளொன்றுக்கு நிரலளவாக 120 பேர் கொரோனாவினால் மருத்துவமனைகளில் சாகின்றார். அண்டை மாநிலமான கேரளாவில் இது எவ்வளவு தெரியுமா? வெறும் 6! உண்மையில், இந்தியாவிலேயே முதல்முறையாக வூகானிலிருந்து நேரடியாக கேரளாவுக்குத்தான் கொரோனா பரவியது. சனவரி 30 அன்று இந்தியாவின் முதல் கொரோனா தொற்றாளர் கண்டறியப்பது அங்கேதான். ஆனால், அவர்களால் கட்டுக்குள் வைத்திருக்க முடிகின்றது.

கட்டுப்படுத்த தவறிவிட்டோம் என்று ஒப்புக்கொண்டால் தானே காரணம் தேட முடியும். தமிழ்நாட்டில்தான், தப்பை ஒப்புக் கொள்ளும் அரசியல் கலாச்சாரம் கிடையாதே. கேரளாவால் இது எப்படி முடிகிறது? அவர்கள் ஊரடங்கை கொரோனா தடுப்புக்கு தீர்வாக்கவில்லை. பொதுச் சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்துவது என்பது கேரளா அரசின் கொரோனா கால நடவடிக்கை அல்ல, ஒரு தொடர் நடவடிக்கை. 2016 இல் ஆட்சிக்கு வந்த இடது சனநாயக முன்னணி அரசின் நான்கு  இலக்குகளில் ஒன்று பொது சுகாதாரக் கட்டமைப்பைப் பலப்படுத்துவது. மக்கள் தனியாரை நோக்கிச் செல்லாமல் அரசு சேவையை நோக்கி வரவைத்தல் என்ற நோக்கத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக செயலாற்றி வருகிறது கேரள அரசு. அதனால் தான், கேரளாவின் நலவாழ்வுத் துறை அமைச்சர் சைலஜா டீச்சருக்கானப் பாராட்டுக்கள் சர்வதேச அளவில் வந்து குவிகின்றன.

கோவிட் தனிச் சிறப்பு மருத்துவமனைகளை அமைக்க வேண்டும் என்பது உலக நலவாழ்வு மையத்தின் வழிகாட்டல். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் பரிந்துரையும் அதுவே. ஆனால், தமிழ்நாட்டில் எத்தனை கோவிட் தனிச் சிறப்பு மருத்துவனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் உருவாக்கப்பட்டுள்ள கோவிட் மருத்துவமனையைத் தவிர வேறெந்த புதிய சிறப்பு மருத்துவமனைகளும் உருவாக்கபட வில்லை.

தனிச் சிறப்பு மருத்துவமனைகளை அமைக்கச் சொன்னால் சென்னை இராஜீவ்காந்தி மருத்துவமனையை கோவிட் மருத்துவமனையாக மாற்றியிருக்கிறது அரசு! ஸ்டான்லி, ஓமாந்தூரார், கீழ்பாக்கம் என அரசு மருத்துவமனைகளில்  கொரோனாவுக்கான வார்டுகளை அமைத்துள்ளது அரசு. திருச்சி கிஆபெ, மதுரை இராஜாஜி, சேலம் குமாரமங்கலம் என அனைத்து அரசுப் பொது மருத்துவமனைகளிலும் கொரோனா வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளனவே அன்றி கோவிட் தனிச் சிறப்பு மருத்துவமனைகள் எந்த மாவட்டத்திலும் உருவாக்கப்பட வில்லை. அப்படியென்றால், இந்தப் பொது மருத்துவமனைகளில் எல்லாக் காலங்களிலும் கொரோனா அல்லாத நோய்களுக்காக சிகிச்சைப் பெற்று வந்த ஏழை எளிய மக்கள் எங்கே சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அப்பல்லோவிலும் மியாட்டிலும் சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கிறோம் என்ற பெயரில் கொரோனா அல்லாத எத்தனையோ நோய்களுக்கான சிகிச்சை ஏழை,எளிய மக்களுக்கு மறுக்கப்பட்டு வருகின்றது. கொரோனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கையை எவ்வளவுக்கு குறைத்துக் காட்ட முடியுமோ அவ்வளவுக்கு குறைத்துக் காட்டிக் கொண்டிருக்கிறது அரசு. ஆனால், கொரோனா அல்லாத நோய் நொடிகளால் சிகிச்சைக் கிடைக்காமல் சாகின்றோர் எத்தனை பேர் என்ற கணக்கெடுப்பே இல்லை. அப்படியொரு கணக்கு எடுப்பை எடுத்து வெளியிட தமிழக அரசு முன்வருமா?

எந்த அறிகுறியும் இல்லாவிட்டால்கூட தமிழ்நாட்டு எம்.பி., எம்.எல்.ஏக்கள் அரசு மருத்துவ சேவையைப் பெற முன்வருவதில்லை, தனியார் மருத்துவமனையையே நாடிச் செல்கின்றனர். வெட்கக் கேடாக மாவட்ட ஆட்சியர்களும்கூட தனியார் மருத்துவமனையில் தஞ்சம் புகுகின்றனர்.  அரசின் நடவடிக்கைகளைக் குற்றம் கூறினால் இரவுபகல் பாராது பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களை அவமானப்படுத்துவதாக அங்கலாய்க்கிறார் நலவாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்! ஆனால், அவரிடம் ’மக்கள் பிரதிநிதிகளே தனியாருக்கு செல்வதா?’ என்று கேள்வி எழுப்பினால் ’அது தனிப்பட்ட விருப்பம்’ என்று சொல்கிறார்!  இங்கே தீர்மானிப்பது விருப்பமல்ல, கையிருப்பு! ஏழைக்கொரு நீதி, பணக்காரருக்கு ஒரு நீதியா? என்று கேட்டு மக்கள் செருப்பால் அடிக்க மாட்டார்கள் என்ற துணிவுதானே இப்படி ஆட்சியாளர்களைப் பேச வைக்கிறது.

எந்த அறிகுறியும் இல்லாத போதும் மருத்துவமனைப் படுக்கையைப் பயன்படுத்துவதற்கே 5 இலட்சம் ரூபாய் வரை வாங்குகின்றன கார்ப்பரேட் மருத்துவமனைகள். அப்படி அறிகுறியோடு சிகிச்சைப் பெற்றால் எவ்வளவு கறப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்.

எரியும் கொள்ளியில் பிடுங்கிய வரை இலாபம் என்று கார்ப்பரேட் மருத்துவமனைகள் செயல்படாவிட்டால்தான் நாம் வியப்படைய வேண்டும். எனவே, கொரோனா பரவும் வேகத்திற்கேற்ப பண மழைப் பெய்கிறது கார்ப்பரேட் மருத்துவமனைகளின் காட்டில்! கொரோனாவையும் கொரோனா அல்லாத நோய்களையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ள வேண்டுமென்றால் இப்போது இருக்கும் பொதுசுகாதாரக் கட்டமைப்பைக் கொண்டு மட்டும் செய்துவிட முடியாது. கார்ப்பரேட் மருத்துவமனைகளை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால்தான் இந்த மருத்துவப் பேரிடரை எதிர்கொள்ள முடியும்.

ஊரின் விளக்கை அணைத்துவிட்டு ஊரையே கொள்ளையடிக்குமொரு மாஃபியா கும்பலைப் போல் கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு. நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் மூடிக் கிடக்கின்றன. ஆனால், காட்டாற்று வெள்ளமென கொள்கை சீர்திருத்தங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தேசியக் கல்விக் கொள்கை நடைமுறைக்கு வருகின்றது. சூழல் தாக்க ஆய்வறிக்கை வரைவு முன்வைக்கப்பட்டுள்ளது. இரயில்வே, காப்பீடு, விமானப் போக்குவரத்து, இராணுவ தளவாட உற்பத்தி, வானவியல் ஆராய்ச்சி என அத்தனையிலும் தனியார்! மின்சார சட்டத்தில் திருத்தம்! இப்படி இந்த ஐந்து மாதங்களில் நடந்த சீர்திருத்தங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். கத்தி முனையில் கைப் பணத்தை களவாடிப் போகிறவர் போல் கொரோனா பீதியில் மக்களை இருத்தி வைத்து கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கை திருத்தங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது அரசு. ”நாங்கள் மக்களுக்கும் மக்களாட்சிக்கும் எதிரானவர்கள்” என்பதை இதைவிட வெளிப்படையாக ஓர் அரசு அறிவிக்க முடியுமா? ஊரடங்கெதற்கு? ஊரைக் கொள்ளையடித்து உலையில் போட்டு கார்ப்பரேட்களின் பண மூட்டை நிரப்புவதற்கா? உலகப் பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானியையும் , அனில் அகர்வாலையும் கெளதம் அதானியையும் உயர்த்துவதற்கா?

கொரோனா ஏழை, பணக்காரர் பார்ப்பதில்லை. ஆகவே, பணக்காரர்களின் உயிரைப் பாதுகாக்கும் பொருட்டு சுற்றும் பூமியை நிறுத்தும் அளவுக்கு உலக அரசுகள் ஊரடங்குக்கு சென்றன. அத்தனையும் நிறுத்தப்பட்டன. ஆனால், ஊரடங்கின் சுமை முழுக்கவும் ஏழைகளின் தலையில் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. எல்லோரது வயிற்றுக்கும் சோறு வேண்டும், ஆனால், ஏழைகளின் சோற்றுக்கு வழியில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை இந்த அரசை நம்பி மக்கள் வாழ்வு நடத்தவில்லை. ஆனால், அவர்களின் வாழ்வில் அரசு குறுக்கே வந்து கனவுகளை மட்டுமின்றி இருப்புநிலையையே சிதைத்து தள்ளியுள்ளது. பணக்காரர்களைக் கொரோனாவில் இருந்து காப்பதற்காக பட்டினியிலும் தற்கொலையிலும் ஏழைகளை சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஏழைகளின் மருத்துவமனைகள் கொரோனா மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு கொரோனா அல்லாத எல்லா நோய்களுக்கான சிகிச்சையும் மறுக்கப்பட்டு வருகின்றது.

வறுமையில் வாடும் 13 கோடி குடும்பங்களுக்கு மூன்று மாதங்களுக்கு 6000 ரூ கொடுங்கள் என்ற கோரிக்கைக்கும் ஆட்சியாளர்கள் செவிச் சாய்க்கவில்லை. இந்திய அரசின் ஆண்டு வரவு செலவுக்கு முன்னால் இந்த 13 கோடி குடும்பங்களுக்குப் பணத்தைக் கொடுத்து பாதுகாப்பதற்கான தொகை ஒரு விசயமே அல்ல. இதை முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் முன்னாள் ஆர்.பிஐ. ஆளுநர் ரகுராம் ராஜனும் முன்வைக்கிறார்கள். ஆனால், கைவிரிக்கிறார் மோடி!

மொத்தத்தில் கொரோனாகால சுமை முழுக்கவும் ஏழைகளின் தலையில் ஏற்றி வைக்கப்பட்டு விட்டது. இதை இனியும் அனுமதித்தால் கொரோனா கொல்வதற்கு முன்னால் கடன் தொல்லையும் கோரப் பசியும் அவமானமும் கொத்துக்கொத்தாய் மக்களைக் கொல்லத் தொடங்கிவிடும்.

ஊரடங்கென்று சொல்லி ஊரை ஏய்க்காதே!

ஊரடங்குக்கு முடிவுகட்டு!  கொரோனாவில் இருந்து காக்க பொதுச் சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து!

 

-செந்தில், இளந்தமிழகம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW