மக்கள் அதிகாரம் அமைப்பின் 6 தோழர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது! – தமிழ்தேச மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது!

12 Jun 2018

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வீரியமிக்க மக்கள் திரள் போராட்டமானது,ஆளும் வர்க்கத்தின் காட்டிமிராண்டித்தன ஒடுக்குமுறையால் இரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது.பதிமூன்று போராளிகளின் உயிர்ப்பலி,நூற்றுக்கணக்கனோர் படுகாயம் என நிராயுதபாணி மக்கள் மீது அரசப் படை நிகழ்த்திய ஆயுத வெறியாட்டமானது,முதலாளித்துவ ஜனநாயக அரசின் வன்முறை பண்பை  உள்ளது உள்ளவாறு மக்களிடத்தில்  அம்பலப்படுத்தியுள்ளது.வாகனத்தில் ஏறி நின்று குறிபார்த்து சுடுவது,வீடுகளுக்குள் புகுந்து சுடுவது,சட்டவிரோத கைதுகள்,அச்சுறுத்தல்கள் என ஜனநாயகஆட்சியாளர்களின் கோர சட்ட ஒழுங்குவாதம் மக்கள் மத்தியில் அன்னியமாகியவருகிறது.

 

அரசின் மீதான வெகுமக்கள் இயக்கத்தை “சமூக விரோதிகளின் சூழ்ச்சி”என்ற கருத்தியல் வன்முறையின்வழியே தனது காட்டுமிராண்டித்தன வெறியாட்டத்தை நியாயப்படுத்த முயற்சிக்கிறது அரசு.தனது கருத்து உற்பத்திக்கு கார்பரேட் ஆதரவு ஊடகத்தை பயன்படுத்திக் கொள்கிறது. ஒருபுறம்,மக்கள் எதிர்ப்பை மட்டுப்படுத்த,ஸ்டெர்லைட் ஆலை மூடல் என தற்காலிக அறிவிப்பை மேற்கொண்டும்,ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தும்,தூத்துக்குடி அதிகாரிவர்க்கத்தினரை பணியிடமாற்றம் செய்தும் கண்துடைப்பு நாடகங்களை அரேங்கேற்றி வருகிறது.விசாரணை ஆணையம் விசாரிப்பதால்,தூத்துக்குடி அரச வன்மறை குறித்து எந்த குரலையும் உயர்த்த கூடாது,வாய் மூடி மௌனியாக இருக்க கடவது என்கிறது எடுபிடி அரசு.எதிர்க்கட்சி தலைவருக்கும் சட்டமன்றத்தில் பேசுகிற  வாய்ப்பு மறுக்கப்பட்டது. மறுபுறம், பல்வேறு இயக்கத்தினரை குறிப்பாக கம்யூனிஸ்ட் இயக்கத்தினரை சமூக விரோதிகள்,வன்முறையை தூண்டுகிற விஷ சக்திகள்,நக்சலைட்கள் என முத்திரை குத்தி கைது செய்து வேட்டையாடி வருகிறது.தூத்துக்குடி துப்பாக்கிக் சூடு தொடர்பான ஊடக விவாதம் மேற்கொண்ட புதிய தலைமுறை மீது வழக்கு பதிந்துள்ளது.

 

அரசின் இந்த சட்டப்பூர்வ வன்முறை வெறியாட்டத்தின் தொடர்ச்சியாக தற்போது மக்கள் அதிகார அமைப்பின்  ஆறு தோழர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எடுபிடி எடப்பாடி அரசு கைது செய்துள்ளது.கைது செய்யப்பட்டோரில் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த கலீல்ரகுமான்(46),அவரது இரு மகன்கள் முகமது யூனுஸ்(23) மற்றும் முகமது இஸ்ரத்(22) ஆகிய மூவரும்    ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.இவர்களோடு உசிலம்பட்டியை சேர்ந்த கோட்டையன்(31) கோவில்பட்டியை சேர்ந்த சரவணன்(26) வேல்முருகன் ஆகியோர்களையும் தூத்துக்குடி சிப்காட் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.அரசின் இந்த சட்டப்பூர்வ பாசிச வன்முறை நடவடிக்கையானது கடுமையான கண்டனத்திற்கு உரியது.அரசின் சூழலியல் படுகொலை திட்டங்களுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு இயக்கங்களை,இயக்கவாதிகளை சமூக விரோத சக்திகள் என முத்திரைகுத்துவதும்,ஆள் தூக்கி சட்டம் போட்டு ஒடுக்குவதும் ஜனநாயக விரோதமான காட்டுமிராண்டித்தன செயல்பாடாகும்.ஜனநாயக குடியரசின் முழக்கங்கள் சுதந்திரம்,சமுத்துவம்,சகோதரத்துவம் தானே தவிர துப்பாக்கி,போலீஸ்,சிறை அல்ல!

முன்னதாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் திரு இடும்பாவனம் கார்த்திக் மீது ஆள் தூக்கி குண்டாஸ் சட்ட போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின்  மாநில ஒருங்கிணைப்பாளர் திரு  வியனரசு கைது செய்யபப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் திரு  பண்ரூட்டி வேல்முருகன் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.புரட்சிகர இளைஞர் முன்னணியை சேர்ந்த எட்டு  தோழர்களை சட்ட விரோதமாக நள்ளிரவில் கைது செய்து இரவு முழுவதும் அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளது.இதன் தொடர்ச்சியாக தற்போது மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது தேசத் துரோக வழக்கை புனைந்துள்ளது இந்த போலீஸ் அரசு.
மன்னராட்சியின் கீழான கேள்வி கேட்பாரற்ற ஆட்சிக்கும் மக்கள் பிரதிநிதிகளின் பெயரால் நடைபெறுகிற  குடியரசு ஆட்சிக்குமான வேறுபாடு இல்லாத வகையில்,இந்த ஆட்சிக்கு எதிராக யார் போராட்டம் நடத்தினாலும் போலீஸ் ஒடுக்குமுறையை குடியரசு பேரிலான ஆட்சியாளர்கள் வெட்கமின்றி மேற்கொண்டு வருகின்றனர்.மத்தியில்,மோடியைக் கொல்வதற்கு நக்சலைட்கள் சதி என கருத்து உற்பத்தி,அதைத் தொடர்ந்து அராஜக கைதுகள்.மாநிலத்தில் குருவை மிஞ்சிய சிஷ்யனாக தேசப் பாதுகாப்பு சட்டம்,குண்டாஸ் என போலீஸ் துப்பாக்கி துணையுடன் ஆட்சியை மேற்கொண்டு வருகிற எடுபிடி எடப்பாடி அரசு,தமிழக வரலாற்றில் இல்லாத அளவிலான ஜனநாயக விரோத மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது.

அரசின் இந்த தொடர் சட்ட விரோத கைது நடவடிக்கைகளுக்கு தமிழ்தேச மக்கள் முன்னணியின் சார்பாக வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
– தோழர் பாலன்,பொதுச் செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW