இயற்கை – சமூகம் – மனித அறிவின் பரிணாம வளர்ச்சி

அறிவியலும் இயற்கையும் ஒன்று அல்ல. இயற்கை மனித அறிவுக்கு வெளியில் உள்ளது, பரந்து விரிந்து செல்கிறது. அறிவியல் என்பது இயற்கையைப் புரிந்து கொள்வதற்கான நமது போராட்டம். அது மனித மனம் எழுதும், வளர்ந்து செல்லும் கதை. அதற்கான கச்சாப் பொருளாக கண்டறிதல் உள்ளது. இந்தக் கதையின் மையத்தில் இருப்பது தரவுகளின் தொகுப்பு மட்டும் அல்ல, துணிச்சலான, படைப்பூக்கமான, புரட்சிகர கோட்பாட்டாக்கமும் உள்ளது. அது இந்தப் பேரண்டத்தை புரிந்து கொள்ள உதவும் கருத்தாக்கச் சட்டகங்களைக் கட்டமைக்கிறது.
கடந்த 450 ஆண்டுகளாக நடந்து வரும் அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி இதில் ஒரு புதிய பாய்ச்சலைக் குறிக்கிறது. இயற்கை அறிவியலில் மட்டுமின்றி சமூகத்தைப் பற்றிய ஆய்விலும் புறநிலைத் தரவுகள் அனைத்தையும் இணைக்கும் கோட்பாட்டாக்கம் முதன்மைப் பங்காற்றுகிறது. இந்த அறிவியல் நடைமுறை, மேற்கு ஐரோப்பாவில் தொடங்கி பிற மேற்கத்திய நாடுகளில் வலுப்பெற்றது. இந்தியாவில் அறிவுப் பணி, மிகச் சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, பிற நாட்டு கோட்பாடுகளை மொழிபெயர்ப்பது, இந்திய வரலாறு பற்றிய புதிய தகவல்களைத் தொகுப்பது, வெளிநாட்டில் இருந்து பெற்ற கோட்பாடுகளுடன் தரவுகளை இணைப்பது என்ற அளவிலேயே நிற்கிறது.
நவீன அறிவியலின் மூன்று மாபெரும் புரட்சிகளைப் பற்றிய ஆய்வு இந்தச் செயல்முறையை தெளிவுபடுத்துகிறது. அதில் நாம் பெற வேண்டிய பயிற்சியையும் சுட்டிக் காட்டுகிறது. அறிவியல் வெறுமனே நடைபோடுவதில்லை, அது தாவிச் செல்கிறது. பல நேரங்களில் அதன் சொந்த பழைய கருவிகளை உடைத்து விட்டு புதிய கருவிகளை சமைத்து முன்செல்கிறது.
முதல் புரட்சி – மகத்தான புத்தாக்கம்: புறநிலை தரவுகளில் இருந்து ஓர் உலகளாவிய விசை பற்றிய விதி
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வானில் சூரியனும் நிலாவும், கோள்களும் விண்மீன்களும் நகர்வதைக் கவனித்து வந்த மனிதர்கள் அது தொடர்பான பல புராணக் கதைகளை உருவாக்கினர். அது மட்டுமின்றி அந்த இயக்கத்தைப் புரிந்து கொள்வதற்கும் வான் நிகழ்வுகளை முன்னறிவிப்பதற்கும் இயக்கம் பற்றிய கண்டறிதல்களில் இருந்து கோட்பாடுகளை உருவாக்கினர்.
எடுத்துக்காட்டாக,
– அத்தகைய கோட்பாட்டின் மூலம், அடுத்த சூரிய கிரகணம் அல்லது சந்திர கிரகணம் எப்போது நிகழும் என்று கணக்கிட முடிய வேண்டும்.
– பூமியின் சுற்றுப் பாதையை ஒட்டி சூரியனின் இடத்தைக் கணக்கிடுவதன் மூலம் பருவகால மாற்றங்களை கணிக்க முடிய வேண்டும்.
– வானில் விண்மீன்களின் இடத்தைப் பயன்படுத்தி கடலில் செல்லும் கப்பல்கள் தாம் இருக்கும் இடத்தைக் கணக்கிடுவதற்கு அத்தகைய கோட்பாடு உதவுகிறது.
மேற்குலகில் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்ட தாலமியின் (பொ.ஆ. 100-170) புவிமையக் கோட்பாடு இந்தக் கேள்விகளுக்கு குத்துமதிப்பான விடைகளை வழங்கியது. ஆனால், பல விடை காண முடியாத கோட்பாட்டுச் சிக்கல்களுக்கும் நடைமுறை முரண்களுக்கும் இடமளித்தது.
நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் (1473-1543) தனது வாழ்வின் இறுதி ஆண்டில், வான்பொருட்கள் பற்றிய ஒரு புதிய வரைபடத்தை வழங்கினார். அதுவரையில் ஆதிக்கம் செலுத்தி வந்த தாலமியின் புவி மையக் கோட்பாட்டுக்குப் பதிலாக சூரியனை மையமாகக் கொண்டு பூமி உள்ளிட்ட கோள்கள் சுற்றி வருகின்றன என்ற கோட்பாட்டை அவர் முன் வைத்தார்.
இந்த இரண்டு கோட்பாடுகளும் ஒரே மாதிரியான தரவுகளைக் கொண்டு ஒரே மாதிரியான முடிவுகளைத் தந்தாலும் பேரண்டத்தைப் பற்றியப் புரிதலில் இரண்டும் வேறுபட்டன. மேலும், புதிதாக வளர்ந்து வந்த கடற்பயணங்களில் தேவைப்படும் தரவுகளுக்கு மேலும் துல்லியமான அளவைகள் தேவைப்பட்டன. எந்தக் கோட்பாடு அதை வழங்கும் என்ற விவாதம் எழுந்தது.
டைகோ பிராகே (1546-1601) புவி மையக் கோட்பாட்டுக்கும் சூரிய மையக் கோட்பாட்டுக்கும் இடையிலான மோதல்களைத் தீர்ப்பதற்கு வெறும் வாதப் பிரதிவாதங்களை சார்ந்திராமல் தரவுகளைப் பதிவு செய்து அதிலிருந்து முடிவுக்கு வரலாம் என்று கருதினார். இது மனித அறிவின் வளர்ச்சியில் (அறிவியல்) மிக முக்கியமான பாய்ச்சல் என்கிறார் புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ரிச்சர்ட் ஃபெய்ன்மன் (1918-1988). தரவுகளின் அடிப்படையில் கோட்பாட்டைச் சரிபார்ப்பது, கோட்பாட்டைப் பயன்படுத்தி புதிய புரிதல்களை வந்தடைவது, அதனை நடைமுறையில் சரிபார்ப்பது என்ற இந்த அணுகுமுறை நவீன அறிவியலின் அடித்தளமாக ஆனது.
டைகோ பிராகேயின் தரவுகளைப் பெற்றுக் கொண்ட ஜொகான்னஸ் கெப்ளர் (1572-1630), 1610 ஆம் ஆண்டிலும் 1632 ஆம் ஆண்டிலும், கோள்களின் இயக்கம் தொடர்பான துல்லியமான கணிதவியல் விதிகளை வழங்கினார். அதன்படி கோள்களின் இயக்கப் பாதை நீள் வட்டமானது, அவை சம நேரங்களில் சம பரப்புகளைக் கடக்கின்றன, வெவ்வேறு கோள்களின் இயக்கப் பாதைகளுக்கு இடையிலான விகிதங்கள் திட்டமானவை. இந்த விதிகளின் அடிப்படை என்ன? வான்பொருட்களின் இந்த விண்ணுலக நடனத்தை ஆட்டுவிக்கும் விசை எது?
கலிலியோ கலிலி (1564-1642), 1610 ஆம் ஆண்டிலும் 1632 ஆம் ஆண்டிலும் வியாழன் கோளின் நிலாக்களையும் வெள்ளி கோளின் பிறைகளையும் கண்டறிந்தார். புவியின் மேல்பரப்பில் இயங்கும் பொருட்களின் இயக்க விதிகளை வெளிப்படுத்தினார். இது சூரிய மையக் கோட்பாட்டை உறுதிப்படுத்தியது. பொருட்களின் இயக்கத்துக்குப் பின் இருக்கும் புறநிலை விதிகளைக் கண்டறிய முடியும் என்ற உறுதிப்பாட்டைத் தந்தது.
பொருட்களின் இயக்கம் பற்றிய பொது விதி ஒன்று உள்ளதா என்பதற்கான விடையை 1687 ஆம் ஆண்டில் வழங்கியவர் ஐசக் நியூட்டன் (1643-1727). கோள்களின் இயக்கம் பற்றிய கெப்ளரின் விதிகளை பொருட்களின் பொதுவான இயக்க விதிகளாக அவர் வகுத்தளித்தார். வரலாற்றில் மிக ஆற்றல் வாய்ந்த கோட்பாட்டுச் சட்டகத்தை அவர் உருவாக்கினார். அது உலகளாவிய ஈர்ப்பு விசை பற்றிய விதி. அவர் ஒரு விதியை மட்டும் கண்டறியவில்லை. நுண்கணிதம் என்ற ஒரு புதிய கணிதவியல் மொழியைக் கட்டமைத்தார். அதன் மூலம் ஈர்ப்பு விசை பற்றிய விதியை விளக்கினார்.
பொருட்களின் நிறைகளின் பெருக்கலுக்கு நேர் விகிதத்திலும் அவற்றுக்கு இடையேயான தொலைவுக்கு எதிர் விகிதத்திலும் உள்ள ஓர் ஒற்றை விசை, மரத்திலிருந்து ஆப்பிள் பழம் கீழே விழுவதையும் பூமியை நிலா சுற்றி வருவதையும் விளக்க முடிந்தது.
இங்கு நியூட்டன் வெவ்வேறு நிகழ்முறைகளை ஒருங்கிணைத்து பொதுமைப்படுத்தினார். ரிச்சர்ட் ஃபெய்ன்மன் தனது தி கேரக்டர் ஆஃப் பிசிக்கல் லா (The Character of Physical Law) என்ற விரிவுரையில் இதை விளக்குகிறார். ஈர்ப்பு விசையின் ஈர்ப்பு அதன் ஆற்றலில் மட்டுமின்றி, அதன் பொதுமைப்படுத்தலிலும் கணிதவியல் தன்மையிலும் உள்ளது. நியூட்டன் ஈர்ப்பு விசை என்ற கருத்தாக்கத் திறவுகோலை நமக்கு வழங்கினார். அது நமது சூரியக் குடும்பத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த அண்டத்தையும் புரிந்து கொள்ள உதவுகிறது. தரவுகளை முடிவுகளாக மாற்றும் சக்திவாய்ந்த ஒருங்கிணைக்கும் கோட்பாடுகளுக்கான தேடல்தான் கோட்பாட்டாக்கம் என்று அவர் காட்டினார்.
இரண்டாவது புரட்சி – வேதியியல் துறையைப் புரட்டிப் போடுதல் : பிளாஜிஸ்தானில் இருந்து ஆக்சிஜனுக்கு
கிட்டத்த ஒரு நூற்றாண்டு காலமாக ஐரோப்பிய வேதியியல் ஒரு சக்தி வாய்ந்த, அழகியல் நிரம்பிய பிளாஜிஸ்தான் கோட்பாட்டைப் பயன்படுத்தியது.
– எரியும் பொருட்களில் “தடித்த மண்” என்ற பொருள் உள்ளது. எரியும்போது அது வெளியேற்றப்படுகிறது என்று 1667 ஆம் ஆண்டு ஜோஹன் ஜோக்கிம் பேச்சர் (1635-1682) முன்மொழிந்தார்.
– 1703 ஆம் ஆண்டு ஜார்ஜ் எர்னஸ்ட் ஸ்டால் (1659-1734), எரியும் போது வெளியேறும் பொருளுக்கு பிளாஜிஸ்தான் என்று பெயர் சூட்டினார்.
அவர் முன்வைத்த விரிவான கோட்பாடு பதினெட்டாம் நூற்றாண்டு முழுவதும் வேதியியலில் செல்வாக்கு செலுத்தியது.
– பிளாஜிஸ்தான் என்பது எரியக் கூடிய அனைத்துப் பொருட்களிலும் இருப்பது, எரிதலின்போது பிளாஜிஸ்தான் பொருளில் இருந்து வெளியேறி காற்றுக்குள் செல்கிறது. குறிப்பிட்ட அளவு காற்று வரம்புக்குட்பட்ட அளவுக்குத்தான் பிளாஜிஸ்தானை உள்வாங்க முடியும்.
– தாவரங்கள் காற்றில் இருந்து பிளாஜிஸ்தானை உள்வாங்கிக் கொள்கின்றன.
– ஒரு உலோகக் கனிமம் பிளாஜிஸ்தானோடு சேரும்போது உலோகம் கிடைக்கிறது. உலோகத்திலிருந்து பிளாஜிஸ்தான் வெளியேறும்போது அது துருப்பிடிக்கிறது.
இவ்வாறு பல்வேறு இயற்கை நிகழ்வுகளுக்கு இந்தக் கோட்பாடு விளக்கம் கூறியது.
ஆனால், உலோகங்கள் துருப்பிடிக்கும்போது அவற்றின் நிறை அதிகரித்தது. பிளாஜிஸ்தான் வெளியேறினால் எடை குறையத்தானே வேண்டும்? கார்பன் டை ஆக்சைடைக் கண்டுபிடித்த ஜோசப் பிளாக் போன்றவர்கள் இந்த முரண்நிலையை பதிவு செய்தனர். ஆனால், அவர்கள் பிளாஜிஸ்தான் கோட்பாட்டைக் கைவிட்டுவிடவில்லை. இன்னும் சிலர், பிளாஜிஸ்தானுக்கு எதிர்மறை எடை உள்ளது என்று முன்மொழிந்தனர். எதிர்மறை எடை கொண்ட பிளாஜிஸ்தான் ஓர் எரியும் பொருளிலிருந்து வெளியேறும்போது அந்தப் பொருளின் எடை அதிகரிக்கிறது என்று விளக்கினர்.
– 1766 ஆம் ஆண்டில் ஹென்ரி கேவண்டிஷ் உடனே எரியக் கூடிய வாயுவை (ஹைட்ரஜன்) கண்டுபிடித்தார். பிளாஜிஸ்தான் கோட்பாட்டாளர்கள் இதனை தூய, கட்டற்ற பிளாஜிஸ்தான் என்று அழைத்தனர். அது வெடிப்புடன் எரிவதால் அவ்வாறு கூறினர்.
– 1772 இல் டேனியல் ரூதர்ஃபோர்ட் பிளாஜிஸ்தான் நிரம்பிய வாயுவை (நைட்ரஜன்) பிரித்தெடுத்தார். அதில் பொருட்கள் எரிவதில்லை, உயிரினங்கள் வாழ முடியவில்லை. இவை பிளாஜிஸ்தான் கோட்பாட்டுக்கு வலு சேர்த்தன.
ஆனால், பல்வேறு முட்டுக்கொடுப்புகள் மூலம்தான் பிளாஜிஸ்தான் கோட்பாடு நிலைகொண்டிருந்தது. அதன் மீதான இறுதி அடி விரைவில் விழுந்தது.
1774 இல், ஜோசப் பிரீஸ்ட்லி (1733-1804) மெர்குரிக் ஆக்சைடை, ஒரு குவியாடியைப் பயன்படுத்தி சூடுபடுத்தினார். அதிலிருந்து வந்த வாயுவில் மெழுகுவர்த்தி பிராகாசமாக எரிந்தது. எலி ஒன்று அதிக நேரம் வாழ்ந்தது. இதனை அவர் “பிளாஜிஸ்தான் நீக்கப்பட்ட காற்று” என்று அழைத்தார். அதாவது இந்தக் காற்றில் கூடுதல் பிளாஜிஸ்தான் இணைய முடிகிறது. அவர் ஆக்சிஜனைக் கண்டுபிடித்திருந்தார். ஆனால், அதற்கு பிளாஜிஸ்தான் சட்டகத்தின்படி விளக்கம் அளித்தார்.
ஆக்சிஜன் புரட்சி
கார்ல் வில்ஹெல்ம் ஷீல், பிரீஸ்ட்லிக்கு இணையாக தற்சார்பாக அதே வாயுவைத் தயாரித்தார். அதனை “நெருப்புக் காற்று” என்று அழைத்தார்.
1783 ஆம் ஆண்டில் அந்துவான் லவாய்சியே (1743-1794) என்ற ஆய்வாளர், ஓர் உலோகம் துருப்பிடிக்கும்போது அதிகரிக்கும் எடையும் அதைச் சுற்றியுள்ள காற்று இழக்கும் எடையும் சமமாக இருப்பதை துல்லியமான அளவீடுகள் மூலம் காட்டினார். அதாவது, ஏற்கனவே கிடைத்திருந்த தகவல்களைப் பற்றிய கோட்பாட்டை உருவாக்குவதற்கு புதிய தரவுகளை அளவீடுகள் மூலம் பெற்றார். பிரீஸ்ட்லியின் பிளாஜிஸ்தான் நீக்கப்பட்ட காற்றை, பிளாஜிஸ்தான் இல்லாத காற்று என்று விளக்காமல், ஒரு பொருள் எரியும் போது அதனுடன் இணையும் ஒரு புதிய தனிமமாக அடையாளம் கண்டார். அதற்கு ஆக்சிஜன் என்று பெயர் சூட்டினார்.
எரிதல் என்பது பிளாஜிஸ்தான் வெளியேறுவது அல்ல, ஆக்சிஜன் பொருளுடன் இணைவது என்ற கோட்பாட்டை அவர் உருவாக்கினார். “உடனே எரியும் காற்று” (ஹைட்ரஜன்), பிளாஜிஸ்தான் நீக்கப்பட்ட காற்றுடன் (ஆக்சிஜன்) எரியும்போது தண்ணீர் கிடைக்கிறது என்று 1783 இல் மெய்ப்பித்தார். தண்ணீர் ஒரு தனிமம் அல்ல ஒரு சேர்மம். “தண்ணீர் ஒரு தனிமம்” என்பதையும் “ஹைட்ரஜன் தூய பிளாஜிஸ்தான்” என்பதையும் இது மறுதலித்தது.
வேதிச் சேர்மங்களின் சேர்க்கையின் அடிப்படையில் அவற்றுக்குப் பெயரிடும் முறை உருவாக்கப்பட்டது. இது ஆக்சிஜன் கோட்பாட்டை நிலைநாட்டி, பழைய பிளாஜிஸ்தான் கோட்பாட்டை குப்பைக் கூடைக்குள் வீசியது. இதிலிருந்து தொடங்கி தனிமங்கள் பற்றிய புரிதலும் டிமிட்ரி மெண்டலீவின் தனிம வரிசை அட்டவணையும் (1869) உருவாகின. லவாய்சியரின் கோட்பாட்டாக்கம் நவீன வேதியியலுக்கு அடித்தளம் வழங்கியது.
அளவுரீதியான அளக்கும் முறைகள், நிறை காக்கப்படுதல், முறையான பெயர்சூட்டும் முறை முதலியவற்றின் மீதான லவாய்சியரின் கவனத்தின் முன் பண்பு அடிப்படையிலான பிளாஜிஸ்தான் கோட்பாடு வீழ்ச்சியடைந்தது.
பழைய கோட்பாடு திருத்தப்படவில்லை, அது தலைகீழாக்கப்பட்டது.
ஒரு நல்ல கோட்பாடு என்பது சில விவரங்களை மட்டும் விளக்குவதில்லை, அது அனைத்துத் தரவுகளுடனும் இணக்கமாகப் பொருந்த வேண்டும். புதிய தரவுகள் வரும்போது அவற்றை முரணின்றி விளக்க முடிய வேண்டும்.
மூலதனம் இரண்டாம் தொகுதியின் முன்னுரையில் (1884) எங்கெல்ஸ் மேதைமையுடன் விளக்குவது போல, பிளாஜிஸ்தான் கோட்பாடு ஆக்சிஜன் கோட்பாட்டுக்கு வழிவிட்டது அறிவியலில் நிகழ்ந்த இயக்கவியல் மறுதலிப்பின் ஒரு முதன்மையான செயல் இது. ஒரு பழைய கருத்தாக்கம் தனது பயன்பாட்டை இழந்து தடையாக மாறுகிறது. அதன் மறுதலிப்பு (ஆக்சிஜன் கோட்பாடு), அதை விடச்சிறந்த இன்னும் சிக்கலான புரிதலுக்கு வழிவகுக்கிறது. புதிய சான்றுகள் கோரும்போது, நமக்கு நெருக்கமான ஒரு கோட்பாட்டுச் சட்டகத்தைக் கைவிட்டு புதிய கோட்பாட்டை உருவாக்கும் துணிச்சலின் அவசியத்தை அது நமக்குக் கற்பிக்கிறது.
மூன்றாவது புரட்சி – உயிரின் மறைபொருள் : ஒரு கட்டமைப்பைக் கண்டறிவதற்கான போட்டி
நாம் எடுத்துக் கொள்ளும் மூன்றாவது புரட்சி இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்தது. மரபணு (ஜீன்) இருக்கிறது, அது உயிரினங்களின் மரபுவழிப் பண்புகளை சந்ததிகளுக்குக் கடத்துகிறது என்பது ஏற்கனவே தெரிந்திருந்தது, ஆனால் அதன் கட்டமைப்பு என்ன என்பது மறைபொருளாக இருந்தது. அது ஒரு புரதமா அல்லது டி.என்.ஏவா? அதன் கட்டமைப்பைக் கண்டறிவதற்கான போட்டி ஒரு திகில் கதையை ஒத்த கோட்பாட்டாக்கமாக இருந்தது.
த டபிள் ஹெலிக்ஸ் என்ற தனது விறுவிறுப்பான புத்தகத்தில் ஜேம்ஸ் வாட்சன் (1928-2025) அது நிகழ்ந்த கதையை விவரிக்கிறார். அது ஒழுங்கான முறையான அணிவகுப்பாக நடக்கவில்லை. உள்ளுணர்வையும், மாதிரிகளை அமைப்பதையும், முக்கியமான தரவுகளையும் சார்ந்திருந்தது.
1950 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் ஜேம்ஸ் வாட்சன் இங்கிலாந்தின் கேவண்டிஷ் ஆய்வகத்தில் டி.என்.ஏ மூலக்கூறின் கட்டமைவைக் கண்டறியும் முயற்சியில் இறங்கும் போது, அமெரிக்காவில் லினஸ் பாலிங் (1901-1994), புரத மூலக்கூறின் திருகு சுழல் கட்டமைப்பைக் கண்டறிந்திருந்தார். அதற்கு, விளையாட்டுப் பந்துகளைப் போன்ற அளவிலான மூலக்கூறு மாதிரிகளைக் கொண்டு பொருத்திப் பார்க்கும் உத்தியை (model building) பயன்படுத்தியிருந்தார். டி.என்.ஏவின் கட்டமைப்பைக் கண்டுபிடிக்கவும் அதே உத்தியைப் பின்பற்றலாம் என்று ஜேம்ஸ் வாட்சனும் அவரது சக ஆய்வாளர் பிரான்சிஸ் கிர்க்கும் (1916-2004) கருதினர்.
இதில் முதன்மையான கூறு இங்கிலாந்தில் லண்டனில் இருந்த கிங்ஸ் கல்லூரியின் ஆய்வகத்தில் நடந்த செய்முறை பரிசோதனைகளில் இருந்தது. செய்முறை அறிவியல் வல்லுநர் ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின் எடுத்த எக்ஸ்-கதிர் சிதறல் படம் 51, டி.என்.ஏ மூலக்கூறுகள் படிகமாக்கப்படும் தன்மை கொண்டவை என்பதைக் காட்டியது. வாட்சனும் கிரிக்கும் தாமே பரிசோதனையை மேற்கொள்ளவில்லை. ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின் (1920-1958) செய்த சோதனையில் கிடைத்த படத்திற்கு அவர்கள் பொருள் கூற முற்பட்டனர். ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின் மாதிரி அமைக்கும் முயற்சியை ஏற்றுக் கொள்ளவில்லை, எக்ஸ் ரே சிதறடித்தல் மூலமாகவே டி.என்.ஏவின் கட்டமைப்பைக் கண்டுபிடித்து விடலாம் என்று கருதினார்.
ஜேம்ஸ் வாட்சனும் பிரான்சிஸ் கிர்க்கும், ரோசாலிண்ட் பிராங்க்ளினின் பரிசோதனை வழங்கிய நுண்ணறிவை, லினஸ் பாலிங் பயன்படுத்திய மாதிரி அமைப்பு அணுகுமுறையுடன் இணைத்தனர்.
– டி.என்.ஏ இரட்டைத் திருகு சுழல் மூலக்கூறு வடிவத்தைக் கொண்டது என்ற கருதுகோளுக்கு ரோசாலிண்ட் ஃபிராங்கஃளினின் எக்ஸ் ரே படம் அடிப்படையாக இருந்தது.
– டி.என்.ஏ பற்றிய வேதிப் பகுப்பாய்வுகளில் அடினைன் என்ற காரம் எப்போதுமே தையமின் என்ற காரத்தின் அளவுக்குச் சமமாக இருந்தது, குவானைன் என்ற காரத்தின் அளவு சைட்டோசின் என்ற காரத்தின் அளவுக்குச் சமமாக இருந்தது என்று கொலம்பியா பல்கலைக் கழகத்தில் எர்வின் சார்காஃப் கண்டறிந்திருந்தார்
– கூடுதலாக, டி ஆக்சிரிபோஸ் என்ற சர்க்கரை-பாஸ்பேட் முதுகெலும்பு ஒன்று டி.என்.ஏ மூலக்கூறில் உள்ளது என்பதும் கண்டறியப்பட்டிருந்தது.
இந்தத் தகவல்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, அனைத்துடனும் ஒத்துப் போகும் ஒரு மாதிரி வடிவத்தை உருவாக்க வேண்டியிருந்தது. அதற்கு ஜேம்ஸ் வாட்சனும் பிரான்சிஸ் கிர்க்கும் மாதிரி அமைக்கும் உத்தியைப் பயன்படுத்தினர். அதற்கு பாஸ்ஃபேட், டி ஆக்சி ரிபோஸ் சர்க்கரை, நான்கு நைட்ரஜனைக் கொண்ட காரங்கள் எனப் பல்வேறு மூலக்கூறுகளின் (பந்து போன்ற வடிவிலான) மாதிரிகளைச் செய்து வாங்கி அவற்றை உலோகக் கம்பிகளைப் பயன்படுத்தி (வேதிப் பிணைப்புகள்) பொருத்திப் பார்த்தனர். அவர்களது முயற்சியின் மூலம்
1. பாஸ்ஃபேட்-சர்க்கரை முதுகெலும்பு வெளிப்புறத்தில் இருக்க வேண்டும் (ரோசாலிண்ட் ஃபிராங்க்ளினின் படம் இதைக் காட்டியிருந்தது)
2. அடினைன்-தையமின், குவானைன்-சைட்டோசின் என்ற காரங்களின் இணைகள் எப்போதும் பிணைந்திருக்க வேண்டும்.
3. டி.என்.ஏ மூலக்கூறில் இடம்பெறும் தண்ணீர் மூலக்கூறுகளின் அளவுடன் பொருந்த வேண்டும்
என்ற மாதிரி உருவாக்கப்பட்டது.
இது ஒரு கண்டுபிடிப்பு மட்டுமில்லை. இது ஒரு கோட்பாட்டுப் புத்தாக்கம். இந்தக் கட்டமைப்பே உயிரினங்களின் பண்புகள் எவ்வாறு படியெடுக்கப்படுகின்றன என்பதை விளக்கியது. மிகத் தீர்க்கமான கோட்பாட்டாக்கத்துக்கான எடுத்துக்காட்டு இது. சரியான மாதிரி உருவாக்கம் உயிரின் தர்க்கத்தையே வெளிப்படுத்தியது.
இயற்கை அறிவியலில் புறநிலை தரவுகள், ஆய்வகப் பரிசோதனை முடிவுகள் இவற்றை இணைத்து ஒரு சரியான கோட்பாட்டை உருவாக்குவதற்கான முயற்சிகளின் மூன்று வகைகள் பற்றிப் பார்த்தோம்.
1. கெப்ளரில் இருந்து நியூட்டன் வரை : உண்மையான கோட்பாட்டு உடைப்புகள் குறிப்பான கோலங்களை ஒன்றிணைத்து, கணிதவியல் வடிவம் கொடுத்து உலகளாவிய கோட்பாடுகளை வெளிப்படுத்துகின்றன.
2. பிளாஜிஸ்தானில் இருந்து ஆக்சிஜனுக்கு: கோட்பாடுகள் பயனுள்ளவையாகவும் கோர்வையாகவும் இருக்கும்போதே தவறாகப் போய் விடலாம். முன்னேற்றத்தைத் தொடர்வதற்கு அவற்றை மறுதலித்து கடந்து செல்வது தேவையாக உள்ளது.
3. இரட்டைத் திருகு சுழல்: பல்வகை தரவுகளை தொகுத்து ஒரு கட்டமைப்பை வெளிப்படுத்துவது அதன் செயல்பாட்டைப் புரிய வைக்கிறது.
இத்தகைய கோட்பாட்டுப் புரட்சி இயற்கை அறிவியலுக்கு மட்டும் பொருந்தவில்லை. சமூகம் பற்றிய புறநிலை சார்ந்த கோட்பாட்டக்கத்துக்கும் இது பொருந்துகிறது. நான்காவது கோட்பாட்டுப் புரட்சியாக முதலாளித்துவ சமூகங்களில் உபரி-மதிப்பு (இலாபம்) பற்றியக் கோட்பாட்டாக்கத்தைப் பார்க்கலாம்.
உபரி-மதிப்புக் கோட்பாடு
கார்ல் மார்க்ஸ் (1818-1883) உபரி மதிப்புக் கோட்பாட்டை எவ்வாறு உருவாக்கினார், அது சமூக வளர்ச்சியிலும் வர்க்கப் போராட்டத்திலும் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை அவரது சக தோழரான பிரெடரிக் எங்கெல்ஸ் (1820-1895) மூலதனம் இரண்டாம் தொகுதிக்கான முன்னுரையில் விளக்குகிறார். (பக்கம் 20 முதல் 25, சில பகுதிகள் மட்டும்)
“உபரி-மதிப்பு பற்றி மார்க்ஸ் புதிதாய்க் கூறியது என்ன? நாகரிக நாடுகளில் எல்லாம் மார்க்சின் உபரி-மதிப்புக் கோட்பாடு விண்ணதிர வந்து விழும் இடியைப் போல் கதிகலக்கம் உண்டாக்க, மார்க்சுக்கு முற்பட்ட சோசலிஸ்டுகள் அனைவரது கோட்பாடுகளும் தடமில்லாமலே பிசுபிசுத்துப் போனது எப்படி?
உபரி-மதிப்புக் கோட்பாட்டில் தமக்கு முற்பட்டவர்களோடு மார்க்ஸ் கொண்டுள்ள உறவு, பிரீஸ்ட்லியோடும் ஷீலோடும் லவாசியே கொண்டுள்ள அதே உறவுதான். உற்பத்திப் பொருட்களின் மதிப்பில், நாம் இப்போது உபரி-மதிப்பு என்றழைக்கிற பகுதி இருக்கிறது என்பது மார்க்சுக்கு நெடுங்காலத்துக்கு முன்னரே ஆய்ந்தறியப்பட்டிருந்தது. அது எதனாலானது என்பதும் ஓரளவு தெளிவாகவே கூறப்பட்டிருந்தது. அதாவது உழைப்பின் உற்பத்திப் பொருளைத் தனதாக்கிக் கொள்பவர் சமதையேதும் தராமல் எதை எடுத்துக் கொள்கிறாரோ அந்த உழைப்பின் பலனால் அது ஆனது. ஆனால், இதற்கு மேல் ஒன்றும் இல்லை….
அரங்கிலே இப்போது மார்க்ஸ் தோன்றினார். தமக்கு முற்பட்டவர்கள் அனைவரது கருத்துக்கும் நேர்மாறான கருத்தை முன்வைத்தார். அவர்கள் எதைத் தீர்வு என்று கருதினார்களோ அதனை ஒரு சிக்கலாகவே கருதினார் மார்க்ஸ். இங்கே கருதுதலில் இருப்பது பிளாஜிஸ்தான் கலப்பற்ற காற்றோ தீக்காற்றோ அல்ல, ஆக்சிஜன்தான் என்பதைக் கண்டார்….
இந்த உண்மையைத் தொடக்கமாகக் கொண்டு, வழக்கிலிருந்த பொருளாதாரக் கருத்தினங்கள் யாவற்றையும் ஆய்வுக்குட்படுத்தினார். ஆக்சிஜனைத் தொடக்கமாகக் கொண்டு, வழக்கிலிருந்த பிளாஜிஸ்தான் வேதிக் கருத்தினங்களை லவாசியர் ஆய்வு செய்தாரே, அதே போல. உபரி-மதிப்பு என்பது என்ன என்று புரிந்துகொள்ளும் பொருட்டு, மதிப்பு என்பது என்ன என்று மார்க்ஸ் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது.
ஆகவே அவர் உழைப்புக்கு உரித்தான மதிப்பு-உற்பத்தித் தன்மையினை அலசி ஆராய்ந்தார். எவ்வகைப்பட்ட உழைப்பானது மதிப்பை உற்பத்தி செய்கிறது, ஏன் உற்பத்தி செய்கிறது, எப்படி உற்பத்தி செய்கிறது என்பதையெல்லாம் மார்க்ஸ்தான் முதன்முதல் ஆய்ந்தறிந்தவர். மதிப்பானது இவ்வகைப்பட்ட இறுகிய உழைப்பே தவிர வேறு எதுவுமல்ல என்ற உண்மையை அவர் தெளிவுபடுத்தினார்.
மார்க்ஸ் இதன்பின் பணத்துடன் சரக்குகளுக்கு உள்ள உறவினை ஆராய்ந்தார். மதிப்புடையவையாக இருத்தல் சரக்குகளது உள்ளார்ந்த தன்மையாகும் என்பதால், சரக்குகளும் சரக்குப் பரிவர்த்தனையும் எப்படி பணத்துக்கும் சரக்குக்குமிடையே முரண் நிலையை ஏற்படுத்துகின்றன என்று விளக்கிக் கூறினார். இந்த அடிப்படையில் அவர் வகுத்தளித்த பணம் பற்றிய கோட்பாடு பணத்தைப் பற்றிய முழுமையான முதலாவது கோட்பாடாகும்.
பணம் மூலதனமாக உருமாறுவதைப் பகுத்தாய்ந்து, இம்மாற்றம் உழைப்புச் சக்தியின் வாங்கலையும் விற்றலையும் அடிப்படையாகக் கொண்டதென்பதை அவர் நிலைநாட்டினார். உழைப்புக்குப் பதில் உழைப்புச் சக்தியை மதிப்பு-உற்பத்தித் தன்மை வாய்ந்ததாகக் கொண்டார்.
மூலதனத்தை மாறா-மூலதனமாகவும் மாறும்-மூலதனமாகவும் வேறுபடுத்திக் காட்டியதன் மூலம், மார்க்ஸ் உபரி-மதிப்பு உண்மையில் எவ்வாறு உருவாகிறது என்பதை அதன் மிக நுண்ணிய விவரங்களும் புலப்படும்படி முதன்முதலாய் விவரித்து இந்த நிகழ்முறைக்கு விளக்கமளிக்க முடிந்தது. அவருக்கு முற்பட்டோர் யாராலும் இதனைச் செய்ய முடியவில்லை. மூலதனத்தினுள்ளேயே இப்படி ஒரு வேறுபாடு நிலவுவதை இவ்விதம் மார்க்ஸ் நிலைநாட்டினார்.
மேலும் தொடர்ந்து உபரி-மதிப்பை ஆராய்கையில் மார்க்ஸ் அதன் இரு வடிவங்களான அறுதி உபரி-மதிப்பையும் ஒப்பீட்டு உபரி-மதிப்பையும் கண்டறிந்து கூறுகிறார். முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் வளர்ச்சி வரலாற்றில் அவை வெவ்வேறான, ஆனால் ஒவ்வொன்றும் தீர்மானகரமான பங்காற்றியுள்ளதைப் புலப்படுத்திக் காட்டுகிறார். உபரி-மதிப்பை அடிப்படையாகக் கொண்டு மார்க்ஸ் கூலியைப் பற்றி நமக்குத் தெரிந்தவற்றுள் அறிவார்ந்த முதலாவது கோட்பாட்டை வகுத்தளித்தார்; முதலாளித்துவத் திரட்டல் நடந்தேறும் வரலாற்றின் உருவரையையும் வரலாற்று வழிப்பட்ட அதன் போக்கு என்ன என்பதன் விளக்கத்தையும் முதன்முதலாய் வரைந்தளித்தார்.
[மார்க்சுக்கு முந்தைய உழைப்பு மதிப்புக் கோட்பாடான] ரிக்கார்டிய மரபின் தோல்விக்குக் காரணமாய் இருந்த உழைப்பின் மதிப்பு என்ற சிக்கலுக்கும், மூலதனங்களுக்கு சம இலாபவீதம் என்ற சிக்கலுக்கும் தனது உபரி-மதிப்புக் கோட்பாட்டின் அடிப்படையில் மார்க்ஸ் தீர்வு கொண்டார்.”
அறிவின் இயக்கவியல் – இந்தியச் சவால்
தன்னுடைய இயற்கையில் இயக்கவியல் என்ற நூலில் எங்கெல்ஸ் இந்த நிகழ்முறையை விவரிக்கிறார். அறிவியல் என்பது மனித சிந்தனையின் உள்ளார்ந்த, தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும் இயக்கம். அது இயற்கையின் இயக்கவியல் நகர்வை பிரதிபலிக்கிறது. தரவுகளை திரட்டுவதோடு அது நின்று விடுவதில்லை. அது சட்டகங்களை மறுதலித்து மேல் நோக்கி நகர்கிறது. ஒவ்வொன்றும் முந்தைய சட்டகத்தின் முரண்பாடுகளில் இருந்து மேலெழுகிறது.
இந்த இடத்தில் இந்தியாவைப் பற்றி ஒரு கேள்வி நம் முன் எழுகிறது. உலகைப் புரட்டிப் போடும் கோட்பாட்டாக்க சாதனை மரபு நம்மிடம் உள்ளதா?
பண்டைய இந்தியாவில் இலக்கணத்திலும், கணிதத்திலும் மருத்துவத்திலும் அறிவார்ந்த கண்டறிதல்களையும் அமைப்பாக்கங்களையும் நடைமுறை புத்தாக்கங்களையும் கண்டிருக்கிறோம். ஐரோப்பிய அறிவியல் புரட்சி தொடங்கி இருபதாம் நூற்றாண்டு வரையிலான 400 ஆண்டுகளில் இயற்கை அறிவியலில் இந்தியாவில் வளர்த்தெடுக்கப்பட்ட, உலகைப் புரட்டிப் போடும் கோட்பாட்டுச் சட்டகங்கள் அரிதாகவே உள்ளன.
இருபதாம் நூற்றாண்டின் மகத்தான அறிவியலாளர்களான சர். சி. வி இராமன் (இராமன் விளைவு), சுப்பிரமணியன் சந்திரசேகர் (சந்திரசேகர் விளைவு), சத்தியேந்திர நாத் போஸ் (இயற்பியல்) போன்றவர்கள் நோபல் பரிசு வென்ற கோட்பாட்டுத் திறனை வெளிப்படுத்தினார்கள். ஆனால், அவர்களில் பலர் தமது முதன்மையான அறிவியல் பணிகளை அயல்நாட்டு கல்விப்புல சூழல்களிலேயே நிகழ்த்தினர்.
சிக்கல் அறிவுக்கூர்மை தொடர்பானது மட்டும் இல்லை. அது சமூகத்தின் அறிவியல் மரபையும் மனப்போக்கையும் பொறுத்தது. அடிப்படைக் கோட்பாட்டை நோக்கிச் செலுத்தும் குறிப்பான, உடைத்துப் போடும், பொதுமைப்படுத்தும், பல நேரங்களில் “பயனற்ற” தேடுதலை நாம் ஊக்குவிக்கிறோமா?
பார்ப்பனிய சமூக அமைப்பின் அறிவு மறுப்பியல், தரவுகள் அற்ற வெற்றுக் கோட்பாட்டாக்க சோம்பேறிகளை ஒரு புறமும், தரவுகளை மட்டும் திரட்டும் கோட்பாட்டுப் பயிற்சியற்ற செயல்பாட்டாளர்களை மறுபுறமும் வளர்த்து வருகிறது. காலனி ஆதிக்கம் பயன்பாட்டையும் பாரம்பரியத்தையும் விவரிப்பையும் மட்டும் ஊக்குவித்து தீவிரமான கோட்பாட்டு உடைப்புகளுக்கான உந்துதல்களை மறுத்தது.
சமூக அறிவியலில், இந்திய வரலாற்றிலிருந்தும் சமூகப் புறநிலை எதார்த்தங்களில் இருந்தும் புதிய கருத்தாக்கப் பணி செய்தவர் அண்ணல் அம்பேத்கர். இந்தியாவில் நிலவும் சாதிய ஏற்றத் தாழ்வு, தீண்டாமை, பார்ப்பன ஆதிக்கம், அறிவு மறுப்பு, சமூகத் தேக்கம் இவற்றுக்கான வரலாற்று வேர்களையும் சமூகத் தரவுகளையும் தொகுத்து ஒரு கோட்பாட்டாக்கத்தை நோக்கிச் செலுத்தியவர் அவர்.
இத்தகைய கோட்பாட்டாக்கப் பணியை வளர்த்தெடுப்பது எவ்வாறு?
அடுத்த நியூட்டன், அடுத்த லவாய்சியே, அடுத்த வாட்சன்-கிரிக், அடுத்த அம்பேத்கர் தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவில் இருந்து வர வேண்டும் என்றால்,
– “என்ன” என்பதை விட “ஏன்” என்ற கேள்விக்கு மதிப்பளிக்க வேண்டும். அடிப்படையான, தேடலுடன் கூடிய கேள்விகளுக்கு ஊக்கமளிக்க வேண்டும். அவற்றுக்கு நேரடிப் பயன் இல்லாமல் கூட போகலாம்.
– கருத்தாக்கங்களின் வரலாற்றைக் கற்பிக்க வேண்டும். இறுதி முடிவுகளை மட்டும் கற்பித்தல் கூடாது. கோட்பாடுகள் எவ்வாறு பிறந்தன? எவ்வாறு போராடுகின்றன? எவ்வாறு ஒதுக்கித் தள்ளப்படுகின்றன என்று கற்பிக்க வேண்டும்.
– நமது ஆய்வகங்களிலும் பல்கலைக் கழகங்களிலும் அரசியல் வகுப்புகளிலும் புறநிலைத் தரவுகளில் இருந்து பொதுமைப்படுத்தும் சிந்தனைக்கு ஊக்கமளிக்க வேண்டும்.
– தவறு செய்வதற்கு தயங்காத மனநிலையை ஊக்குவிக்க வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு பிளாஜிஸ்தான் கோட்பாடும் ஓர் ஆக்சிஜன் கோட்பாட்டுக்கு பாதை சமைக்கிறது.
அறிவியல் என்பது இயற்கையைப் பட்டியலிட்டு காட்டுவது மட்டுமில்லை. அது இந்தப் பேரண்டத்துடன் மனிதர்கள் நடத்தும் மகத்தான, தன்னைத் தானே சரிசெய்து கொண்டு நகரும் உரையாடல். இந்த உரையாடலின் மிக உயர்ந்த மட்டத்தில் இணைவதற்கு அதன் மிக ஆற்றல் வாய்ந்த மொழியில் பேசக் கற்க வேண்டும். அதுதான் துணிச்சல் மிக்க, கோர்வையான, புரட்சிகரக் கோட்பாட்டின் மொழி.