பதவி அரசியல் பாழ் செய்யும்! கொள்கை அரசியலே பகைவெல்லும்!

சனவரி 29 ஈகி முத்துக்குமாரின் 17 ஆம் ஆண்டு நினைவு நாள்
பதவி அரசியல் பாழ் செய்யும்! கொள்கை அரசியலே பகைவெல்லும்!
படையெடுக்கும் பாசிசத்திடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதே உடனடி கடமை!
2009 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனவழிப்புப் போர் ஒன்றை சிங்கள பெளத்த பேரினவாத இலங்கை அரசு நடத்திக் கொண்டிருந்த வேளையில்….
ஈழத்தில் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என வகைதொகையின்றி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில்..
அதை பார்த்து தமிழகம் கண்ணீரில் மூழ்கிக் கிடந்த போது…
பதவி அரசியலில் கொள்கையைப் பலியிட்ட கட்சிகள் அடையாளப் போராட்டங்களில் மூழ்கி கிடந்த போது..
தொலைக்காட்சிப் பெட்டிகளிலும் சினிமா கவர்ச்சியிலும் டாஸ்மாக் போதையிலும் மூழ்கி கிடக்கும் தமிழர்களிடம் இன உணர்ச்சி செத்துவிட்டது என்றெண்ணி ஆளும் வகுப்பார் நமட்டுச் சிரிப்பில் திளைத்திருந்த போது..
2009 சனவரி 29 அன்று தூத்துக்குடியைச் சேர்ந்த 26 அகவை இளைஞன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் தீக்குளித்தான்.
அவன் தான் முத்துக்குமார்!
உறங்கிக் கிடந்த தமிழினம் விழித்துக் கொண்டது. தன் நிலையை அறிந்து கொண்டது. ஆனால், போராட்டங்கள் வஞ்சகமாய் ஒடுக்கப்பட்டன. இறுதியில் 1,46,679 தமிழர்கள் கொலை செய்யப்பட்டதோடு முள்ளிவாய்க்காலில் குருதி வெள்ளம் பெருக்கெடுத்தோடியதோடு முடிவுக்கு வந்தது இனவழிப்புப் போர்!
காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் காத்திருக்கிறார்கள் உறவுகளுக்காகவும் நீதிக்காகவும்!
தமிழர் தாயகத்தில் சிங்கள குடியேற்றங்கள் தொடர்கின்றன..பெளத்த விகாரைகள் புதிது புதிதாய் முளைக்கின்றன…. படைக் குவிப்பு குறையவில்லை!
கட்டமைப்பு வகைப்பட்ட இனவழிப்பை கட்டவிழ்த்து விட்டுள்ளது சிங்கள பெளத்த பேரினவாதம்!
இன்றளவும் இனவழிப்புக்கு குற்றவியல் நீதி கோரி பன்னாட்டுப் புலனாய்வு வேண்டும் என்கிறோம்!
ஈடுசெய் நீதிக்காக ஈழத் தமிழரிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதே நமது கோரிக்கை!
தமிழ்நாட்டிலோ அவன் மூட்டிய பெருநெருப்பு போராட்டப் புயலாய் சுழற்றி அடித்துக் கொண்டிருந்தது! மூவர் தூக்குக்கு எதிராக…கூடங்குளம் அணு உலைக்கு எதிராக….இன அழிப்புக்கு நீதி கோரி… மீத்தேன் – ஹைட்ரோ கார்பன் பேரழிவு திட்டங்களுக்கு எதிராக…சல்லிக்கட்டு தடைக்கு எதிராக… ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக..
இவ்வேளையில்தான், 2014 ஆம் ஆண்டு பாசக தில்லியில் அரியணை ஏறியது! வடக்கில் இருந்து பாசிச புயல் தென்திசை நோக்கி வீசத் தொடங்கியது…
ஒரு முறை, இரு முறை, மூன்றாவது முறை என தொடரும் பாசகவின் ஆட்சி…. தமிழர் தலைவிதியை இந்தி பேசும் மக்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த 12 ஆண்டுகளாய் புதிய நிலை! நாம் கனவிலும் எண்ணிப் பார்க்காத நிலை!
உரிமைகள் போதாதென்று போர்க்குரல் எழுப்பிய நிலை போய்…இருக்கும் உரிமைகளைத் தக்க வைக்க முடியுமா? என்ற புதிய நிலை..
பழைய பகைவர்களைவிட ஒருபடி மேலே போய்
தமிழ்நாடா? தமிழகமா?
முருகனா? சிக்கந்தரா?
திராவிடமா? தமிழா?
வள்ளலாரா? பெரியாரா?
வட தமிழ்நாடா? கொங்கு நாடா?
என்று பட்டிமன்றம் நடத்தும் நிலையை புதுப்பகை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா இந்துராஷ்டிரமாக மாறிக் கொண்டிருக்கிறது!
எனவே, புதிய நிலைமையை உள்வாங்கி..புதிய உத்தியை வகுக்கும் புத்தியை கோருகிறது காலம்! வழமை போலவே தமிழர்களோ சாதி, சமய அரசியலிலும் வாய்ச்சொல் வீரப் பேச்சுகளிலும் மூழ்கிக் கிடக்கின்றார்!
வலியறிந்து, காலம் உணர்ந்து, இடனறிந்து மேற்செல்லப் பணித்த வள்ளுவனின் பாடத்தை முள்ளிவாய்க்காலுக்கு பின்னும் போற்ற மறுக்கும் அடிமுட்டாள்தனம்!
பதவி அதிகாரத்தில் இருக்கும் முதல் பகைக்கு எதிராய் தமிழர் ஒன்றுபட வேண்டிய தருணம்! பாசிச பாசகவை பதவியில் இருந்து இறக்காமல் ஆக்கமும் இல்லை, நமது வீழ்ச்சிக்கு தேக்கமும் இல்லை!
இருந்துணையான் ஆற்றல் இயையாது அதனால்
ஒருவனை முன்னே ஒழி – குறல் 861
ஒரே காலத்தில் இரண்டு பகைவரை எதிர்த்து நிற்கும் ஆற்றல் ஒருவனுக்கு இயலாது. ஆகையால், அவர்களில் ஒருவனை அழித்து முதலில் அழித்து, பிறகு மற்றவனை எதிர்கொள்ள வேண்டும்.
அறிவாயுதம் ஏந்துவோம்!