செளராஷ்டிரர்கள் மாநாட்டில் தமிழ் ஜெயவர்த்தனாவாக காட்சி தந்த சீமான்! – செந்தில்

அண்மையில் நடைபெற்ற செளராஷ்டிரர்கள் மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார். அதில், ”நீங்கள் யார், நாங்கள் யார்? என்று முதலில் வரையறுத்துக் கொள்வோம்” என்றார். ”யாரையும் நாங்கள் வந்தேறிகள் என்று சொல்லமாட்டோம்” என்று சொல்லி கணியன் பூங்குன்றனின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வரிகளை துணைக்கழைத்துக் கொண்டார். பிறகு ”எல்லா உரிமையும் உங்களுக்கு உண்டு. தலைமை மட்டும் எங்களிடம்தான். ஏனென்றால் எங்களுக்கு என்று வேறு நிலம் இல்லை” என்று சொல்லி முடித்தார். அங்கே கூடியிருந்த செளராஷ்டிரக்காரர்களும் சீமானின் ’மயக்கும்’ பேச்சுக்கு அவ்வப்போது கரவொலி எழுப்பி, வரவேற்பு தெரிவித்துக் கொண்டே இருந்தனர்.
”தலைமை நாங்கள் தான்” என்று சீமான் சொல்வது புதிய விசயம் அல்ல. ”எல்லோரும் வாழலாம், ஆனால் தமிழன்தான் ஆள வேண்டும். ”எல்லோரும் ஒன்றாக நிற்போம், நாங்கள் மட்டும் ஓரடி முன்னால் நிற்போம்” போன்ற சொற்றொடர்களை வடிவமைத்து பரப்பி வருவதுதான் நாதக. ஆயினும், செளராஷ்டிரா மாநாட்டில் போய் அந்த மக்களிடமே இப்படி சொல்வதன் மூலம் அவர் இந்த இனவாதக் கூற்றை மென்மேலும் இயல்பாக்கி வருவதுதான் நமக்கு மிகவும் கவலையளிக்கிறது. இந்த கட்டுரையை எழுதுவதற்கான உந்துதலும் அந்த கவலைதான்.
இந்தப் பேச்சு சிங்கள பெளத்த பேரினவாத வரலாற்றில் நடைபெற்ற ஒரு நிகழ்வை நினைவுபடுத்தியது. இலங்கை விடுதலை பெறுவதற்கு முன்பு 1944 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்த்தனாவால் அந்நாட்டு கவுன்சிலில் ஒரு சட்ட வரைவு முன்வைக்கப்பட்டது. அது மொழிக் கொள்கை தொடர்பானது. அதில் சிங்களத்தை மட்டுமே அலுவல் மொழியாக்க வேண்டும் என்றிருந்தது. அதற்கு அவர் எடுத்துவைத்த காரணம் பின்வருமாறு.
”இந்நாட்டில் சிங்களத்துடன் தமிழுக்கும் சம அந்தஸ்து கொடுக்கப்படுமேயானால் முழு உலகிலும் 30 இலட்சம் மக்களால் மட்டுமே பேசப்பட்டு வரும் சிங்களம் பெரும் இன்னலிற்குள்ளாகி, காலகதியில் அது முற்றாகவே அழிந்து போய்விடக் கூடும் என்ற பெரும் அச்சம் என்னிடமுள்ளது. நான்கு கோடி தமிழர்களால் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டுவரும் தமிழ் நூல்களின் செல்வாக்காலும் தமிழ்த் திரைப்படங்களும் தமிழ்க் கலாச்சாரமும் இந்நாட்டில் ஏற்படுத்திவரும் தாக்கங்களாலும் சிங்கள மொழியின் எதிர்காலம் முடிவு கட்டப்படுவதாய் அமைந்துவிடும் என நான் எண்ணுகிறேன்.”
அப்போது சற்றே நெகிழ்வுத் தன்மையோடு அவர் காணப்பட்டதால், அந்த சட்ட வரைவில் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டும் அலுவல் மொழியாக இருப்பது என்ற திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. பின்னர் 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் பொதுவில் சிங்களத் தரப்பும் முன்வைக்கும் ஏரணம் இங்கு கவனிக்கத்தக்கது. ”இவ்வளவு பெரிய உலகில் சிங்கள பெளத்தர்களுக்கு என்று ஒரே ஒரு இடம் இருக்கிறது. அதுதான் இலங்கை தீவு. எனவே, அத்தீவில் சிங்கள பெளத்தர்களே ஆட்சித் தலைமைக்கு வர வேண்டும், அப்படி வந்தால்தான் சிங்களத்தையும் பெளத்தத்தையும் பாதுகாக்க முடியும், ஏனைய இன மக்கள் யாவரும் இரண்டாம் நிலை குடிமக்களாக இருக்க வேண்டும். அதாவது சிங்கள பெளத்தர்களுக்கு இருக்கும் உரிமை சிங்களக் கிறித்தவர்களுக்கோ முஸ்லிம்களுக்கோ மலையகத் தமிழர்களுக்கோ வடக்குகிழக்கு வாழ் ஈழத் தமிழர்களுக்கோ கிடையாது.” என்ற ஏரணத்தை முன்வைத்து அந்நாட்டை அழிவின் பாதையில் நடத்திச் செல்கின்றனர்.
இதை மறுத்து, தாம் அம்மண்ணின் மக்கள் என்று சொல்லித்தான் ஈழத் தமிழர்கள் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தனர். 150 ஆண்டுகளுக்கு முன்பு அத்தீவுக்கு தோட்டத் தொழிலாளர்களாக கொண்டு செல்லப்பட்ட மலையகத் தமிழர்களை அம்மண்ணின் மைந்தர்கள் என்று கருதிப் பார்க்காமல், அவர்களது குடியுரிமையைப் பறித்து இலங்கைத் தீவில் இருந்து ஒரு பகுதியினரை இந்தியாவுக்கு அனுப்பி வைத்த சிங்கள பெளத்தப் பேரினவாதத்தை இந்த நிமிடம் வரை நாம் விமர்சித்துக் கொண்டிருக்கிறோம்.
ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் சிங்களர்களும் வைக்கும் அதே வாதத்தைத்தான் சீமானும் சொல்கிறார். அதாவது தமிழர்களுக்கு தமிழ்நாட்டை விட்டால் வேறு நிலம் இல்லை என்றும் அதனால் தமிழ்நாட்டில் வாழக்கூடிய ’தமிழை வீட்டு மொழியாக கொண்டிராத’ சாதியைச் சேர்ந்தோர் தமிழ்நாட்டுக்கு தலைமை தாங்க முடியாது. குறிப்பாக, தமிழ்நாட்டு முதலமைச்சராகும் உரிமை கிடையாது என்று சொல்கிறார். முதலமைச்சர் பதவி ’தமிழை வீட்டு மொழியாக கொண்டுள்ள’ சாதிகளைச் சேர்ந்தோருக்கு மட்டுமே உண்டாம்!
எப்படி சிங்களர்களின் அரசியலை இலங்கைத் தேசியமாக பார்க்க முடியாதோ அது போல் சீமான் முன்வைக்கும் மேற்படி வாதத்தை தமிழ்த்தேசியமாக பார்க்க முடியாது. சிங்களர்களின் அரசியலை சிங்கள பெளத்த பேரினவாதம் என்று திறனாய்வு செய்வது போல் சீமானின் அரசியலை தமிழ் இனக்குழுமம் சார்ந்த தமிழ்ப்பேரினவாதமாகத்தான் பார்க்க முடியும்.
மலையகத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டது அநீதி என்று கருதுவோமானால் அதே அநீதி இங்கிருக்கக் கூடிய ’தமிழை வீட்டுமொழியாக’ கொண்டிராதோருக்கு இழைப்படுவதை எப்படி ஏற்க முடியும்?
”நாங்கள்தான் தலைமை தாங்குவோம்” என்ற சீமானின் கூற்றில் இரண்டு சிக்கல்கள் உள்ளன.
1. நாதகவின் மன்னராட்சி சிந்தனை:
தேசியம் பற்றிய எவ்வித கோட்பாட்டுத் தெளிவும் நாதகவுக்கும் அதை ஆதரிக்கும் ஆசான்களுக்கும் கிடையாது என்று நம்மால் அறுதியிட்டுச் சொல்ல முடியும். மன்னராட்சி ஊழி முடிவுக்கு வந்துவிட்டது. இனி சீமானின் பாட்டனான அருண்மொழி சோழன் உயிர்த்தெழுந்து வந்தாலும் தேர்தலில் போட்டியிட்டு மக்களின் ஆணையைப் பெற்றாக வேண்டுமே ஒழிய சோழ மன்னராக தமிழ்நாட்டில் முடிசூடிக் கொள்ள முடியாது.
மன்னராட்சியைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு அவ்விடத்தில் மக்களாட்சி மலரும்போது பிறப்பெடுத்த அரசியல் கோட்பாடுதான் தேசியம். தேசியம் மன்னராட்சிக்கும் மன்னர் கால சிந்தனை முறைக்கும் மன்னராட்சி கலாச்சாரத்திற்கும் மன்னர் கால முடிவெடுக்கும் முறைக்கும் எதிரானதாகும்.
மேலும் இந்நாட்டை ஆண்டு கொண்டிருப்பது அரசமைப்புச் சட்டம் தானே ஒழிய தலைமை அமைச்சரோ, முதலமைச்சரோ அல்ல. முதலமைச்சர் பதவிக்கும் தலைமை அமைச்சர் பதவிக்கும் தேர்தல் நடைபெறுவதில்லை. சட்டப்பேரவை உறுப்பினருக்கும் மக்களவை உறுப்பினருக்கும்தான் தேர்தல் நடைபெறுகிறது.
ஒன்றிய அரசுக்கு ஏராளமான அதிகாரமும் மாநில அரசுக்கும் மிக குறைந்த அதிகாரமும் இருப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஏற்பாடு. அத்தகைய மாநில அரசில் ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சியால் அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கும் அளவில்தான் செயல்பட முடியுமே ஒழிய சீமான் சொல்வது போல் எல்லாவற்றையும் கிழித்துத் தள்ளிவிட முடியாது. அதேநேரத்தில் மாநில அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு வரம்புக்கு உட்பட்ட வகையில் தில்லி அதிகாரக் குவிப்புக்கு எதிராகப் போராட முடியும். அதிகபட்சமாக ஆட்சி அதிகாரத்தைத் துறந்து தமிழ்த்தேசத்திற்கான அதிகாரத்தை வெல்வதற்குப் போராட முடியும். மற்றபடி தமிழ்நாடு அரசு ஒன்றும் முற்றதிகாரம் படைத்தது அல்ல, இத்தகைய மயக்கத்தை ஏற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள திமுக, அதிமுக போன்ற கட்சிகள் உருவாக்கி வைத்திருந்த நிலையில் அவற்றுக்கெல்லாம் மாற்று என்று அறிவித்துக் கொண்டு வந்த கட்சியும் அதேமயக்கத்தை மக்களிடம் ஏற்படுத்துகிறது.
பழம்பெருமைவாதத்தை முதலீடாக்கி கற்பனை உலகில் தமிழர்களில் ஒருசாரரை சஞ்சரிக்கச் செய்திருக்கும் சீமான் முழுமுழுக்க மன்னராட்சி கலாச்சாரத்தையும் சினிமா பாணியிலான கதாநாயக சாகசவாதத்தையும் முன்வைத்து தமிழ்நாட்டு அரசியலை பாழ்படுத்தி வருகிறார் என்பதே உண்மை.
முதலமைச்சர் ஒன்றும் மன்னர் அல்ல என்பதையாவது சீமானும் அவரது தம்பிகளும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
2. ’நாங்க தான் தலைமை’ என்றால் என்ன?
செளராஷ்டிரர்கள் மாநாட்டில் ’தலைமை நாங்க தான்’ என்று சீமான் சொல்வதை அந்தக் கூட்டம் ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறது. நூறாண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வாழ்ந்துவரும் சாதிகளைச் சேர்ந்தோரை இரண்டாம் நிலைக் குடிமக்களாக ஆக்கும் மோசடி இது. நாயுடு, ரெட்டியார், அருந்ததியரில் ஒரு சாரார், ஆதி ஆந்திரர், தேவாங்கர், நாயக்கர், செளராஷ்டிரர் உள்ளிட்ட பல்வேறு சாதிகளை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
சீமானை முதலமைச்சர் ஆக்குவதற்குதான் ஆயிரமாயிரமாய் அவர் பின்னே தமிழ் இளைஞர்கள் திரள்கிறார்களா? நாதக கட்சியின் இலக்கு என்ன?
எப்படி பாபர் மசூதியோடு சங்கிகள் நிறுத்திக் கொள்ளப் போவதில்லையோ அது போல் முதலமைச்சர் பதவியோடு நாதகவும் நிறுத்திக் கொள்ளப் போவதில்லை.
முதலமைச்சர் தொடங்கி அமைச்சரவையில் உள்ள முக்கிய துறைகள், நகர மேயர், சேர்மன், கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட அனைத்து அரசு பொறுப்புகளிலும் ’தமிழ்ச் சாதிகளுக்கே’ முன்னுரிமை என்பார்கள். அனைத்து வகைப்பட்ட சங்கங்கள், அமைப்புகளிலும் தமிழர்களே தலைமை தாங்க வேண்டும் என்பார்கள். இலக்கிய அமைப்புகளில்கூட தமிழர் – தமிழரல்லாதார் என்ற பல்லவியைப் பாடுவார்கள்.
அனைத்து அரசியல் – சமூக தலைமை பொறுப்புகளோடு மட்டும் நிறுத்திக் கொள்வார்களா?
எப்படி முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். சொல்கிறதோ அது போல் தமிழை வீட்டு மொழியாக கொண்டிராத சாதிகளுக்கு இட ஒதுக்கீடு கூடாது என்று சொல்வார்கள். அப்படித்தான் அருந்ததியர்களுக்கான உள் இடஒதுக்கீட்டை நாதக எதிர்த்தது.
இடதுசாரி சிந்தனையாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கும் உள்ஒதுக்கீடு தொடர்பில் மாறுபட்ட கருத்து உண்டு. அது தீண்டாமை, வன்கொடுமை எதிர்ப்புக்கு அது தடையாகப் போய்விடும் என்ற அச்சத்தில் எழுப்பப்படுவதாகும். ஆனால், சீமானின் உள் ஒதுக்கீடு எதிர்ப்பு என்பது அருந்ததியரை அயலார் என்று சித்திரிப்பதனால் வருவதாகும்.
பிறகு பொருளாதாரத்தையும் விட்டுவைக்கவா போகிறார்கள்? அரசியலின் இலக்கே பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துவதுதானே. பொருளியல் துறையிலும் இச்சாதிகளைச் சேர்ந்தோர் இரண்டாம் நிலை ஆக்கப்படுவார்கள். சாலையோரத்தில் வியாபாரம் செய்பவன் கூட தமிழர் – தமிழரல்லாதார் அரசியலை தேவைப்படும் இடத்தில் பேசி வைப்பான்.
சுருங்கச் சொன்னால், அரசியல் என்பதே பொருளாதாரத்தைக் கையாளும் ஒரு வித்தை என்பதும் அரசியலில் சம உரிமை இல்லை என்றால் வேறு எதிலும் சம உரிமை இருக்காது என்பதும் அரசியலில் ஒரு பாலபாடமாகும். இத்துடன் இணைத்துதான் நாதகவின் அரசியலைப் புரிந்துகொள்ள வேண்டும்.
செளராஷ்டிரர்கள் உள்ளிட்ட தமிழை வீட்டுமொழியாக கொண்டிராத எந்தவொரு சாதியும் சீமானின் நச்சுப் பேச்சுக்கு மயங்கிவிடக் கூடாது.
அதுபோல், தமிழ்த்தேசிய அரசியலின் மீது உண்மையான அக்கறை கொண்டோர் சீமானின் இனவாதத்தை எவ்வித விட்டுக்கொடுப்புகளும் இன்றி எதிர்க்க வேண்டும்.
இந்திய தேசியத்தில் அக்கறை கொண்டோர் இந்து தேசியத்தை எதிர்த்து இரண்டில் ஒன்று பார்க்கும் வகையில் போராடி இருந்தால் இந்தியா இன்று இந்துராஷ்டிரம் ஆகிக் கொண்டிருப்பதை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். இது தமிழ்த்தேசியத்திற்கும் ஓர் எச்சரிக்கையாகும்.
இந்திய தேசியத்தை வீழ்த்த வந்த கோடாரி காம்பு இந்துத்துவம் என்றால் தமிழ்த்தேசியத்தை வீழ்த்த வந்த கோடாரி காம்பு நாதகவின் தமிழினவாதமாகும்.
சீமானின் பெரியார் எதிர்ப்பு அரசியலும்கூட கொள்கை, கோட்பாடு என்பதை தாண்டி பெரியாரை ’அயலார்’ என்று சித்திரிப்பதில் இருந்துதான் தொடங்குகிறது. பெரியாரை அயலாராக காட்டுவதைதான் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.
இசுலாமியர்களின் உரிமைக்காக சமர் புரியாத அரசியல் இந்திய தேசிய அரசியலாக இருக்க முடியாது. உண்மையில் இசுலாமியர்களின் சம உரிமைக்கான போராட்டக் களத்தில் தன் உயிரைக் கொடுத்தவர்தான் காந்தியார். அவர் ஓர் உண்மையான இந்திய தேசியவாதி.
நாதக முன்வைக்கும் இனவாத அரசியலை மிக கடுமையாக எதிர்த்து மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழ்த்தேசியர்களிடமே உள்ளது. அப்படியான ஓர் எதிர்ப்பை காட்டத் தவறினால் பலியாகப் போவது தமிழை வீட்டுமொழியாக கொண்டிராதோர் உரிமை என்று அலட்சியமாக நினைத்துவிட வேண்டாம். அங்கு உண்மையில் பலியிடப் படுவது தமிழ்த்தேசிய அரசியலே ஆகும்.
நூற்றாண்டுகள் கடந்து இங்கே வாழும் சாதிகளை ’அயலார்’ என்று சித்திரிக்கும் இனவாதத்திற்கு எதிரான சமர் புரியாத அரசியல் தமிழ்த்தேசிய அரசியலாக இருக்க முடியாது.
தமிழ் ஜெயவர்த்தனாக்கள் தமிழ் மண்ணில் உருவாவதை தடுப்பதுதான் இனவழிப்புக்குள்ளான ஒரு மக்கள் கூட்டத்தின் அறம் சார் செயல்பாடாக இருக்க முடியும்.
- தோழர் செந்தில்