இந்து தேசிய வெறி இயக்கத்திற்கு திமுக எதிரியா? பகுதி – 2

பேராசிரியர் மருதமுத்துவின் கட்டுரைக்கு மறுவினை
திமுகவின் அரசியல் இந்திய தேசியமா? தமிழ்த்தேசியமா?
பிறிதொரு பதிவில் திமுக தமிழ்த்தேசிய முதலாளிகளின் கட்சி என்று பேராசிரியர் சொல்கிறார். திமுக எப்போதாவது தன்னை தமிழ்த்தேசிய கட்சி என்று சொல்லிக் கொண்டதுண்டா? நாங்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்கிறோம் என்று சொல்லித்தான் திரு சி.என். அண்ணாதுரை திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு மாநில சுயாட்சி என்று பேசத் தொடங்கினார். தனித்தமிழ்நாடு கேட்பது பெரியாரின் கொள்கை. எங்களது கொள்கை இந்திய தேசியத்திற்குள் மாநில சுயாட்சி என்றுதான் திமுக தன்னை வரையறுத்துக் கொண்டது. எனவே, திமுக மீது தமிழ்த்தேசிய ’ஆபத்தை’ பேராசிரியர் ஏன் சுமத்துகிறார்!
மேலும், அண்ணாதுரை திமுகவை தொடங்கியதில் இருந்து திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டு 1967 இல் ஆட்சியைப் பிடித்து பின்னர் அவர் மறைவுக்குப் பின் 1989 இல் இந்திய மத்திய அரசில் திமுக அங்கம் வைத்தது வரையான வரலாற்று ஓட்டத்தில் திமுகவின் வகுப்பு தலைமையை எளிதில் அடையாளம் காண முடியும். தமிழ்நாட்டில் உள்ள முதலாளிய வகுப்பில் ஒரு பகுதியினர் இந்திய பெருமுதலாளிய வகுப்பில் இரண்டறக் கலந்து கொண்டதுதான் 1949 இல் தொடங்கி 1989 இல் தமது இலக்கை அடைந்த திமுகவின் பயணமாகும்..
பார்ப்பனிய எதிர்ப்பு – சமூக நீதி, இந்திய தேசியத்திற்குள் மாநில சுயாட்சி ஆகியவற்றை பேரப் பொருளாக்கி இந்திய பெருமுதலாளிய வகுப்பில் அங்கம் வகித்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெருமுதலாளிய வகுப்பின் கட்சிதான் திமுக. தமிழ்நாட்டுக்கு வெளியே தனது முதலீட்டையும் சந்தையும் ஒருவர் கொண்டிருப்பாராயின் அவர் தமிழ்த்தேசிய முதலாளியாக இருக்க முடியாது என்பது ஒர் அடிப்படை வரையறையாகும்.
ஆளும்வகுப்பு கட்சிகளின் சனாதன/பார்ப்பன எதிர்ப்புப் பல்லவி:
இந்து தேசியத்திற்கு மாற்று என்ன? என்பதைப் பற்றி பேசாமல், புதுத்தாராளியம் பெற்றுப் போட்ட, மேற்கு இந்தியாவை மையமிட்ட இருமுதலாளிகளைப் பற்றி பேசாமல் சனாதன எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, உயர்சாதி ஆதிக்க எதிர்ப்பு, வர்ணாசிரம எதிர்ப்பு என்பதற்குள் ஆளூம் வகுப்பு கட்சிகள் அனைத்தும் வட்டமிடுவது ஏன்? காங்கிரசு சாதிவாரிக் கணக்கெடுப்பு என்று முழங்குகிறது. சனாதன எதிர்ப்பு என்கிறது விசிக. பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு என்று திமுக சொல்கிறது. இவையாவும் ஒரே பொருளைத் தான் பேசுகின்றன. பாசகவின் பார்ப்பன ஆதிக்க அரசியலை முதன்மை முரண்பாடாக முன்வைத்து இக்கட்சிகள் முழக்கங்களை வைத்துள்ளன.
இந்த ஆளும்வகுப்பு கட்சிகளின் அரசியல் கொள்கை என்ன? தமிழ்த்தேசியத்தோடு கூடிய சனாதன எதிர்ப்பா? அல்லது இந்திய தேசியத்தில் சனாதன எதிர்ப்பா?
பொருளியல் கொள்கை என்ன்? ஒரு சில முதலாளிகளின் ஏகபோகமும் நிதிமூலதன குவிப்புடன் கூடிய சனாதன எதிர்ப்பா? அல்லது பெருமுதலாளிகளுக்கு இடையே சுதந்திர போட்டியும் மக்கள் நலவியக் கொள்கையுடன் கூடிய சனாதன எதிர்ப்பா?
அரசியல் பொருளியல் மாற்றுக் கொள்கையை அரங்குக்கு கொண்டுவராமல் சனாதன எதிர்ப்பை மட்டும் முன்வைத்து தாம் இழந்துவிட்ட மக்கள் அடித்தளத்தை மீண்டும் கட்டியெழுப்பலாமா? என்று ஆளும்வகுப்பு கட்சிகள் முயல்கின்றன.
இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தின் போதும் பார்ப்பனர்/பார்ப்பனர அல்லாதோர் அரசியலும் , சாதி இந்துக்கள் எதிர் தலித் அரசியலும் முன்வைக்கப்பட்டது. ஆயினும் வரலாற்று செல்நெறி என்பது இந்திய தேசிய அடிப்படையிலான இந்திய தேச அரசு உருவாக்கத்தில் முடிந்தது. மேற்படி பார்ப்பனரல்லாதோர் இயக்கமும் தலித் இயக்கமும் இந்திய தேசியத்தை சனநாயகப்படுத்த முடிந்ததே ஒழிய தடுத்து நிறுத்த முடியவில்லை! என்பது வரலாறு
அதேபோல், இந்து தேசியத்தை கேள்விக்குள்ளாக்காமல், உரிய மாற்று தேசிய கொள்கையை முன்வைக்காமல் பார்ப்பன/சனாதன எதிர்ப்புப் பஜனைப் பாடுவது இந்துராஷ்டிரத்தில் பங்கு கேட்கும் வேலை. அதாவது இந்துராஷ்டிரப் பேருந்தில் துண்டு போட்டு இடம் பிடிப்பதற்கு அப்பால் இது எதையும் சாதித்துவிடப் போவதில்லை.
பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புக்கு புழுதியில் புரண்டு புலம்பும் இவர்கள் இந்து தேசியத்திற்கு முதல் பலியாக இருக்கும் இசுலாமியர்கள் தொடர்புடைய கோரிக்கைகளை சனநாயக கோரிக்கைகளாக கருதி, தமது சொந்த வேலைத்திட்டமாக வரித்துக் கொள்வதில்லை.
இந்துதேசியத்திற்கு மாற்று என்ன? நிதிமூலதன ஏகபோக குவிப்புக்கு மாற்று என்ன? என்ற கேள்விகள்கூட எழுந்துவிடாமல் சனாதன / பார்ப்பன எதிர்ப்பிற்குள் விளையாடிக் கொண்டிருப்பதில்தான் ஆளும்வகுப்புக் கட்சிகளின் புத்திக்கூர்மை இருக்கிறது.
இந்திய தேசியம் இன்றைக்கு பகையா? நட்பா?
முதலாளிய நாடாளுமன்ற சனநாயகம் பற்றிய லெனினின் மேற்கோளை அடியொற்றி, ”இந்திய தேசியம் வரலாற்றுவகையில் காலாவதியாகி இருக்கிறதே ( obsolete) ஒழிய அரசியல் வகையில் இன்னும் மெய்நடப்பாகத்தான் ( reality) இருக்கிறது என்று தோழர் தியாகு சொன்னார்.
இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் கற்குவியலுக்குள் இந்திய தேசியம் புதைக்கப்பட, எழுந்துநிற்கும் இராமர் கோயில் இந்து தேசியத்தைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இராமர் கோயில் என்ற் இந்துராஷ்டிரத்தின் குறியீட்டை மாற்றியமைக்கப் போகிறோம் என்று சொல்வதற்கு இந்திய தேசியர்கள் யாருக்காவது துணிவு உண்டா?
இந்திய தேசியத்தின் இடத்தை இன்று இந்து தேசியம் கைப்பற்றி கொண்டிருக்கிறது. மீண்டும் இந்து தேசியத்தை அப்புறப்படுத்தி இந்திய தேசியத்தால் அவ்விடத்தைப் பிடிக்க முடியாது. இப்பொருள் குறித்து தேவைப்படும்போது விரிவாக எழுதுவேன்.
இருப்பினும், இந்துத்துவ பாசிசம் முதன்மை முரண்பாடு என்ற வகையில் இந்திய தேசியம் இன்றைக்கு பகை அரசியல் அல்ல, பாசிச எதிர்ப்புக் களத்தில் இந்திய தேசியம் ஓர் இடைக்கால நட்பு அரசியலாகும்.
பாசிச பாசக ஆட்சி – திமுக முரண்பாடு பகையா? நட்பா?
முன்பே குறிப்பிட்டது போல் இந்தியப் பெருமுதலாளிய ஆளும் வகுப்பில் அங்கம் வகிக்கும் தமிழ்நாட்டு முதலாளிய வகுப்பின் கட்சிதான் திமுக. ஒரே தேசம், ஒரே சந்தை, ஒரே மதம், ஒரே மொழி என்ற முழக்கத்துடன் இந்நாட்டை விழுங்கத் துடிக்கும் மேற்கு இந்தியாவை மையமிட்ட ஓரிரு கார்ப்பரேட்களின் ஆட்சிதான் பாசக ஆட்சி. மாநிலக் கட்சிகளின் பெயரால் இந்தியாவை கொள்ளையடிப்பதில் பங்கு கேட்கும் மாநிலப் பெருமுதலாளிய வகுப்புடன் சமரசம் செய்து கொள்ள மேற்கு இந்திய கார்ப்பரேட்கள் அணியமாக இல்லை. இந்த முரண்பாடுதான் இன்று பகையான முரண்பாடாக பாசிச பாசக அரசுக்கும் திமுகவுக்கும் இடையில் நிலவிக் கொண்டிருக்கிறது.
இம்முரண்பாடு இந்திய ஆளும் வகுப்புக்குள் நிலவும் முரண்பாடு என்ற போதும் இந்துராஷ்டிரத்திற்குள் ஓரிரு ஏகபோகங்கள் என்ற இன்றைய ஆட்சிக்கும் இந்திய பெருமுதலாளிய வகுப்பின் ஏனைய பிரிவுக்கும் இடையிலான முரண்பாடு பண்பளவில் பகை தன்மையிலான முரண்பாtடாகும். அதனால் பாசிச எதிர்ப்பு முகாமில் இருந்து சண்டைப் போட்டே தீர வேண்டிய கட்டாயத்தில் திமுக இருக்கிறது.
இந்த சண்டையை நடத்துவதற்கு தமிழ்நாட்டு மக்களைத் தனக்குப் பின்னால் திரட்டிக் கொள்ள பார்ப்பன எதிர்ப்பு, மாநில உரிமை ஆகிய அரசியலைக் கையில் எடுக்கிறது திமுக. பாசிச பாசக அரசுக்கும் திமுகவுக்கு இடையில் இன்றளவில் நிலவும் பகை முரண்பாட்டைக் கருத்தில் கொண்டே முரணற்ற சனநாயகத்தை இலக்காக கொண்ட ஆற்றல்கள் திமுகவை பாசிச எதிர்ப்பு களத்தில் நட்பு சக்தியாக வரையறுக்கின்றன.
இங்கே கெடுவாய்ப்பு என்னவென்றால் சமூக நீதி , மாநில உரிமை , உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் என்பதற்கப்பால் அதானி முதலீட்டு எதிர்ப்பு என்பதுகூட திமுகவிடம் இல்லை. மோதானி ( MODANI) என்று தில்லியில் பதாகைப் பிடித்துவிட்டு இங்கு அதானியுடன் கைகுலுக்கிக் கொண்டிருக்கிறது திமுக அரசு!
பாசிச எதிர்ப்பு மக்கள் முகாம்
இந்துத்துவத்தை சரியாக புரிந்து கொள்ளாத காரணத்தால் திமுகவை சரியாக மதிப்பிடாத காரணத்தால் இந்துத்துவ பாசிசத்திற்கு மாற்றுக் கொள்கையான
இந்துதேசியத்தை எதிர்க்கும் மொழிவழிப்பட்ட தேசியங்கள் – தமிழ்த்தேசியம்
ஏகபோக மூலதனக் குவிப்பை எதிர்க்கும் மக்கள் நலவியப் பொருளியல்
பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்க்கும் சமூகநீதி அரசியல்
இந்த மூன்றையும் கொண்டிருக்கும் பாசிச எதிர்ப்பு மக்கள் முகாம் ஒன்றை உருவாக்கும் போராட்டம் தொடங்கப்படாமலே இருக்கிறது.
பாசகவையும் திமுகவையும் சமப்படுத்தும் ஒருசாரார் இந்திய சனநாயகத்தின் உடனடி மரணத்திற்கு வழிவகுத்துக் கொண்டிருக்கின்றனர்.
திமுகவை தேர்தலில் ஆதரிப்பதை தவிர வேறு வழி இல்லை என்று சொல்வதோடு நிறுத்திக் கொண்டு தற்சார்பான மக்கள் முகாமை கட்டியெழுப்புவதற்காக துரும்பைக்கூட கிள்ளிப்போடாத இன்னொரு சாரார். இவர்கள் பாசிச பாசகவை அம்பலப்படுத்துவதில் அளப்பரிய பங்காற்றும் அதே வேளையில் பாசிச எதிர்ப்பு மக்கள் முகாம் ஒன்று உருப்பெறுவதற்கு பங்களிக்காமல் இருக்கின்றனர். இதில் கெடுவாய்ப்பு என்னவென்றால் அப்படி ஒன்று உருப்பெற வேண்டும் என்ற தேவையை உணராதவர்களாகவும் ஒருவேளை உணர்ந்திருப்பினும் அது சாத்தியம் இல்லை என்ற அவநம்பிக்கையின் தூதுவர்களாக இருக்கின்றனர்.
இவர்களுடைய பணிகள் இந்திய சனநாயகத்தின் மரணத்தை தள்ளிப் போடுமே ஒழிய அதை தடுக்காது.
பேராசிரியர் மருதமுத்துவோ நாம் தமிழர் , தவெக எதிர்ப்பை முதன்மைப்படுத்திக் கொண்டு ஏற்கெனவே ஆளும் வகுப்பு உருவாக்கியுள்ள திமுக எதிர்ப்பு – திமுக ஆதரவு என்ற சட்டகத்திற்குள் சிக்கிக் கொண்டுள்ளார். இவரைப் போன்ற மூத்த தோழர்கள் பாசிச பாசக எதிர்ப்பில் மக்கள் முகாம் ஒன்று உருவாவதற்கு இன்றைய நிலையில் என்ன செய்ய வேண்டுமோ அதற்குத்தான் ஒவ்வொரு நொடியையும் செலவு செய்ய வேண்டும்.
சீமானையும் விஜயையும் திமுக பார்த்துக் கொள்ளும். பாசிச பாசகவை வரலாற்று நோக்கில் ஒரு கை பார்க்க வேண்டும் என்றால் அது திமுகவால் முடியாது. பாசிச எதிர்ப்பு மக்கள் முகாம் ஒன்றால்தான் முடியும். தேர்தலில் திமுகவை ஆதரிப்பதா? வேண்டாமா? என்பது பற்றிய கவலைக்கு இணையான கவலை பாசிச எதிர்ப்பு போராட்டக் களங்கள் உருவாவதன் வழி பாசிச எதிர்ப்பு மக்கள் முகாம் உருப்பெற்று, வலுப்பெற வேண்டும் என்பதுமாகும்.
அவ்வண்ணம் எதுவும் உருவாகாமல் தடுப்பதுதான் ஒருகையில் இந்திய தேசியத்தையும் மறுகையில் புதுத்தாராளிய கொள்கையையும் அதானி ஆதரவையும் வைத்துக்கொண்டு கிளிப் பிள்ளை போல் சனாதன/பார்ப்பன எதிர்ப்புப் பல்லவி பாடும் ஆளும் வகுப்பு அரசியலாகும். அதனாலேயே இது குறித்து எழுத வேண்டிய தேவை எழுந்துள்ளது.
– முற்றும்