பண்பாட்டு நோக்கில் திருப்பரங்கன்றம் – பகுதி – 2

திருப்பரங்குன்ற (சிக்கந்தர்மலை) தர்கா
தமிழகத்தின் பழைமையான தர்காக்களில் சிக்கந்தர் தர்காவும் ஒன்று. தமிழகத்தின் தர்காக்களில் நடப்பது போன்ற அதே வழிபாடே திருப்பரங்குன்ற மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் நடக்கிறது. 700 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வழிபாடுகள் தொடர்ந்து வருகின்றன. திருப்பரங்குன்ற தர்காவை வணங்காத, நேர்த்தி செய்யாத, தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு நடக்கும் அசைவ உணவைச் சாப்பிடாத அப்பகுதி இந்துக்கள் இருக்கமாட்டார்கள். மலையின் அடிவாரத்திலிருந்து மலை உச்சிவரை பல்லாயிரம் பாதங்கள் செதுக்கப்பட்டு நேர்த்தி செய்துள்ளதைக்காணலாம்.
“ஆடு வெட்டுவதற்கு நேர்த்தி செய்தவர்கள் உணவுக்கு அழைப்பார்கள். நான் அங்கு சென்று உணவருந்தி தர்காவின் உள்ளே போய் வணங்கிவருவேன். சிக்கந்தர் மலை தர்கா உச்சிக்கு தலைச்சுமையாக சமையல் பொருள்களைத் தூக்கிச்செல்வது முதலில் மிகச் சிரமமாக இருக்கும். ஆனால் சற்றுதூரம் சென்றதும் எனக்கு ஒரு சக்திவந்ததுபோல் இருக்கும். தூக்கிச் செல்வது ஒரு சிரமமாகவே இருக்காது. எல்லாம் சிக்கந்தரின் அருள்” எனப் பயபக்தியுடன் சொல்கிறார் மலையடிவாரத்தில் வசிக்கும் மலர் என்ற பெண்மணி.
சிக்கந்தர் என்ற பெயரையே சொல்ல மறுத்து பாவா என்று மலையுச்சியைக்காட்டி பணிந்து பேசும் ஆளுமுட்டி ஆறுமுகம் என்ற முன்னாள் கபடிவீரர் ஆடுகளைத்தூக்கி சென்றதையும் பாதம் வெட்டுவதற்கு சாஹீர் மாமா வராதபோது தானே வெட்டியதையும் நினைவுகூறும் அவர், ஆடு வெட்டுவதற்கான தடைகுறித்து வருந்தினார்.
“அடிக்கொருதடவை நான் மலைக்குப் போவன். 40 வருசமாப் போய்க்கிட்டு இருக்கன். எந்தக் குறையும் இல்லாம இருக்கன். நான் சிக்கந்தருக்கு ஆடு, கோழி நேத்திக்கடன் செஞ்சிருக்கன். இப்பச் செய்யக்கூடாதுங்கிறாங்க. தாயும் பிள்ளையுமா நாங்க இருக்கிறம். இதைத் தடுக்காத அளவுக்கு கவர்மெண்ட் நடவடிக்கை எடுக்கணும்” என்கிறார் செண்டு என்கிற மூதாட்டி.
யாரிந்த சிக்ணீந்தர் ?
கி.பி.1182இல் மதீனாவின் ஆளுநராகயிருந்த சையது சுல்தான் இப்ராஹீம் மதம் பரப்ப கிளம்புகிறார். இவர் முகம்மது நபி மகள் வழிவழிப் பேரன்களில் ஒருவர். ஜித்தா என்ற துறைமுக நகரின் ஆளுநராகயிருந்த சையது சிக்கந்தர் பாதுஷாவும் இப்ராஹீமுடன் சேர்ந்து மதம் பரப்ப வருகிறார். சேரமன்னன் கொல்லத்தில் இவர்களை வரவேற்கிறான்.
சேரநாட்டிலிருந்து பாண்டியநாட்டிற்கு வருபவர்கள் புன்னைக்காயலில் குலசேகரபாண்டியனின் ஆதரவுடன் மதம் பரப்புகிறார்கள். பின் அங்கிருந்து மதுரைக்கு வரும்போது இங்கு குழப்பநிலை நிலவுகிறது. சோழர் படை படையெடுத்து ஒருபுறம் இருக்க மதம் பரப்ப வந்தவர்கள் மீது பாண்டியன் எரிச்சலடைகிறான். ஒருபுறம் சோழன், மறுபுறம் இப்ராஹீம் என்று வர வீரபாண்டியன் சங்கடத்திற்குள்ளாகிறான். சோழநாட்டிற்கு சென்றதுபோக மீதமிருந்த படையுடன் பாண்டியன் மதம்பரப்ப வந்தவர்களுடன் மோத சந்தர்ப்பவசத்தால் இஸ்லாமியப் படை வென்று மதுரை முகமதியர்கள் வசம் வருகிறது. சையது இப்ராஹீம் சிக்கந்தர் பாதுஷாவை சுல்தானாக்கிவிட்டு அவரது தளபதி அமீர் அப்பாஸசுடன் இராமநாதபுரத்திலுள்ள ஏர்வாடிக்கு சென்று விடுகிறார்கள்.
1182இலிருந்து சையது சிக்கந்தர் பாதுஷா மதுரையை ஆட்சி செய்கிறார். அவரது ஆட்சி குறித்த பதிவு ஏதுமில்லை. வீரபாண்டியன் திருப்பதிக்கு சென்று பெரும்படை திரட்டி வந்து தன் மகன் குலசேகரனுடன் சேர்ந்து சிக்கந்தருடன் போரிடுகிறார். சிக்கந்தர் பாதுஷா உதவி கேட்டு இப்ராஹிமிடம் ஏழு பேரை அனுப்புகிறார். பாண்டியர்கள் அவர்களை சிலைமான், சக்கிமங்கலம் கார்சேரியிலும் மற்றவர்களை மானாமதுரைக்கு முன்னும் கொல்கிறார்கள். சிக்கந்தர் பாதுஷா திருப்பரங்குன்ற மலையில் தஞ்சமடைகிறார். வீரபாண்டியனும் குலசேகரபாண்டியனும் திருப்பரங்குன்ற மலையில் சிக்கந்தர் இருப்பதை அறிந்து மலைக்கு வந்து சிக்கந்தரின் ஆலோசகரான தர்வேஸையும், அவரது படைத்தலைவரான பாலமஸ்தானையும், மருத்துவரான ஹக்கீம் லுக்மானையும் கொல்கிறார்கள். மலைமீது வந்து இறைநேசரான சிக்கந்தரையும் கொல்கிறார்கள். அவரது நினைவிடத்தில்தான் இந்த தர்கா அமைந்துள்ளது என்கிறார் எழுத்தாளர் அர்சியா.
பழனி சித்தர் போகர் 7000 நூலில் சிக்கந்தரை சிக்கிந்தா ரிஷி, சிக்கிந்தா சித்தர் என வருணிக்கிறார். பதினெட்டாம் நூற்றாண்டில் குணங்குடி மஸ்தான் இம்மலையில் வந்து நாற்பது நாட்கள் தியானம் செய்ததாக வரலாறு உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொண்டி மோனகுரு மஸ்தான் இங்கு வந்திருக்கிறார்.
1866இல் பார்ஸி அரபி மொழியில் மதுரை மகான் அப்துல் ஸலாம் எழுதிய மனாகிப் என்னும் நூலில் நுஸலாமி அலாரூஹி இஸ்கந்தரி ஸலாமி அலா ஜிஸ்மார்த்த அத்ஹரிந என்றால் தமிழில் சிக்கந்தருக்கு ஆத்மார்த்த வந்தனம் மதுரையில் தலம் கொண்ட நாயகனே வந்தனம் என்று பொருள் என்றும் 16ஆம் நூற்றாண்டில் பாரசீகப் பயணி ஒருவரும் கி.பி.1820இல் வண்ணக்களஞ்சியப் புலவர் எழுதிய தீன்நெறி விளக்கத்தில் ஷஹீத் சரிதை என்று சிக்கந்தரின் வீரமரணம் குறித்தும் கோயிற் சாசனக் குறிப்புகளில் குடுமியான்மலை சிகாநாதசாமி கோயில் மற்றும் புதுக்கோட்டை சமஸ்தானக்கல்வெட்டுகளில் சிக்கந்தரைப் பற்றிய குறிப்பும் கி.பி.1182 இல் அரபுநாட்டினின்று வந்த ஸையது இப்ராஹீம் என்பவர் மதுரையில் ஆண்ட விக்கிரம பாண்டியனை வென்று தமிழகத்தின் கிழக்குப் பகுதியை ஆண்டார் என முனைவர் எஸ்.எச்.ஏ.ஹநிசைனி தனது பாண்டிய நாட்டு வரலாறு நூலில் குறிப்பிடுகிறார். மதுரையில் பாண்டியர்படை பிரச்சாரக்குழுவினரைத் தாக்க அதற்கு தற்காப்புப் போர் செய்து வீரபாண்டியனை வென்று சிக்கந்தர் பாதுஷாவை அரசராக்கினார் என முனைவர் எஸ்.எம்.ஏ. காதர், முகம்மது உவைஸ் மற்றும் பீ.மு. அஜ்மல்கான் எழுதிய இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு இப்ராஹீமைப் பற்றியும் சிக்கந்தரைப் பற்றியும் பேசுகின்றது என்பதை ஆய்வாளர்கள் பலர் எடுத்தியம்புகின்றனர்.
மதுரையில் சுல்தான்கள் ஆட்சியில் 14ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் விஜயநகர அரசன் குமாரகம்பணனால் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் சுல்தான் அலாவுதீன் சிக்கந்தர் ஷா-வும் சிக்கந்தர் மலையில் அடக்கத்தலத்தைக் கொண்ட சிக்கந்தரும் ஒருவரல்ல. இருவரும் ஒருவர் எனச் சித்திரிப்பதன் மூலம் மோசமான ஆட்சியை நடத்தியவன் என்ற அவப்பெயரை சிக்கந்தர் மலை அவுலியாவுக்கு கொடுத்து அச்சமாதி இடிக்கப்படுவதற்கான நியாயங்களைக் கொடுத்துவிட மதவாத சக்திகள் முயலுகின்றன. மலையில் அடக்கத்தலத்தைக் கொண்ட (சிக்கந்தர்) துல்கருணை என்றே அழைக்கப்பட்டுள்ளார். இருவருக்கும் ஏறத்தாழ 200 வருட கால இடைவெளி உள்ளதை அறியமுடிகிறது.
திருப்பரங்குன்ற மலையா? சிக்கந்தர் மலையா?
பழம்பெருமை வாய்ந்த திருப்பரங்குன்ற மலையை இசுலாமிய மயமாக்கும் நோக்கில் இசுலாமியர்கள் சிக்கந்தர் மலை என்று கூறியும் எழுதியும் வருகிறார்கள் என்று இந்து அமைப்புகள் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள். சிக்கந்தர் மலை என வரலாற்றுரீதியாக அவ்வாறு உள்ளதா அல்லது திடீரென உள்நோக்கத்துடன் அவ்வாறு அழைக்கப்படுகிறதா?
திருப்பரங்குன்ற மலையின் அமைப்பை நோக்கினால் ஒரேமலை வழித்தடம் போன்று காணப்படும் மூன்று பிரிவுகளாகத் தெரியும். முதல் சிறுகுன்று முருகன் ஆலயத்துக்கு மேலேயும் இன்னொரு பகுதி இன்றைய காசிச்சுனையின் பகுதியாகவும் இன்னொன்று உயரமாகத் தெரியும் மலைமுகடு. இந்த முகட்டுப்பகுதியிலேயே சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. அந்த முகட்டுப்பகுதியையே உள்ளூர் மக்கள் சிக்கந்தர் மலை என அழைக்கிறார்களே தவிர மொத்த மலையை அல்ல என அங்கு சென்று கலந்துரையாடினாலே தெரிந்துவிடும்.
போகர் 7000 பாடலில் சிக்கிந்தா மலை என்று போகர் அருளியதில் மேலே கண்டோம். வெகுமக்கள் வழக்கிலே சிக்கந்தர் மலை எனச் சொல்வது எங்கும் காணக்கூடியதாக உள்ளது. திருப்பரங்குன்ற நாட்டுப்புறப்பாடல் தொகுப்பில்,
சிக்கந்தர் மலைக்குப் போனவுக
என்னென்ன அடையாளம் கொண்டுவந்தாக
கல்லால மண்டபம் காணிக்கை சப்பரம்
வில்வ மரங்களடையாளம்
சிக்கந்தர் மலைக்குத் தெக்கிட்டுத் தெக்கிட்டு
சீரகச்சம்பா வெள்ளாமை
கோம்ப மலைக்கிளி கொய்ய வருதுன்னு
கூப்பிட்டுச் சொன்னாளாம் வள்ளியம்மை
(ராமலட்சுமி, விளாச்சேரி, 5-10-82)
மலையே மலையழகு
மலையைச் சுற்றிக் தோப்பழகு
சிக்கந்தர் மலையழகு
திருப்பரங்குன்றத்துத் தெருவழகு
(கருப்பாயி, திருப்பரங்குன்றம் 28-10-82)
உம்மனசும் எம்மனகசும்
ஒருமனசா இழுந்துட்டாக்கா
பஸ்பகிரி மலையைப்
புஷ்பமா நிறுத்திடுவேன்
உம்மனசும் எம்மனசும்
ஒருமனசா இருந்துட்டாக்கா
சிக்கந்தர் மலையைச்
செந்தூக்காத் தூக்கிடுவேன்
(வயிரக்காள், விளாச்சேரி, 27-10-82)
என்றும் பாடப்படுகின்றன. முருகனுக்காகப் பாடப்படும் பாடலில் திருப்பரங்குன்றம் என்றும் சிக்கந்தர் மலை என்றும் பாடப்படுவதால் சிக்கந்தர் மலை என்பது தர்கா இருக்கும் முகட்டுப்பகுதியையே குறிப்பதாக இருக்கிறது.
தர்கா நிர்வாகம் அவுலியா இருப்பிடத்தைக் குறிப்பிடும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பில் திருப்பரங்குன்ற மலையுச்சியில் அமைந்திருக்கும் சிக்கந்தர் அவுலியா பாதுஷா என்றே குறித்திருக்கிறது.
சிக்கந்தாமலை துல்கருணை அவுலியா அவர்கள் பேரில் சந்தலலங்காரச்சிந்து எனும் பாடல்களில் (1913) திருப்பரங்குன்றம் என்றும் சிக்கந்தர் மலை அவுலியாவே என்றும் பாடப்படுகிறது.
செங்கமலத் தடவிளையாங் குடியில்வாழுந்
தீன்குலலுக் மான்செய்தவப் பயனிலாய
சிங்கமெலு மெய்ஞ்ஞான முகமத்மீரான்
திருப்பரங்குன் றிருப்பிடமாய்த் தினமும்போற்றும்
எங்குமலி யிறையருள்கால் வேதமோதல்
ஏர்ப்பதுவும் நோர்ப்பதுவு மியன்றதன்மை
அங்கண்மட மங்கையரும் பயிலும்செல்வ
அமிகுஞ்சிக் கந்தர்மலை யவுலியாவே
ஸ்ரீ சுந்தரதாஸ் கவிராயர் அவர்கள் எழுதிய திருப்பாலைக்குடி ஸ்ரீ பக்கீர் மஸ்தான் மகிமைத் திருவிளையாடல் (1931) நூலில் கும்மிப்பாடலில் சிக்கந்தர்மலை எனக் குறிக்கப்பட்டுள்ளது.
திருமங்கலம் விட்டுத் தாண்டியே கப்பலூர்
சென்றது பார் ரயில் வேகமுடன்
கருமங் கருதியே பேருக்கு நல்லருள்
காட்சி கொடுக்கும் சிக்கந்தர் மலை
சிக்கந்தர் சாஹிப்பும் சுப்பிர மண்யரும்
சேர்ந்து வரங்கள் கொடுத்திடுவார்
திருப்பரங்குன்ற மலையில் உள்ள சிக்கந்தர் மலை என்றே வழக்கில் இருந்து வருகிறது என்பதும் இன்றுவரை அவ்வாறே நீடித்துவருகிறது என்பதும் புலனாகிறது.
( மானுடம் திங்களிதழில் வெளிவந்த கட்டுரை 4 தொடர் கட்டுரையாக வெளியிடப்படுகிறது. மானுடம் இதழ் குழுவுக்கு நன்றி)
- தோழர் காளிங்கன்