லத்தீன் அமெரிக்கா வட அமெரிக்காவின் புழக்கடையாகுமா? – 6

வெனிசுவேலா மீது நேரடித் தாக்குதலுக்கு ஆயத்தம்:
2020 மார்ச் மாதத்தில், ‘போதைப் பொருள் பயங்கரவாதி’ மாதுரோவை கைது செய்ய, அவரது குற்றத்தை நிரூபித்தால், ஒன்றரை கோடி டாலர் பரிசு அளிப்பதாக அறிவித்தார் டிரம்ப்.
அண்மைக்காலத்தில் வெனிசுவேலாவில் போதைப்பொருள் கடத்தல் மிதமிஞ்சிப் போய்விட்டதாகவும், அதனை கட்டுப்படுத்த கரீபிய கடல் பகுதியில் தாக்குதல் நடத்தப் போவதாகவும் வட அமெரிக்கா அறிவித்தது. கரீபிய கடல் பகுதியில் அடுத்தடுத்து படகுகளைத் தாக்கி வருகிறது.
2025 ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 21 வரை 32 பேர் வட அமெரிக்காவினால் கொல்லப்பட்டுள்ளனர். கொலம்பியா குடியரசு தலைவர் குஸ்தாவோ பெத்ரோ, டிரம்ப் தனது நாட்டுப் படகை வான்வழி தாக்குதல் நடத்திக் கவிழ்த்து, மீனவர்களைக் கொன்று விட்டதாக குற்றம் சாட்டினார். பதிலுக்கு டிரம்ப், “பெத்ரோ ஒரு சர்வதேச போதைப்பொருள் வியாபாரி” என்று கேலி பேசினார்.
‘அமெரிக்க வளர்ச்சிக்கான மையம்’ என்ற அறிவுஜீவிகளின் அமைப்பு, வெனிசுவேலா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கரீபிய கடல் பகுதியில் தாக்குதல் தொடுக்கும் டிரம்ப்பை கண்டித்துள்ளது. இத்தகைய தாக்குதல்களால் வட அமெரிக்காவுக்குள் புழங்கும் போதைப் பொருட்களில் எந்த மாறுதலும் வந்து விடாது என்றும் இந்த அமைப்பு கூறுகிறது.
சர்வதேச அளவில் எழுந்துள்ள எதிர்ப்புகளை எல்லாம் சட்டை செய்யாமல், இதுவரை 10 வட அமெரிக்க கடற்படை கப்பல்கள் கரீபிய கடலில் இருக்கின்றன. இவற்றில் மூன்று வெனிசுவேலா கரை அருகில் உள்ளன. “கரீபிய கடல் பகுதியில் தென்படும் போதைப் பொருள் கடத்தல் படகுகளை வழிமறிக்க” பத்தாயிரம் வட அமெரிக்க துருப்புகள் சென்றுள்ளனர் !
அந்நிய நாட்டு சொத்துக்கள் கட்டுப்பாடு அலுவலகம் என்ற வட அமெரிக்க கருவூலத்துறை அலுவலகம், வெனிசுவேலாவின் “கார்டெல் ஆஃப் தி சன்ஸ்” என்ற நிறுவனத்தை பயங்கரவாத நிறுவனம் என்று அறிவித்தது. 2025 ஆகஸ்ட் 7ஆம் தேதி நிலவரப்படி மாதுரோவின் தலைக்கு விலை 5 கோடி டாலர் !
“போதைப் பொருள் வியாபாரத்தைப் பொறுத்தவரை வெனிசுவேலாவுக்கு பங்கு இல்லை” என்று ஐக்கிய நாடுகள் சபையின் ‘உலக போதைப்பொருள் ஆவணம்’ கூறுகிறது. இருப்பினும், இப்படி ஒரு பரிசை டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த பதற்றமான சூழ்நிலையில், வெனிசுவேலா நாட்டினுள் இரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்ள டிரம்ப் சிஐஏ-வுக்கு உத்தரவு அளித்திருக்கிறார் என்று தி நியூ யார்க் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது கரீபிய கடலில் உள்ள வட அமெரிக்கா கடற்படை முழு முற்றான ஆட்சி மாற்றத்திற்கு போதுமான படை அல்லவென்றாலும், சீர்வேக ஏவுகணைகள் (Cruise Missiles), வான்வழித் தாக்குதல்கள் ஆகியவற்றின் மூலம் வெனிசுவேலாவுக்குள் பெரும் சேதம் ஏற்படுத்த வாய்ப்பு உண்டு என்கிறார் வெனிசுவேலா அனாலிசிஸ் டாட் காம் என்ற மின்னிதழ் ஆசிரியரும் எழுத்தாளருமான ரிக்கார்தோ வாஸ்.
தாராளவாத நடவடிக்கைகளுக்கு வெனிசுவேலா அரசு ஆதரவு அளிப்பதில்லை என்ற போதிலும், கடந்த நான்கு ஆண்டுகளாக (2021 முதல்) வெனிசுவேலாவின் பொருளாதாரம் வளர்ந்து வந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
சர்வதேச நோக்கர்கள் டிரம்பின் அண்மைக்கால நடவடிக்கைகள் பல அவர் மன்றோ டாக்ட்ரின் – ஐ மீண்டும் தூக்கிப் பிடிக்கிறார் என்று குற்றம் சாட்டுகின்றனர். இதனால் ஃப்ளோரிடாவின் மயாமியில் வாழும் வெனிசுவேலா மக்களிடையே பெரும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. இவர்களுள் 15% மட்டுமே வட அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள். மீதமுள்ள 85% வெனிசுவேலா மக்கள் “அந்நிய பயங்கரவாதிகள்” என்று முத்திரை குத்தப்படுவோம் என்ற பயத்துடனேயே இருக்கிறார்கள். எனவே அவர்கள் வெனிசுவேலா மீது நேரடி ராணுவ தாக்குதலை ஆதரிக்கவில்லை.
வெனிசுவலாவின் எதிர்க்கட்சியான ஆக்சியோன் டெமாக்ரடிக்கா மாதுரோவை போதைப்பொருள் கடத்தல்காரர் என்று ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டது ! எனவே வட அமெரிக்கா தலையீடு நடந்தால், மாதுரோ கேட்டுக்கொண்டபடி மக்கள் போராட அணியமாக வேண்டும் என்கிறது. (!) மாதுரோவை வீழ்த்தி விட்டால், மரீயா கொரீனா மச்சாதோ வெனிசுலாவின் பொம்மை அரசுக்கு பொருத்தமான தலைவராக இருப்பார் என்று டிரம்ப் கருதுகிறார்.
ஏனெனில் 2018 ஆம் ஆண்டு மாரீசியோ மாக்ரி என்ற அர்ஜென்டினா குடியரசுத் தலைவருக்கும், இஸ்ரேல் பிரதம மந்திரி நேதன்யாகுவுக்கும் மரீயா ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் “கைவசம் உள்ள பலத்தையும் செயல்திறனையும் போதைப் பொருள் கடத்துகிற பயங்கரவாதியான மாதுரோவின் கிரிமினல் வெனிசுவேலா அரசை ஒழித்துக் கட்டப் பயன்படுத்த வேண்டும்” என்று கூறியிருந்தார்.
ஆனால் மச்சாதோ மக்களின் ஆதரவை இழந்து வருகிறார். ஏனெனில் வெனிசுவேலா எதிர்க்கட்சியினரில் வெறும் 12.6% மக்கள் மட்டுமே சர்வதேச தலையீட்டை விரும்புகின்றனர். இராணுவ தலையிட்டை வெறும் 3% மக்களே விரும்புகின்றனர்.
2025 செப்டம்பர் மாதத்தில் லத்தீன் அமெரிக்க, கரீபிய நாடுகளின் ஒன்றிய நாடுகள் (Community of Latin American and Carribean States) இணைய வழி கலந்துரையாடின. வெனிசுவேலா அருகே வட அமெரிக்கா போர்த் தளவாடங்ளை குவித்திருப்பதை அவை எதிர்த்துள்ளன. வட அமெரிக்கா நேரடி தாக்குதலில் இறங்கினால் பிராந்திய அளவில் பல நாடுகளின் ஆதரவு வெனிசுவேலாவுக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(ரோத்ரிகோ அகுன்யா “ட்ரூத் அவுட் ” 2025, அக்டோபர் 21)
இந்தக் கட்டுரை எழுதப்படும் இன்று வரையில் மொத்தம் ஒன்பது முறை வட அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சென்ற வாரம் நிகழ்ந்தது போலவே இன்று (அக்டோபர் 25) டெக்சாஸ் மாநில டையெஸ் விமானப்படை தளத்தில் இருந்து குண்டு வீச்சு விமானங்கள் கரீபிய கடல் பகுதியில் வெனிசுவேலா வரை சென்று படகுகள் மீது குண்டுகளை வீசின.
இன்னும் சில நாட்களில் அல்லது வாரங்களில் வெனிசுவேலாவின் கதி என்ன ஆகப்போகிறது என்பது தெரியவரும். வெனிசுவேலாவுக்கு ஆதரவாக பிரேசில், கொலம்பியா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்தாலும் கூட, இந்தப் போரைத் தடுத்து நிறுத்தி விட முடியுமா என்று தெரியவில்லை.
வட அமெரிக்கா எந்த நாட்டில் ஊடுருவினாலும், அதற்கு பொய்களே காரணமாக இருக்கும் என்பது வெட்ட வெளிச்சம். இம்முறையும் அதே போலத்தான் போதைப் பொருள்களை வெனிசுவேலா வட அமெரிக்காவுக்குள் கடத்துவதால், பதிலடியாக போர் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக டிரம்ப் புளுகுகிறார். ஐநா சபையின் போதைப் பொருள் கட்டுப்பாடு அமைப்பே வட அமெரிக்காவினுள் போதைப்பொருள் கடத்துவதில் வெனிசுவேலாவுக்கு பங்கு இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டது.
எனினும் “போதைப் பொருள்களுக்கு எதிரானவர்” என்று
தனது பெருமையை நிலைநாட்டிக் கொள்ள டிரம்ப் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்துகிறார். வட அமெரிக்க அரசியல் சாசனத்தின்படி மூன்றாவது முறையாக தேர்தலில் நிற்பதற்கு டிரம்ப்புக்கு அதிகாரம் இல்லை. அதனால் அவர் தனது பெருமையை உயர்த்திக்கொள்ள இப்படியான ஒரு போரைத் தொடங்கி இருக்கிறார்.
மாதுரோவின் படுகொலை மட்டுமே அவருக்குப் போதாது. வட அமெரிக்காவில் செயல்படும் சிட்கோ (CITGO) என்ற வெனிசுவேலா எண்ணெய் நிறுவனத்தை பறிமுதல் செய்ய டிரம்ப் முடிவு செய்துவிட்டார். உலகின் அதிகபட்ச கச்சா எண்ணெய் வளத்தை தனதாக்கிக் கொள்ளும் ஆவலில் டிரம்ப் அனைத்து சட்டங்களையும் மீறி இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளார். ஊடகத்தினருக்கு அளித்த பதில்களில் “நான் போதைப் பொருள் கடத்தல்காரர்களை கொன்றேன், கொல்வேன்” என்று பதில் தருகிறார்.
வட அமெரிக்கா நீண்ட காலமாகவே தனது “புழக்கடையை” ஆக்கிரமிக்கத் துடித்துக்கொண்டிருக்கிறது. சென்ற பத்தாண்டுகளில் எதிர்க்கட்சினரின் சூழ்ச்சிகளுக்கும் நாசவேலைகளுக்கும் முகங்கொடுத்து, கடும் பொருளாதார நெருக்கடிகளை சமாளித்து தாக்குப் பிடித்து நிற்கின்றனர் வெனிசுவேலாவின் பெரும்பான்மை மக்கள். ஆனால், மரீயா கொரீனா மச்சாதோ போன்ற தேச துரோகிகள் டிரம்பின் அடிவருடிகளாக இருக்கிறார்கள்.