பீகார் தேர்தல் மீளாய்வு – கொள்கை வழிப்பட்ட பரிசீலனை தேவை

08 Dec 2025

2024 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல்களில் ஒன்று பீகார் சட்டப்பேரவை தேர்தலாகும். நிதிஷ் குமாருடைய துணையுடன்தான் பாசக அரசு பெரும்பான்மை பெற்று நீடித்து வருகிறது. பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வி அடைந்தால் பாசகவின் நாடாளுமன்ற பெரும்பான்மை என்ற அரசியல் பெரும்பான்மையில்கூட மாற்றம் கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால், நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு தொடர்ச்சியாக நடைபெற்ற மகாராஷ்டிரா, அரியானா, தில்லி போன்ற  சட்டப்பேரவை தேர்தல்களில் பெற்ற வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் அடைந்த தோல்வியில் இருந்து மீண்டும் தன்னை ஒரு நிலையான அதிகார மையமாக மாற்றிக் கொள்வதற்கு வாய்ப்புகளை உருவாக்கியது.

பீகார் தேர்தலில் பெற்றிருக்கின்ற மிருகத்தனமான வெற்றி என்பது தேர்தல் அரசியலில் பாசக ஓர் அசைக்க முடியாத சக்தியென்ற தோற்றத்தை உருவாக்கி, மோடி – அமித் ஷா அதிகார மையத்தை மேலும் வலுவூட்டக் கூடியதாக அமைந்துள்ளது. பீகார் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும்போதே தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்களான சந்திரபாபு நாயுடு, சிராஜ் பாஸ்வான் ஆகியோர் 2029 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலிலும் மோடியே வெல்ல வேண்டும் என்று பேசத் தொடங்கினர்.

பீகார் தேர்தல் வெறும் பீகார் மாநிலத்திற்குள் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்துவது அல்ல, நாடு தழுவிய அளவில் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

ஆகவே, பாசக வை வீழ்த்த வேண்டும் என்று கருதக்கூடிய பாசிச எதிர்ப்பு சனநாயக சக்திகள் சரியான வகையில் தேர்தல் முடிவுகளைப் பற்றி ஆராய வேண்டும்.  இந்த தேர்தல் முடிவுகளை சரியாக ஆராய்ந்தால்தான் பாசிச பாசகவை ஆட்சியில் இருந்து வீழ்த்துவதற்கான சரியான வேலைத்திட்டத்தை வந்தடைய முடியும்.

காங்கிரசு முதன்மைப்படுத்திய வாக்கு திருட்டு பிரச்சனை:

ஜூன் 24 இல் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்போவதை அறிவித்தது. ஆகஸ்ட் 7 ஆம் நாள் பெங்களூர் மத்திய தொகுதியில் உள்ள மகாதேவபுரா சட்டப்பேரவை தொகுதியில் நடந்த வாக்கு திருட்டை அம்பலப்படுத்தி, ராகுல் காந்தி ஊடக சந்திப்பு நடத்தினார். பீகாரில் வாக்குத் திருட்டுக்கு எதிராக நடைபயணம் போனார். தேர்தலின் மையப் பிரச்சனையாக வாக்குத் திருட்டையும் தேர்தல் ஆணையத்தின் மீதான குற்றச்சாட்டையும் முதன்மைப்படுத்தினார். ஒட்டுமொத்த இந்தியா கூட்டணி கட்சிகளும் இதற்கு முக்கியத்துவம் கொடுத்தன.

முதலமைச்சர் பெண்கள் அதிகாரமளிப்பு சிறப்பு திட்டத்தின் வழியாக 1 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு 10,000 ரூ கொடுக்கும் அறிவிப்பை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் செய்த பிறகே தேர்தல் ஆணையம் பீகார் மாநிலத்திற்கான தேர்தல் அறிவிப்பை செய்தது. மராட்டிய சட்டப்பேரவை தேர்தலில் பெண்களின் வாக்குகளைக் குறிவைத்து நலத்திட்ட அறிவிப்பு செய்யும் உத்தி கடைபிடிக்கப் பட்டுள்ளது. இதுவும்கூட தேர்தல் ஆணையத்தோடு கூட்டுச் சேர்ந்து செய்யப்பட்ட தேர்தல் விதிமீறல்தான். ஆனால், தேர்தல் ஆணையத்தை அம்பலப்படுத்துவதன் பகுதியாக தேர்தலுக்கு முன்பு இதுபோல கொடுக்கப்படும் நலத்திட்ட உதவியைப் பற்றிய விமர்சனத்தை இந்தியா கூட்டணி மக்களிடம் கொண்டு செல்லவில்லை.

நலவியம் (welfarism) குறித்த கொள்கை விவாதம்?

புதிய தாராளவாதக் கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்பதன் பகுதியாக நலவியத்தை அடியோடு ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுதான் மோடி – அமித் ஷா கும்பலின் கொள்கை நிலைப்பாடாகும். பெரும் செல்வாக்குடன் தலைமை அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட மோடி, தேர்தல் வெற்றிக்காக எதிர்க்கட்சிகள் மக்களுக்கு தாறுமாறாக நலத்திட்டங்களை அறிவிக்கின்றன என்ற விமர்சனத்தை முன்வைத்து புதிய தாராளியக் கொள்கைக்கு சாமரம் வீசினார். ஆனால், அடுத்து அடுத்து வந்த தேர்தல்களில் நலத்திட்டங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு  அதை சந்தர்ப்பவாதமாக செயல்படுத்த தொடங்கினார் மோடி. இனிவரப் போகும் தேர்தல்களிலும் இது தொடரத்தான் போகிறது. தேர்தல் நேர நிதி கையளிப்புகள் மூலம் வாக்குகளை விலைக்கு வாங்கும் மோடியின் உத்தியை எப்படி கையாள்வது?

மோடி அரசின் நலவிய எதிர்ப்பு புதிய தாராளவாத கொள்கைக்கும் சந்தர்ப்பவாத பணக் கொடைகளுக்கும் இடையே உள்ள கொள்கை சார்ந்த முரண்பாட்டை வெளிக்கொணர வேண்டும். அதற்கு புதிய தாராளவாதத்தை விமர்சனத்திற்கு உள்ளாக்கிய நலவியம் சார்ந்த கொள்கை ஒன்று இந்தியா கூட்டணிக்கு வேண்டும். அதன் மூலம்தான் மோடியின் சந்தர்ப்பவாத பணக் கொடைகளை எதிர்கொள்ள முடியும்.

சமூகப் பொறியமைவு:

தேர்தல் ஆணையத்தைக் கையில் போட்டுக்கொண்டு பணத்தை வாரி இறைத்தபடி தேர்தலை எதிர்கொள்ளும் அதேநேரத்தில், பாசக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அரசியல் கட்சிகள் மட்டும் ஒருங்கிணைக்கப்படவில்லை, சமூக தொகுதிகளும் ஒருங்கிணைக்கப்பட்டன. பார்ப்பனர் உள்ளிட்ட முற்பட்ட மற்றும் உயர்சாதி ஓபிசிகளின் பிரதிநிதியாக பாசக,  குர்மி உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தபட்ட சாதிகளிடம் செல்வாக்கு கொண்ட ஐக்கிய ஜனதாதளம், கொய்ரி சமூகத்திடம் செல்வாக்கு கொண்ட இராஷ்டிரிய லோக் சமதா கட்சி, ஒடுக்கப்பட்ட சாதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் லோக் ஜனசக்தி, இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா ஆகியவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த கட்சிகளாகும். சமூக தொகுதிகள் தம்மை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சி என்று கருதக்கூடிய கட்சிகளை ஒரு கூட்டணியாக அமைத்துக் கொண்டது பாசக.

இந்தியா கூட்டணியோ அதுபோல் சமூக தொகுதிகளைக் கணக்கு வைத்து அமைக்கப்பட்ட ஒன்று அல்ல. பீகாரில் இந்தியா கூட்டணி யாதவ்  – இசுலாமியர்கள் கூட்டணியாகவே பார்க்கப்பட்டது. அதிலும்கூட இசுலாமியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தராத காரணத்தால் இசுலாமியர்களில் கணிசமானோர் இந்தியா கூட்டணியை தமது  கூட்டணியாக பார்க்காமல் ஓவைசி தலைமையிலான மஜ்லிஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். இந்தியா கூட்டணி கட்சிகள் இசுலாமியர்களை தமக்கு வாக்களிக்கும் காமதேனுவாக பார்கிறார்களே ஒழிய இசுலாமியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்ற மனத்திட்பத்தை (poltical will) வெளிப்படுத்தவில்லை.

தேர்தலை ஓர் அரசியல் போராக பாவிக்கும் பாசக:

பாசக தேர்தலை எதிர்கொள்ளும் போது ஓர் அரசியல் போரை நடத்துவது போல்  முழுமூச்சுடனும் முழுமைப்படுத்தப்பட்ட வகையிலும் கையாள்கிறது. வெற்றி தோல்விகளில் இருந்து தவறாமல் படிப்பினையை எடுத்துகொள்கிறது. வலதுசாரி அரசியல் என்ற வகையில் ஒரு வலுவான மையத்தைக் கொண்டிருப்பதால் இது இலகுவில் சாத்தியமாகிறது. ஒன்றிய அரசின் அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு அடுத்து அடுத்து வரக் கூடிய மாநில சட்டப்பேரவை தேர்தல்களை ஒன்றிய அரசின் அதிகார விரிவாக்கமாக கருதுகிறது.  அதன் மைய நோக்கமான இந்து தேசத்திற்கு தேவையான அரசக் கட்டமைப்பு மாற்றங்களை செய்வதற்கு சேவை செய்யக்கூடிய ஒன்றாக தேர்தல்களை கருதுகிறது. தேர்தல் ஆணையத்தைக் கையில் போட்டுக் கொண்டு, தேர்தல் நேர பணக் கொடை,, சமூக பொறியமைவுடன் கூடிய கூட்டணி, எதிர்க்கட்சிகளை உடைத்தல், கூட்டணி உருவாக்கத்தை சீர்குலைத்தல், அமலாக்கத்துறை, நடுவண் புலனாய்வுத் துறை, தேசிய புலனாய்வு முகமை ஆகிய நிறுவனங்களின் வழியாக எதிர்க்கட்சிகளை முடக்குதல், ஊடகங்களை பாசகவின் தேர்தல் வெற்றிக்கு உழைக்கக் கூடிய ஊதுகுழலாக்குதல் என அடுக்கடுக்கான உத்திகளின் மூலம் தேர்தலில் வெல்வதை ஒர் திட்டவட்டமான இலக்காக கருதி பாசக செயல்படுகிறது.

சந்தர்ப்பவாத சக்திகளையும் தக்கவைத்தல்:

”மோடியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்க முடியாது” என்று சொல்லித்தான் நிதிஷ் குமார் தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு வெளியேறினார். பின்னர் 2024 ஆம் ஆண்டு தேர்தலின் போது இந்தியா கூட்டணிக்கு கால்கோள் இட்டது நிதிஷ்குமார்தான். ஆனால், இந்தியா கூட்டணியால் அவரை தக்க வைக்க முடியவில்லை. ஆனால், தேர்தல் வெற்றிக்கு நிதிஷ்குமாரின் கூட்டணி தேவை என்று முடிவுசெய்து கொண்ட பாசக நிதிஷ் குமாரை தமது கூட்டணிக்கு கொண்டு வர சிறிதும் தயங்கவில்லை, அதை சாத்தியப்படுத்தவும் செய்தது.

சந்திரபாபு நாயுடுவும் மோடியின் மீது விமர்சனம் வைத்து கூட்டணியில் இருந்து வெளியேறியவர்தான். ஆனால், அவரை 2024 மக்களவை தேர்தலில் கூட்டணிக்குள் கொண்டு வந்தது பாசக.

சிராஜ் பாஸ்வான், மாஞ்சி போன்றோரை கூட்டணியில் தக்க வைப்பதில் சாதுர்யத்தை வெளிப்படுத்தி வருகிறது பாசக. மாறாக காங்கிரசு – ஆர்.ஜே.டி. கூட்டணியால் புதிய நண்பர்களை சேர்த்துக் கொள்ளவும் முடியவில்லை; இருக்கும் கூட்டணியையும் வலுவான ஒன்றாக முன்னிறுத்தவும் முடியவில்லை.

முடிவாக, தேர்தல் ஆணையத்தைக் கைப்பற்றியதோடு தேர்தல் விதிமீறல்களை எல்லாவகையிலும் செய்துகொண்டு சிறப்பு தீவிர திருத்தம், வாக்குத் திருட்டு, வாக்குகளை விலைக்கு வாங்குவது என தேர்தல் சனநாயகத்தை சீரழிப்பதன் மூலம் ஆட்சியதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் பாசகவை இந்த களத்தில் முறியடிப்பதற்கு தேர்தல் சனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று தேவை.

நலவியத்தைக் கொள்கை வகையில் எதிர்த்துக் கொண்டே தேர்தல் வாக்குவங்கி அரசியலுக்காக நலவியக் கொள்கையை அழிவுக்குள்ளாகும் தன்மையில் அதை செயல்படுத்துகிறார் மோடி. இதை எப்படி முறியடிப்பது? இந்த இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தும் வகையில் கல்வி, நலவாழ்வு, போக்குவரத்து, மின்சாரம் ஆகிய இன்றியமையாத துறைகளில்  நலவிய அடிப்படையிலான மாற்று திட்டத்தை முன்வைக்க வேண்டும். மிக முக்கியமாக அத்திட்டம் சாத்தியப்படுத்தக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும்; மக்கள் ஏற்கும் வகையில் இருக்க வேண்டும்.

சமூகநீதி அரசியல் அல்லது மண்டல் அரசியலுக்குப் பேர் போனது பீகார் மண். அவ்வரசியலை முன்னெடுத்த கட்சிகளில் முக்கியமானது இராஷ்டிரிய ஜனதாதளம். ஆனால், சாதிகளைக் கனகச்சிதமாக ஒருங்கிணைப்பதன்மூலம் வாக்குகளை அறுவடை செய்து பீகாரில் வெற்றி வாகை சூட முடியும் என்று இவற்றுக்கு எல்லாம் நேரெதிரான கொள்கை கொண்ட பாசக காட்டியுள்ளது. இங்கும் அரைத்த மாவை அரைத்துக் கொண்டிருப்பதால் ஒரு பயனும் விளையப்போவதில்லை.

சமூகநீதி என்பது கல்வி, வேலைவாய்பில் இட ஒதுக்கீடு என்பதோடு சுருக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, உலகமய, தாராளமய, தனியார்மய கொள்கைகளால் கல்வி, வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு பொருள் இழந்து போய் உள்ளது. மேலும் உலகமய, தாராளமய, தனியார்மய கொள்கை நாடெங்கிலும் உள்ள சிறுகுறு விவசாயிகளிடையே நெருக்கடிய ஏற்படுத்தி தற்கொலை, விவசாயத்தை விட்டோடுதல், புலம்பெயர்வு, வேலையின்மை ஆகிய  விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சமூகநீதி அரசியல் என்பது விரிந்த பொருளில் பல்வேறு சாதி குழுக்களுக்கு அரசியல், பொருளாதாரத்தில் உரிய பங்கை உறுதிசெய்யும் அரசியல் என்ற பரிணாம வளர்ச்சி இன்று தேவைப்படுகிறது. மேலும் சிறு விவசாயிகளாகவும் சிறுகுழு சாதிகளாகவும் கிராமப்புறங்களில் நலிவுற்ற மக்கள் பிரிவினரின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் தீர்க்கமான விவசாய சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. எண்ணிக்கையில் பெரிய சாதிகள் மற்றும் சிறுகுறு சமூகங்களின் அரசியல் பொருளியல் விருப்பங்களை அறிந்து அவற்றை கோரிக்கையாக முன்வைக்க வேண்டும். இதிலும் புதிய சிந்தனையும் புதிய இலக்குகளும் தேவைப்படுகிறது. அப்போதுதான் பாசகவின் சமூக பொறியமைவு அரசியலை முறியடிக்க முடியும்.

இதை யார் செய்ய வேண்டும்? என்பதல்ல கேள்வி. இந்தியா கூட்டணி ஆனாலும் சரி பாசிச எதிர்ப்புக்கு இந்தியா கூட்டணி மாற்றல்ல என்று சொல்லும் ஏனைய பாசிச எதிர்ப்பு சனநாயக ஆற்றல்கள் ஆனாலும் சரி தேர்தல் சனநாயகத்தை மீட்பதும் மக்கள் நலவிய திட்டங்களை கொள்கைப் பற்றுடன் விரிவடையச் செய்வதும் சாதி சமய குழுக்களின் சனநாயக விருப்பங்களுக்கு உணர்வுபூர்வமாக முகங் கொடுபப்தும் பாசிச எதிர்ப்பு வேலைத் திட்டத்திற்கு முகன்மையானது என்பதுதான் பீகார் தேர்தல் கொடுக்கும் படிப்பினையாகும்.

  • தோழர் பாலன்
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW