லத்தீன் அமெரிக்கா வட அமெரிக்காவின் புழக்கடையாகுமா? – 3

07 Dec 2025

சாவேஸ் முன்னெடுத்த பொலிவாரிய மாற்று

2004 ஆம் ஆண்டு சாவேஸ் உருவாக்கிய ஆல்பா (ALBA) அதாவது “லத்தீன் அமெரிக்காவுக்கான பொலிவாரிய மாற்று” லத்தீன் அமெரிக்க நாடுகள் இடையே பரஸ்பர உதவிக்கும் பரிவர்த்தனைக்கும் வழி செய்தது. உலக வங்கி சர்வதேச நிதி நிறுவனம் ஆகியவற்றின் வட்டி விகிதம், நிபந்தனைகள் ஆகியவற்றுக்கு அடிபணிந்து நாட்டின் இறையாண்மையை காவு கொடுக்காமல் காப்பதற்காக, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு எளிமையாக பரஸ்பர உதவி வழங்கும் நிறுவனமாக ஆல்பா வளர்ந்தது. இதில் 23 நாடுகள் உறுப்பு வகிக்கின்றன.

ஓரியந்தே பல்கலைக்கழகத்தில் உரையாற்ற வந்த ஸ்டீவ் எலினார் என்ற பொருளாதார மற்றும் அரசியல் பேராசிரியர், “பல பத்தாண்டுகளாக எண்ணெய் வளத்தால் கிட்டிய இலாபம் மேல் தட்டு மக்களிடமே சென்று குவிந்ததை அறிந்த சாவேஸ், இப்போது அடித்தட்டு மக்கள் முன்னுரிமை பெறுவதை உறுதி செய்தார். சந்தைப் பொருளாதார விதிகளுக்கு உட்படாமல், அனைத்து மக்களுக்கும் தேவையான அடிப்படையான வசதிகள் சென்று சேர வழி அமைத்தார்.  நகரப் போக்குவரத்து வசதியை அனைவருக்கும் மிகக் குறைந்த செலவிலும், வயது முதிர்ந்தோருக்கு இலவசமாகவும் அரசு வழங்கியது. 

சாவேஸ் தொடங்கிய கூட்டுறவு சங்கங்கள் திருப்திகரமாக செயல்படவில்லை என்றாலும் கம்யூன்கள் அதாவது மக்கள் மன்றங்கள் மிக வெற்றிகரமாக செயல்படுகின்றன. மக்கள் தமக்கு சாதகமான திட்டங்களைப் பற்றி விவாதிக்கவும் அவற்றை நிறைவேற்றவும் முயல்கிறார்கள். மிக அசலான புத்திசாலித்தனமான ஆலோசனைகளை அளிக்கிறார்கள். அரசிலும் அறிவார்ந்தவர்கள்  இருப்பதால், இவை வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகின்றன. மக்கள் மன்றங்கள் (Community Councils) உணவுப் பகிர்வு, குறிப்பிட்ட பகுதியின் சிறப்புத் தேவைகள், குடும்பங்களின் குறிப்பான தேவைகள், என்பனவற்றை சரியாக அளவிட்டு அவற்றை வழங்குவதை உறுதி செய்கின்றன. இதனால் மக்கள் மன்ற கூட்டங்களுக்கு  மக்கள் தவறாமல் செல்கிறார்கள்.  வீடுகள் ஒதுக்கீடு, மராமத்துப் பணிகள், போன்றவை கூட இங்கு தான் முடிவு செய்யப்படுகின்றன. 

“வெனிசுவேலாவில் அரசு உழைக்கும் வர்க்கத்தின் மேலாண்மையை சாத்தியப்படுத்தியுள்ளது என்று மார்க்சிய ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இதனை மறுப்பது  ‘முதலாளித்துவ ஆளும் வர்க்கம்கூட புரட்சிகர திறமை உடையது’ என்று நம்புவதற்கு ஒப்பாகும்!” என்கிறார் ஜான் ரிடெல். (லிங்க்ஸ் இன்டர்நேஷனல் ஜனவரி, 2012).

வெனிசுவேலாவில் சாவேஸ் அரசும் பொலிவியாவில் மொராலெஸ் அரசும் உழைக்கும் மக்களின் அரசுகளே. இவை வட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முதலாளித்துவ சதியை முறியடிக்கப் போராடி வருகின்றன. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளன. முந்தைய அரசுகள் வாங்கிய கடனுக்காக ஐ.எம்.எஃப். திணிக்கும்  திட்டங்களை அமல்படுத்த மறுத்துவிட்டன. 

சமூக நலத் திட்டங்களை வெனிசுவேலாவில்  மக்கள் மன்றங்கள் (கம்யூன்கள்) அமுல்படுத்துகின்றன. பல தொழில்களை, தொழிற்சாலைகளை, சாவேஸ் நாட்டுடைமை ஆக்கியுள்ளார். ஏழை மக்களுக்கு ரேஷன் மூலம் உணவை மட்டும் இன்றி, ஒதுக்கீடு மூலம் இலவசமாக இலட்சக்கணக்கான வீடுகளையும் அவர் அடித்தட்டு மக்களுக்கு  வழங்கி உள்ளார். 

அவர் மேற்கொண்ட அயலுறவுக் கொள்கையும் லத்தின அமெரிக்க ஐக்கியத்தை சாத்தியமாக்கும் வகையில் ஆல்பா, மெர்கோசூர், செலாக், பாங்கோ தெல் சூர்  ஆகியவை ‘வட அமெரிக்க வட்டி வசூல் நிறுவனங்களை’ப் போலின்றி, பரஸ்பர உதவிக்கான பண்டமாற்று முறைகளை அமுல்படுத்தின என்கிறார் டிம் கே. 

(லிங்க்ஸ் இண்டர்நேஷனல், ஜனவரி 2012.)

சாவேஸ் உருவாக்கிய பாங்கோ தெல் சூர் (தெற்கத்திய நாடுகளுக்கான  வங்கி) தென் அமெரிக்க நாடுகளில் உணவு, எரிபொருள், சுகாதாரம், கல்வி, இயற்கை வளங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் பொருளாதார அதிகார அமைப்பாகும்.

அவர் ஏற்படுத்திய ஃபண்டோ தெல் சூர் தெற்கத்திய நாடுகளுக்கான பொது நிதி. சர்வதேச அளவில் நிலை தடுமாற்றம் ஏற்பட்டால், தென் அமெரிக்க நாடுகள் வலையமைப்பின் நிர்வாகத்திற்கும் பாதுகாப்பிற்கும் உதவும் பொதுநிதித் தொகுப்பாகும். 

சூக்ரே என்பது தென் அமெரிக்க நாடுகளின் நிதி அமைப்பை –  செலாவணியை – வலுப்படுத்தும் திட்டம். ஆல்பா நாடுகளின் உள்நாட்டு செலாவணியை வலுப்படுத்தி, இந்நாடுகளிடையே பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படும் நிதி ஆகும். 

 இந்த அமைப்புகள் பயன் தரும் காலம் வரை எதிரிகள் சாவேஸை உயிரோடு விட்டு வைக்கவில்லை (எத்கார்தோ லாந்தர், செப்டம்பர் 2014).

சாவேசின் அணுகுமுறை வெனிசுவேலாவில், முதலாளித்துவம் சோசலிசம் இரண்டுக்கும் அப்பால்  “மக்கள் பங்கேற்கும் – முக்கிய பாகம் வகிக்கும் ஜனநாயகம்”

(Participatory & Protagonist Democracy) என்ற பெயரில் ஒரு மூன்றாவது வகையை உருவாக்கியுள்ளது. இதில் இறையாண்மை மக்கள் வசமே இருப்பதால், பிரதிநிதித்துவ ஜனநாயகம் போல மறைமுகமாக அதனை பகிர வேண்டியது இல்லை என்றார் சாவேஸ்.

2013 ஆம் ஆண்டு சாவேஸ் கொல்லப்படுவதற்கு முன் 44,000 கம்யூன்கள் (மக்கள் மன்றங்கள்) நாடு முழுவதிலும் செயல்பட்டன. கம்யூன்களுக்கான அமைச்சகமும் உருவாக்கி செயல்படுத்தப்பட்டது. மக்கள் தமது முடிவெடுக்கும் உரிமையையும் திறமையையும் கொண்டு பல நிறுவனங்களை திறம்பட நிர்வகித்து உள்ளார்கள். 

2006 தேர்தல் வெற்றிக்குப் பின் சாவேஸ் தொலைக்காட்சியில் தோன்றி “அலோ பிரசிதெந்த்தே” என்ற  நிகழ்ச்சி மூலம் மக்களிடம் நேரடி தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். 2009 இல் கம்யூன் சட்டம் திருத்தப்பட்டு கம்யூன் தலைவர்கள் நேரடியாக  குடியரசுத் தலைவரிடம் பிரச்சனைகளைக் கூறும் வசதி ஏற்பட்டது. அரசியல் சாசனத்தின் படி  தேர்தலில் வென்று பதவியேற்கும் பிரதிநிதிகளுக்கு இணையாக, கம்யூன்களின் தலைவர்கள் நேரடியாக திட்டங்களை செயல்படுத்துகின்றனர். இவற்றுக்கான நிதி ஒதுக்கீடு நேரடியாக தேசிய நிதியிலிருந்து அளிக்கப்படுகிறது.  முனிசிபாலிட்டி போன்ற அமைப்புகளின் தலையீடு இதனால் தவிர்க்கப்பட்டு விடுகிறது.

அதே 2009 ஆம் ஆண்டில்  “கம்யூன்களின்  சொத்துக்களை நிர்வகிக்கும் நிறுவனங்கள்” (Enterprises of Communal Social Property) உருவாக்கப்பட்டன. இவை உள்ளூர் மட்டத்தில் உற்பத்தி, லாபம், விநியோகம், சேவை, ஆகியவற்றை நிர்வகிக்கும்  அமைப்பாக செயல்படுகின்றன. பல்லாயிரம் இபிஎஸ்சி க்கள்  பொதுமக்களின் போக்குவரத்து, உணவு உற்பத்தி, உணவு பதப்படுத்துதல் போன்ற தொழில்களை மேற்கொள்கின்றன. நாட்டின் எண்ணெய் உற்பத்தி நிலையம், (PDVSA) சமையல் எரிவாயுவை மக்கள் மன்றங்கள் மூலமாகவே விநியோகிக்கிறது.

(NACLA Report, Summer, 2013).

  மருத்துவம், தொலைபேசி வலைப்பின்னல், நகர்ப்புற நில உரிமை, படிப்பறிவித்தல் ஆகிய துறைகளின்  பணிகள் அடிமட்டத்தில் சமூகத்தின் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பின் மூலம்  நிறைவேற்றப்படுகின்றன. இவற்றில் செயல்பட்ட மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் எதிர்காலத்தைக் குறித்து முடிவெடுக்கும் திறமையை  மேம்படுத்தின. நெருக்கடி ஏற்பட்டால் இம்மக்கள் அனைவரும் இணைந்து போராடத் தயாராகவே உள்ளனர்.  

  • அமரந்தா
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW