தமிழக அரசு திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை நாளில் கலவரம் செய்ய தூண்டிய, கலவரம் செய்த இந்து முன்னணி, பாசகவினர் மீது வழக்குப் போட்டு குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்!

05 Dec 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி தமிழக அரசுக்கு கோரிக்கை

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை திருநாளில் ( 3-12-2025) பக்தர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் கலவரத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மற்றும் பாசகவினர் மீது தமிழக அரசு வழக்குப் போட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கால் பதிக்க நினைக்கும் பாசக திருப்பரங்குன்றத்தை ஒரு களமாக பாவித்து இந்து – முஸ்லிம் முரண்பாட்டை ஏற்படுத்தி, ஆளும் திமுக அரசு இந்துக்களுக்கு எதிராக இருக்கிறது என்றொரு கருத்தைக் கட்டமைத்து 2026 சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு வேட்டை நடத்த முடியுமா? என்று பார்க்கிறது.

முதலில் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று பெயர் மாற்றுகிறார்கள் என்ற பரப்புரையின் வழியாக இந்து முன்னணி -= பாசக நஞ்சைப் பரப்பியது.

பின்னர் சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக் கடன் செய்யக் கூடாது என்று இந்து முன்னணி – பாசகவினர் பிரச்சனை செய்து, நீதிமன்றத்திற்கு சென்று இதை தடை செய்யும் வகையில் ஒரு தீர்ப்பை பெற்றனர். இது இந்துப்பெரும்பான்மை வாதத்திற்கு கிடைத்த ஒரு சிறு வெற்றியாக அமைந்தது. இருப்பினும் தமிழ்நாடு அரசால் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது.

இப்போது சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் இருக்கும் ஓர் எல்லைக் கல்லில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற பிரச்சனையைக் கிளப்பி திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை நாளில் கலவரம் செய்துள்ளனர்.

இராம இரவிக்குமார் என்ற குற்றப் பின்னணி கொண்டவர் மூலமாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடுத்தது இந்து முன்னணி. சொல்லி வைத்தாற் போல் இவ்வழக்கு ஆர்.எஸ்.எஸ்.காரரான நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனிடம் கொடுக்கப்பட்டது. அவர் வழக்கில் உள்ள அனைத்து தரப்பு வழக்கறிஞர்களையும் அழைத்துக் கொண்டு செல்லாமல் தன்னிச்சையாக திருப்பரங்குன்றம் மலைக்கு சென்று ஆய்வு செய்து வந்தார். பின்னர், சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் இருக்கும் எல்லைக் கல்லை தீபத் தூண் என்று இட்டுக்கட்டி அங்கேயும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில் சிக்கந்தர் தர்காவை ஆக்கிரமிப்பு என்று சொல்லிவிட்டு எங்கே விளக்கு ஏற்ற வேண்டும் என்பது மரபு பற்றிய பிரச்ச்னையல்ல, உரிமை பற்றிய பிரச்சனை என்றும் புதிய விளக்கம் கொடுத்து தாமே இந்துப் பெரும்பான்மைவாதத்தின் தரப்பாக மாறிக் கொண்டார்.

திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு ஆர்.எஸ்.எஸ். இன் இந்த நாடகத்தைப் புரிந்து கொண்டு தீர்ப்பை செயல்படுத்த மறுத்து மேல்முறையீட்டுக்கு போனது. இத்துடன் முடியவில்லை ஆர்.எஸ்.எஸ். – இந்து முன்னணி – பாசகவினரின் சேட்டை.

மரபுப்படி உச்சி பிள்ளையார் கோவிலில் கார்த்திகை தீபத்தை ஏற்றியது கோயில் நிர்வாகம். உடனே, இந்து முன்னணி – பாசகவினர் கலவரத்தில் ஈடுபட்டு முருக வழிபாட்டுக்கு இடையூறு செய்தனர். காவல்துறையினரை தாக்கினர். வேறு வழியின்றி கார்த்திகை திருநாளும் அதுவுமாக திருப்பரங்குன்றம் மலையை சுற்றி 144 தடை உத்தரவைப் பிறப்பிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் மதுரை மாவட்ட ஆட்சியர்.

நீதிமன்ற அவமதிப்பு என்ற பெயரில் ஒரு வழக்கைப் போட்டு இரவு 6:05 க்கு அவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு 6:36 க்கு 13 பக்க திர்ப்பை வழங்கினார் ஜி.ஆர். சுவாமிநாதன். அதன்படி, நீதிமன்ற பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த ஒன்றிய தொழிற் பாதுகாப்புப் படையினர் புடை சூழ குற்றப் பின்புலம் கொண்ட இராம இரவிக்குமார் முருகப் பக்த வேடத்துடன் மலை உச்சிக்குப் போக வேண்டும் என்று காவல் துறையிடம் மல்லுக்கட்டினார். தமிழக அரசின் காவல் துறை எந்த சலசலப்புக்கும் இடம் கொடுக்காமல் ஒன்றிய தொழிற் பாதுகாப்புப் படையையும் இராம இரவிக்குமாரையும் தடுத்து நிறுத்திவிட்டது. இத்துடன் ஆர்.எஸ்.எஸ். – இந்து முன்னணி – பாசகவினர் தமது நாடகத்தை முடித்துக் கொள்ளவில்லை.

நேற்று ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய நீதிமன்ற அவமதிப்பு ஆணையை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த மனு மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரைணைக்கு வந்தது. இது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு. G. ஜெயச்சந்திரன், KK. இராமகிருஷ்ணன் அமர்வு நாம் எதிர்பார்த்த படியே வழக்கை தள்ளுபடி செய்து ஜி.ஆர். சுவாமிநாதனின் நீதிமன்ற அவமதிப்பு ஆணையை உயர்த்திப் பிடித்தது.

இதற்கிடையே ஜி.ஆர். சுவாமிநாதன் நீதிமன்ற அவமதிப்பு என்ற பெயரில் 144 தடை உத்தரவை ரத்து செய்து, மதுரை மாவட்ட காவல் ஆணையரின் பாதுகாப்புடன் இன்று தர்காவுக்கு அருகில் உள்ள கல்லில் விளக்கேற்ற வேண்டும் என்று ஆணையிட்டார்.

இப்போது பாசக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளிப்படையாக களமிறங்கி திருப்பரங்குன்றத்திற்கு சென்றார். தமிழ்நாடு அரசு இவ்வாணையையும் கேள்விக்குள்ளாக்கி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மேல்முறையீட்டுக்கு சென்றுவிட்டது. இதன் காரணமாக நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட எவரையும் மலையில் ஏற அனுமதிக்கவில்லை. அவர்களை தடுக்கும் நோக்கில் கைது செய்தது. ஒருவழியாக சங்கிகளின் அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ளது.

இவ்விசயத்தில் ஆர்.எஸ்.எஸ். – இந்து முன்னணி – பாசகவினரின் சதித்திட்டத்தை முறியடித்து இந்துப் பெரும்பான்மைவாதத்திற்கு பலியாகாமல் அரசமைப்பு சட்ட விழுமியங்களை உயர்த்திப் பிடித்த திமுக அரசின் செயல்பாடு பாராட்டுக்குரியது.

ஆர்.எஸ்.எஸ். – இந்து முன்னணி – பாசகவினருக்கும் இதில் பகுதி வெற்றி இருக்கிறது. அவர்கள் இலக்கு உச்சியில் தீபம் ஏற்றுவதோ முருக வழிபாடோ அல்ல, திமுகவை இந்து விரோத கட்சி என்று முத்திரையிட்டு தேர்தலில் வாக்கு அறுவடை செய்வதுதான். எனவே, அவர்களது பொய்ப் பரப்புரையை முறியடிப்பது இன்றியமையாததாகும்.

இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரன், பாசக தலைவர்களான வானதி சீனிவாசன் இராம சீனிவாசன் உள்ளிட்டோர் 1947 க்கு முன்பு சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் எல்லைக் கல்லில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது என்றும் அங்கே விளக்கேற்ற சொல்லி உயர்நீதிமன்றம் 1996 இல் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது என்றும் பொய் பரப்புரையை மேற்கொண்டு கலவரத்தை தூண்டினர். எனவே, இந்து முன்னணி – பாசகவினர் மீது கலவரத்தை தூண்டியவர்கள் என்ற அடிப்படையில் வழக்கு தொடுக்க வேண்டும்.

ஏற்கெனவே ஆளுநர் பதவியை வைத்து ஆர்.எஸ்.எஸ் ஐ சேர்ந்த ஆர்.என்.ரவி தமிழக அரசுக்குப் போட்டியாக ஆட்சி நடத்த முயன்று கொண்டிருப்பதன் தொடர்ச்சியாக நீதிபதி என்ற போர்வையில் ஜி.ஆர். சுவாமிநாதன் நேற்று தமிழ்நாட்டில் போட்டி அரசாங்கம் நடத்த முயன்றுள்ளார். ஒன்றிய தொழிற் பாதுகாப்புப்; படையை அனுப்பி தமிழ்நாடு அரசுக்கும் காவல் துறைக்கும் போட்டியாக செயல்பட முனைந்துள்ளார். ஏற்கெனவே பல்வேறு தீர்ப்புகளின் வாயிலாக அவர் ஓர் ஆர்.எஸ்.எஸ். பேர் வழி என்பதும் நீதிபதியாக இருப்பதற்கே தகுதியற்றவர் என்பதும் அம்பலமாகி இருக்கும் நிலையில் திமுக பங்கேற்றிருக்கும் இந்தியா கூட்டணி நாடாளுமன்றத்தில் ஜி.ஆர். சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை ( Impeachment ) முன்வைக்க வேண்டும்.

சிக்கந்தர் தர்காவில் நேர்த்திக் கடன் செய்வதற்கான உரிமையை மீட்க வேண்டிய வழக்கிலும் ஜி.ஆர். சுவாமிநாதனின் கார்த்திகை விளக்கேற்றும் தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டு வழக்கிலும் தமிழ்நாடு அரசு திறம்பட வாதாடி ஆர்.எஸ்.எஸ். இன் சதியை முறியடிக்க வேண்டும்.

சிக்கந்தர் தர்காவில் வழிபாடு நடத்துவோர் நேர்த்திக் கடன் செய்வோர் சில ஆயிரம் பேரோ அல்லது அதற்கும் குறைவானவர்களாகவோ இருக்கலாம். அவர்கள் அரசமைப்புச் சட்டப்படி இந்துவாகவோ அல்லது இசுலாமியராகவோ இருக்கலாம். ஆனால், அவர் எந்த சமயத்தவராக இருந்தாலும் அங்கு வழிபடக் கூடிய மிகச் சிறுபான்மையினரது நம்பிக்கையும் வழிபாட்டுரிமையும் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள புனிதமான உரிமையாகும். அது எதன் பெயராலும் மீறப்படலாகாது என்ற நவீன சனநாயக விழுமியத்தையும் இதுவரை காலம் பேணி வந்த சக வாழ்வுப் பண்பாட்டையும் தமிழ்நாட்டு மக்கள் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

இந்து முன்னணி – பாசகவினரின் திருப்பரங்குன்ற சதியை முறிய்டிக்கும் வகையில் மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு தொடக்கம் முதலே செயலாற்றி வருகிறது. அக்கூட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். சனநாயக ஆற்றல்கள் அனைத்து வழிகளிலும் சங்கிகளின் சதி திட்டங்களை மக்களிடம் அம்பலப்படுத்தும் வகையில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

தமிழ்நாடு இந்துப் பெரும்பான்வாதத்திற்கு பலியாகி விடாமல் சாதி, சமயங் கடந்த தமிழர் ஒற்றுமையை உயர்த்திப் பிடித்து தமிழ்நாட்டின் காலை சுற்றியுள்ள பாசக என்ற நச்சரவத்தின் பல்லைப் பிடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

 தோழமையுடன்,
 தி. செந்தில்குமார்,
ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்த்தேச மககள் முன்னணி                                                  9941931499
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW