பீகாரில் தேர்தல் ஆணையம் நடத்திய சிறப்பு தீவிர வாக்காளர் சரிபார்ப்பு (SIR) ஒரு வாக்குரிமைப் பறிப்பு நடவடிக்கை! மோடி ஆட்சியின் மாபெரும் சனநாயகப் படுகொலை!

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை
கடந்த செப்டம்பர் 30 ஆம் நாள் வெளியிடப்பட்ட வாக்காளர் இறுதிப் பட்டியலில் சுமார் 47 இலட்சம் வாக்காளர்கள் (6%) பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதை சுற்றி பற்பல விடையளிக்கப்படாத கேள்விகள் இருக்கும் பொழுதே தேர்தல் ஆணையம் நவம்பர் 6, 11 என இரண்டு கட்டங்களாக பீகார் சட்டப்பேரவை தேர்தலை நடத்தும் முனைப்பில் உள்ளது.
இதற்கிடையே கடந்த அக்டோபர் 7 ஆம் நாள் சனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் ( Assoiciation of Democratic Reforms ADR), 2003 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிர சரிபார்ப்பின்போது கடைபிடிக்கப்பட்ட வழிகாட்டு நெறிகளின் 62 பக்க தொகுப்பைக் கண்டுபிடித்து உச்சநீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது. அப்போது செய்யப்பட்ட SIR க்கும் இப்போது செய்யட்டுள்ள SIR க்கும் அடிப்படையிலேயே வேறுபாடு உள்ளது என்று அம்பலப்படுத்தியுள்ளது. வாக்குரிமையை உறுதிசெய்யும் முறையில் அடிப்படைக் கட்டமைப்பையே மாற்றிவிட்டது மோடியின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையம்.
- 2003 இன் விதிகளின்படி குடியுரிமையை சரிபார்க்கும் பொறுப்பு தேர்தல் ஆணையத்தினுடையது அல்ல. குடியுரிமை தீர்ப்பாயம் ஒருவரை குடிமகன் இல்லை என்று சொல்லியிருந்தாலோ அல்லது வெளிநாட்டவர் அதிகம் வாழும் பகுதி என்று மாநில அரசு வரையறுத்திருந்தாலோ அங்கு மட்டுமே குடியுரிமை இருக்கிறதா? என்று சரிபார்க்க வேண்டும். மற்றபடி, எந்தவொரு நபரையும் குடிமகன் என்ற முன்முடிவுடனே அணுக வேண்டும். ஆனால், இப்போதோ ஒருவர் கட்டாயம் தனது குடியுரிமைக்கு சான்றுகாட்டி மெய்ப்பிக்க வேண்டும் என்ற விதியை செயல்படுத்தியுள்ளது தேர்தல் ஆணையம்.
- வாக்காளரிடம் இருந்து படிவத்தை நிரப்பிப் பெற வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கே உரியது. தேர்தல் ஆணையத்தில் இருந்து அதிகாரிகள் வீடுவீடாக சென்று வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு அந்த வாக்காளர் உயிருடன் இருக்கிறாரா? புலம் பெயர்ந்துவிட்டாரா? என்று சரிபார்ப்பதும் புதிதாக யாரையும் பட்டியலில் சேர்க்க வேண்டுமா? என்று பார்க்க வேண்டும். படிவத்தை நிரப்பிப் பெற வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணைய அதிகாரிக்குதானே ஒழிய வாக்காளருக்கு இல்லை. இப்போது இது தலைகீழாக நடக்கிறது. வாக்காளர் ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் படிவத்தை நிரப்பி, உரிய சான்று ஆவணங்களை இணைத்துக் கொடுக்காவிட்டால். அவரது வாக்குரிமைப் பறிக்கப்படும் என்று தேர்தல் ஆணையத்தின் செயல்வழியில் அடிப்படை கட்டமைப்பே மாற்றப்பட்டுள்ளது.
- 2003 சரிபார்ப்பின் போது வயது, முகவரி ஆகியவற்றை உறுதிசெய்யும் பொருட்டுதான் ஆவணங்கள் கேட்கப்பட்டிருக்கிறதே ஒழிய குடியுரிமையை மெய்ப்பிப்பதற்கு ஆவணம் கேட்கப்படவில்லை. இப்போது வாக்குரிமையைப் பெறும் பொறுப்பு முழுக்கவும் குடிமக்களின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.
- 2003 இன் போது ஒருவரது பெயர் முந்தைய வாக்காளர் பட்டியலில் இருந்தால் அவருக்கு எவ்வித சரிபார்ப்பும் செய்யப்படாமல் அவரது பெயரைப் புதிய பட்டியலிலும் தக்க வைத்துள்ளது தேர்தல் ஆணையம். ஆனால், இப்போதைய சரிபார்ப்பு நடவடிக்கையில், 2003 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியில் இருந்தால்தான் அதை அப்படியே ஏற்றுக்கொள்வது என்றும் அதற்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்கள் தமது ஆவணங்களைக் கொடுத்து குடியுரிமையை மெய்ப்பித்து வாக்குரிமையைப் பெற வேண்டும் என்றும் செயல்படுத்தியுள்ளது தேர்தல் ஆணையம். அதாவது, அவர்கள் குடியுரிமையை சான்றுகள் தந்து மெய்பிக்க வேண்டும்! தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அட்டையை ஒரு சான்றாக தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளாது.
- 2003 ஆம் ஆண்டு செய்யப்பட்ட சரிபார்ப்பு நடவடிக்கை 2002 சூன் மாதத்தில் இருந்து 2003 சனவரி மாதம் வரை என 6 மாதங்கள் நடைபெற்றுள்ளது. 2002 சூலை 15 இல் இருந்து 2002 ஆகஸ்ட் 16 வரை படிவங்களைப் பெற்ற தேர்தல் ஆணையம், 2002 அக்டோபர் 16 ஆம் நாள் வரைவுப் பட்டியலையும் சனவரி 6, 2003 இல் இறுதிப் பட்டியலையும் வெளியிட்டது. இப்போதைய சரிபார்ப்பு நடவடிக்கையில் சூன் 24 இல் தொடங்கி செப்டம்பர் 30 க்குள் ஒட்டுமொத்த வேலையையும் முடித்துவிட்டது. ஆனால், 2003 SIR விதிகள் வெளிவரும்வரை முந்தைய சரிபார்ப்பு நடவடிக்கைக்கு எடுத்த அதே காலத்தை தான் இப்போதும் எடுத்துக் கொள்கிறோம் என்று உச்சநீதிமன்றத்தில் சத்தியம் செய்து கொண்டிருந்தது தேர்தல் ஆணையம். உண்மையில், இப்போது எடுத்துக்கொண்ட காலத்தைவிட இரண்டு மடங்கு அதிகமான காலம் முன்பு எடுக்கப்பட்டுள்ளது.
- அது மட்டுமின்றி, அப்போது பீகார் சட்டப்பேரவை தேர்தல் 2005 ஆம் ஆண்டு தான் நடைபெற்றது. தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு SIR மேற்கொள்ளப்பட்டது. இப்போது தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்கும் போது இந்த வேலையை அவசர அவசரமாக செய்து பெருந்திரளானோரின் வாக்குரிமையைப் பறித்துள்ளது தேர்தல் ஆணையம்.
2003 ஆம் ஆண்டு கடைபிடிக்கப்பட்ட விதிகள் தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் இல்லை. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட போது அதை கொடுக்க மறுத்துவிட்டது தேர்தல் ஆணையம். இதை நீதிமன்றத்திற்கும்கூட காட்டாமல் மோசடி செய்துள்ளது தேர்தல் ஆணையம்.
இதனால் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் ஏராளம்.
- பீகாரில் அரசின் கணக்குப்படி 18 வயதுக்கு மேற்பட்டோரது எண்ணிக்கை சுமார் 8.22 கோடி. 2025 மக்களவை தேர்தலின் போது பீகாரின் வாக்காளர் எண்ணிக்கை 7.89 கோடி. உண்மையில் இத்தகைய சரிபார்ப்பு நடவடிக்கையால் எண்ணிக்கை கூடியிருக்க வேண்டும். மாறாக இறுதிப் பட்டியலின் எண்ணிக்கை 7.42 கோடி. அதாவது சுமார் 47 இலட்சம் குறைந்திருக்கிறது! 5.95% வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
- வரைவுப் பட்டியல் வெளியிட்டபோது வாக்காளர் எண்ணிக்கை 7.24 கோடி பேர். அப்போது 65,75,222 பேர் நீக்கப்பட்டிருந்தனர். ஆனால், இறுதிப் ப;ட்டியலின் போது ஏற்கெனவே சேர்க்கப்பட்டிருந்தவர்களில் 3,25,000 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஏன் நீக்கப்பட்டார்கள் – இறப்பா? புலம்பெயர்வா? வெளிநாட்டுக்காரரா? என்ற காரணத்தைக் கொடுக்க மறுக்கிறது தேர்தல் ஆணையம். மேலும் இதில் எத்தனை பேர் உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை என்ற காரணத்திற்காக நீக்கப்பட்டவர்கள்?
- 21.53 இலட்சம் பேர் படிவம் 6 இன் வழியாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் எத்தனை பேர் புதிய வாக்காளர்கள் ? எத்தனை பேர் பெயர் நீக்கம் செய்யப்பட்ட பட்டியலில் இருந்த்தால் மேல்முறையீடு செய்தவர்கள்? என்ற விவரங்களைத் தர மறுக்கிறது தேர்தல் ஆணையம். புதிதாக சேர்க்கப்பட்டவர்களில் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் 40%. ஆனால், 18-19 வயதுக்குள் இருப்பவர்கள் வெறும் 20% தான். இது முரண்பாடான ஒன்றாக உள்ளது.
- புலம்பெயர்ந்தவர்களில் ஆண்கள்தான் அதிகம். ஆனால், நீக்கப்பட்டவர்களில் ஆண்களைவிடவும் பெண் வாக்காளர்கள் அதிகமாக நீக்கப்பட்டுள்ளனர்!
- மிக துல்லியான நடவடிக்கை இது என்று பீற்றுகிறது தேர்தல் ஆணையம். ஆனால் வரைவுப் பட்டியலில் இருந்த போலி வாக்காளர் எண்ணிக்கை 4.9 இலட்சமாக இருந்தது. இப்போது இறுதிப் பட்டியலிலோ 5.24 இலட்சம் பேர் ஒரே பெயர், ஒரே முகவரியோடு இருக்கின்றனர்!
- வெளிநாட்டுக்காரர்கள் அதிகம் இருக்கிறார்கள். அவர்களை நீக்குவதற்குத்தான் இந்த நடவடிக்கை என்றது தேர்தல் ஆணையம். ஆனால், இறுதிப் பட்டியலை வெளியிடும் போது, நீக்கப்பட்டவர்களில் எத்தனை பேர் வெளிநாட்டார் என்ற விவரத்தை வெளியில் சொல்லவில்லை தேர்தல் ஆணையம்.
- எது நடக்கக் கூடும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டதோ அதுவும் நடந்துவிட்டது. நீக்கப்பட்ட 3,25,000 பேர்களில் 32.1% இசுலாமியர்கள். சீமாஞ்சல் பகுதி இசுலாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. அதில் இசுலாமியர்களின் பெயர்கள் அதிகமாக நீக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒருவரின் வாக்குரிமை கேள்விக்கு உள்ளாகும் பட்சத்தில், அவர் இசுலாமியராக இருந்தால் அவர் பெயர் நீக்கப்படுவதற்கு 6.38% வாய்ப்பு இருக்கிறது. இசுலாமியர் அல்லாதவராக இருந்தால் அவர் பெயர் நீக்கப்படுவதற்கு 4.18% வாய்ப்பு இருக்கிறது. அதாவது ஓர் இசுலாமியர் அல்லாதவரை விட இசுலாமியரின் பெயர் நீக்கப்படுவதற்கு இரண்டு மடங்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
- நீக்கப்பட்ட வாக்காளர்களில் வெறும் 15 தொகுதிகளில் 10% பேர் இருக்கின்றனர். எனவே, இதில் சில தொகுதிகள் குறி வைக்கப்பட்டுள்ளனவா? என்ற ஐயமும் எழுகின்றது.
நீதிமன்றமோ சிக்கலின் தீவிரத் தன்மையை உணராமல் விசாரணை செய்து கொண்டிருக்கிறது. தேர்தல ஆணையம் நவம்பர் முதல் வாரத்தில் தேர்தலை நடத்த முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்தியா கூட்டணி கட்சிகளோ தவறான வாக்காளர் பட்டியலோடே தேர்தலை சந்திக்கப் போகின்றன.
நம் நாட்டில் ஒரு பெருந்திரளானோரின் வாக்குரிமைப் பறிக்கப்பட்டிருப்பதைவிடவும் பெரிய பிரச்சனை வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனால். எதிர்க்கட்சிகளோ உச்சநீதிமன்றத்திற்கு அப்பால் உரிமைப் போராட்டங்களைக் கொண்டு செல்வது பற்றிய எண்ணம் சிறிதும் இல்லாமல் இருக்கின்றன.
இந்த SIR நடவடிக்கை பீகாரோடு முடியப்போவதில்லை. நாடு முழுக்க நடக்கவிருக்கிறது. தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மேற்கு வங்கத்திலும் பஞ்சாப்பிலும் என அனைத்து மாநிலங்களிலும் நடக்கவிருக்கிறது. மேற்கு வங்கத்தில் நடத்தும் போது அவர்கள் தம்மை வங்கதேசத்தவர்களோ மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியாக்களோ இல்லை என்று மெய்ப்பிக்க வேண்டும். பஞ்சாபில் நடத்தும் போது அவர்கள் தாம் பாகிஸ்தானியர்கள் அல்ல என்று மெய்ப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில் நடக்கும் போது சிறிலங்காவில் இருந்தும் பர்மாவில் இருந்தும் தாயகம் திரும்பியவர்கள் தமது சான்று ஆவணங்களைக் காட்டித்தான் வாக்குரிமைப் பெற முடியும். எல்லா இடங்களிலும் விளிம்பு நிலை மக்கள் ஆவணங்கள் இல்லாமல் அல்லாடுவார்கள். தேர்தல் ஆணைய அதிகாரி எல்லா சான்றுகள் இருந்தாலும் ஏதாவது ஒரு காரணத்தின் பெயரால் வாக்குரிமையை மறுப்பார். சட்ட வகையில் வாக்காளர் நீக்கம் செய்வதற்கான ஒரு வேலைத் திட்டமாக இந்த SIR இருக்கப் போகின்றது. அதாவது, பீகாரில் நடத்தப்பட்ட வாக்குரிமைப் பறிப்பு நடவடிக்கையை நாடு முழுக்கவும் தொடரப் போகிறது தேர்தல் ஆணையம்.
நாடாளுமன்ற சனநாயகத்தை செங்கல் செங்கல்லாக பெயர்த்து வருகிறது மோடி அரசு. நாடாளுமன்ற சனநாயகத்தின் மீது மோடி அரசு நடத்திவரும் தாக்குதல்களிலேயே மிகப் பெரிய தாக்குதல் இதுதான். உண்மையில் மோடி அரசு செய்துள்ள மாபெரும் சன்நாயகப் படுகொலை இதுவாகும்.
SIR க்கு எதிராக பாசிச எதிர்ப்பு ஆற்றல்கள் கிளர்ந்தெழுந்து போராடுவது இப்போதைய உடனடி அவசர தேவை என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக வலியுறுத்துகிறோம்.
தோழமையுடன்,
தி. செந்தில்குமார்,
ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்த்தேச மககள் முன்னணி
9941931499