அமைதியை நிலைநாட்டுமா ட்ரம்பின் திட்டம்? -ரியாஸ்

08 Oct 2025

ஃபலஸ்தீன விவகாரத்தில் அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் தங்களுக்கு அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்ள அமெரிக்க அதிபர்கள் உலகின் முன் அரிதாரம் பூசுவது வழக்கம். குறிப்பாக, 1970களில் ஜிம்மி கார்டர் காலம் தொட்டு இந்த கதை தொடர்ந்து வருகிறது. இந்த வரிசையில் ஏற்கெனவே இணைந்துவிட்ட டொனால்ட் ட்ரம்ப் அதில் தான் அதிக முனைப்புடன் உள்ளதாக காட்டிக் கொள்ள அதிகமான பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறார். இவ்வருடம் பிப்ரவரி மாதம் ரியல் எஸ்டேட் அதிபர் போல் ஒரு திட்டத்தை முன் வைத்த ட்ரம்ப், தற்போது இருபது அம்ச திட்டத்தை முன் வைத்துள்ளார். வாஷிங்டன் சென்ற இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உடனான சந்திப்பிற்கு பிறகு இந்த திட்டத்தை அவர் வெளியிட்டார். அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் ட்ரம்பின் திட்டத்தை வரவேற்று ஏற்றுக் கொண்டுள்ளன.

எஞ்சியுள்ள பிணைக் கைதிகளையும் இறந்த பிணைக் கைதிகளின் உடல்களையும் ஹமாஸ் ஒப்படைக்க வேண்டும், இஸ்ரேலிய சிறைகளில் உள்ள 250 ஃபலஸ்தீன ஆயள் சிறைவாசிகளையும் தடுப்புக் காவலில் உள்ள 1700 ஃபலஸ்தீனியர்களையும் இஸ்ரேல் விடுவிக்க வேண்டும், காஸாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்யாது, காஸாவில் உள்ள மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட மாட்டார்கள், இரு தரப்பினரும் ஒப்புக் கொண்ட பின் போர் உடனடியாக முடிவுக்கு வரும் உள்ளிட்ட விசயங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

காஸாவை ஒரு சுற்றுத்லாத் தலமாக மாற்றப் போகிறேன், காஸாவில் வாழும் 23 இலட்சம் ஃபலஸ்தீனியர்களை எகிப்திற்கும் ஜோர்டானுக்கும் அனுப்ப வேண்டும் என்று பிப்ரவரி மாதம் ஒரு முட்டாள்தனமான திட்டத்தை முன்வைத்து பின்னர் பின்வாங்கிய ட்ரம்ப், காஸாவின் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று தற்போது கூறியிருப்பதுடன் அங்குள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக அப்பகுதி மறுகட்டமைப்பு செய்யப்படும் என்றும் மனிதாபிமான உதவிகள் உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

பிணைக் கைதிகள் விடுதலை, இஸ்ரேலின் வெளியேற்றம் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டுள்ள ஹமாஸ், பிணைக் கைதிகள் விடுதலையையும் இறந்தவர்களின் சடலங்களை ஒப்படைப்பதையும் 72 மணிநேரத்திற்குள் செய்ய முடியாது என்று கூறியுள்ளது. இடிபாடுகளின் கீழ் சிக்கியுள்ள சடலங்களை எளிதாக வெளியே எடுக்க முடியாது என்று அதற்கான காரணத்தையும் கூறியுள்ளது.

ஒவ்வொரு  சமாதான உடன்படிக்கையின் போதும் கைதிகளை விடுதலை செய்யும் இஸ்ரேல், அடுத்த சில தினங்களில் தான் விடுதலை செய்ததை விட அதிக எண்ணிக்கையிலான மக்களை கைது செய்து சிறையில் தள்ளுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அதனால் கைதிகள் விடுதலை எந்தளவிற்கு உபயோகமான பலனைத் தரும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

‘கடந்த ஆறு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மூன்று இஸ்ரேலிய தாக்குதல்கள், எட்டு ஆண்டுகால பொருளாதார தடை ஆகியவை ஏற்கெனவே பலகீனமாக உள்ள காஸாவின் உட்கட்டமைப்பை நாசமாக்கியுள்ளன. அதன் உற்பத்தி தளம் சிதைக்கப்பட்டுள்ளது. அர்த்தமுள்ள பொருளாதார மறுகட்டமைப்பு அல்லது பொருளாதார மீட்சிக்கான எந்த வாய்ப்பும் விட்டுவைக்கப்படவில்லை. காஸாவின் ஃபலஸ்தீன மக்கள் வறுமையில் உள்ளனர். அவர்களின் பொருளாதார நிலை இரண்டு தசாப்தங்களுக்கு முன் உள்ள நிலையை விட மோசமாக உள்ளது.’

மேலே குறிப்பிட்டுள்ள கருத்துகளை 2015இல் முன்வைத்த ஐக்கிய நாடுகள் சபை, இதே நிலை நீடித்தால் 2020இல் காஸா வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறிவிடும் என்று எச்சரித்தது. 2008-09, 2012, 2014 காலகட்டங்களில் காஸாவின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களையே ஐ.நா. சபை குறிப்பிட்டுள்ளது. இதற்குப் பின் 2018, 2021, 2022 வருடங்களிலும் காஸாவின் மீது கடும் தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டது. அதன் பின் தற்போதைய தாக்குதல்கள் தொடங்கின. 2015லேயே காஸாவின் நிலை அவ்வளவு மோசமாக இருந்ததென்றால் தற்போது 90 சதவிகிதம் கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டுள்ள அப்பகுதி எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. முற்றிலும் அழிக்கப்பட்டுள்ள ஒரு பிரதேசத்தில் மனிதாபிமான உதவிகளையும் கட்டமைப்பு நடவடிக்கைகளையும் இவர்கள் எப்படி மேற்கொள்ள உள்ளார்கள்? கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களை காஸாவிற்குள் அனுமதிக்காத இஸ்ரேலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதும் ட்ரம்பின் திட்டத்தில் கூறப்படவில்லை.

இது தவிர, காஸாவின் எதிர்கால நிர்வாகம் குறித்த முக்கிய திட்டங்களும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. பயங்கரவாதமற்ற பிரதேசமாக காஸா மாற்றப்படும், ஆயுதங்களை ஒப்படைக்கும் ஹமாஸ் படையினருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் அல்லது அவர்கள் வெளிநாடுகளுக்கு பாதுகாப்பாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள், எதிர்கால அரசாங்கத்தில் ஹமாஸ் அமைப்பிற்கு இடம் இருக்காது, அதன் ஆயுதங்கள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அனைத்து வித நாசகார நவீன ஆயுதங்களையும் இஸ்ரேல் தன்னுடைய கைவசம் வைத்துள்ள நிலையில் அதை குறித்து எதுவும் பேசாமல் ஃபலஸ்தீனியர்களின் ஆயுதங்களை அழிக்க வேண்டும் என்று கூறியுள்ளதை ஹமாஸ் உள்ளிட்ட போராளிகள் ஏற்றுக் கொள்வதற்கான சாத்தியங்கள் மிக குறைவாகவே உள்ளன. ஆயுதங்களை ஒப்படைத்த பிரிவினர் எவ்வாறு முற்றிலும் அழிக்கப்பட்டார்கள் என்பதை உலக வரலாறு தெளிவாகவே எடுத்துக் கூறுகிறது.

2005இல் இருந்து ஒவ்வொரு முறை காஸாவின் மீது தாக்குதல் நடத்தும் போதும் ஹமாஸ் இயக்கத்தை அழிப்பதே இத்தாக்குதலின் முக்கிய நோக்கம் என்று இஸ்ரேல் கூறி வந்தது. தற்போதும் அதையே கூறுகிறது. ஆனால் அதில் சிறிதளவு வெற்றியைக் கூட இஸ்ரேல் பெறவில்லை என்பதை இந்த முன்வரைவு மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இஸ்ரேல் எதிர்காலத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து எதுவும் கூறப்படாத நிலையில் ஃபலஸ்தீனியர்களை நிராயுதபாணியாக நிறுத்தும் இந்த புள்ளியில் ட்ரம்பின் நயவஞ்சகத்தனம் எட்டிப் பார்க்கிறது.

சர்வதேச குழுவின் கீழ் அமைக்கப்படும் ஃபலஸ்தீன வல்லுநர் குழுவின் வசம் காஸாவின் நிர்வாகம் ஒப்படைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ‘அமைதி வாரியம்’ என்று சர்வதேச குழுவிற்கு பெயர் சூட்டியுள்ள ட்ரம்ப் அதன் தலைமை பதவியை தன்வசம் வைத்துள்ளார். முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் சர்வதேச குழுவில் இருப்பார் என்பது கூடுதல் செய்தி. வல்லுநர் குழுவிடம் நிர்வாகத்தை ஒப்படைப்பதை ஒப்புக் கொண்டுள்ள ஹமாஸ், ஃபலஸ்தீனியர்களை ஆட்சி செய்யும் அதிகாரத்தை வெளி நபர்களுக்கு அளிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.

2003இல் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் உள்ளதாக் கூறி கொடும் தாக்குதலை அமெரிக்க அதிபர் புஷ் தொடங்கிய போது, அதனை ஆமோதித்து இங்கிலாந்தை போரில் ஈடுபடுத்தி, ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலையில் துணை நின்ற பிளேர், ஃபலஸ்தீன விவகாரத்தில் இழைத்த துரோகங்களையும் நயவஞ்சகத்தையும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. 2006 தேர்தலில் வெற்றி பெற்ற ஹமாஸ் இயக்கத்திற்கு எதிராக ஃபத்தாஹ் அமைப்பினருக்கு கொம்பு சீவி விடும் வேலையை அமெரிக்காவும் இஸ்ரேலும் இங்கிலாந்தும் செய்தன. இதன் காரணமாக காஸாவில் உள்நாட்டு யுத்தமும் ஏற்பட்டது.

2002இல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ஃபலஸ்தீன அமைதிக்கான தனது திட்டத்தை முன் வைத்தார். ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய படைகளை குறைப்பது, ஃபலஸ்தீனியர்களுக்கான ஒரு பொருளாதார திட்டம் ஆகியவை அதில் முன்வைக்கப்பட்டன.இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணி ஐ.நா., அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் ஆகிய நால்வர் அணியிடம் வழங்கப்பட்டது. 2007இல் மத்திய கிழக்கிற்கான (மேற்கு ஆசியா) சிறப்பு தூதுவராக பிளேரை இந்த நால்வர் குழு நியமித்தது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்த உடன் பிளேருக்கு இந்த பதவி வழங்கப்பட்டது. ஜெரூஸலம் நகரத்தின் அமெரிக்கன் காலனி ஹோட்டலின் ஒரு பகுதியை தனது தலைமையகமாக பிளேர் தேர்ந்தெடுத்தார்.

தலைமையக வாடகை, பிளேர் சம்பளம் என ஒரு பெருந்தொகை செலவானதை தவிர உருப்படியாக எதுவும் நடைபெறவில்லை. (இது தவிர, அமெரிக்க வங்கியான ஜேபி மோர்கனில் பகுதி நேர மூத்த ஆலோசகராகவும் பணியாற்றினார் பிளேர். இதற்காக அவருக்கு வருடத்திற்கு பத்து இலட்சம் அமெரிக்க டாலர் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது). முழு இஸ்ரேலிய வெளியேற்றம், யூத காலனிகள் உருவாக்கத்தை நிறுத்துவது, இரு நாடு தீர்வு என வெளியுலகிற்கு முகத்தை காட்டினாலும் ‘அகண்ட இஸ்ரேல்’ என்ற இஸ்ரேலின் தன்னிச்சையான நோக்கத்திற்கு இத்திட்டம் உதவியாக இருந்தது.

2009இல் மேற்குக் கரையில் இரண்டாவது மொபைல் நிறுவனமான ‘வதனிய்யா மொபைல்’ தொடங்கப்படுவதற்கான அலைக்கற்றைகளை இஸ்ரேலிடமிருந்து பெற்றுக் கொடுத்ததை தனது ஒரே சாதனையாக பிளேர் கூறி வந்தார். ஆனால், இதற்கான விலை கொஞ்ச நஞ்சமல்ல. டிசம்பர் 2008 – ஜனவரி 2009இல் காஸாவின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏறத்தாழ 1400 ஃபலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கான போர் குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளை ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து பின்வாங்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே  இந்த அலைக்கற்றைகள் கொடுக்கப்பட்டன. இந்த ஒப்பந்தத்தில் ஜேபி மோர்கனும் கொழுத்த இலாபம் சம்பாதித்தது.

இது தவிர, வேறு சில தனியார் நிறுவனங்களையும் பிளேர் நடத்தி வருகிறார். காஸாவில் மேற்கொள்ளப்படும் மறுகட்டமைப்பு பணிகளில் இந்த நிறுவனங்களின் பங்கு இல்லாமல் இருக்குமா? 

ஃபலஸ்தீன விவகாரத்தில் பலன் அளிக்காத மேற்கத்திய நாடுகளின் திட்டங்கள், இஸ்ரேலுக்கு துணை போகும் வகையிலும் அதனை பாதுகாக்கும் வகையிலும் செயல்படுத்தப்பட்டன. ஐ.நா. சபையின் தீர்மானங்களை மதிக்காத இஸ்ரேல், சமாதான உடன்படிக்கைகளை மீறுவதை தனது வழக்கமாக கொண்டுள்ளது. தற்போதைய ட்ரம்பின் திட்டத்திலும் இஸ்ரேலை கட்டுப்படுத்தும் எந்த வரைவும் முன்வைக்கப்படவில்லை. குண்டுவீச்சை நிறுத்துமாறு தான் கூறியுள்ளதாக ட்ரம்ப் அறிவித்த பின்னரும் காஸாவில் குண்டுமழை பொழிந்தது.

ஃபலஸ்தீன தேசத்தை பல்வேறு நாடுகள் அங்கீகரித்துள்ள நிலையில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்களும் வலிமை அடைந்துள்ளன. காஸாவிற்கு வருகை புரியும் நிவாரண கப்பல்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் மக்களின் எதிர்ப்பை அதிகரித்துள்ளன. இனப்படுகொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இஸ்ரேல் சர்வதேச நீதிமன்றத்தில் அதற்கான வழக்கையும் எதிர்கொண்டுள்ளது. சர்வதேச சமூகத்தை அமைதிப்படுத்தவும் இனப்படுகொலை விசாரணையில் இருந்து இஸ்ரேலை பாதுகாப்பதற்கும் இந்த திட்டத்தை ட்ரம்ப் முன்வைத்துள்ளாரா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. இத்திட்டத்தின் சில பகுதிகளை மட்டுமே ஹமாஸ் அங்கீகரித்துள்ளது. ஏனைய புள்ளிகளில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டியிருக்கும். இஸ்ரேலை கட்டுப்படுத்தும் திட்டம் எதையும் ட்ரம்ப் குறிப்பிடவில்லை. இந்நிலையில் இத்திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவது சற்று கடினமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW