மயிலாடுதுறையில் இளைஞர் வைரமுத்து சாதி ஆணவத்தால் கொல்லப்பட்டதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்.

தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம்
கடந்த 15-9-2025 அன்று மயிலாடுதுறையில் அடியாமங்கலம் பகுதியைச் சேர்ந்த 28 வயது நிரம்பிய பட்டியல் சாதி இளைஞர் வைரமுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் ஜனநாயக வாலிபர் சங்கத்தில் அப்பகுதியின் துணைத் தலைவராக இருந்துள்ளார். இவரும் அப்பகுதியைச் சேர்ந்த மாலினி என்ற பெண்ணும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். மாலினியின் குடும்பத்தில் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். கடந்த 14 ஆம் தேதி காவல் நிலையம் வரை மாலினி வீட்டாரின் காதல் எதிர்ப்பு பிரச்சனை சென்றுள்ளது. அங்கு வைரமுத்துவை மணம் முடிப்பதில் மாலினி உறுதி காட்டிய நிலையில் காவல்துறை வைரமுத்துவோடு அப்பெண்ணை அனுப்பி வைத்துவிடுகிறது. அதை தொடர்ந்து கடந்த 15 ஆம் தேதி இரவு வைரமுத்து மாலினி வீட்டாரால் வெட்டிக் கொல்லப்படுகிறார்.
ஐ.டி. இளைஞர் கவின் வெட்டிக் கொல்லப்பட்டு அந்த அதிர்ச்சியில் இருந்து தமிழ்நாடு மீளாத நிலையில் மற்றுமொரு ஆணவக் கொலை மயிலாடுதுறையில் நடந்திருப்பதற்கு இந்த சமூகமும் அரசும் பொறுப்பேற்க வேண்டாமா?
சாதி ஆணவக் கொலையையும் குற்றங்களையும் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட பொழுது எஸ்.சி/ எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் போதும் என்று தமிழக முதல்வர் பதிலளித்தார். அப்படி என்றால், இருக்கின்ற சட்டங்களைக் கொண்டு ஏன் ஆணவக் கொலைகளை தடுக்க முடியவில்லை என்பதற்கு முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும்.
காவல் நிலையம் வரை பிரச்சனை வந்த பிறகு காதல் இணையர்களைக் காக்க வேண்டிய பொறுப்பு காவல் நிலைய ஆய்வாளர் உடையதே ஆகும். இவ்விசயத்தில் காவல் நிலையம் வரை பிரச்சனை வந்த பிறகும் காவல் ஆய்வாளர் உரிய அக்கறை செலுத்தாதது ஏன்? அவர் மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தாரா? காதல் இணையர்களுக்கு உரிய பாதுகாப்பு தர ஏன் முன்வரவில்லை? என்ன அடிப்படையில் காதல் இணையர்களுக்கு உயிர் ஆபத்து இல்லை என்ற முடிவுக்கு வந்தார்? குற்றம் நடந்த பிறகு நான்கு பேரை கைது செய்வதோடு முடிந்துவிட்டதா பிரச்சனை? காவல் துறை தரப்பில் செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? என்பதற்கு பதிலளிக்க வேண்டிய கடமை காவல் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு உண்டு.
”தூய்மைப் பணியாளர் போராட்டத்தைக் கலைக்குமாறு நீதிமன்றம் தந்த ஆணையை எப்படி மீற முடியும்?” என்று சொல்லிவிட்டு நீதிமன்ற தீர்ப்பை சிரம் மேல் ஏந்தி இரவோடு இரவாக செயல்படுத்தி கார்ப்பரேட் விசுவாசத்தை வெளிப்படுத்திக் கொண்டது தமிழக அரசு.
அப்படியெனில், உசிலம்பட்டி விமலா தேவி ஆணவக் கொலை வழக்கில் 2016 ஆம் ஆண்டு நீதிபதி V. இராமசுப்பிரமணியன் வழங்கிய தீர்ப்பை எப்போது செயல்படுத்தப் போகிறது தமிழக அரசு?
மாவட்டந் தோறும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை உள்ளடக்கிய சிறப்புப் பிரிவுகள், 24 மணிநேர உதவி தொலைபேசி எண், இந்த தொலைபேசி எண்ணுக்கு ஓர் அழைப்பு வந்தால்கூட சில நடைமுறைகளை செய்யத் தொடங்குவதற்கான ஏற்பாடு ஆகியவற்றை வழிமொழிந்து தீர்ப்பளித்திருந்தார் அவர். ஆனால், இந்த நிமிடம் வரை இவற்றை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு அணியமாகவில்லை?
ஆட்சியாளர்களுக்கு முதலும் முடிவுமான கவலை ஆட்சியில் நீடிப்பதும் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வருவதுமே ஆகும். வாக்கு அரசியலுக்கு குந்தகம் விளைந்துவிடக் கூடாது என்பதில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட சனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பதில் இல்லை. சாதிநாயகமா? சனநாயகமா? என்றால் சாதிநாயகத்திற்கு சாமரம் வீசுவதற்கு போட்டிப்போடும் அரசியல் கட்சிகள் சனநாயகம் நித்தம் நித்தம் கொலை செய்யப் படுவது பற்றி கவலை கொள்வதில்லை.
ஆணவக் கொலைத் தடுப்பு சட்டம் இயற்றும்வரை இந்த ஆட்சியின் தோல்விகளில் ஒன்றாகத்தான் ஆணவக் கொலைகள் பார்க்கப்படும் என்பதை திமுக அரசு கருதிப் பார்க்க வேண்டும்.
இனியும் இதை சட்ட ஒழுங்கு பிரச்சனையாக கையாண்டு கொண்டிருக்காமல் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி திமுக அரசு இதை ஒரு சமூக பிரச்சனையாக கையாள வேண்டும்.
கவின் மட்டுமல்ல வைரமுத்துவின் ஆணவப் படுகொலைக்கும் பொறுப்பேற்க வேண்டியது திமுக தலைமையிலான தமிழக அரசுதான் என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக சுட்டிக்காட்டுகிறோம்.
தோழமையுடன்,
தி. செந்தில்குமார்,
ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்த்தேச மககள் முன்னணி 9941931499