ஜி.எஸ்.டி-2 பாஜகவின் கண்துடைப்பு நாடகம் – தோழர் சம்ந்தா

ஆகஸ்ட் 7ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக எப்படியெல்லாம் ஓட்டுக்களைத் திருடி மோசடி பண்ணியிருக்குண்ணு அம்பலப்படுத்திட்டாரு. இது பாஜகவுக்கு பலத்த அடியாவே இருந்துச்சு. ஏண்ணா அது வரைக்கும் பாஜகவுக்கு நம்ம ஓட்டு போடாட்டியும் மத்தவங்க ஓட்டு போட்டாங்க போலருக்குண்ணு தான் மக்கள் நெனைச்சுக்குட்டு இருந்தாங்க. பாஜக வாங்குனது எல்லாமே திருட்டு ஓட்டு தாண்ணு இப்ப தான் மக்களுக்கே தெரியவந்துருக்கு. இல்லாத மோடி அலையை பொங்க வெச்ச கார்ப்பரேட் ஊடகங்களால கூட மூணாவது மோடி அலையை உருவாக்க முடியாத தர்மசங்கடமான நிலையில பாஜக மாட்டியிருக்கு. அம்பானிக்கு மோடி அடிமையா இருந்ததுனால டிரம்ப் வேற காப்புவரிகளாலேயே குண்டு போட்டுட்டாரு. அதுனால பெருமுதலாளிகளுக்கு ஏற்படுற லாபக்குறைவை மோடியால தாங்கிக்கமுடியாது. இதையெல்லாம் ஈடுகட்டுற மாதிரி எதையாவது புதுசா பண்ண மாதிரி காட்டிக்கிடுறது தான் பாஜகவுக்கு கைவந்த கலையாச்சே. அதுக்குண்ணு தான் சுதந்திர தினம் அன்னிக்கு தீவாளிப்பரிசா ஜிஎஸ்டி-2 குடுத்தாராம் மோடி. இதை செப்டம்பர் 22 முதல் நடைமுறைப்படுத்தப் போறாங்களாம். அதுசரி டிரம்ப் போட்ட வரிகுண்டுகளால ஏற்படப்போற பொருளாதார சரிவை சரிகட்டத்தான் ஜி.எஸ்.டி 2ண்ணு சொல்லுறாங்களே? அப்புடி இல்லையாம் இதை ரொம்ப நாளாவே ஆலோசனை பண்ணுனதா நிம்மியம்மா சொல்லுறாங்க. ஆனா எப்பவுமே பாஜக புதுசா திட்டங்களைப் போட்டுத் தாக்குறதே மக்களை திசைதிருப்புறதுக்குத்தான செய்வாங்க, இந்த முறையும் அப்புடித்தான். ஏண்ணா, பொருளாதார சரிவைப் பத்தியெல்லாம் கவலைப்பட்டிருந்தா, பொருளாதாரத்தின் மேல உண்மையிலே அக்கறை இருந்தா பாஜக என்ன பண்ணிருக்கனும், ஒழுங்குமரியாதையா இடத்தை காலி பண்ணிட்டு எதிர்க்கட்சிகள் ஆட்சியமைக்க வழிவிட்டுருக்கனும், ஏண்ணா பாஜக தான் பொருளாதாரத்தையே ரணகளமாக்கிடுச்சே.
சாகடிச்சுப்புட்டு மருந்து தடவுனா கொண்ணு போட்டதெல்லாம் உயிரோட திரும்பிவந்துடுமா மோடி. 2016ல பணமதிப்பிழப்பால கொன்னது பத்தாதுண்ணு 2017ல ரெண்டாவது ரவுண்ட்டா ஜி.எஸ்.டியால வேற குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களையெல்லாம் கொண்ணீங்களே மோடி, மறந்துட்டீங்களா. கடந்த 8 ஆண்டுகள்ல இந்தியா முழுவதும் 48% குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுருக்கு. அது பத்தாதுண்ணு மாநிலங்களோட வரியுரிமைகளையும், நிதி இறையாண்மையையும் கொண்ணுப்போட்டீங்களே.
பெரும்பணக்காரர்கள் மேல நேரடிவரி விதிக்க துப்பு இல்லாத மோடி, கார்ப்பரேட் வரியை ஏத்த வக்கு இல்லாத மோடி பென்சில், பிஸ்கெட் மொதக்கொண்டு ஒரு பொருள் விடாம, பெட்ரோல், டீசலைத் தவிர எல்லாத்தையும் ஜி.எஸ்.டியால சொரண்டி மக்களோட நுகர்வை வெட்டவெச்சு, மக்களோட வயித்துல மண்ணைப் போட்டாரே. இப்ப என்னடாண்ணா சாமான்ய மக்கள் மேல இருக்குற வரிச்சுமையைக் கொறைக்குறதுக்காக ஜி.எஸ்.டி 2ஐ அறிமுகப்படுத்தியிருக்காறாம்.
2017ல ஜி.எஸ்.டி வரியைப்போட்டு எல்லாரையும் நீ தானப்பா சாகடிச்ச, அப்போ 8 வருசமா மக்கள் படுற கஷ்டங்களையெல்லாம் பொறுமையா வேடிக்கை பாத்து ரசிச்சுக்கிட்டி இருந்திங்களா.
ஜி.எஸ்.டி 1ல 5%, 8%, 12%, 18%, 28% என ஐந்து வரி அடுக்குகள் இருந்துச்சு. இதுலேருந்து 12%, 28% வரி அடுக்குகளை ஜி.எஸ்.டி 2ல நீக்கிட்டாங்களாம். ஜி.எஸ்.டி 2ல 5%, 18%, 40% என மூணு வரி அடுக்குகள் மட்டும் தான் இருக்குமாம்.
ஜி.எஸ்.டி 2ல வீட்டு உபயோகப் பொருட்கள் மீதான வரி 5% அல்லது பூஜ்யமாக மாற்றப்பட்டுருக்கு.
மருந்துப் பொருட்கள் மீதான வரி 5% அல்லது பூஜ்யமாகக் குறைக்கப்பட்டுருக்கு.
டிவி, ஏசி, சின்ன கார்கள், பாத்திரம் கழுவும் எந்திரம், இருசக்கர வாகனங்கள், பேருந்துகள், டிரக்குகள், தானியங்கு உதிரி பாகங்கள், சிமெண்ட் மீதான வரி 28%லிருந்து 18%ஆக குறைக்கப்பட்டுருக்கு.
விவசாய எந்திரங்கள் மீதான வரி 12%லிருந்து 5%ஆக குறைக்கப்பட்டுருக்கு.
பான் மசாலா, புகையிலை, காற்றடைத்த பானங்கள் போன்ற தீமை விளைவிக்கும் பொருட்களுக்கும், உயர் ரக கார்கள், படகுகள், தனியார் விமானங்கள், ஐ.பி.எல் கிரிக்கெட் டிக்கெட் போன்ற ஆடம்பரப் பொருட்களுக்கும், 40% வரி விதிக்கப்பட்டுருக்கு.
இந்த வரிமாற்றங்களால பாஜக அரசுக்கு 48,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படுமாம். இதை சொல்லி அடுத்த நிதியாண்டுல செலவினங்களை வெட்டுனாலும் வெட்டுவாங்க.
பல பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டதால மக்கள் பயனடைவாங்கண்ணு சொல்லிக்கிறாங்க. இதுல என்னங்க உண்மை இருக்கு. மொதல்ல வரியை கூட்டுனது யாரு? பாஜக தான். அதுனால பாதிக்கப்பட்டவங்க யாரு? மக்கள் தான். ஆனா கூட்டுன அளவுக்கு குறைக்கலையே. உதாரணமா 50ரூபாய்க்கு வித்த பொருளோட விலையை 150 ரூபாய்க்கு ஏத்திட்டு அப்புறம் அதை 100ரூபாய்க்கு கொறைச்சுட்டா எப்புடி இருக்கும்? மொதல்ல 100ரூ விலையை ஏத்துனதை மறைச்சுட்டு, 50 ரூபாய் விலையைக் கொறைச்சத மட்டுமே காட்டி நாங்க விலையைக் கொறைச்சதுனால மக்கள் பயனடையுறாங்கண்ணு சொல்றது வியாபார தந்திரம் தான. அது மாதிரி தான் ஜி.எஸ்.டி 2ம். அதுவரைக்கும் வரிவிதிக்கப்படாத 509 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி1ல வரியைப் போட்டுட்டு இப்ப பெரியமனசு பண்ணி வரியைக் கொறைச்சதா ஜி.எஸ்.டி 2ல அறிவிக்குற பாஜகவோட கேடுகெட்ட அரசியல் தந்திரத்தைப் புரிஞ்சுக்கங்க.
வரிவிதிச்ச பொருள் மேல மறுபடியும் வரிவிதிக்குற அடுக்குவரி விளைவு ஜி.எஸ்.டியில நீக்கப்படும், அதுனால பொருட்களோட விலை குறையும்ணு ஜி.எஸ்.டியை அறிமுகப்படுத்துனப்ப வாக்குக் கொடுத்தாங்க. ஆனா பொருட்களோட விலை ஏறுனுச்சே தவிர இறங்கவேயில்லை. ஜி.எஸ்.டி1ல அடுக்கு வரியை தவிர்ப்பதற்காக உள்ளீட்டு வரி வரவு (ITC) அறிமுகப்படுத்தப்பட்டுச்சு. இதன் படி நிறுவனங்கள் உள்ளீட்டுப் பொருட்களுக்கு செலுத்துன வரி விவரங்களை தாக்கல் செஞ்சு அரசின் மூலமாக திரும்ப வரவுவைத்துக் கொள்ளமுடியும். ஆனா ஜி.எஸ்.டி 2ல வரிக் குறைக்கப்பட்ட பல பொருட்களுக்கு உள்ளீட்டு வரி வரவு நீக்கப்பட்டுருப்பதால வரிக் குறைப்பால குறையும் விலை அடுக்குவரியால அதிகமாகும் பாதிப்பும் உள்ளது.
ஜிஎஸ்டி2லயும் நிதி இழப்பீடு கொடுக்கமாட்டோம்ணு மாநிலங்களை அம்போண்ணு விட்டுட்டாங்க. ரொம்ப அநியாயம்ங்க. சாமானியர்கள், விவசாயிகள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், பெண்கள், இளைஞர்கள், நடுத்தர குடும்பங்களுக்கு ஜிஎஸ்டி வரிமாற்றம் நேரடியாக பயனளிக்கும், பொருளாதார நுகர்வையும், இந்தியாவின் நீண்டகால வளர்ச்சியை வலுப்படுத்தும்ணு அளந்துகொட்டுற பாஜகவுக்கு வரிகளைக் குறைக்கணும்குற அறிவு ஏன் 2017லயே வராமப் போச்சு? இது தான் நாம கேட்கவேண்டிய கேள்வி. அதுனால வரிகளையெல்லாம் குறைச்சுட்டோம்ணு பாஜக சொல்லுற பொய்களையெல்லாம் நம்பிடாம பாஜகவை வீட்டுக்கு அனுப்புற வேலையப் பாருங்க.