தமிழக அரசே! ஐடி ஊழியர் கவின் சாதி ஆணவப் படுகொலையில் தொடர்புடைய காவல்துறை பணி செய்யும் சுர்ஜித்தின் தாய்,தந்தை இருவரையும் கைது செய்! சாதி ஆணவ கொலைகளைத் தடுக்கத் தவறும் தமிழக அரசுக்கு கண்டனம்! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை

கடந்த 27-05-2025 அன்று தூத்துக்குடியை சேர்ந்த பட்டியலின இளைஞர் கவின் என்பவர் சாதி கடந்து காதலித்த காரணத்திற்காக அவர் காதலித்த மறவர் சாதியைச் சேர்ந்த சுபாஷினி என்ற பெண்ணின் அண்ணன் சுர்ஜித்தால் கொலை செய்யப்பட்டுள்ளார். தொடரும் சாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்காத தமிழ்நாடு அரசைக் கண்டிக்கிறோம்.சுர்ஜித்தின் தாய், தந்தை இருவரும் காவல் துணை ஆய்வாளர்கள். அவர்களுடைய பெயரும் இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளது. இப்போதைய நிலையில் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார், தாய் இன்னும் கைது செய்யப்படவில்லை..இதற்கிடையே கொல்லப்பட்ட கவினின் தந்தை தமக்கு நிதி வேண்டாம் , நீதி வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி சுபாஷினியின் பெற்றோர் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று சொல்லி உடலை வாங்க மறுத்துள்ளார். கவின் ஐ.டி. .துறையில் பணி புரிந்து நல்ல சம்பளம் பெற்று வந்தவர். சுபாஷினியும் சித்த மருத்துவத்தில் பட்டப்படிப்பு முடித்தவர். இவ்விருவரின் காதலை எதிர்த்து காதலித்த இளைஞரை கொலை செய்வதற்கு சாதியைத் தவிர வேறெந்த காரணத்தையும் இதுவரை யாரும் சொல்லவில்லை. கடந்த பதினைந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டின் அரசியல் அரங்கத்தில் சாதி ஆணவக் கொலை என்பது கொந்தளிக்கும் பிரச்சனையாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. சட்டப் பேரவையில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. சாதி ஆணவக் குற்றங்களுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பெரும்பாலான கட்சிகள் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. சாதிக் கட்சிகள் தவிர்த்து அதிமுகவும் பாசகவும் இக்கோரிக்கையை எழுப்ப மறுக்கின்றன. இந்நிலையில் தமிழக முதலமைச்சரோ சாதி ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கு தனித்தொரு சட்டம் தேவையில்லை, எஸ்.சி./எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மட்டும் போதும் என்று சட்டப்பேரவையிலேயே வாதிட்டார். ஆனால், தலித் இளைஞர்கள் மட்டுமின்றி பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்த இளைஞர்களும் பெண்களும் சாதி ஆணவக் குற்றங்கள், கொலைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்பது அப்பட்டமான உண்மை.. இருப்பினும், வாக்கு அரசியலுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தால், தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற மறுக்கிறது.தமிழ்நாடு அரசு இனியும் காலந் தாழ்த்தாமல் சாதி ஆணவக் குற்றங்களுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற முன்வர வேண்டும். சட்டங்கள் மட்டுமே தீர்வாகிவிடாது என்றாலும் சட்டங்கள் பழைய சமூக விழுமியங்களைக் கைவிட்டு புதிய சமூக விழுமியங்களைக் காவிச் செல்வதற்கு ஓரு கருவியாக அமையும் என்பதே வரலாறு.சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட இப்பிரச்சனைக்கு சமாதானம் சொன்ன தமிழ்நாடு முதலமைச்சர் இவை மீண்டும் நிகழாமல் இருப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?இந்திய அளவில் நடக்கக்கூடிய வன்முறைகளை கண்டித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர். ஆனால், இதுவரை கவின் சாதி ஆணவக் கொலை விவகாரத்தில் இரங்கலோ கண்டனமோ வெளியிடவில்லை.. தமிழ்நாட்டில் 2026 தேர்தலை ஒட்டி, திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பில்லை, சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றொரு கதையாடலை கட்டமைக்க நினைக்கும் அதிமுக – பாசக கூட்டணி இவ்விசயத்தில் மெளனம் காத்து வந்தன. எடப்பாடி பழனிச்சாமி பொத்தாம் பொதுவாக கண்டனம் தெரிவித்துவிட்டு கடந்துவிட்டார். பொதுவான இரங்கலை தெரிவித்துவிட்டு சாதி ஆணவக் கொலையை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் பற்றி எதுவும் பேசவில்லை.சாதிய வாக்கு வங்கிக்கு குந்தகம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று ஆளுங் கட்சியும் எதிர்க்கட்சிகளும் கவலைப் படுகின்றனவே ஒழிய சாதி ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கு செயல்படுவதில்லை, மறைமுகமாக அவற்றுக்கு துணைபோகின்றன. இந்நிலை மாற வேண்டும்.பிற்படுத்தப்பட்ட சமூகங்களிடையே ஏற்படக்கூடிய பொருளாதார வளர்ச்சி சாதி சங்கங்கள் வலுப்பெறுவதற்கும், சாதி அடிப்படையிலான அரசியல் திரட்சிக்கும் வழிவகுத்து பண்பாட்டுத் தளத்தில் காதல் திருமணங்களை எதிர்க்கும் சாதி ஆணவக் குற்றங்களாக வளர்ந்து வருகின்றன. இதை கருத்தில்கொண்டு, சமூக நீதி இயக்கங்கள், ஆற்றல்கள் சாதி ஆணவக் குற்றங்களுக்கு எதிரான சமூகப் பண்பாட்டு இயக்கத்தையும் முன்னெடுக்க வேண்டும்.அதுபோலவே தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் பணியாற்றும் இயக்கங்களும் ஆற்றல்களும் தமிழர் ஒற்றுமைக்கும் தமிழ்ச் சமூக வளர்ச்சிக்கும் குந்தகம் விளைவித்துக் கொண்டிருக்கும் சாதி ஆணவக் குற்றங்களுக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை எடுத்து செயல்பட வேண்டும்.தமிழ்நாடு அரசு கவின் கொலை வழக்கில் சுர்ஜித்தின் தாயை உடனடியாக கைது செய்ய வேண்டும். சாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு தனிச்சட்டம் இயற்றுவது மட்டுமின்றி ஏற்கெனவே காதல் இணையர்களைப் பாதுகாப்பது குறித்து நீதிமன்றங்கள் வழங்கியுள்ள தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் சட்ட நடைமுறைகளைத் தாண்டி, பின் தங்கிய மாவட்டங்களில் தொழில்துறை வளர்ச்சியை ஏற்படுத்துதல், கல்வித்திட்டத்தில் சாதி ஏற்றத் தாழ்வுக்கு எதிரான சமத்துவ சிந்தனையை வளர்த்தல், பண்பாட்டு தளத்தில் சிந்தனை மாற்றங்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் என அனைத்து வழிகளிலும் சாதி ஆணவக் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.இதுவே தமிழ்நாட்டில் நடைபெறும் கடைசி சாதி ஆணவக் கொலையாக இருக்க வேண்டும் என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்
தி. செந்தில் குமார்,
ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி.