மோடி 3.0 காலம்

மோடியை வீழ்த்த வழி என்ன? பகுதி – 3
ஒருவேளை இந்தியாவுக்குள் மிகச் சிக்கலாக நிலவும் சமூக முரண்பாடுகளைக் கையாண்டு மற்ற முரண்பாடுகளை எல்லாம் பின்னுக்கு தள்ளி இந்துப்பெரும்பான்மைவாத அரசியலைக் கட்டியமைப்பதில் நாடு தழுவிய அளவில் வெற்றிப் பெற்று விடுவார்களானால் இந்துப் பெருந்தேசியவாதத்தையும் இந்துராஷ்டிரத்தையும் நிறுவுவதற்கான பாதையில் வெற்றி பெற்றுவிடுவார்கள். இதை நோக்கிச் செல்கின்ற திசையில் தான், மோடி – ஷா சிறுகும்பலாட்சி இந்துப் பெரும்பான்மைவாத(majoriatarianism) ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது.
மோடி 1.0 வை விட மோடி 2.0 காலம் நாட்டை விழிப்புற செய்தது. இந்த சிறுகும்பலாட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நாடெங்கும் உள்ள குடிமை சமூகத்தினர் உள்ளிட்ட இடது சனநாயக ஆற்றல்கள் 2024 மக்களவைத் தேர்தலில் உழைத்தனர். மக்களவை தேர்தல் முடிவுகள் பாசிச ஆற்றல்களுக்கும் பாசிசம் அல்லாத மற்றும் பாசிச எதிர்ப்பு ஆற்றல்களுக்கும் இடையிலான வலுச்சமநிலையில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. எனவே, தேர்தல் முடிவுகள் பற்றிய பகுப்பாய்வு தேவைப்படுகிறது.
”மீண்டும் மோடி, வேண்டும் மோடி”, ”மோடியின் வாக்குறுதி” என்ற முழக்கங்களை முன்வைத்து, ”2024 மக்களவைத் தேர்தலில் 400 இடங்களில் வெற்றிபெறுவோம்” என்றது பாசக. ”அரசமைப்பு சட்டத்தைப் பாதுகாப்போம், இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்போம், சாதிவாரி கணக்கெடுப்பு, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம்” என்ற முழக்கங்களை முன்வைத்து காங்கிரசு தலைமையிலான இந்தியா கூட்டணி தேர்தலை எதிர்கொண்டது.
2019 மக்களவை தேர்தலை (303 இடங்கள்) ஒப்பிடும்போது பாசக 2024 இல் 63 இடங்கள் கீழிறங்கி 240 இடங்களில் வெற்றிப் பெற்றது. அதில் 2019 இல் வென்ற இடங்களில் பின்வரும் மாநிலங்களில் 87 தொகுதிகளில் பாசக தோற்கடிக்கப்பட்டது. உத்தரபிரதேசத்தில் 29 , மராட்டியத்தில் 11, இராஜஸ்தானில் 10, கர்நாடகாவில் 8, மேற்குவங்கத்தில் 9, அரியானாவில் 5, பீகாரில் 5, ஜார்க்கண்ட் இல் 3, பஞ்சாபில் 2, மணிப்பூர் 1, குஜராத், சண்டிகர், டாமன் – டையூ, சம்மு காசுமீர் ஆகியவற்றில் தலா 1 இடங்களை பாசக இழந்தது.
அதேநேரத்தில், ஒடிசாவில் 12, தெலங்கானாவில் 4, ஆந்திராவில் 3, மத்திய பிரதேசத்தில் 1, கேரளாவில் 1, சத்தீஸ்கரில் 1, அந்தமானில் 1, தாதரில் 1 என பாசக மேற்படி மாநிலங்களில் பெற்ற கூடுதல் இடங்கள் மொத்த இழப்பை 63 ஆக குறைத்துவிட்டது.
தேர்தல் காலத்தில் பாசக முன்வைத்த கதையாடல்கள் எதுவும் எடுபடவில்லை. வளர்ந்த இந்தியா(விக்சித் பாரத்), அழியாக் காலம் ( அம்ரித காலம்) போன்ற முழக்கங்கள் எடுபடவில்லை, பின்னர் இசுலாமிய வெறுப்பை முதலீடு செய்து பார்த்தார் மோடி. ஆனால், அவர்கள் முன்வைத்த கதையாடல்கள் எதுவும் வெற்றிப் பெறவில்லை.
உத்தரபிரதேசம், மராட்டியம், இராஜஸ்தான், கர்நாடகா, மேற்குவங்கம், அரியானா, பீகார் ஆகிய மாநிலங்களில் பாசக கணிசமான பின்னடைவை சந்தித்துள்ளது. இதற்கு வழிவகுத்த காரணிகள் – ஒராண்டு நடைபெற்ற உழவர் போராட்டமும் தீவிரமடைந்துள்ள வேளாண் நெருக்கடியும், பாசகவுக்கு எதிராக திரட்டப்பட்ட இசுலாஇசுலாமிய வாக்குவங்கி, தலித், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பாசக ஆட்சிக்கு வந்தால் இட ஓதுக்கீடு பறிக்கப்படும் என்றெழுந்த அச்சம், ஜாட், ராஜபுத்திரர், மராத்தா போன்ற சாதிகள் பாசகவுக்கு எதிராக திரும்பியமை, விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற பொருளியல் காரணங்கள், ஒற்றை அடையாளத் திணிப்புக்கு எதிராக மேற்குவங்கம், மராட்டியம், உத்தரபிரதேசத்தில் எழுந்த மாநில அடையாள உணர்வு ஆகியவையாகும்.
ஒடிசா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஈட்டிய இடங்கள் பாசகவின் இழப்பை ஓரளவுக்கு ஈடுசெய்ய உதவியுள்ளது. இம்மூன்று மாநிலங்களிலும் மாநில அரசுக்கு எதிரான அதிருப்தி, பாசக எதிர்ப்பை முதன்மைப்படுத்தாத மூன்று மாநிலக் கட்சிகள் – பிஜு ஜனதா தளம், பாரதிய ராஷ்டிரிய சமிதி, ஒய். எஸ். ஆர் காங்கிரசு பலவீனமடைந்திருப்பது ஆகியவைப் பொதுவான காரணிகளாக உள்ளன. பாசக ஒடிசா பெருமித உணர்வைத் தட்டியெழுப்பியது. இது ஒடிசாவில் ஆட்சியைப் பிடிக்கவும் மக்களவை இடங்களை வெல்லவும் உதவியது.
நாடு முழுவதும் நகர்ப்புறம் சார்ந்த குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தினர் தேசிய பெருமிதத்தின் பெயரால் பாசகவுக்கு கணிசமாக வாக்களித்திருப்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. அதுபோல, உயர்சாதியினரும் நாடு முழுவதும் பாசகவுக்கு கணிசமாக வாக்களித்திருப்பது தெரிய வந்துள்ளது.
தேர்தல் அரசியலுக்கு உட்பட்டு சாதிகளைக் கையாள்வது வெற்றி ஈட்டுவதற்கு இன்றியமையாத காரணியாக அமைந்துள்ளது. உத்தரபிரதேசம், மராட்டியம் அரியானா, இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ’இந்தியா’ கூட்டணி வெல்வதற்கும் பீகார், கர்நாடகா, ஆந்திரம் ஆகியவற்றில் தேசிய சனநாயக கூட்டணி வெல்வதற்கும் சரியாக வடிவமைக்கப்பட்ட சமூகப் பொறியமைவு உதவியுள்ளது.
இந்தியா கூட்டணி அனைத்திந்திய கூட்டணியாக அல்லாமல் மாநில அளவிலான கூட்டணியாக தேர்தலை எதிர்கொண்டதால் கேரளம், மேற்குவங்கம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் பாசக எதிர்ப்பு வாக்குகள் பிரிந்தது பாசக வெற்றிபெற வழிவகுத்தது. இன்னொருபுறம், பாசக எதிர்ப்பு கொண்ட கட்சிகள் – பகுஜன் சமாஜ் கட்சி, ஓய் எஸ் ஆர். காங்கிரசு, அகில இந்திய மஜ்லிஸ், இந்திய குடியரசு கட்சி( பிரகாஷ் அம்பேத்கர்) இந்தியா கூட்டணியில் சேராமல் மூன்றாவது அணியாக தேர்தலை சந்தித்ததாலும் வாக்குகள் பிரிந்தன. அதனால், உத்தரபிரதேசம் (16 இடங்கள்), மராட்டியம் (5 இடங்கள்), மேற்கு வங்கம் (5 இடங்கள்) உள்ளிட்ட பல மாநிலங்களில் பாசக மற்றும் தேசிய சனநாயக கூட்டணியின் வெற்றிக்கு வழிவகுத்தது.
தேசிய சனநாயக கூட்டணியில் புதிதாக இணைந்த மதச்சார்பற்ற ஜனதா தளம், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் பாசக சந்தித்திருக்கக் கூடிய பெருந்தோல்வியைத் தடுத்து நிறுத்தியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் நடைமுறைகளுக்கு உட்பட்டுப் பார்க்கும்போது மேற்குறிப்பிட்ட காரணிகள் இந்த முடிவுக்கு வழிவகுத்துள்ளன.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை 2019 மக்களவைத் தேர்தலில் இருந்து தொடரும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியின் பலமும் எதிர்க்கட்சிகள் சிதறிப்போய் தனித்தனியாக போட்டியிட்டதனால் ஏற்பட்ட பலவீனமும் மாநில ஆட்சியின் மீதான அதிருப்தியையும் கடந்து திமுக அணி தமிழ்நாடு – புதுச்சேரி இணைந்த 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வழிவகுத்தது. மதச் சிறுபான்மையினர், தலித் மக்களில் பெரும்பாலானோர், பெண்களில் கணிசமானோரது வாக்குகள் திமுக அணிக்கு இடமாறியுள்ளது.
2019 உடன் ஒப்பிடும்போது, பாசக கூட்டணி பலத்தை இழக்க நேர்ந்தது. அதிமுக பாசகவுடன் கூட்டணி வைக்க மறுத்தமை, புதிய தமிழகம், தேமுதிக போன்ற கட்சிகள் பாசக கூட்டணியில் இருந்து வெளியேறியமை ஆகியவை மக்களிடையே பாசகவுக்கு எதிராக நிலவும் உணர்வின் அழுத்தத்தால் ஏற்பட்டவையாகும். பாசகவால் பாமக, ஐஜேகே, புதிய நீதிக் கட்சி போன்ற சாதிக் கட்சிகளோடு மட்டுமே கூட்டணி வைக்க முடிந்தது. கூட்டணி பலத்தின் காரணமாக பாசக இரண்டு இலக்க விழுக்காடு ( 2024 இல் 11.24%, 2014 இல் 5.56% ) வாக்குகளைப் பெற்றுள்ளது.
பாசக தன்னைப் பற்றி சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வளரவில்லை என்றாலும் நகர்ப்புறம் சார்ந்த குட்டிமுதலாளித்துவ வர்க்கத்திடமும் ( கோவை, தென் சென்னை, மத்திய சென்னை) சில சாதிகளிடமும் தமிழ்நாட்டில் செல்வாக்கு பெற்று வருவது தேர்தல் முடிவுகளில் தெரிகிறது.
தேர்தல் களத்தை சமமான வாய்ப்புகள் அற்ற ஒன்றாக உருவாக்கியது பாசிச மோடி – அமித் ஷா கும்பல். தம் விருப்பம் போல் தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கு சட்டத்திருத்தம் கொண்டு வந்து தேர்தல் சனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கியது இந்தக் கும்பல்.
தேர்தல் ஆணையர் நியமனம் தொடங்கி தேர்தலை ஏழு கட்டமாக நடத்தியமை, பாசகவின் தேர்தல் விதிமீறல்களை அனுமதித்தமை, தேர்தல் பத்திரங்கள் மூலம் திரட்டி கொண்ட பல்லாயிரம் கோடி ரூபாய் பணம், இரண்டு முதலமைச்சர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தமை, காங்கிரசின் வங்கிக் கணக்கை முடக்கியமை, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், வாக்களிக்க விடாமல் தடுத்தமை என இதுவொரு சுதந்திரமான, நேர்மையான தேர்தலாக நடத்தப்படவில்லை. இத்தனைக்கு இடையிலும் பாசகவால் பெரும்பான்மை அடைய முடியாமல் வெறும் 240 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது.
இதுமட்டுமின்றி தேர்தல் இயந்திரத்தில் மோசடி, வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி செய்ததன் மூலம் 79 இடங்களில் மக்களின் ஆணையைப் பாசக திருடிவிட்டது என ”சனநாயகத்திற்காக வாக்களிப்பீர் (Vote for Democracy)” என்ற குடிமைச் சமூக அமைப்பு குற்றச்சாட்டை முன்வைத்து, தேர்தல் ஆணையத்திடம் இதற்கான விளக்கத்தைக் கோரியுள்ளது.
சுதந்திரமாகவும் சமமான வாய்ப்புகளோடும் இத்தேர்தல் நடத்தப்பட்டிருக்குமானால் பாசக மோசமான தோல்வியை அடைந்திருக்கும் என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாக்குகின்றன. இன்னொருபக்கம் இந்தியா கூட்டணி தமக்குள் ஒரு வலிமையான மையத்தை உருவாக்கிக் கொண்டு, உறுதியான ஒருங்கிணைப்பை மேற்கொண்டிருந்தால், இத்தேர்தலில் பாசக பெருந்தோல்வியை சந்தித்து இருக்கும்.
இந்தியாவுக்குள் நிலவும் மிகவும் சிக்கலான சமூக முரண்பாடுகளைக் கையாண்டு மற்ற முரண்பாடுகள் அனைத்தையும் பின்னுக்கு தள்ளி இந்துப் பெரும்பான்மைவாத அடிப்படையிலான இந்துத்துவ தேசிய அரசியலைக் கட்டியமைப்பதில் நாடு தழுவிய அளவில் பாசகவால் வெற்றியடைய முடியவில்லை என்பதையும் அதில் பின்னடைவை சந்திக்கிறது என்பதையும் இத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
2014 ஆம் ஆண்டில் இருந்து மத்தியில் வலிமையான ஆட்சி, வலிமையான பாரதம் என்ற முழக்கத்துடன் மோடி அலை என்ற உருவில் வந்த இந்துப் பெரும்பான்மைவாத தேசிய அரசியலை கடந்த பத்தாண்டுகால ஆட்சியின் பின்னணியில் முரண்பட்ட சாதிகளுக்கிடையிலான நலன்களும் மாநில, வட்டார நலன்களும் மக்களுடைய அன்றாட வாழ்க்கைத் தேவைகளும் ( விலைவாசி உயர்வு, வேலையின்மை வேளாண் நெருக்கடி) பின்னுக்கு தள்ளியுள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.