ஊபா சிறைவாசிகளின் விடுதலையும் மதச்சார்பின்மை அரசியலும் – தோழர் செந்தில்

இன்றளவில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தரில் மட்டும் 4000 த்திற்கும் மேற்பட்ட பழங்குடிகள் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் ( ஊபா) கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். சிஏஏ வுக்கு எதிராக போராடிய இசுலாமிய மாணவ செயற்பாட்டாளர்களான சர்ஜீல் இமாம், உமர் காலித், குல்பிசா பாத்திமா போன்றவர்கள் சுமார் 2000 நாட்களாக விசாரணைக் கைதிகளாக சிறையில் உள்ளனர். பாப்புலர் ஃப்ரண்ட் வழக்கு, ஹிஸ்புல் தெஹ் ரீர் வழக்கு, எரிவாயு உருளை வெடிப்பு வழக்கு, மதராஸாக்கள் வழக்கு, சிஏஏ எதிர்ப்புப் போராட்ட வழக்கு போன்ற பல்வேறு வழக்குகளின் கீழ் இசுலாமியர்கள் நாடெங்கும் உள்ள சிறைகளில் ஊபா விசாரணை கைதிகளாக உள்ளனர். காசுமீரில் பலரும் ஊபாவில் கைது செய்யப்பட்டு ஆண்டுக்கணக்கில் சிறையில் உள்ளனர்.
இது ஒருபுறமிருக்க ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தாத்தாத்ரே ஹோசபல் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் உள்ள செகுலரிசம், சோசலிசம் என்ற சொற்களை நீக்க வேண்டும் என்று பேசினார். இந்தியா கூட்டணியில் மதச்சார்பின்மைக்குப் பாடுபடும் கட்சிகள் இதை கடுமையாக விமர்சித்து பேசியும் எழுதியும் வருகின்ற்ன. ஏற்கெனவே இந்துராஷ்டிரத்தைக் கட்டியெழுப்பும் வேலைகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்புத் தீவிரப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இந்தக் கூற்று என்பது சவப்பெட்டியில் அடிக்கும் கடைசி ஆணி போன்றதாகும்.
இதில் வியப்பளிக்கக் கூடிய முரண்பாடு ஒன்று உண்டு. மதச்சார்பின்மைக்காக பாடுபடும் கட்சிகளில் பெரும்பாலானவை ஊபா சட்டத்திற்கு எதிராகவோ அதில் சிறைப்பட்டுள்ள விசாரணைக் கைதிகளை விடுவிக்கக் கோரியோ குரல் கொடுப்பதில்லை. ஊபா சட்டத்தின் கீழ் இசுலாமிய அமைப்புகள் தடை செய்யப்படும் போது அதைக் கண்டித்துக் குரல் எழுப்புவதில்லை. ஊபா சட்டத்தை எதிர்ப்பதற்கும் மதச்சார்பின்மைக்கும் உறவே இல்லையா?
ஓர் அடக்குமுறை சட்டத்தால் அதிகம் அதிகம் ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பாதிக்கப்படும் போது அது மதச்சார்பின்மையை கேள்விக்குள்ளாக்கவில்லை என்று கருதுகின்றனரா?
இன்னும் சொல்லப்போனால் சிஏஏ எதிர்ப்புப் போராட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தேவங்கனா கலிட்டா, நடாசா நர்வால் போன்ற இசுலாமியர் அல்லாத மாணவர்களுக்கு எளிதில் பிணை கிடைக்கும் போது குல்பிசா பாத்திமாக்களுக்கு இன்றளவும் பிணை மறுக்கப்படுகிறது. இந்த ஊபா சட்டமும் தேசிய புலனாய்வு முகமையும்(என்.ஐ.ஏ.) மதச்சாபின்மைக்கு எதிராக செயல்படவில்லை என்று சொல்ல முடியுமா?
இருப்பினும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஊபாவின் கீழ் சிறைபட்டோர் விடுதலைக்காக உரத்துக் குரல் எழுப்புவதில்லை. ஊபாவையும் என்.ஐ.ஏ.வையும் எதிர்க்காமலே மதச்சார்பின்மைக்குப் பாடுபடுவதாக கருதி கொள்கின்றனர்.
ஊபா யாரை நோக்கிப் பாய்கிறது?
’ஒரே தேசம், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே சந்தை,’ என்ற முழக்கத்தின் கீழ் நாட்டை மீள் கட்டமைப்பு செய்தால் உருவாவதுதான் இந்துராஷ்டிரமாகும். ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே மதம் ( இந்துராஷ்டிரம், இந்தி, இந்து) என்ற ஆர்.எஸ்.எஸ். இன் கருத்தியலும் ஒரே சந்தை என்ற கார்பப்ரேட்களின் தேவையும் இணையும் ஆட்சிதான் இன்றைய மோடி – ஷாவின் சிறுகும்பலாட்சியாகும். மேற்கு இந்தியாவை மையப்படுத்திய ஒரு சில கார்ப்பரேட் ஏகபோகங்களுக்கான இந்து தேசம் தான் இந்துராஷ்டிரமாகும்.
இந்த நிகழ்ச்சி நிரலை எதிர்த்து ஒரு சில ஏகபோகங்களின் வேட்டைக்காடு என்பதற்குப் பதிலாக போட்டி சந்தைப் பொருளியலை உயர்த்திப் பிடிக்கக்கூடிய ஆளும் வகுப்பு கட்சிகளை ( காங்கிரசு, திமுக, திரினாமுல் உள்ளிட்டவை) மிரட்டி அடி பணியச் செய்தவறகு சட்ட விரோத பண பரிமாற்றத் தடை சட்டம் ( PMLA) பயன்படுத்தப் படுகிறது. பாசக அரசின் ஏவல் நாயாக அமலாக்கத் துறை பயன்பட்டு வருகிறது.
இந்து தேசியம் என்பது ஒருபுறம் இசுலாமியர்கள், கிறித்தவர்களை விலக்கி வைக்கக்கூடிய தேசியம் என்றால் இன்னொருபுறம் மொழிவழி தேசியத்தின் இருப்பை அடியோடு மறுக்கக்கூடிய தேசியமாகவும் இருக்கிறது. இந்து தேசியத்தை எதிர்க்கும் மதச்சிறுபான்மையினரும் மொழிவழித் தேசிய ஆற்றல்களும் பாசிச பாசகவால் பகைச் சக்திகளாகப் பார்க்கப்படுகின்றனர். அது போலவே, கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக திரளும் பழங்குடிகளும் விவசாயிகளும் தொழிலாளர்களும் இந்துராஷ்டிரத்தின் பகைவர்களாகப் பார்க்கப்படுகின்றனர். இந்த மூன்று வகையினரை ஒடுக்குவதற்கு ஊபாவை பயன்படுத்துகிறது பாசக அரசு. இதை செயல்படுத்துவதற்கான வேட்டை நாயாக என்.ஐ.ஏ. வை ஏவி விடுகிறது.
பி.எம்.எல்.ஏ , ஊபா ஆகிய இரு சட்டங்களின் நோக்கம் என்பது விசாரணை நடத்தாமல் இழுத்தடித்து ஆண்டுக்கணக்கில் பிணை கொடுக்காமல் விசாரணை கைதியாக சிறையில் அடைத்து வைப்பதாகும். இச்சட்டங்களின் கீழ் கைது செய்யப்படுவோர் மிகச் சாதாரணமாக 4 அல்லது 5 ஆண்டுகளை விசாரணை கைதிகளாகவே சிறையில் அடைத்து வைக்க்ப் படுகின்றனர்.
அமலாக்கத் துறை, பி.எம்.எல்.ஏ வை எதிர்த்துப் பேசி அம்பலப்படுத்தும் ஆளும் வகுப்புக் கட்சிகள் ஊபா – என்.ஐ.ஏ. வுக்கு எதிராக வாய் திறப்பதில்லை.
ஊபாவும் இசுலாமியர் நிலையும்:
இன்றளவில் ஊபா சட்டத்தின் கீழ் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது இசுலாமியர்களும் மத்திய இந்தியாவில் உள்ள பழங்குடி மக்களும்தான். காடுகளில் உள்ள கனிம வளங்களைக் கார்ப்பரேட்கள் கொள்ளையடிப்பதற்கு எதிராக பழங்குடிகள் நிற்பதால் அவர்களுக்கு எதிரான ஓர் உள்நாட்டுப் போரை நடத்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு. உள்நாட்டுப் போரை தீவிரப்படுத்துவதற்கு முன்பாக பழங்குடிகளுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், கலை இலக்கிய செயற்பாட்டாளர்கள், பல்கலைக் கழக பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலரையும் ஊபாவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது மோடி அரசு. இந்த நோக்கத்தைக் கொண்ட வழக்குதான் பீமா கோரேகான் வழக்காகும்.
இசுலாமியர்களைப் பொருத்தவரை அவர்களுடைய சட்டமன்ற , நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்கள் மறுக்கப்படுகின்றன; வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்படுகிறது; குடியுரிமைக்கே வேட்டு வைக்கும் சட்டத்திருத்தம், விரும்பிய உணவை உண்ண, விரும்பிய உடையை அணிய, விரும்பிய நபரை மணம் புரிய என ஒவ்வொரு அடிப்படை உரிமையும் மறுக்கப்படுகிறது. வன்கும்பல் அடித்து கொலை என்பது அன்றாட செய்தி என்றளவுக்கு நாட்டின் அரசியல் சூழல் மாறிவிட்டது. உண்மையில், இந்நாட்டு இசுலாமியர்கள் இரண்டாம் நிலைக் குடிமக்களாக மாற்றப்பட்டுள்ளனர். இப்போது பீகாரில் நடந்துவரும் வாக்காளர் பட்டியல் மீளாய்வு முழுமையடையும் ஆயின் வாக்குரிமை மறுக்கப்பட்ட குடிமக்கள் பட்டாளம் ஒன்று இந்நாட்டில் உருவாகும். அதில் கனிசமானோர் இசுலாமியர்களாக இருப்பர் என்பதில் சிறிதும் ஐயம் வேண்டாம்.
இத்தகைய வரலாற்று சூழலில்தான் இசுலாமிய அமைப்புகள் ஊபாவின் கீழ் தடை செய்யப்படுகின்றன. இசுலாமியர்களுக்கு பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, வழிபாட்டு உரிமை, அமைப்பாகும் உரிமை, போராடும் உரிமை ஆகியவை மறுக்கப்பட்டு இவை அனைத்தையும் செயல்படுத்தினால் அவர்கள் தேச விரோதிகளாக முத்திரையிடப்பட்டு ஊபா வில் கைது செய்யப்பட்டு சிறைபடுத்தப்படுகின்றனர். குறிப்பாக அரசமைப்புச் சட்ட உறுப்பு 19 தந்துள்ள கருத்துரிமை, அமைப்பாகும் உரிமையை முற்றாக மறுப்பதற்கான கருவியாக ஊபா சட்டம் பயன்படுகிறது.
ஊபா எதிர்ப்பின்றி பாசிச எதிர்ப்பா?
மதச்சார்பின்மை அணியாக களத்தில் நிற்கும் இந்தியா கூட்டணி கட்சிகள் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் வஃபு வாரிய திருத்தச் சட்டத்தையும் பொது சிவில் சட்டத்தையும் வன்கும்பல் அடித்துக் கொலைகளையும் மசூதி இடிப்புகளையும் வெறுப்புப் பேச்சுக்களையும் எதிர்க்கின்றன. இவையாவும் இசுலாமியர்களின் உரிமைகளை மறுப்பது உண்மைதான். இந்த உரிமை மறுப்புச் சட்டங்களையும் வன்முறைகளையும் அம்பலப்படுத்தி மக்களிடம் கொண்டு செல்வதற்கு பேச்சுரிமை, எழுத்துரிமை, கலை இலக்கிய செயல்பாடுகளுக்கான உரிமை வேண்டும். இதன் மூலம் இவற்றால் பாதிக்கப்படும் இசுலாமியர்களுக்கு விழிப்பூட்டி இவற்றுக்கு எதிராகப் போராடுவதற்கு அவர்களை அமைப்பாக்க வேண்டும். அப்படி அமைப்பாக்கப்பட்ட மக்களை ஒரு போராட்ட ஆற்றலாக வளர்த்தெடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற தாக்குதல்களை எதிர்த்துப் போராடி முறியடிக்க முடியும். மேலும் ஏற்கெனவே பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்கவும் புதிய உரிமைகளை வென்றெடுக்கவும் அமைப்பாக்கிக் கொண்டு போராடுவதற்கு இசுலாமியர்களுக்கு உரிமை வேண்டும்.
கருத்துரிமையும் அமைப்பாகும் உரிமையும் போராடும் உரிமையும் மறுக்க்கப்படும்போது உரிமைப் பறிப்புக்கு எதிராக இசுலாமியர்களை அணிதிரட்ட முடியாமல் போகும். அது போல் இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவும் புதிய உரிமைகளை வென்றெடுக்கவும் முடியாமல் போய்விடும்.
மதச்சார்பின்மைக்காக பாடுபடும் ஒரு கட்சி குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் இயற்றிவிட்டு அதற்கு எதிராகப் போராடிய இசுலாமியர்கள் ஊபாவின் கீழ் கைது செய்யப்படும் போது அவர்களுக்காக குரல் கொடுக்காவிட்டால் அதன் பொருள் என்ன? குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இசுலாமிய பெருமக்கள்தான் ஆர்த்தெழுந்து போராடினர். இசுலாமியர் அல்லாதவர்கள் அப்போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தனரே ஒழிய விடாப்பிடியான போராட்டத்தை நடத்தவில்லை. போராடியவர்கள் மீது வழக்குகள் பாயும் போது மெளனம் காப்பது என்பது இசுலாமியர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு துணை போவதுதான்.
இசுலாமியர்களின் வாக்குகள் தமக்கு தேவையில்லை என்று அறிவித்துவிட்டு பாசக ஆட்சி செய்கிறது. எனவே, இசுலாமியர்களுக்கு தம்மைவிட்டால் வேறு வழியில்லை என்ற நிலையில் இருந்து பிரதான எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன.
”இசுலாமியர்களுக்காக பேசவும் எழுதவும் குரல் கொடுக்கவும் ஆதரவு தரவும் நாங்கள் இருக்கும் போது இசுலாமியர்கள் பேசவும் எழுதவும் அமைப்பு கட்டவும் தேவை என்ன இருக்கிறது? என்று கேட்பதும் ஊபா கைதுகளை எதிர்த்து சிறைவாசிகள் விடுதலைக்கு குரல் கொடுக்காமல் இருப்பதும் ஒன்றுதான்.
இசுலாமியர்களின் அனைத்து உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கும் எதிர்க்கட்சிகள் இசுலாமியர்களின் கருத்துரிமைக்காகவும் அமைப்பாகும் உரிமைக்காகவும் குரல் கொடுக்காமல் இருப்பது என்பது மறைமுகமாக இசுலாமியர்களின் அனைத்து உரிமைகளையும் பறிப்பதற்கு துணை போவதே ஆகும்.
பாசிச பாசகவை எதிர்த்து மதச்சார்பின்மைக்காக பாடுபடும் எந்தவொரு கட்சியும் ஊபாவை எதிர்க்கவில்லை என்றால் அந்த பாசிச எதிர்ப்பும் மதச்சார்பின்மையும் முழுமையடையாது. ஆனால், ஊபா சிறைவாசிகளை விடுதலை செய்ய கோராத, இசுலாமிய அமைப்புகள் மீதான தடை நீக்கத்தைக் கோராத மதச்சார்பின்மையும் பாசிச எதிர்ப்பும்தான் இந்தியா கூட்டணியின் அரசியலாக இருக்கிறது.
இந்தியா கூட்டணியின் யதார்த்தம்:
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தடை செய்யப்பட்ட போது காங்கிரசு கட்சி அதை வரவேற்றது. சிபிஐ(எம்) கட்சியோ தடை செய்வதால் இது போன்ற அமைப்’களை ஒழித்துக்கட்ட முடியாது என்று அமித் ஷாவுக்கு அறிவுரை பகன்றது. திமுக உள்துறை அமைச்சகத்தின் ஆணையை தமது வழக்கமான சட்டவாத, அரசவாத நிலையில் இருந்து செயல்படுத்தியது.
கோவை எரிவாயு உருளை வெடிப்பு வழக்கை வேகவேகமாக என்.ஐ.ஏ. வுக்கு மாற்றியது திமுக அரசு. ஹிஸ்புல் தெஹ் ரீர் அமைப்பு தடை செய்யப்படுவதற்கு முன்பே அவ்வமைப்புக்கு எதிராக ஊபாவை பயன்படுத்தி வழக்குப் போட்டது திமுக அரசு.
ஜெயலலிதா ஆட்சியின் கீழ் என்.ஐ.ஏ.வுக்கு தமிழ்நாட்டில் அலுவலகம் வைக்க அனுமதி கொடுக்கப்பட வில்லை. எடப்பாடி ஆட்சியின் கீழ் என்.ஐ.ஏ வுக்கு சென்னையில் ஓர் அலுவலகம் வந்தது. ஸ்டாலின் ஆட்சியின் கீழ் இரண்டாவது அலுவலகம் தஞ்சையில் திறக்கப்பட்டுள்ளது. வேட்டை நாய் போல் என்.ஐ.ஏ. சோதனைகளில் இறங்கும் போது தக்கப் பாதுகாப்புத் தருவதற்கு மாநிலக் காவல்துறை உடன் நிற்கிறது. இது போன்ற சோதனைகளின் போது சில நேரங்களில் தமிழக காவல்துறை என்.ஐ.ஏ வைவிடவும் கெடுபிடியாக நடந்து கொள்கிறது.
பாப்புலர் ஃப்ரண்ட் வழக்கோடு தொடர்பு படுத்தப்பட்ட வழக்கறிஞர் அப்பாசுக்கு பிணை கிடைத்த போது அவரை மீண்டும் சிறையில் அடைப்பதற்காக வேறு ஒரு வழக்கில் அவரை கைது செய்து சிறையில் வைத்த சதி வேலையில் தமிழக காவல்துறை என்.ஐ.ஏ.வின் ஏவல் நாயாக செயல்பட்டது.
திமுக அரசு இப்படி இருக்க, பாசிச எதிர்ப்பின் அடிப்படையில் திமுகவை ஆதரிக்கும் தோழர்களும்கூட இதுபற்றி வாய் திறப்பதில்லை. இதன் காரணமாக இக்கோரிக்கை விவாதத்திற்குக்கூட வரமுடியாத துயர நிலை நீடித்துக் கொண்டிருக்கிறது.
பாசகவோடு திமுக சமரசம் செய்து கொள்வதால் திமுகவை அம்பலப்படுத்தி எதிர்ப்பதுதான் தமது இலட்சியம் என்று தம்மை அறிவித்துக் கொள்வோரும்கூட ஊபா – என்.ஐ.ஏ. விசயத்தில் திமுக அரசு செய்துவரும் சமரசங்களைப் பற்றி பேச முற்படுவதில்லை. அதாவது, சீமான் முதல் சவுக்கு சங்கர் வரை ஊபா – என்.ஐ.ஏ வை எதிர்த்துப் பேசுவதில்லை.
கேரள சிபிஐ(எம்) அரசோ ஊபாவின் கீழ் வழக்குகளைப் போடுவதற்கு கொஞ்சமும் தயங்குவதில்லை.
காங்கிரசு, திமுக, சிபிஐ (எம்) போன்ற கட்சிகளுடைய நிலையே இதுதான் என்றால் ஏனைய இந்தியா கூட்டணி கட்சிகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை.
கடந்த வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பொடா சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன. ஆனால், இன்று ஊபா சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் பேசத் தயங்குகின்றன.
ஊபாவின் கீழ் கைது செய்யபப்ட்டு இசுலாமியர்கள் சிறையில் வைக்கப்படுவதும் அவர்களுக்கு பிணை மறுக்கப்படுவதும் துயரம் தோய்ந்த தொடர் கதையாக மாறிவிட்டது. சிறையில் இருப்போர் உறவுகளைப் பிரிந்து வாடிக் கொண்டிருக்கின்றனர். சிறைக்கு வெளியே இருப்போர் ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் செயலற்றுப் போகின்றனர்.
இரண்டாம் நிலைக் குடிமக்களாக் இசுலாமியர்கள் மாற்றப்படுவதை தடுக்க வேண்டும் என்றால் ஊபா சிறைவாசிகளை உடனே விடுதலை செய்யக் கோர வேண்டும்; ஊபாவை எதிர்க்க வேண்டும், என்.ஐ.ஏ.வை கலைக்க கோர வேண்டும்.
ஊபா என்பது பாசிசத்தின் கருவியாகப் பயன்படுகிறது. என்.ஐ.ஏ. என்பது பாசிச நிறுவனமாக செயல்படுகிறது. எனவே, ஊபா சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோராத பாசிச எதிர்ப்போ மதச்சார்பின்மையோ இருக்க முடியாது.
பாபர் மசூதிக்குள் இராமர் சிலையுடன் தொடங்கியதுதான் மதச்சார்பற்ற இந்தியக் குடியரசின் வரலாறு. அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் செகுலரிசம் சேர்க்கப்பட்ட பிறகுதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது; இராமர் கோயிலும் கட்டப்பட்டது. இந்த தோல்விகரமான வரலாற்றில் இருந்து எதிர்க்கட்சிகள் சரியான பாடம் கற்றிருப்பார்களே ஆயின் ஊபா – என்.ஐ.ஏ. அடக்குமுறையை அவர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
ஊபா சிறைவாசிகளின் விடுதலைக்கானப் போராட்டம்தான் இசுலாமியர்களின் உரிமை மீட்புப் போராட்டங்களின் ஆணி வேராகும். அதுதான் மதச்சார்பின்மைக்கான அளவுகோலும் ஆகும்.