அஜித் குமார் காவல் கொலை: உயர் அதிகாரிகள் கைது செய்ய வேண்டும் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை

05-7-2025
தமிழ்நாடு அரசு அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய காவல் உயர் அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும்! உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும்! காவல் சித்திரவதைகளைத் தடுக்கவும் தண்டிக்கவும் தனிச்சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும்!
தமிழ்த்தேச மக்கள் முன்னணி கோரிக்கை
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வெளியே தெரிய வந்திருக்கும் 23 ஆவது காவல் கொட்டடிக் கொலை அஜித்குமார் கொலையாகும். அஜித் குமார் காவல் கொட்டடி கொலைக்கு காரணமான தமிழ்நாடு அரசை தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக கண்டிக்கிறோம்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய காவல் உயர் அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும். தமிழக அரசு ஐந்து கடைநிலை காவலர்களை மட்டும் கைது செய்துவிட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை காத்திருப்போர் பட்டியலில் வைத்து இருக்கிறது. திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர், துணைக் கண்காணிப்பாளர் ஆகியவர்களைக்கூட கைது செய்யவில்லை. எய்தவன் இருக்க அம்பை நோவதேன் என்று சொல்வது போல் ஆணையிட்ட உயரதிகாரிகளைக் காப்பாற்றும் முயற்சி இதுவாகும்.
இவ்வழக்கில் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்பவர் தமது ஒன்பதரை பவுன் நகை காணாமல் போனதை ஒட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் அஜித் குமார் விசாரிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், இந்தப் புகார் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதியப்படவில்லை. யார் ஆணையின் பெயரால் இதற்கு தனிப்படை அமைக்கப்பட்டது? அஜித் குமாரை காவல் நிலையத்திற்கு அழைத்து வராமல் எங்கோ ஒரு வெளியிடத்தில் வைத்து விசாரிக்க வேண்டிய தேவை என்ன? அவர் சித்திரவதை செய்யப்பட்ட இடத்தில் இருந்த இரத்த மாதிரிகளையும் சிறுநீர் மாதிரியையும் ஏன் சேகரிக்கவில்லை? போன்ற கேள்விகளை மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் S.M. சுப்பிரமணியம் மற்றும் AD மரியா கிளீட் எழுப்பியுள்ளனர். மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் இவ்வழக்கை விசாரித்து ஜூலை 8 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். ” அரசு தன் குடிமகனையே கொலை செய்துள்ளது” என்று நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.
உடற்கூராய்வு அறிக்கையும் சீருடை அணியாத நிலையில் காவலர்கள் அஜித் குமாரை சித்திரவதை செய்யும் காணொளியும் இவ்வழக்கின் போக்கை மாற்றிவிட்டது. எப்போதும் போல் பொறுப்பேற்க மறுத்து, கண்டதையும் பேசி பொறுப்பைத் தட்டிக் கழிக்கலாம் என்ற தமிழக அரசின் முயற்சி தோற்கடிக்கப்பட்டுவிட்டது. வேறு வழியின்றி நீதிமன்றத்தில் இது காவல் கொட்டடி கொலை என்று தமிழக அரசு ஏற்றுக் கொண்டது. ஐந்து காவலர்கள் கைது, டி.எஸ்.பி இடை நீக்கம், எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் என்று நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இழப்பீட்டுத் தொகை, அஜித் குமார் தம்பிக்கு அரசுப் பணி கொடுத்தமை, முதலமைச்சர் அஜித் குமார் தாயாரிடம் வருத்தம் தெரிவித்தமை என அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்தேறின.
’காவல்துறையின் தவறுகள்’ என்று சொல்லிக் கொண்டு தனக்கும் அதற்கும் தொர்டர்பில்லை என்பது போல் போக்கு காட்டும் வழக்கத்தில் இருந்து மாறி காவல் துறையின் குற்றங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டிய காவல்துறை அமைச்சகத்தைக் கையில் வைத்திருப்பது தான்தான் என்ற அடிப்படையில் முதலமைச்சர் ஸ்டாலின் முதல் முறையாக இக்காவல் கொட்டடி கொலைக்கு பொறுப்புக் கூறியுள்ளார். இந்த ஆட்சிக் காலத்தில் மட்டும் அஜித் குமார் கொலையோடு சேர்த்து மொத்தம் 23 காவல் கொட்டடி கொலைகளும் 21 போலி மோதல் கொலைகளும் நடந்துள்ளன. இவையன்றி பல் பிடுங்குவது, கை, கால் உடைப்பது என காவல் கொட்டடி சித்திரவதைகள் தனிக் கதையாகும். இத்தனைக்குப் பிறகாவது, இதற்கெல்லாம் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தாம்தான் என்று ஆட்சியில் இருப்போர் உணர்ந்திருப்பது சற்றே ஆறுதல் அளிக்கிறது.
காவலர்களின் மனைவிகள், உயர் அதிகாரிகளின் ஆணையைத் தான் தங்கள் கணவன்மார்கள் செயல்படுத்தினார்கள் என்று களத்தில் இறங்கிப் போராடினர். இப்போது அவர்கள் எழுப்ப வேண்டிய கோரிக்கை என்னவென்றால் உயரதிகாரிகளையும் சேர்த்து கைது செய்ய வேண்டும் என்பதே ஆகும். மாறாக, உயரதிகாரிகளின் ஆணையைத்தான் செயல்படுத்தினார்கள் என்ற பெயரில் அஜித் குமாரைக் கொன்ற காவலர்கள் குற்றமற்றவர்கள் ஆகிவிடமாட்டார்கள்.
இவ்வழக்கில் புகார்தாரர் நிகிதா ஏற்கெனவே பண மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்டவர் என்பதும் வெளியே வந்துவிட்டது. தலைமைச் செயலகத்திலும் தில்லி அதிகார வட்டத்திலும் புகார்தாரர் நிகிதாவுக்கு இருக்கும் தொடர்பு காரணமாகவே சட்டத்தை மீறிய இந்த அட்டூழியம் அரங்கேறியிருக்கிறது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளரையும் தாண்டி மாநில அள்விலான காவல் உயர் அதிகாரிகளுக்கும் தில்லியில் இருந்து ஒர் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கும் இதில் தொடர்பிருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இவ்வழக்கை சிபிசிஐடி யிடம் இருந்து சிபிஐ க்கு மாற்றுகிறது தமிழ்நாடு அரசு. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கு, மகேஷ்குமார் கொலை வழக்கு போன்ற வழக்குகளில் சிபிஐ மிகவும் அம்பலப்பட்டு இருக்கும் நிலையில் சிபிஐ விசாரணை உண்மையை வெளிக்கொண்டு வருமா? என்ற ஐயம் எழுகிறது. மாறாக உயர்நீதிமன்ற வழிகாட்டுதலில் சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை தொலைக்காட்சியில்தான் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று பச்சைப் பொய் பேசிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அஜித் குமார் காவல் கொட்டடி கொலையில் வழமையான எதிர்க்கட்சி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.
இன்னொருபுறம், ’மனித உரிமைகள் கிலோ எவ்வளவு?’ என்று கேட்கக்கூடிய பாரதிய சனதா கட்சியினரோ அஜித் குமார் கொலைக்கு பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். 03-07-2025 தேதி ஆங்கில இந்து நாளேடு, இந்திய அளவில் நடக்கும் காவல் கொட்டடி கொலைகள் பற்றிய புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இவை தேசிய குற்றப் பதிவேட்டில் இருந்து பெறப்பட்டவை. அதில் கடந்த 2016 – 2017 ஆம் ஆண்டு முதல் 2021 – 2022 ஆம் ஆண்டு வரையிலான ஆறு ஆண்டுகளில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய சனதா கட்சி ஆளும் உத்தரபிரதேசத்தில் 2630 காவல் கொட்டடி மரணங்கள் நடந்துள்ளன. தமிழ்நாடில் மொத்தம் 490 மரணங்கள் நடந்துள்ளன. எனவே, இதுவொரு நாடளவிலான அமைப்புசார் பிரச்சனையாக இருந்துவருகிறது என்ற உண்மையைக் கருத்தில் கொள்ளாமல் திமுக ஆட்சிக்கு எதிரான அரசியலாக பேசி வருகின்றனர்.
மறுவளமாக திமுகவும் தமது ஆட்சியின் பிம்பச் சரிவு பற்றிய கவலையாக இப்பிரச்சனையை அணுகுகிறது. மேலே குறிப்பிட்ட ஆங்கில ஏட்டின் கட்டுரையில், தென்னிந்திய அளவில் அதிக காவல் மரணங்கள் நடந்திருப்பது தமிழ்நாட்டில்தான் என்றும் ஒரே ஒரு காவல் அதிகாரி கூட அந்த ஆறு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தண்டிக்கப்பட வில்லை என்றும் காவல் சித்திரவதையைப் பொறுத்தவரை உத்தரபிரதேசத்தைவிடவும் அதிகமாக தமிழ்நாட்டில் பட்டியலின மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் பட்டியலின மக்கள் 20% என்றால் காவல் சித்திரவதைகளில் பாதிக்கப்பட்டோரில் பட்டியலின மக்கள் 38.5% என்றும் பதிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் புரையோடிப் போயுள்ள போலீஸ் ஸ்டேட் பிரச்சனையாக இதை அணுகி, கட்டமைப்பு ரீதியான தீர்வை நோக்கி திமுக அரசு செல்ல வேண்டும்.
இந்நிலையில்தான் சித்திரவதைக் காணொளியை வெளியிட்ட சக்தீஸ்வரனை காவலர்கள் மிரட்டியது, திமுக நிர்வாகி உள்ளிட்டவர்கள் அஜித் குமார் குடும்பத்தாரிடம் பேரம் பேசிய செய்தியும் வெளிவந்துவிட்டது. பிரச்சனை இந்த அளவுக்கு வெளிச்சத்திற்கு வந்த பிறகும் இதுபோன்ற முயற்சிகள் நடப்பது மிகுந்த கவலையளிக்கிறது.
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இவ்வழக்கில் தொடர்புடைய உயரதிகாரிகளான திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர், சிவகங்கை மாவட்ட டி.எஸ்.பி, எஸ்.பி. உள்ளிட்டோரைக் கைது செய்ய வேண்டும். மேலும் புகார்தாரர் நிகிதாவின் புகார் படி திருடு போனதாக சொல்லப்படும் எந்த நகையும் இதுவரை கைப்பற்றப்படவில்லை. எனவே, புகார்தாரர் நிகிதாவும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அவரோடு தொடர்புடைய காவல் உயர் அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும். உயர்நீதிமன்ற வழிகாட்டுதலில் செயல்படும் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து குற்றவாளிகள் அனைவரையும் நீதியின் முன்பு நிறுத்த வேண்டும்.
காவல் நிலைய கொலைகள் நிகழ்வதை தடுப்பதற்கு பரம்வீர் சிங் எதிர் பல்ஜீத் சிங் என்ற உச்சநீதிமன்ற வழக்கில் வழங்கிய சிசிடிவி தொடர்பான பரிந்துரைகளை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு காவல் கொட்டடி மரணம் நடக்கும் போதும் நிவாரணத் தொகை, அரசு வேலை என்ற இழப்பீட்டு நடவடிக்கைகளோடு பிரச்சனையை ஆறப்போட்டு நகர்வது என்ற வழமைக்கு மாறாக தமிழ்நாட்டில் இனி இப்படி ஒரு கொட்டடி மரணம் நிகழாமல் தடுக்க வேண்டும் என்ற அரசியல் மனத்திட்பத்துடன் காவல் நிலைய சித்திரவதைகளுக்கு எதிரான சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்றி அதை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்,
தி. செந்தில்குமார்,
ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்த்தேச மககள் முன்னணி