பாசிச பாசக ஆட்சியை வீழ்த்துவதற்கு வழியென்ன? பகுதி – 1 அறிமுகம்

இந்திய ஒன்றிய அரசியல் அதிகாரத்தில் கடந்த 10 ஆண்டுகாலமாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் நிதிமூலதன ஏகபோக சக்திகளால் வழிநடத்தப்படும் காவி – கார்ப்பரேட் பாசிச சிறுகும்பலாட்சி நிறுவப்பட்டுள்ளது. 2014-2019 காலத்தை மோடி 1.0 என்றும் 2019-2024 காலத்தை மோடி 2.0 என்றும் 2024 க்குப் பிந்தைய காலத்தை மோடி 3.0 என்றும் அடையாளப்படுத்தலாம். பொதுவாக இந்த ஆட்சி இரண்டு முனைகளில் தீவிரப்பட்டு வருகிறது. ஒன்று, ஆர்.எஸ்.எஸ். இன் இந்துராஷ்டிர பார்ப்பனிய சனாதனக் கொள்கையை நவீன வடிவத்தில் அரசதிகாரமாகவும் நாட்டின் தேசியக் கொள்கையாகவும் மாற்றுவது. இரண்டு, இந்துராஷ்டிர சனாதனக் கொள்கையை ஏற்றுக்கொள்கிற நிதிமூலதன சக்திகளின் சிறுகும்பலாட்சியைப் பொருளியல் தேசியமாக கட்டியெழுப்புவது. இந்த இரண்டு முனைகளில் தீவிரப்படும் ஒழுங்கிற்கு ஏற்ப ஏகாதிபத்திய குறிப்பாக அமெரிக்க – இரசிய – சீன உறவுகளைக் கையாள்கின்ற ஏகாதிபத்திய சார்புக் கொள்கையைக் கடைபிடித்துவருகிறது.
காவி-கார்ப்பரேட் பாசிச அரசதிகாரத்தை நிறுவி இந்துராஷ்டிரத்தைக் கட்டமைப்பது பற்றி இருவேறு பார்வைகள் நிலவி வருகின்றன. பார்ப்பன ஆதிக்கம், பார்ப்பனிய மேலாண்மையை நிலைநிறுவத்துவதற்கு அந்த சமுதாய சக்திகளால் இந்த அரசியல் பொருளியல் நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகிறது என்பது ஒரு பார்வை. இன்னொன்று, ஏகாதிபத்திய நிதிமூலதன சக்திகளுக்கு சேவையாற்றுவதற்கு இந்திய அரசு பாசிச வடிவமெடுக்கிறது என்று இடதுசாரிகளில் ஒரு பிரிவினர் முன்வைக்கின்றனர். ஆனால், கிடைக்கக் கூடிய விவரங்களில் இருந்தும் வெளிப்படையாக கண்ணுக்குப் புலப்படக் கூடிய நிகழ்ச்சிகளில் இருந்தும் உண்மையை நோக்கிச் சென்றால், இந்தியாவில் ஏகபோகமாக வளர்ந்து வரக்கூடிய குறிப்பாக மேற்கு இந்திய மாநிலங்களில் இருக்கும் கார்ப்பரேட்கள் நாடுகடந்த ஏகபோகங்களாக வளர்ந்து செல்வதற்கு பொருளியல் அரசியல் கட்டுப்பாடுகளும் தடைகளும் இருக்கின்றன. அந்த தடைகளைஅகற்றக்கூடிய அரசியல் சமுதாயக் கொள்கையாக ஆர்.எஸ்.எஸ். இன் அனைத்தையும் ஒற்றைமயமாக்கும் இந்துராஷ்டிரக் கொள்கை அமைகிறது. எந்தளவுக்கு ஒற்றைமய அரசியல் மாற்றங்கள் செய்யப்படுகின்றனவோ அந்த அளவுக்கு ஏகபோகங்களின் நிதிமூலதன திரட்சிக்கும் பொருளியலில் சிறுகும்பலாட்சிக்கும் வழியேற்படுகிறது. எந்த அளவுக்கு நிதிமூலதன திரட்சி சிலர் கையில் குவிகிறதோ, தேசிய சந்தை உருவாக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு ஒற்றையாட்சி இந்துராஷ்டிர அரசியல் அமைப்பு மாற்றங்கள் இலகுவாகின்றன. ஒன்றை ஒன்று சார்ந்தும் ஒன்றின் வளர்ச்சியை மற்றது ஊக்குவித்தும் செல்வதற்கான, பொருளியலிலும் அரசியலிலும் சிறுகும்பலாட்சியைக் கொண்ட அரச வடிவமாகவே காவி-கார்ப்பரேட் பாசிசம் உருப்பெறுகின்றது.
பனிப்போருக்குப் பின்னான உலக ஒழுங்கில் அமெரிக்கத் தலைமையிலான ஒற்றை மைய உலகமாக காட்சி தந்த சர்வதேச நிலைமை, அமெரிக்க தலைமையிலான நேட்டோ முகாம் எதிர் சீனா, ரசியா இணைந்த இன்னொரு முகாம் என்று இருமுனையாக மாறிவருகிறது.
கொரோனாவுக்குப் பினனான உலக சூழலில் ஆப்கனில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதோடு தொடங்கிய மாற்றங்கள் 2022 பிப்ரவரியில் கிழக்கு ஐரோப்பாவில் உக்ரன் மீதான ரசிய ஆக்கிரமிப்புப் போராகவும் 2023 அக்டோபரில் மேற்காசியாவில் பாலத்தீனத்தின் மீதான இசுரேலின் இனவழிப்புப் போராகவும் தொடர்ந்து கொண்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கானோரைக் காவு வாங்கியபடி புகை மண்டலத்தையும் குருதி ஆற்றையும் உருவாக்கி வருகிறது வல்லரசியப் போட்டி. அமெரிக்காவுடன் மூலவுத்தி வகையில் இராணுவப் பொருளியல் கூட்டணியை இந்திய அரசு கொண்டிருந்தாலும் இத்தகைய போர் முனைகளும் போர் பதற்றச் சூழலும் சிறுகும்பலாட்சிக்கு மென்மேலும் சாதகமான நிலைமைகளைத் தோற்றுவித்துள்ளது.
தெற்காசிய அளவில் கொரோனாவுக்குப் பின்னான பொருளியல் நெருக்கடி, பாகிஸ்தான், சிறிலங்கா, வங்கதேசம், மாலத்தீவு ஆகிய நாடுகளில் பெரும் கிளர்ச்சிகளைத் தோற்றுவித்துள்ளது; ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க – சீன வல்லரசியப் போட்டி இந்தோ – பசிபிக் பகுதியின் முகன்மையை அதிகப்படுத்தியுள்ளது. இதுவும் இந்தியாவில் உள்ள சிறுகும்பலாட்சிக்கு சாதகமான நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளம், மாலத்தீவு, வங்கதேசம் ஆகிய தெற்காசிய நாடுகளில் இந்திய ஆதரவுக் கட்சிகள் பதவியில் இருந்து கீழிறக்கப்பட்டுள்ளன. மியான்மரில் சீன ஆதரவு இராணுவ ஆட்சி நடந்து வருகிறது. பாசிச மோடி – அமித் ஷா வின் சிறுகும்பலாட்சி தெற்காசிய அளவில் தமது விரிவாதிக்கத்தை உறுதி செய்வதற்கு சீனாவுடன் போட்டிப் போட்டு வருகிறது. அமெரிக்கா தெற்காசியப் பிராந்தியத்தில் தமது நேரடி தலையீட்டை வைத்துக் கொண்டுதான் இருக்கிறது.
இந்தியா தமது தெற்காசிய அளவிலான விரிவாதிக்க வெளியுறவுக் கொள்கையை இந்தோ – பசிபிக் பாதுகாப்பு நலனுடன் இணைப்பதற்கு முயன்று வருகிறது. உலகளாவிய வல்லரசியப் போட்டியும் பிராந்திய மேலாதிக்க அரசுகளின் போட்டியும் தெற்காசியாவையும் தென்கிழக்காசியாவையும் கொதிநிலை அடையச் செய்கின்றன.
இத்தகைய சர்வதேச நிலைமை இந்தியாவில் உலகமய காலகட்டத்தில் வளர்ச்சியடைந்த நிதிமூலதன சக்திகளுக்கு தம்மை மேலும் விரிவாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது. இத்தகைய சர்வதேச பின்னணியில் நிதிமூலதன திரட்சிக்கு உள்நாட்டளவில் தடையாக இருக்கும் பொருளியல் நிதிக் கொள்கைகளை அகற்ற வேண்டிய தேவை அச்சக்திகளுக்கு இருக்கிறது. உலகமயப் பொருளியல் மாற்றங்கள் ஏற்பட்ட காலத்திலும் அதனால் விளைந்த நெருக்கடிகள் முன்னுக்கு வந்த காலத்திலும் தம்மைப் பலப்படுத்திக் கொண்டு எதிர்க்கட்சியாக வளர்ச்சிப் பெற்ற பாசக, காங்கிரசுக்கு மாற்றான சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. காங்கிரசு மற்றும் மாநிலக் கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்கு மாற்றாக ’வலிமையான ஒரு கட்சி ஆட்சி’ என்ற முழக்கத்தை முன்வைத்து, இந்தியாவில் உள்ள நிதிமூலதன சக்திகளில் ஒரு சிலர் ஏகபோகமாக வளர்வதற்கு சர்வதேச மூலதனத்தையும் உள்நாட்டு மூலதனத்தையும் திரட்டுவதற்கு உள்ள தடைகளை அகற்றுவதற்கு ஏற்ப ஆட்சியமைப்பு வடிவத்தை மாற்றுவதற்கான சக்தியாக 2014 ஆம் ஆண்டு பாசக ஆட்சியைப் பிடித்தது. பின்வரும் நான்கு முனைகளில் பாசக ஆட்சியின் திசைவழி புலப்படுகிறது.