முருக பக்தர்களுக்கு துணை வடிவேலனா? இல்லை கொடியவர்களா? முருக பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள் -தோழர் செந்தில்

என் கல்லூரி நண்பன் ஒருவனுக்கு குழந்தை தள்ளிப் போனது. மருத்துவரை அணுகியதோடு சேர்த்து கணவனும் மனைவியுமாய் ஒரு முறை பழனிக்குப் பாதயாத்திரை போய்வந்தார்கள். சில காலத்தில் குழந்தை பிறந்தது. பின்னர், பழனிக்கு சென்று நண்பனின் மனைவி முடி காணிக்கை செலுத்தினார்.
”தீரா வினை தீர திருச்செந்தூர் போய் வா” என்று பலரும் சொல்ல என்னுடைய எதிர்காலம் பற்றிய கவலையில் என் அப்பா ஒரிரு முறை திருச்செந்தூர் போய் வந்தார்.
எங்கள் ஊரில் காவடி தூக்கிக் கொண்டு எங்கள் வீட்டைக் கடந்து சென்ற ஒரு இளைஞன், “ நான் உனக்கு வழியமைச்சுத் தரேன்’ என்று சொன்ன அருள்வாக்கை என்னுடைய அம்மா பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறார். விழிக்கு துணை நின் திரு மென்மலர்ப் பாதங்கள் என்று முருகனை மலை போல் நம்பிக் கொண்டிருக்கிறார்.
இதுபோல் ஓராயிரம் செய்திகளை எல்லோராலும் சொல்ல முடியும். தமிழ்நாட்டில் முருக வழிபாட்டுக்குப் பஞ்சமா? முருகன் மீதான நம்பிக்கைக்கு ஊறு வந்துவிட்டதா?
வைகாசி விசாகத்திற்கு கூட்டம் வழிந்தோடவில்லையா? தைப் பூசத்திற்கு செல்வோர் எண்ணிக்கை குறைந்துவிட்டதா? சூரசம்காரத்திற்கு செல்பவர்கள் குறைந்துவிட்டனரா? கார்த்திகை தீபத்தைக் கண்டு களிப்போர் குறைந்துவிட்டனரா? பங்குனி உத்திரத்து அன்று பக்தி மங்கிவிட்டதா? வெறும் பாலும் பழமும் மட்டும் ஓரு பொழுது உண்ணும் சஷ்டி விரதம் வற்றிப் போய்விட்டதா?
முருக வழிபாட்டுக்கு என்ன குறை வந்துவிட்டது இப்போது?
பக்தி தழைத்தோங்கும் தமிழ்நாட்டில் ஒரு வேடிக்கை நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் முருக பக்தியை வளர்ப்ப்பதற்கு குஜராத்திலிருந்து அமித் ஷாவும் உத்தரபிரதேசத்தில் இருந்து யோகி ஆதித்தியநாத்தும் ஆந்திராவில் இருந்து பவன் கல்யாணும் வருகிறார்களாம். மாநாடுகளின் வழியாக பக்தியை வளர்க்க முடியுமா? இத்துணை காலமும் தமிழ் திருநாட்டில் மாநாடு போட்டா பக்தியை வளர்த்தார்கள் தமிழர்கள்?
முருக பக்தர்கள் மாநாடாம். இந்து முன்னணி நடத்துகிறது என்று அனுமதி வாங்கியுள்ளார்கள். ஆனால், பாசக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அனைத்து சங் பரிவார அமைப்புகளும் சேர்ந்துதான் நடத்துகிறோம் என்று பாசகவைச் சேர்ந்த ராம சீனிவாசன் ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார்.
முருகன் மக்களைக் காப்பாற்றியது போய், முருகனைக் காப்பாற்ற அர்ஜூன் சம்பத்களும் காடேஸ்வரன்களும் துடியாய் துடிக்கிறார்கள். இவர்களால் காக்கப்படும் நிலையில்தான் முருகன் இருக்கின்றானா?
தமிழர்களின் வாழ்வில் கொடுத்த வாக்கை மீறாமை, சத்தியம் தவறாமை தனிச்சிறப்பான அறமாகும். திருக்குறளின் அற அடிப்படையும் வாய்மையே ஆகும். அதனால்தான், கந்தரலங்காரத்தில் சொல்வன்மை வேண்டும் என்று வேண்டாமல், ”மெய்மை குன்றா மொழிக்கு துணை முருகா எனும் நாமங்கள்” என்று அருணகிரிநாதர் பாடுகிறார். ஆனால், முருகனின் பெயரை உச்சரித்துக் கொண்டு பொய்யையும் புரட்டையும் பேசி தமிழ்நாட்டில் கட்சி வளர்த்திட துடிக்கிறது பாரதிய சனதா கட்சி. பொய்யர்களுக்கு துணைபோவானா முருகன்?
அவர்கள் பக்தியை வளர்ப்பதற்காக மதுரைக்கு அழைக்கவில்லை. பாரதிய சனதாவை வளர்ப்பதற்காக அழைக்கிறார்கள். முருகனை பாசகவின் விளம்பர தூதராக மாற்றிவிடப் பார்க்கிறார்கள். முருக பக்தர்களை தமது வாக்கு வங்கியாக மாற்றப் பார்க்கிறார்கள்.
பக்தி தனிப்பட்ட விசயம். இறைவனுக்கும் பக்தருக்கும் இடையில் இருக்கும் அந்தரங்க உறவாகும். தமிழ் மக்களின் இறை நம்பிக்கையை அரசியலில் வியாபாரமாக்கும் தந்திரமாக முருக பக்தர்கள் மாநாட்டை நடத்துகிறார்கள்.
கட்சி வளர்ப்பதற்கும் கலவரம் செய்வதற்கும் கொள்ளையடிப்பதற்கும் முருகன் துணைக்கு வருவான் என்று நம்புகிறார்களா? அல்லது முருகனை வழிபடும் தமிழர்கள் இந்த நயவஞ்சகத்தை நம்பி ஏமாந்து போய் விடுவார்கள் என்று நினைக்கிறார்களா?
இந்து முன்னணியின் காடேஸ்வரன் என்ன திருப்புகழ் தந்த அருணகிரிநாதர்? திருமுருகாற்றுப்படை தந்த நக்கீரனா? வாழும் கிருபானந்த வாரியாரா? திடீரென்று இவர்களுக்கு ஏன் இந்த முருக பக்தி?
மோடியைக் காட்டியும் ஓட்டுப்போடாத தமிழ் மக்களிடம் முருகனைக் காட்டியாவது ஓட்டுப் பிச்சை கேட்கும் கயமை அல்லவா இது?
திருச்செந்தூரில் சூரசம்காரத்திற்கு இலட்சக்கணக்கில் இறை அன்பர்கள் கூடும்போது எப்போதாவது கலவரம் நடந்ததுண்டா?
ஆயிரமாயிரமாய் பழனிக்கு பாதயாத்திரை போகின்ற போது எத்தனை மசூதிகளை கடந்து போகிறார்கள்! ஒரே ஒரு கல்லை முருக பக்தர்கள் மசூதியின் மீது வீசியதுண்டா?
சென்னை திருவல்லிக்கேணியில் முண்டக்கன்னி அம்மன் திருவிழாவில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடும் போது இந்து – முஸ்லிம் பதற்றம் ஏற்பட்டது உண்டா?
அதே திருவல்லிக்கேணியில் விநாயகர் சதுர்த்திக்கு ஊர்வலம் போகும் போது கலவரம் நடப்பதேன்?
திருவண்ணாமலையில் கிரிவலம் வரும்போதோ வைகாசி விசாகத்தின் போதோ சித்திரை மாதம் சமயபுர திருவிழாவிலோ கார்த்திகை தீபத்தின் போதோ ஆயிரமாயிரமாய் கூடுபவர்கள் இந்துக்கள் என்று அறியப்படுபவர்கள்தான். அங்கே ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்ததுண்டா?
விநாயகர் சதுர்த்தியில் மட்டும் கலவரம் ஏற்படுவதேன்? அங்கே முன்னணியில் இருப்பது இந்துக்கள் அல்ல, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி என்ற பெயரில் வலம்வரும் கொலையில் கொடியோர்கள்!
விநாயகர் சதுர்த்திக்குள் புகுந்து கொண்ட இவர்கள், இப்போது கருணைக் கடலாம் முருகனை கலவரக் கடவுளாக மாற்றப் பார்க்கிறார்கள்.
வட இந்தியாவில் இராமனின் பெயரால் கலவரங்கள் செய்து கட்சி வளர்த்தவர்கள் தமிழ்நாட்டில் முருக பக்தர்கள் வேடமணிந்து வருகிறார்கள்.
ஆதித் தமிழன் ஆண்டவன் ஆனான். மீதித் தமிழர்களை முழு அடிமைகள் ஆக்க , ஆதித் தமிழன் முருகனைத் துணைக்கு அழைத்து வருகிறார்கள்.
”பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமே” என்று அருணகிரிநாதர் பாடுகிறார். அதாவது முருக பக்தர்களுக்கு துணையாக வேலும் மயிலும்தான் வரமுடியுமே ஒழிய கொலையில் கொடியோராம் சங் பரிவாரங்கள்( ஆர்.எஸ்.எஸ்.) துணை செய்ய முடியாது.
பக்தி வளர்ப்பதற்கு மாநாடு தேவையில்லை. முருக பக்தர்களுக்கு முருகனே துணை. மதுரை மாநாடு பக்தர்கள் மாநாடல்ல, கலவரக்காரர்களின் ஒன்றுகூடல்.
வைகாசி விசாகம் முடிந்து ஆனி பிறந்துவிட்டது, ஆனி உத்திரம் ஜூலை 2 ஆம் தேதி வருகிறது. அப்போது பழனிக்குப் போய்க் கொள்ளலாம், மதுரையில் நடக்கும் பாரதிய சனதாவின் அரசியல் மாநாட்டைப் புறக்கணிப்பீர்