காங்கோ சனநாயகக் குடியரசின் வரலாறு. – பகுதி 2 – தோழர் பாலாஜி

2023 ஆம் ஆண்டிலிருந்து காங்கோவின் கிழக்குப் பகுதிகளில் அரசுப் படைகளுக்கும், எம்.23 போராளிகளுக்கும் நடந்துவரும் போரால், இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து மட்டும் ஏழாயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இப்போது நடைபெற்றுவரும் போருக்கான காரணமாக எம்.23 போராளிக்குழு 1992இல் நடைபெற்ற ருவாண்tataடா இனப்படுகொலையையே மூலமாகக் குறிப்பிட்டாலும் அந்நாட்டு மக்கள் கலகங்களையும் படுகொலைகளையுமே ஆண்டாண்டுகாலமாய் சந்தித்து வருகின்றனர். அம்மக்களின் நிகழ்காலத் துயர்களை அறிந்துகொள்ள, வரலாற்று வேர்களை ஆராய வேண்டியுள்ளது.
வரலாற்றுக்கு முந்தைய காலம்:
இப்போது பாரெங்கும் பரவி வாழ்ந்து வரும் மனித இனம் என்றழைக்கப்படும் ஹோமோசேப்பியன்ஸ் இனக்குழு ஆப்பிரிக்க கண்டத்தில் தோன்றியதாக வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். இப்போது காங்கோ ஜனநாயகக் குடியரசாக அடையாளப்படும் பகுதிகளில் மனித இனம் 90000 ஆண்டுகள் முதல் பரவி வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. பழங்கற்காலத்தில் அப்பகுதியில் வாழ்ந்த இனக்குழு ஒன்று ஆப்ரிக்க ஆறுகளில் காணப்பெற்ற கெளுத்தி மீன்களைப் பிடிக்க பயன்படுத்திய பழங்காலத் தூண்டில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் காங்கோ பகுதியில் வாழ்ந்த மக்கள் பிக்மி இனத்தைச் சேர்ந்தவர்களாக அறியப்பட்டனர். 1950 ஆம் ஆண்டு காங்கோ நாட்டின் கிழக்குப் பகுதியில் செம்லிக்கி ஆற்றுப்படுகையில் கண்டுபிடிக்கப்பட்ட இஷாங்கோ எலும்பு பத்தாயிரம் முதல் இருபதாயிரம் ஆண்டுகள் பழமையானதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இஷாங்கோ எலும்பில் பொறிக்கப்பட்ட 168 கோடுகள் கடினமான கணிதக் கணக்குகளுக்கோ அல்லது நிலவினை அடிப்படையாகக் கொண்ட 6 மாதத்திற்கொருமுறை மாறும் ஆண்டுக்கணக்கைக் குறுக்கவோ பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சுமார் கிபி 2000 வாக்கில் ஆப்ரிக்காவின் வடமேற்கிலிருந்து நடைபெற்ற பண்டு இனமக்களின் இடப்பெயர்வு, காங்கோ பகுதிக்கு இரும்பு தொழில்நுட்பத்தையும் விவசாயத்தையும் அறிமுகப்படுத்தியது. பண்டு இனமக்களின் இடப்பெயர்வு தெற்கிலும் தென்கிழக்கிலும் வாழ்ந்து வந்தவேட்டை தொழிலில் ஈடுபட்ட இனக்குழுக்களின் இடப்பெயர்வுக்கு வழிவகுத்தது.
பூமத்தியரேகையின் மத்தியில் அமைந்துள்ளதால், ஏராளமாக மழை பொழியும் காங்கோ நாட்டில் பிரதானமாக ஓடும் காங்கோ நதியை மையப்படுத்தியே வணிகம் வளர்ந்தது. அதேவேளையில், அதீத மழைப்பொழிவு காரணமாக, அந்நாட்டின் பல பகுதிகளில் நீர்வளம்மிகுதியால், விவசாயம் சாத்தியப்படாது. இதனாலேயே, இன்றுவரை அங்கு வாழும் சில இனக்குழுக்கள் ஆதிகாலத்து வேட்டைச் சமூக வாழ்வுமுறையையே கடைபிடிக்கின்றன.
அரசு உருவாக்கமும் நிலப்பிரபுத்துவ மத்தியக் காலமும்:
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் காங்கோ நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள உப்பெம்பா பள்ளத்தாக்கு பகுதியில்தான் காங்கோ பகுதியின் முதல் நாகரிகம் உருவானதாக கருதப்படுகிறது. இந்நாகரிகமே பின்னாளில் லூபா அரசு உருவாக அடித்தளமாக இருந்தது. உப்பெம்பா பள்ளத்தாக்கிலிருந்து, பல தனித்துவமான கலாச்சாரங்கள் உருவாகின. அவை முந்தைய நாகரிகங்களிலிருந்து விழுமியங்களை வாங்கிக் கொண்டு வளர்ந்தன.
கி.பி. ஐந்தாம் நாற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலும் பண்டு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மக்களின் குடியேற்றம் மத்திய ஆப்பிரிக்காவின் மேற்கிலும் தெற்கிலும் அதிகரித்தது. சுமார் 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் காங்கோ அரசு உருப்பெற்றது. காங்கோ அரசு அதன் உச்சத்தில் மேற்கில் அட்லாண்டிக் கடற்கரையிலிருந்து கிழக்கில் க்வாங்கோ ஆறுவரையிலும் விரிந்திருந்தது. அவ்வரசின் வடக்கு எல்லை யாககாங்கோ நதி அமைந்தது. இவ்வரசின் தலைநகரமான ம்பான்சாகாங்கோ இப்போதுள்ள அங்கோலா நாட்டின் வடக்கில் அமைந்துள்ளது.
காங்கோ அரசு தன்னுள் பல்வேறு இனக்குழுக்களையும், பல குறுநில அரசுகளையும் கொண்டிருந்தது. 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் உருவான இவ்வரசு 1862 வரை இப்போதுள்ள காங்கோ குடியரசு, காங்கோ சனநாயகக் குடியரசு மற்றும் அங்கோலா நாடுகளின் பகுதிகளில் ஆட்சி புரிந்தது. அவ்வரசின் மன்னர் மணிகாங்கோ என்றழைக்கப்பட்டார். ஓட்டு மொத்த நாடும் ஆறு மாகாணங்களாக பிரிக்கப்பட்டிருந்தது.
ஐரோப்பியர் வருகையும் அடிமை வியாபாரமும்
காங்கோ அரசின் துவக்க காலத்திலிருந்தே அடிமைமுறை இருந்து வந்துள்ளது. குறிப்பாக போர்களிலும் சந்தைகளிலும் தோல்வியுற்றவர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர். பெண்களும் காங்கோ நாட்டுக் குடிமக்களும் அடிமை முறையிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தனர். அதேவேளை, காங்கோ குடிமக்களாகவே இருந்தாலும் குற்றசெயல்களில் தண்டிக்கப்பட்டவர்கள் அடிமைகளாக்கப்பட்டனர். இவ்வடிமைகள் பெரும்பாலும் உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் வேலைகளிலும், வீட்டு வேலைகளிலுமே ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில் 1483இல், போர்த்துகீசிய கடற்பயணி டியோகோசியாவோவின் கப்பல் காங்கோ ஆற்றின் முகத்துவாரத்தை அடைந்தது. போர்த்துகியர்கள் அந்நிலத்தைக் கைப்பற்றியதன் அடையாளமாக வெற்றித் தூண் ஒன்றை நிறுவிவிட்டு, காங்கோ அரசுக்கு தூது அனுப்பினார்டியோகோ. பின்னர் தெற்கிலுள்ள அங்கோலா நாட்டு கடற்கரையிலும் வெற்றித் தூண்கள் நிறுவப்பட்டன. காங்கோ அரசுக்கு அனுப்பட்ட கிறித்தவ தூதுவர்கள் திரும்பி வராததால் ஆத்திரமடைந்த டியோகோ, கடற்கரை பகுதியிலிருந்த ஊரிலிருந்து நால்வரை கடத்திக் கொண்டு போர்த்துகிசுக்குத் திரும்பினார்.
அதே சமயத்தில், காங்கோ நாட்டு மன்னராக விளங்கிய ந்சிங்கா அ ந்குவு, கிருத்துவத்துக்குமதம்மாற முடிவெடுத்து, ஒரு பெரிய குழுவை போர்த்துகளுக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் நான்கு ஆண்டுகள் போர்த்துகளில் தங்கி கிருத்துவம்பயின்றனர். பின்னர், 1491இல், அக்குழு டியோகோவுடனும் அவர் கடத்திச் சென்ற நால்வருடனும், கிறித்தவ மதபோதகர்களுடனும், படை வீரர்களுடனும் நாடு திரும்பி, காங்கோ மன்னர் மற்றும் அவரது அவையின் முக்கியஸ்தர்களை கிறித்தவ மதத்துக்கு மாற்றினர். அப்போதைய போர்த்துகீசிய மன்னர் ஜோவவோ2 இன் நினைவாக ஜோவவோ1 என்று பெயர் மாற்றிக்கொண்டார். இவர் பின்னாளில் மீண்டும் கிறித்தவத்திலிருந்து விலகினாலும், அவருக்குப் பிறகு அரியணை ஏறிய மன்னர் அபோன்சோ1 கிருத்துவத்தை காங்கோ நாட்டின் அரச மதமாக நிறுவினார். காங்கோ நாட்டுக்கும் போர்த்துகீசியர்களுக்குமான வணிக உறவு 16ஆம் நூற்றாண்டில் மேலும் அதிகரித்தது. பனையினால் செய்யப்பட்ட துணி, யானை தந்தங்கள், தாமிரம் ஆகியவற்றுடன் சேர்த்து அடிமைகளும் ஏற்றுமதி செய்யப்பட்டனர்.
மத்திய ஆப்ரிக்காவில் அமைந்துள்ள சாவோடோம் தீவில் போர்த்துகல் அமைத்த கரும்புத்தோட்டங்களில் வேலை செய்ய காங்கோ நாட்டிலிருந்து பெருமளவில் அடிமைகள் கொண்டு செல்லப்பட்டார்கள்.
இவ்வாறு துவக்கத்தில் உள்நாட்டு உற்பத்திக்கும், போர்த்துகீசியர்களின் காலனிகளுக்காகவும் ஏற்றுமதி செய்யப்பட்ட அடிமைகள் பின்னாளில் அட்லாண்டிக் கடலுக்கு மறுபக்கம் இருந்த அமெரிக்க கண்டத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த, மனித வரலாற்றின் கறுப்புப் பக்கங்களில்இடம்பெற்றஅட்லாண்டிக் அடிமை வணிகத்தை பற்றியும் காங்கோ அரசு அதில் ஆற்றிய பங்கு பற்றியும் அடுத்துவரும் கட்டுரையில் பார்க்கலாம்.
தொடரும்…