ஈழத் தமிழ் ஏதிலியை வேறு நாட்டுக்குப் போகச் சொல்லும் உச்சநீதிமன்ற நீதிபதி திபங்கர் தட்டாவுக்கு கண்டனம்! தமிழ்நாடு அரசு ஈழத் தமிழர் சுபாஷ்கரன் மற்றும் அவரது குடும்பத்தினரை பாதுகாக்க முன்வர வேண்டும்

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை
கடந்த மே 19 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று உச்சநீதிமன்ற நீதிபதி திபங்கர் தட்டா ஈழத் தமிழ் ஏதிலியை நாடு கடத்துவதற்கு எதிரான வழக்கொன்றில் ”இந்தியா என்ன தர்ம சத்திரமா? உயிருக்கு ஆபத்து, சிறிலங்காவுக்குப் போக முடியாதெனில் வேறு ஏதாவது நாட்டுக்கு செல்ல வேண்டியது தானே”’ என்று சொல்லியுள்ளார். இது பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களுக்கு எதிரானது என்ற வகையில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி அவரது பேச்சைக் கண்டிக்கிறது.
ஈழத் தமிழரான சுபாஷ்கரன் தமது தண்டனைக் காலம் முடிந்தவுடன் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்துதான் அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்திருந்தார். தான் முன்னாள் விடுதலைப் புலி என்பதால் மீண்டும் சிறிலங்காவுக்கு சென்றால் தன் உயிருக்கு ஆபத்து என்ற அடிப்படையில் தான் இங்கேயே தங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். மேலும் அவரது மனைவியும் மகனும் நோய் வாய்ப்பட்டவர்கள் என்ற காரணத்தால் அவர்களும் இங்கே தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்பது அவரது முறையீடு.
ஈழத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் சுமார் 19000 பேர் சிங்கள இராணுவத்திடம் சரணடைந்தனர். ஆனால், அவர்கள் திரும்பி வரவே இல்லை. இவர்களைத்தான் ’காணாமலாக்கப்பட்டவர்கள்’ என்று சொல்கிறோம். இவர்களை மீட்க வேண்டி இன்றளவும் அவர்தம் உறவுகள் போராடி வருகின்றனர். எனவே, இவர் முன்னாள் விடுதலைப் புலி என்ற அடிபப்டையில் அவர் சிறிலங்காவுக்கு திரும்பினால் அவரது உயிருக்கு ஆபத்து உண்டு. உச்சநீதிமன்றம் இந்த வாதத்தை மறுக்கவில்லை. மாறாக இந்தியாவில் தங்க உரிமை இல்லை என்றும் வேறு நாட்டுக்கு செல்லுங்கள் என்றும் சொல்கிறது. இப்படி ஒரு கருத்தை சொல்ல சட்டத்தில் இடமுண்டா?
2019 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனில் இருந்து வரும் ஏதிலிகளுக்கு குடியுரிமை வழங்கும் போது இசுலாமியர் அல்லாதவராக இருக்க வேண்டும் என்று பாகுபாடு காட்டுகிறது என்றும் சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் ஒடுக்குமுறையைக் கருத்தில் கொள்ளவில்லை என்றும் குற்றாய்வு செய்யப்பட்டது. அது ஒருபுறம் இருக்க, பாகிஸ்தான், ஆப்கன், வங்கத்தில் இருந்து வரும் இந்துக்களுக்கு குடியுரிமை கொடுக்கும் போது இந்தியா என்ன தர்மசத்திரமா? என்று கேட்காத நீதிபதி திபங்கர் தட்டா, ஈழத் தமிழர்களும் ரோஹிங்கியா முஸ்லிம்களும் தஞ்சம் கேட்கும் போது மட்டும் இந்தக் கேள்வியை எழுப்புவது ஏன்? பாகிஸ்தானில் இருந்து வரும் இந்து ஏதிலிகளுக்கு ஒரு நியாயம், ஈழத்தில் இருந்தும் மியான்மியரில் இருந்தும் வரும் ஏதிலிகளுக்கு மற்றொரு நியாயமா?
இந்திய அரசு 1951 இலும் 1967 இலும் ஐநாவால் கொண்டு வரப்பட்ட ஏதிலிகளுக்கான உடன்படிக்கைகளில் கையெழுத்திடவில்லை என்றாலும் 1948 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட உலகளாவிய மனித உரிமைகளுக்கான சாற்றுரையில் ( Universal Declaration of Human Rights) கையெழுத்திட்டுள்ளது. அதில் உள்ள உறுப்பு 13 இன் படி தன் சொந்த நாட்டில் இருந்து வெளியேறி மீண்டும் அந்நாட்டுக்கு திரும்புவதற்கான உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. மேலும் உறுப்பு 14 எவர் ஒருவரும் இன்னொரு நாட்டில் உயிருக்கு தஞ்சம் கேட்டு தங்குவதற்கு உரிமை உண்டு என்பதை அறிந்தேற்கிறது. எனவே, மேற்படி சாற்றுரையை மதிக்க வேண்டிய கடப்பாடு இந்திய அரசுக்கு உண்டு.
1951 ஏதிலிகளுக்கான பன்னாட்டு உடன்படிக்கையின்படி ஏதிலி ஒருவரைக் கட்டாயப்படுத்தி அவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பக் கூடாது என்பது ஏதிலிகளின் உரிமைகளில் ஒன்றாகும் ( Right to non – refoulement) . இந்திய அரசு இவ்வுடன்படிக்கையில் கையெழுத்திடாவிட்டாலும் இந்த அடிப்படை மனித உரிமையை மதிக்க வேண்டும். கடந்த 1992 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தமிழ் ஏதிலிகளின் ஒப்புதல் இல்லாமலே அவர்களுடைய நாட்டுக்கு கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்புவது ஏற்புடையதல்ல என்று தீர்ப்பளித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், ஏதிலிகளுக்கான பன்னாட்டு உடன்படிக்கைகளில் கையெழுத்திட வில்லை என்ற அடிப்படையில் ஏதிலிகளின் உரிமைகளை மறுக்கக்கூடிய தீர்ப்புகளும் அவ்வப்போது வருவதுண்டு.
குறிப்பாக கடந்த மே 9 ஆம் நாள் ரோஹிங்கியா ஏதிலிகளை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு மிக மோசமானது. அதில் இந்தியக் குடிமகன்தான் இந்தியாவில் தங்கும் உரிமையைக் கோர முடியும் என்ற வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மறுவளமாக கட்டாயமாக ஏதிலிகளை அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பக் கூடாது என்ற உரிமை அடியோடு மறுக்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பின் தொடர்ச்சியாகத்தான், இன்னொருபடி மேலே சென்று நீதிபதி திபங்கர் தட்டா வேறு நாட்டுக்கு செல்லுமாறு ஏதிலிகளைப் பார்த்து சொல்லியுள்ளார்.
பன்னாட்டுச் சட்டங்கள் ஏதிலிகளின் உரிமையைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும்போது அதுபற்றிய அக்கறை எதுவும் இல்லாமல் வாயில் வந்ததைப் பேசுகிறார் நீதிபதி திபங்கர் தட்டா. துளியளவும் மனித உரிமைக் கண்ணோட்டமின்றி அவர் பேசிய கருத்து கண்டனத்திற்குரியது.
மேலும், இவ்வழக்கைப் போட்ட திரு சுபாஷ்கரன் கடந்த 2015 ஆம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள்கட்டமைக்க முயல்கிறார் என்ற குற்றச்சாட்டின் பெயரால் தமிழ்நாடு காவல்துறையால் சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு , வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தவர்.
இந்த வழக்கு தமிழ்நாடு கியூ பிரிவு காவல்துறையால் போடப்பட்ட வழக்காகும். ”இவ்வழக்கு முற்றிலும் சோடிக்கப்பட்ட வழக்கு, இது விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீட்டிப்பதற்காக புனையப்பட்ட வழக்காகும்” என்பதுதான் சுபாஷ்கரன் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் லஜபதிராய் முன்வைத்த வாதம் ஆகும்.
2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் பெரும் தோல்வியை சந்தித்து அதன் இராணுவக் கட்டமைப்பு முற்றாக சிதைக்கப்பட்ட நிலையில் இந்த 16 ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயல்பாடுகள் எதுவும் சிறிலங்காவில் கண்டுபிடிக்கப்பட வில்லை. தாம் அவ்வியக்கத்தை ஒழித்துக் கட்டிவிட்டதாக சிறிலங்கா அரசு இன்றளவும் அறிவித்து வருகிறது. ஆனால், இந்திய அரசோ புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீடிப்பது தொடர்ந்து வருகிறது. இதன் தொடர்பில் தமிழ்நாடு அரசு இந்திய அரசின் இந்த தடை நீட்டிப்புக்கு முழு ஆதரவு கொடுத்து வருகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டிருப்பதையே காரணமாக காட்டி தமிழ்நாட்டில் உள்ள ஈழ ஏதிலிகள் தமது அரசியல் உரிமையை செயல்படுத்த முடியாதபடி அவர்களைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது கியூ பிரிவு காவல்துறை. ஏதிலி முகாம்களில் இருப்போர், முகாம்களுக்கு வெளியே இருப்போர் மற்றும் சிறப்;பு முகாமில் இருப்போர் என அனைத்து தரப்பாரும் கியூ பிரிவின் அச்சுறுத்தலின்கீழ் வாழ்ந்து வருகின்றனர்.
கியூ பிரிவு தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. சிறப்பு முகாமும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுத்து இவ்விரண்டையும் கலைக்க முடியும். ஆனால், இதன் தொடர்பில் இந்திய ஒன்றிய அரசு கடைபிடித்துவரும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான கொள்கையையே தமிழ்நாடு அரசும் கடைபிடித்து வருகிறது.
கியூ பிரிவு காவல் துறை நீடிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே பொய் வழக்குகளைப் போட்டு, அதன் இருப்புக்கு காரணத்தை உருவாக்கிக் கொள்கிறது. அதுவொரு தனி சாம்ராஜ்ஜியம் போல் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிறது. அதை நீடிக்கச் செய்வதன் மூலம் தமிழ்நாட்டில் ஈழ ஏதிலிகளை அச்சுறுத்தலில் வைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு.
மேற்படி வழக்கிலும் சுபாஷ்கரனுக்கு எதிராக பொய் வழக்கு போட்டு சிறைப்படுத்தியதும் அவரை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்பதற்காக வாதாடி உயர்நீதிமன்றத்தில் ஆணையை பெற்றதும் தமிழ்நாடு அரசின் கியூ பிரிவு காவல் பிரிவினர் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இன்றளவிலும் ஈழத் தமிழ் ஏதிலிகள் சட்டத்தின்படி பார்த்தால் சட்டவிரோத குடியேறிகள்தான். அவர்களை ஏதிலிகளாக ஏற்கச் செய்வதிலும் ஏதிலிகளின் உரிமையைக் காப்பதிலும் இந்திய ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை மாற்ற வேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கு உண்டு. மேலும் குடியுரிமை சட்டத்தில் சிறிலங்காவில் இருந்து வரும் ஏதிலிகள் விரும்பினால் அவர்களுக்கும் குடியுரிமை தரும் திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு தொடர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
சுபாஷ்கரன் மற்றும் அவரது குடும்பத்தினர் விசயத்திலும் அவர்கள் நாடு கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தி ஏதிலிகளாக பாவித்து அவர்களை தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்,
தி. செந்தில்குமார்,
ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்த்தேச மககள் முன்னணி