முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழ்நாட்டு அரசியல் புறக்கணிக்கிறதா? செந்தில், இளந்தமிழகம்

பிரிட்டன் தலைமை அமைச்சர் கெயின் ஸ்ட்ராம்மர், இலங்கையில் நடைபெற்ற போரில் கொல்லப்பட்டவர்களையும் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளானவர்களையும் நினைவு கூரும் தமிழர்களோடு தானும் இணைந்து கொள்வதாகவும் இலங்கையில் உள்ள சமூகங்கள் ஒன்றுபட்டு முன்னேறிச் செல்வதற்கு நடந்த கொடுமைகளை அறிந்தேற்பதும் பொறுப்புக்கூறுவதும் தேவைப்படுகிறது என்றும் தமது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
8 கோடிக்கும் அதிகமான தமிழர்களைக் கொண்ட தமிழ்நாட்டில் சிறு கட்சிகள், இயக்கங்கள் தவிர்த்து பெருந்திரளான மக்கள் செல்வாக்கு கொண்ட கட்சிகளுக்கு தலைமை தாங்கும் திமுக தலைவர் முக ஸ்டாலினோ அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியோ பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் இராமதாசோ கெயின் ஸ்ட்ராம்மரைப் போல் ஓர் அறிக்கை விடவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ கொல்லப்பட்ட மக்களை நினைவு கூர்வதில் தமிழ் மக்களோடு இணைந்து கொள்ளவில்லை. இந்த 16 ஆண்டுகளில் முள்ளிவாய்க்கால் இனக்கொலை நாளில் இவர்கள் நினைவுகூர்வதில்லை.
கெயின் ஸ்ட்ராம்மர் தமிழர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர், பொறுப்புக்கூறலை விரும்புபவர். ஆனால், மேற்படி தமிழ்நாட்டு தலைவர்களுக்கும் கட்சிகளுக்கும் அப்படியான அக்கறை இல்லை, நீதியின் மீது பற்று இல்லை என்று தட்டையாக புரிந்து கொள்ளக் கூடாது என்பதுதான் முள்ளிவாய்க்கால் எமக்கு கற்றுத் தந்த முதல் பெரும் பாடமாகும்.
இந்த உலகில் அறக் கருத்துகள் உண்டு; ஆனால் தூய அறம் என்ற ஒன்று இல்லை. தூய்மைவாதத்திலும் வீர யுக சாகசங்களிலும் அறக் கருத்துகளிலும் கற்பனாவாதத்திலும் என்பையும் பிறர்க்கு உரித்தாக்கும் தியாக சிந்தனைகளிலும் மூழ்கி கிடந்த தமிழர்களை 1.5 இலட்சம் தமிழர்களின் மரண ஓலம் தட்டியெழுப்பி பன்னாட்டு நிலைமையும் அரசுகளின் நலன்களும் உள்நாட்டில் உள்ள வகுப்புகள் மற்றும் சமூக குழுக்களின் நலன்களும் தான் வரலாற்றின் போக்கை தீர்மானிக்க வல்லதாய் அமைகின்றனவே ஒழிய அறமோ நீதி நியாயங்களோ அல்ல என்பதை உணர்த்தியது.
கெயின் ஸ்ட்ராம்மர் தன்னுடைய நாட்டில் வாழும் ஈழத் தமிழர்களின் மனங்களை கவர வேண்டும் என்ற நோக்கில் இருந்து தமது அரசின் கொள்கை வரம்புக்கு உட்பட்ட வகையில் இந்நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
கெடுவாய்ப்பாக, மேற்படி தமிழ்நாட்டு தலைவர்கள் ஈழத் தமிழர் பிரச்சனைக்கும் தமிழ்நாட்டு வாக்கு அரசியலுக்கும் தொடர்பில்லை என்று மதிப்பிட்டுள்ளனர். அதனாலேயே, முள்ளிவாய்க்கால் நினைவைப் போற்ற மறுக்கின்றனர்.
இத்தனைக்கும் தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் இனவழிப்புக்கு பன்னாட்டுப் புலனாய்வுக் கோரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போது திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் அதை ஆதரித்தன. ஆனால், அந்த இனவழிப்பை நினைவுகூர மறுக்கின்றன. அன்றைக்கு மாணவர் போராட்டம் கொடுத்த அழுத்தத்தினால் அக்கட்சிகள் அந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டி வந்தது. இன்றைக்கு அப்படியான அழுத்தங்கள் இல்லை என்று கருதுகின்றனரா?
மக்களை சோற்றுப் பிண்டமாக பார்க்கும் அரசியலின் விளைவு இது. தமிழ்நாட்டு தமிழர் ஈழத் தமிழருக்காக கவலைப்பட மாட்டார். சோறு, வேலைவாய்ப்பு, நலத்திட்டங்களைத் தந்தால் போதும் என்று நம்புகின்றனர். சாதி உணர்வை வளர்த்து மட்டுமே அரசியல் பிழைப்பு நடத்திவிட முடியும் என்று நம்புகின்றனர்.
ஈழத்தை விடுவோம். பாலத்தீனத்திற்காக அரபுலகத்தவர் ஆர்த்தெழுவது ஏன்? அவர்களுக்கு சோற்றுப் பிரச்சனை இல்லையா? பாலத்தீனர்களுக்காக ஹிஸ்புல்லாவும் ஹவுதியும் அடிபடுவதேன்? காசுமீருக்காகப் பாகிஸ்தானியர்கள் பதறுவதேன்? வங்க தேசத்திற்காக மேற்கு வங்கம் துடித்ததேன்? ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பிற்கு எதிராக உலகெங்கும் உள்ள இசுலாமியர்கள் போராடியதேன்? இவர்களுக்கு சோற்றுப் பிரச்சனை இல்லையா? வேலை , வசதி வாய்ப்புகள் இருந்தால் போதாதா? இவர்கள் ஏன் இன்னொரு நாட்டிற்காக போராட வேண்டும்?
இங்குதான் ஓர் உயிரியல் உண்மை முன்னுக்கு வருகிறது. உணவு, உடை , உறையுள் ஆகியவற்றைவிடவும் அனைத்து உயிர்களுக்கும் பாதுகாப்பு முதன்மையானது. பாலத்தீனத்தின் இருப்பில் அரபுலகத்தின் பாதுகாப்பும் தங்கியிருப்பதாக கருதும் அரேபியர்களின் குழு உணர்ச்சிதான் பாலத்தீன ஆதரவுக்கு காரணம். இது காசுமீருக்கான பாகிஸ்தானின் ஆதரவிலும் வங்க தேசத்திற்கான மேற்கு வங்கத்தின் ஆதரவிலும் பொருந்திப் போகக்கூடிய உண்மையாகும். இது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் எழும் உணர்வுக்கும் பொருந்தக் கூடியதாகும்.
ஈழத் தமிழர் பாதுகாப்பும் இருப்பும் தமிழ்நாட்டு தமிழர்களின் பாதுகாப்புடனும் இருப்புடனும் தொடர்புடையதாகும். இதை தம்மால் விளக்க முடியாவிட்டாலும் இந்த நுண்ணுணர்வுதான் குழு உணர்ச்சியை மேலிடச் செய்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
’சிலோன் பிரச்சனை முடிந்துவிட்டது’ என்று முதலமைச்சரிடம் அறிவாளிகள் சிலர் கூறிக் கொண்டிருக்கலாம். ஜேவிபியின் ஆட்சி சிறிலங்காவை சிவப்பாக்கி விட்டது என மார்க்சிஸ்ட் கட்சி கிறங்கிப் போயிருக்கலாம். ஆனால், பாக் நீரிணையில் வல்லரசியங்களின் போட்டி அரசியல் சிறிலங்காவில் இனப் பிரச்சனையைக் கிளறிவிடும். அப்படி இனப் பிரச்சனையாக வெடித்துக் கிளம்பும் போது ஈழத் தமிழர்கள் பொங்கி அழுதாலும் சரி பொங்கி எழுந்தாலும் சரி அது கடல் கடந்து வந்து தமிழ்நாட்டின் தூக்கத்தைக் கலைக்கும். இது புவிசார் அரசியல் ஏரணம்.
தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக துடிக்கும் போது வேறு வழியே இல்லாமல் மக்களின் பின்னால் அணி வகுத்தாக வேண்டிய கட்டாயம் மேற்படி தலைவர்களுக்கு ஏற்படும். அப்படி மக்களுக்குப் பின்னால் ஓடும் போது ’தலைவர்கள்’ என்ற தகுதியை அவர்கள் இழந்து விடுவார்கள்.
எது எப்படியோ தனது தந்தையின் தவறை நேர் செய்வதற்கு தமக்கு கிடைத்த அரிய வாய்ப்பை முக ஸ்டாலின் தவறவிட்டுவிட்டார். ஐந்தாவது ஆண்டாக ஆட்சியில் இருக்கும் அவர், மே 18 ஆம் நாளில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களை எண்ணி ஒரு விளக்கு கொளுத்தியிருந்தார் எனில் தமது கட்சியின் கடந்த கால தவறுகளும் அந்த விளக்கொளியில் எரிந்து பொசுங்கி இருக்கும்.
”இனவழிப்புக்கு துணை போனார் கருணாநிதி. அவர் மகனோ இனவழிப்பை மூடி மறைப்பதற்கும் மறக்கடிப்பதற்கும் துணை போனார்.” என்ற பழிச்சொல்லுக்கு வழிவகுக்கும் வகையில்தான் முக ஸ்டாலின் தலைமையிலான திமுகவின் ஈழம் தொடர்பான கொள்கை இருந்து வருகிறது.
இராசீவ் காந்தி கொலைக்குப் பின் தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு சரிந்து விட்டது. பிரபாகரனைத் தூக்கில் போட வேண்டும் என்று ஜெயலலிதா சொல்லிவிட்டார். இனி தமிழ்ச்செல்வனுக்கு இரங்கற் பா எழுதும் அளவுக்கு ஈழ ஆதரவை வெளிப்படுத்திக் கொண்டால் போதும் என்று கருணாநிதி கணக்குப் போட்டார். ஆனால், இறுதி கட்டப் போரில் எழுந்த மரண ஓலம் முத்துக்குமார்களை தீக்குளிக்கச் செய்யும் என்று கருணாநிதி மதிப்பிடத் தவறிவிட்டார்.
அதுபோலவே, ஈழப் பிரச்சனை பிரபாகரனோடு முடிந்து போய்விட்டது என்று தப்புக் கணக்குப் போட்டுள்ளார் முக ஸ்டாலின். கருணாநிதியின் கணக்குப் பொய்த்துப் போனது போல் ஸ்டாலின் கணக்கும் பொய்த்துப் போகும்.
ஸ்டாலின் மட்டுமல்ல முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைப் புறக்கணிக்கும் அனைத்து கட்சித் தலைவர்களின் கணக்கும் பொய்த்துப் போகும். சீமான், விஜய் போன்ற புதியவர்கள் போகிற போக்கில் மேற்படி கட்சிகளை முந்திச் செல்வார்கள்.
காலம் கைமீறி போகவில்லை. இப்போதேனும் கொள்கையை மாற்றிக் கொண்டு கொல்லப்பட்டவர்களுக்காக ஒரு விளக்கை ஏற்றி வைக்க முன்வாருங்கள்.
தமிழ் மண்ணில் இருந்து அரசியல் செய்யும் தமிழ்க் கட்சிகளிடம் கொல்லப்பட்ட 1.5 இலட்சம் தமிழர்களை ஆண்டுக்கு ஒருமுறை நினைவு கூர முன்வருமாறு கேட்பதே வெட்கக் கேடானது இல்லையா?
இனியும் மேற்படி கட்சிகள் திருந்த மறுப்பது அதைவிடவும் வெட்கக் கேடு என்பதை உணர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கடைபிடிக்க வேண்டும் என்பதே நமது எதிர்ப்பார்ப்பு, வேண்டுகோள், முறையீடு
நன்றி : உரிமை மிண்ணிதழ்
அருமை ❤️👌
திருத்தம்:
ஈழத் தமிழர் இனப் படுகொலைக்கு கர்ணாநிதி துணை போனார் என்பது தவறு ! அவர் சோனியா காங்கிரசுடன் இணைந்து செயல்பட்ட முதன்மைக் குற்றவாளி – தமிழகப் பகைவன் ! வஞ்சகத்தில் சோனியாவுக்கு இணையானவன் ;;
பாஜக என்ற பார்ப்பனீய அழிவு ஆற்றலைக் காட்டியே வெற்றி பெற்றுவிடலாம்என்ற மமதை ஸ்டாலினுக்கு 👎🔥😡
அது பயனளிக்கும் சூழல்தானே உள்ளது !
திமுகவுக்கு எதிராக கொள்கைப் பற்றுள்ள கட்சியின் தேவை உள்ளது ! யார் ….எழுமா ? என்பதே கேள்வி …?
திருமா வேல்முருகன் ….போன்றோர் இணைந்து செயல்பட்டால் நல்லது ☘️🌺❤️🙏