இந்தியா – பாகிஸ்தான் போர்நிறுத்தத்தை மீறாமல், அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும். – கூட்டறிக்கை

காசுமீர் பகல்காமில் ஏப்ரல் 22ஆம் நாள் சுற்றுலாப் பயணிகள் மீது நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் கடுமையான கண்டனத்திற்குரியது. இது போன்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன, இவை இந்தியப் பகுதிகளில் மட்டுமல்லாமல், பாகிஸ்தானியப் பகுதிகளிலும் நடக்கின்றன. பாகிஸ்தான் இது போன்ற பயங்கரவாதத் தாக்குதல்களை இந்தியாவை விட அதிகமாக அன்றாடம் சந்தித்து வருகிறது, காசுமீரைப் போல தனிநாடு கேட்டுப் போராடும், பாகிஸ்தானில் உள்ள பலுச்சிஸ்தான் மாகாணத்தில் அண்மைய சில மாதங்களில் மட்டும் இரயில் நிலையக் குண்டு வெடிப்பு, பயணிகள் இரயில் கடத்தல், பேருந்தில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு என 200க்கு மேற்பட்ட பாகிஸ்தான் பொதுமக்கள் பயங்கரவாதத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர், இந்திய அரசு பகல்காம் பயங்கரவாத நடவடிக்கைக்கு , பாகிஸ்தான் அரசு நடத்திவரும், பயங்கரவாத முகாம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகியவைதான் காரணம் எனக் குறிப்பிடுவது போல, பலுச்சிஸ்தானில் நடைபெற்ற தாக்குதல்களுக்குப் பின்னால் இந்திய அரசின் கரங்கள் இருக்கின்றன என குற்றஞ்சாட்டி, அதற்கான ஆதாரமாக, இந்திய உளவுத்துறை ராவை(RAW) குற்றஞ்சாட்டும், இந்தியக் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவின் வீடியோ ஒன்றை பாகிஸ்தான் இராணுவத் தலைமைத் தளபதி வெளியிட்டார், இவ்வாறு இரண்டு நாடுகளும் பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகள் குறித்து ஒன்றையொன்று குற்றஞ்சாட்டி வருகின்றன, இருநாட்டுப் பொதுமக்களும் அறியாத இது போன்ற பாதுகாப்புத் துறையின் இரகசிய நடவடிக்கைகள் அரசின் அங்கமாக நடைபெறுகின்றன என்பது அனைவரும் அறிந்ததுதான், திரைமறைவு, அல்லது மறைமுகப் போர் நடவடிக்கைகளை (covert operations ) எந்த அரசும் ஒப்புக் கொள்ளாது, அரசுகளின் அரசியல் ஆதரவு நடவடிக்கைகளை வைத்துத்தான் இந்த பின்புலச் செயல்களைப் புரிந்து கொள்ளமுடியும்,
காசுமீர் விவகாரத்தில் பாகிஸ்தான் வெளிப்படையாக இருப்பது அனைவருக்கும் தெரிந்தது, ஆனால் இந்திய அரசு பலுச்சிஸ்தான் தனி நாட்டு கோரிக்கைக்கு ஆதரவாக அப்படி வெளிப்படையான நிலைப்பாடு எடுக்கவில்லை என்பதுதான் மாறுபட்டு இருக்கிற நிலைமை ஆகும், ஆனால் பாகிஸ்தானைச் சார்ந்த லஸ்கர் ஈ தொய்பா அமைப்பு போல, ஆர் எஸ் எஸ் – பாசகவினர் தொடர்ந்து பலுச்சிஸ்தான் கோரிக்கைக்கு ஆதரவாகப் பேசுவதையும், போர்ச் சூழலைத் தீவிரப்படுத்தி, பாகிஸ்தானை நான்காக உடைக்க வேண்டும் எனப் பேசுவதையும் பார்த்து வருகிறோம், எனவே இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்புலத்தில் காசுமீர் பலுச்சிஸ்தான் போன்ற அரசியல் பிரச்சனைகள் புதைந்து கிடக்கின்றன,
குறிப்பாக, காசுமீரைப் பொறுத்தவரை 2019 ஆம் ஆண்டு ஆகஸ்டு 5 ஆம் நாள் சிறப்புப் பிரிவு 370ஐயும் 35 A ஐயும் நீக்கி, சம்மு காசுமீரை உடைத்து ஒன்றிய ஆட்சிப் புலங்களாக மாற்றியதன் மூலம் காசுமீர் பிரச்சனையைத் தீர்த்து விட்டதாகவும் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டி விட்டதாகவும் வளர்ச்சிக்கு வழிவகுத்து விட்டதாகவும் அமைதியை நிலைநாட்டி விட்டதாகவும் உள்நாட்டளவில் அமித் ஷாவும் பன்னாட்டரங்கில் ஜெய்சங்கரும் வாயளந்துக் கொண்டிருந்த போதுதான் பகல்காம் தாக்குதல் நடந்துள்ளது. இது காசுமீர் பிரச்சனை தீர்ந்து விடவில்லை, 370 நீக்கம் அதற்குத் தீர்வாகாது, மோடி – அமித் ஷாவால் தீர்வு காண முடியவில்லை, பிர்ச்சனையைத் தீவிரமாக்கவே செய்துள்ளனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. காசுமீர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பதில் மோடி – அமித் ஷா சிறுகும்பலாட்சி கடைபிடித்துவரும் கொள்கைதான் பகல்காம் தாக்குதலுக்கு வழிவகுத்துள்ளது என்ற அரசியல் தோல்வியை மறைப்பதற்கு மாயத் திரையாகத்தான் போர் அங்கியைப் போர்த்திக் கொண்டார் மோடி
காசுமீர் விசயத்தில் மட்டுமின்றி பொருளியல் துறையில் சந்தித்துவரும் நெருக்கடி, வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகள் தீவிரமடைந்து வருவது, நீதித்துறை பாசிச நகர்வுகளுக்கு கடிவாளம் போடும் வகையில் தீர்ப்பளிப்பது என மோடி அரசு எதிர்கொண்டுவரும் அரசியல் பொருளியல் நெருக்கடியில் இருந்து மடைமாற்றும் நோக்கமும் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின்னால் இருக்கிறது. கூடவே, ஆயுத தளவாடத் தயாரிப்பில் ஈடுபடும் அதானி உள்ளிட்ட கார்ப்பரேட்களின் இலாப வெறிக்கு தீனி போடும் நோக்கமும் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின்னால் உள்ளது.
காசுமீர், பலூசிஸ்தான் போன்ற அரசியல் பிரச்சனைகளைப் பேசுவதற்கு, உட்கார்ந்து தீர்ப்பதற்கு இருநாட்டு அரச மற்றும் அரசியல் தலைமைகளுக்குத் துணிவு வேண்டும், அதற்கு மாறாக உள்நாட்டில் தங்கள் சொந்த அரசியல் செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காக பயங்கரவாதத் தாக்குதல்களைப் பயன்படுத்தி, போர் பதற்றத்தையும், தேசிய வெறியையும், அணு ஆயுத மோதலையும் தூண்டுவது, இருநாட்டின் 170 கோடி மக்களுக்கு எதிரானதாக மட்டுமல்லாமல், இன்றைக்கு இருக்கும் சர்வதேச சட்டங்களின்படி மனித குலத்துக்கு எதிரான குற்றமாகவும் பார்க்கப்படும்.
இராணுவ நடவடிக்கைகள் மற்றும் போர் பதற்றம்.
பகல்காம் தாக்குதலுக்கு காரணமான, பயங்கரவாத முகாம்களை அழிப்பதை இலக்காகக் கொண்டு ஆப்பரேசன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, மே 7ஆம் தேதி இந்திய இராணுவத் தரப்பிலும் அரசுத் தரப்பிலும் அதிகாரப்பூர்வ ஊடக சந்திப்புகள் நடத்தப்பட்டன.
2019ஆம் ஆண்டு புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்திய விமானப்படை பாகிஸ்தான் கட்டுப்பாட்டுப் பகுதியில் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்திய போது, பாகிஸ்தான் திருப்பித் தாக்காதது போல, இப்பொழுதும் நிலைமை இருக்கும் என இந்திய அரசு மதிப்பிட்டதா எனத் தெரியவில்லை, ஆனால் நிலைமைகள் வேறு விதமாக மாறி, எல்லையோர இந்திய மாநிலங்களான சம்மு காசுமீர், பஞ்சாப் பகுதிகளில், பாகிஸ்தான் வான்படையும் இராணுவமும், பொதுமக்கள் மீதும் இராணுவ தளங்கள் மீதும் கடுமையான தாக்குதலைத் தொடுத்து, இழப்புகளை ஏற்படுத்தியதால், வரம்புக்கு உட்பட்ட இலக்குகள் என்ற நிலை மாறி, இரு தரப்பிலும் இராணுவ நிலைகளைத் தாக்குகின்ற முழு வடிவிலான போரை நோக்கி தாக்குதல் நிலைமைகள் அபாயகரமாகத் தீவிரமடைந்து சென்றன.
இரு தரப்பிலும் பொதுமக்கள் உள்ளிட்டோர், நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர், சில ஆயிரம் கோடி மதிப்புள்ள, தாக்குதல் விமானங்கள் உள்ளிட்ட ஆயுதத் தளவாடங்கள் இழக்கப்பட்டுள்ளன, அபாயகரமான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த, இராணுவப் பொருளாதார இடங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன, நிலைமைகள் திட்டமிட்டதைவிட, எதிர்பார்த்ததைவிடக் கைமீறித் தீவிரமடைந்து சென்றதுதான் நடைபெற்றது. மோதல் தீவிரமடையாமல் முடிவுக்கு கொண்டுவாருங்கள் என அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் சொல்லிக் கொண்டிருந்த பின்னணியில், மூன்றாம் தரப்பு தலையிட்டு அமைதி உடன்பாட்டை அறிவிக்க வேண்டிய இராணுவ அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தித் தாக்குதல்கள் முடிவுக்கு வந்தன.
பாகிஸ்தான் பிரதமர் இரவோடு இரவாக தனது வெற்றிச் செய்தியை அறிவித்து விட்டார், இந்தியப் பிரதமர் மோடி ட்ரம்பின் அதிரடி அறிவிப்புக்கும், மிகைப்படுத்திய தங்கள் இராணுவக் கற்பனைக்கும் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டதால், உயர்மட்ட இராணுவ அதிகாரிகள், வெளியுறவுத் துறை அதிகாரிகளை ஊடகத்தைச் சந்தித்து நிலைமையை சமாளிக்கச் சொல்லிவிட்டு, பிறகு தாமதமாக, தங்கள் இராணுவ நடவடிக்கையால்தான் பாகிஸ்தானை அச்சுறுத்தி சமாதான உடன்பாடு எட்டப்பட்டது எனத் தனது வெற்றி அரசியல் ஆரவார உரையை நிகழ்த்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இராணுவ நடவடிக்கைகள் உண்மையில் யாருக்கும் வெற்றியை அளிக்கவில்லை, உண்மையைச் சொல்லப் போனால், 2019 சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்திய காலத்தைவிட, இப்பொழுது பாகிஸ்தான் இராணுவ சமநிலையின்(military equilibrium)ஊடாக சண்டை நிறுத்த உடன்பாட்டை எட்டியதாகக் கருதுகிறது, ஆயுத வலுச் சமநிலையில் முழுமையான உண்மை இல்லை என்றாலும்கூட, நடைபெற்ற போரில் எதார்த்த உண்மை அதுதான், சில நாட்களுக்கு முன்பு ஏமன் ஹவுதிகளிடம்கூட தாக்குதல் நிறுத்த உடன்பாட்டை அமெரிக்கா செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ள காலத்தில், பாகிஸ்தானோடு சண்டை நிறுத்த உடன்பாட்டை காண்பதைத் தவிர இந்தியாவுக்கு வேறு வழியில்லை என்பதுதான் காலத்தின் கட்டாயம்.
இஸ்ரேல் காசாவைத் தாக்கி அழிப்பது போல, அல்லது அதனால் தூண்டப்பட்ட சங்கிகள் மற்றும் மோடியின் இராணுவ பேண்டஸியும் தெற்காசியப் போர்க் களத்தில் எதார்த்தமானவை அல்ல. காசாவைத் தாக்குவது போல முசாபர்பாத்தைத் தாக்க முடியாது, இராணுவத் தீர்வு சாத்தியமானது அல்ல. அத்தகைய முயற்சியை சீனா பிராந்திய சமநிலை சீர்குலைவதற்கான அல்லது மேலாதிக்கத்துக்கான யுத்தமாகக் கருதும், ட்ரம்பின் வர்த்தக அதிரடிகள் இந்தியாவை இப்பொழுதே நிலை குலைய வைத்துள்ளன, ஆகவே நிலையான போரோ நீடித்த போர்ச் சூழலோ இராணுவ தீர்வோ சாத்தியமில்லை, ஆகவே அமைதிக்கான முயற்சிகளையும் அரசியல் தீர்வுகளையும் முன்னெடுக்க வேண்டும்.
போர்கள் ஆளும் வர்க்க நலன்களுக்கானவை, உள்நாட்டில் தங்கள் அரசியல் செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காக நடத்தப்படுபவை, சொந்த நாட்டில் தங்களை ஒடுக்கும் ஆளும் வர்க்கத்துக்கு எதிரான, அன்னிய ஆக்கிரமிப்புக்கு எதிரான மக்களின் போராட்டங்கள்தான் நீதியானவை. பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காசுமீரில் யூனிட்டுக்கு 50 ரூபாயாக இருந்த மின்சாரக் கட்டணத்தை அந்த மக்கள் போராடி 3 ரூபாயாக சில மாதத்திற்கு முன்பு குறைத்து இருக்கிறார்கள், பாகிஸ்தான் பஞ்சாபில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலத்துக்கு வரும் சிந்து நதி நீரை மறித்து பாகிஸ்தான் இராணுவத்தின் முப்பதாயிரம் ஏக்கர் கார்ப்பரேட் விவசாயத்துக்குக் கொண்டுசெல்வதை எதிர்த்துப் போராடி வருகிறார்கள், பலுச்சிஸ்தான் மக்கள் பாகிஸ்தான் இராணுவ ஒடுக்குமுறையை எதிர்த்து சுயநிர்ணய உரிமைக்காகப் போராடி வருகிறார்கள், அதே போலத்தான் இந்தியாவிலும் பஞ்சாப் விவசாயிகள் போராடினார்கள். தங்கள் நிலத்திலிருந்து விரட்டப்படுவதற்கு எதிராகப் பழங்குடிகள் போராடி வருகிறார்கள், மாநில உரிமைக்காக பல்வேறு மாநில மக்கள் போராடி வருகிறார்கள், தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக, அரசமைப்புச் சட்டத்தைக் காப்பதற்காக, நாடாளுமன்ற உரிமைகளைக் காப்பதற்காக எனப் பல்வேறு அரசியல் முயற்சிகள், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன, இரு நாட்டு மக்களும் தங்கள் உண்மையான பிரச்சினைகளுக்குப் போராடுவதில் இருந்து விலக்கி, ஆர் எஸ் எஸ் மோடி கும்பலின் பாசிச ஆட்சியும், பாகிஸ்தானின் இராணுவச் சர்வாதிகார ஆட்சியும், போர்வெறியிலும் போலியான தேச வெறியிலும் தள்ளப் பார்க்கிறது, மக்கள் அதிலிருந்து விழித்துக் கொள்ள வேண்டும், தேச வெறி, போர் வெறிக்கு எதிராகவும் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காகவும் போராடுவதன் மூலம் போர் வெறிக்கும் பாசிசத்திற்கும் வறுமைக்கும் முடிவுகட்ட முடியும். மேலும், தெற்காசியாவின் அனைத்துத் தேசங்களும் தங்களின் தன்னுரிமைக்காகவும் முழுமையான ஜனநாயகத்துக்காகவும் போராட முன்வர வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம்.
இப்படிக்கு,
தியாகு, பொதுச்செயலாளர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்
துரை சிங்கவேல், ஒருங்கிணைப்புக் குழு, பொதுமையர் பரப்புரை மன்றம்
மணி, மாநில அமைப்பாளர், பாட்டாளி வர்க்க சமரன் அணி
மனோகரன், மாநிலச் செயலாளர், சிபிஐ ( எம்-எல்) ரெட் ஸ்டார்
பாலன், பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி( மா-லெ-மாவோ சிந்தனை)