பஹல்காம் தாக்குதலுக்கு பாதுகாப்புக் குறைபாடே காரணம்! உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்!

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை
கடந்த ஏப்ரல் 22 ஆம் நாள் சம்மு காசுமீரில் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் 26 அப்பாவிப் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாத நிகழ்வு மிகுந்த கண்டனத்திற்கும் ஆழ்ந்த கவலைக்கும் உரியது. நாடு முழுவதும் கட்சிகள், அமைப்புகள் இதே உணர்வை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் ஆட்சியில் இருப்போரின் செயல்பாடுகள் மேலும் கவலை அளிப்பதாக உள்ளது.
ஆட்சியில் இருப்போர் குற்றமிழைத்தவர்களை தண்டனைக்குள்ளாக்க வேண்டும், இதுபோன்று நிகழ்வதற்கான காரணம் என்ன? இனி நடக்காமல் தடுப்பதற்கு வழி என்ன? என்று சிந்திப்பதற்கு மாறாக ’யார் மீது பழி போடுவது?’ என்று துடியாய் துடித்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது.
ஏப்ரல் 24 இல் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தலைமை அமைச்சர் மோடி கலந்து கொள்ளவில்லை, பைசரன் பள்ளத்தாக்கை சுற்றுலாப் பய்ணிகளுக்கு திறந்துவிட்டது பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காத காரணத்தால் இந்த தவறு நேர்ந்துவிட்டதாக சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்தார். ஆனால், அடுத்து அடுத்து வந்த விவரங்கள் வேறுவிதமாக உள்ளன. சுற்றுலா பயணிகளுக்கு பைசரன் பள்ளத்தாக்கைத் திறந்துவிடும்போது காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கும் வழக்கம் எந்த நாளும் இருந்தது கிடையாது என்று சம்மு காசுமீர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அபப்டியெனில், இதுபோன்ற சுற்றுலா தளங்களில் பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டிய காவல் துறையும் அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சகமும் அதை செய்யத் தவறியதற்கு பொறுப்பேற்பதற்கு மாறாக சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் மீது பழிபோடப் பார்த்துள்ளனர். இது இப்போது அம்பலப்பட்டுவிட்டது.
2019 ஆம் ஆண்டு ஆகஸ்டு 5 ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தில் சம்மு காசுமீருக்கு சிறப்புத் தகுதி வழங்கும் உறுப்பு 370 செயலிழக்கச் செய்யப்பட்ட பின்பு சம்மு பகுதிகளில் ஆயுதப் போராளிகளின் நடமாட்டம் அதிகரித்தது. கடந்த அக்டோபரில் சோனாமார்க் சுரங்கப் பாதையில் இதே குழுவினரால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் போது, அவர்கள் பஹல்காம் வழியாக ஊடுருவியிருக்கக் கூடும் என்று பாதுகாப்புத் தகவல்கள் வெளிவந்தன. அப்படியான தகவல் இருந்தும் பஹல்காம் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்காமல் விட்டது உளவுத் துறை மற்றும் காவல் துறையின் அப்பட்டமான தோல்வியாகும். 2019 ஆம் ஆண்டு சம்மு காசுமீர் ஒன்றிய ஆட்சிப்புலமாக மாற்றப்பட்ட காரணத்தால் உளவுத் துறையும் காவல்துறையும் நேரடியாக உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. எனவே, இந்த பாதுகாப்புக் குறைபாட்டுக்கு அமித் ஷா தலைமையேற்கும் உள்துறை அமைச்சகமே பொறுப்பேற்க வேண்டும்.
அடுத்து, அமைச்சர் பியூஸ் கோயல் 140 கோடி மக்களுக்கும் தேசப் பற்று இருந்தால்தான் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க முடியும் என்று இந்நாட்டு மக்களின் தலையில் பழியைப் போட்டார்.
அதுமட்டுமின்றி சத்தீஸ்கர் மாநில பாசக தமது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் , சுற்றுலா பயணிகள் சட்டுக்கொல்லப்படும்போது மதத்தைக் கேட்டார்களே ஒழிய சாதியைக் கேட்கவில்லை என்று கொல்லப்பட்டவர்களின் இரத்தம் காய்வதற்குள் பதிவு போட்டது.
இசுலாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலைக் கொழுந்துவிட்டு எரியச் செய்வதற்கு கிடைத்த அரிய வாய்ப்பாக பயன்படுத்தி இணையத்தில் விசம் பரப்ப தொடங்கியது பாசகவின் இணையப் படை.
காசுமீர் மாணவர்கள் இந்துத்துவ வெறியர்களால் ஆங்காங்கே தாக்கப்பட்டனர். பாகிஸ்தானை எதிர்த்துப் பேசுங்கள் என்று காசுமீரிகள் ஊடகங்களால் நிர்பந்திக்கப்பட்டார்கள். 26 பேரை சுட்டுக் கொன்ற ஆறு பேர் இசுலாமியர்கள் என்றாலும் எண்ணற்ற சுற்றுலாப் பயணிகளைக் காப்பதில் உயிரைக் கொடுத்தும் உயிரைப் பணயம் வைத்தும் ஈடுபட்ட எத்தனையோ பேர் காசுமீரைச் சேர்ந்த இசுலாமியர்கள்தான். ஆனால், இந்த சம்பவத்தை இசுலாத் மற்றும் இசுலாமிய வெறுப்புக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். – பாசக.
பாகிஸ்தானியர்கள் ஏப்ரல் 29 க்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், தூதரக உறவுத் துண்டிப்பு, சிந்து நதி நீர் உடன்படிக்கையைப் புறக்கணிக்கப் போகிறோம் என அதிரடியாக அறிவித்து ஒட்டுமொத்த பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு எதிரான நகர்வுகளை செய்து கொண்டிருக்கிறது மோடி அரசு.
உணமையான குற்றவாளிகளைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு பதிலாக சந்தேகத்திற்கு இடமானவர்கள் என்ற பெயரில் காசுமீரில் புல்டோசர் கொண்டு வீடுகளை இடித்துத்தள்ளிக் கொண்டிருக்கிறது மோடி அரசு. ஏற்கெனவே தானே நீதிபதியாக மாறி அரசாங்கம் இத்தகைய நீதி பரிபாலனத்தை செய்யக்கூடாது எனவும் இது அரசமைப்பு சட்ட உறுப்பு 21 க்கு எதிரானது எனவும் உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கும் நிலையில் மோடி அரசு அதை மதிக்கவில்லை. நாட்டு மக்களின் கோபத்தைத் தணிக்கும் நோக்கில் ஏதாவது தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வது போல் தோற்றங் காட்டுவதில் முனைப்பாக இருக்கிறது.
இந்த பயங்கரவாத தாக்குதலை நடத்தியதாக உரிமை கோரிய ”The Resistatnce Front” என்ற அமைப்பு பாகிஸ்தானில் இருந்து இயங்கும் லஷ்கர் – இ – தொய்பாவின் முன்னணி அமைப்பென்றும் இந்த பயங்கரவாத நடவடிக்கைக்கு பாகிஸ்தான்தான் காரணம் என்றும் எடுத்த எடுப்பிலேயே பாகிஸ்தானைக் குற்றஞ்சாட்டியது மோடி அரசு. அரசியல் வகையில் மிகவும் பலவீனமடைந்து குழம்பிப் போய் இருக்கும் பாகிஸ்தான் இதை மறுப்பதோடு வெளிப்படையான கூட்டு விசாரணைக்குதான் தயார் என்று கூறியுள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்பு பலுச் விடுதலைப் படை ஜாஃபர் விரைவு தொடர் வண்டியைக் கடத்தி, அதில் இருந்து பயணிகளைப் பணயக் கைதிகளாக வைத்து மிரட்டியது. அப்பாவி பயணிகள் பலரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்குப் பின்னால் இந்திய உளவுத் துறை இருக்கிறது என்று பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டியது. ஆனால், இந்திய அரசு இதற்கு மறுப்பு தெரிவித்தது.
இந்திய – பாகிஸ்தான் பிரிவினையின்போது காசுமீர் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அது இந்தியாவோடு இணைக்கப்பட்டது போல் பலுசிஸ்தான் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அது பாகிஸ்தானோடு இணைக்கப்பட்டது. காசுமீரிலும் பலுசிஸ்தானிலும் இதற்கு எதிரான விடுதலைப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பலுசிஸ்தான் போராட்டத்தில் இந்திய அரசு தலையிடுவதும் காசுமீரில் பாகிஸ்தான் தலையிடுவதும் வாடிக்கையாக உள்ளது. இவ்விரு நாடுகளும் அம்மக்களின் சனநாயக கோரிக்கைக்கு முகம் கொடுக்க அணியமாக இல்லை. இதுவொரு அடிப்படை பிரச்சனை.
மேலும் இந்தியாவிலோ காசுமீர் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை இந்து – இசுலாமியர் பிரச்சனையாக திரித்து, இசுலாமிய எதிர்ப்பு இந்து தேசிய வெறியூட்டலுக்கான களமாக ஆர்.எஸ்.எஸ். கையாண்டு வருகிறது.
உறுப்பு 370 ஐ செயலிழக்கச் செய்ததன் மூலம் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாகவும் அந்த உறுப்புதான் காசுமீரில் அமைதியின்மைக்கு காரணம் என்றும் அமித் ஷா சொல்லிக் கொண்டிருந்தார். வளர்ச்சி, சுற்றுலா பயணிகள், தனிநபர் வருமானம் என எல்லாம் அதிகரித்திருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் அள்ளி வீசப்பட்டன. ஆனால், அவர் சொன்னது போல் காசுமீரில் அமைதி நிலைநாட்டப்படவில்லை என்பதைத்தான் பஹல்காம் சம்பவம் காட்டியுள்ளது.
சம்மு காசுமீர் பிரச்சனையை ஓர் அரசியல் பிரச்சனையாக கையாண்டு அரசியல் தீர்வு காண வேண்டும் என்று மோடி – அமித்ஷா – அஜித் தோவல் சிறுகும்பலாட்சியை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம். 370 நீக்கமும் மாநில உடைப்பும் ஒன்றிய ஆட்சிப் புலமாக மாற்றியதும் நீறுபூத்த நெருப்பாக பிரச்சனையை உயிரோடு வைத்திருக்கப் போகிறதே ஒழிய இவை தீர்வாக அமையாது என்று தொடர்ச்சியாக எடுத்துச்சொன்னோம்.
துப்பாக்கி முனையில் காசுமீர் மக்களை நிறுத்தி, சதித்தனமாக அரசமைப்பு சட்டத்தைத் திருத்தி காசுமீர் சிக்கலுக்கு தீர்வு கண்டுவிட்டோமென உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கொக்கரித்தது பாசக.
”காசுமீர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணாமல் வன்முறைக்கு முடிவுகட்ட முடியாது. ஏதாவது ஒரு மூலையில் ஆயுதம் ஏந்தியவர்கள் உருவாகிக் கொண்டே இருப்பார்கள்” என்று அரசியல் இராணுவ ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினார்கள். ஆனால், இதற்கு மோடியும் அமித் ஷாவும் செவி கொடுக்கவில்லை.
இப்போது அநியாயமாக 26 அப்பாவிகள் பலியிடப்பட்டுள்ளார்கள். அவர்களின் சாவைக் கண்ட பின்னும் அவர்களின் உறவினர்களின் அழுகுரலைக் கேட்ட பின்னும் மோடி அரசு தனது அரசியல் கொள்கையின் தவறைத் திருத்திக் கொள்ள மறுக்கிறது. மோடியும் அமித் ஷாவும் இதற்குப் பொறுப்பேற்க மறுக்கின்றனர். மாறாக மென்மேலும் தவறு செய்வதை நோக்கி செயல்பட்டு வருகின்றனர். அனைத்துக் கட்சி கூட்டத்திற்குகூட காசுமீரைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் காசுமீர் முதலமைச்சரையும் அழைக்க மறுத்துவிட்டனர்.
2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதலின் விசாரணையே இன்னும் முடியவில்லை. அதுபோல் பஹல்காம் தாக்குதலும் விசாரணைக்கு உட்படுத்தப்படாமல், குற்றமிழைத்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படாமல் தப்பிவிடுவார்களோ என்ற கவலை மேலெழுகிறது.
இந்த துயரத்தைக்கூட தேசிய வெறியூட்டலுக்கும் போர் பதற்றத்துக்கும் பீகார் தேர்தல் ஆதாயத்துக்கும் பயன்படுத்திக் கொள்ளும் முனைப்புதான் மோடியிடம் தெரிகிறது. இது மிகுந்த கவலைக்கும் கண்டனத்திற்கும் உரியதாகும். இந்தப் போக்கை ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும்.
பாதுகாப்புக் குறைபாடுகளுக்கும் தவறான அரசியல் கொள்கைக்கும் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும். மேலும் காசுமீர் தொடர்பான தவறான அரசியல் கொள்கையைக் கைவிட்டு உச்சநீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டதற்கு இணங்க உடனடியாக சம்மு காசுமீருக்கு மாநில தகுதி வழங்கிட வேண்டும், சம்மு காசுமீர் அரசியல் கட்சிகளோடு சேர்ந்து அதிகாரப் பகிர்வுக்கான பேச்சுவார்த்தையை தொடங்குவதுதான் காசுமீரில் அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒரே வழி என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக ஒன்றிய மோடி அரசை கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்,
தி. செந்தில்குமார்,
ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்த்தேச மககள் முன்னணி