அம்பேத்கரின் ஒரே தேசம், ஒரே மொழி – புனிதபாண்டியன் கட்டுரைக்கு மறுமொழி – பகுதி 5 – தோழர் செந்தில்

28 Apr 2025

சகோரத்துவமும் மொழிவழித் தேசியமும்

தேசம் உருப்பெறுவதற்கு சகோரத்துவம் இன்றியமையாதது;. தேசியம் அதாவது நாம் என்ற உளவியல் கட்டமைப்புதான் சகோரத்துவம் ஆகும். ஆனால், இந்த ‘நாம்’ என்ற ஓர்மைக்கு புறவய காரணிகளாக தேசியத்தின் ஏனைய கூறுகள் அமைகின்றன. அதில் நிலமும் ஒத்த பொருளிய்ல வாழ்வும் இருக்கும் அதேநேரத்தில் பொதுமொழியும் பண்பாடும் தனிச்சிறப்பான பாத்திரத்தைக் வகிக்கின்றன. இங்கு மொழி பற்றிய ஆழமான புரிதலும் சமூக ஓர்மைப் பற்றிய அறிவியல் கண்ணோட்டமும் தேவை.

மொழியின் பாத்திரம்:

பூகோளவாதமும் புதியதேசியவாதமும் என்ற தலைப்பில் ஈழத்து ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு எழுதியுள்ள நூலில் பக்கம் 91 இல் பின்வருமாறு கூறுகிறார்.

மொழி, பண்பாடு என்பன இலட்சக்கணக்கான ஆண்டுகால அடிமன உணர்வுகளோடு தொடர்புடையவை. தாய்மொழி என்பது ஒரு மனிதனது அடிமன உணர்வோடும் வாழ்க்கை முறையோடும் வாழ்க்கை நெறியோடும் சிந்தனை முறையோடும் இணைந்திருக்கின்றது. மொழி மனிதனின் மண் சார்ந்த, முன்னோர்கள் பேணி வந்த அச்சமூகத்தின் அறிவு மண்டலம் சார்ந்த, வாழ்வின் கூறியீடுகள் சார்ந்த ஒரு கருவியாகும். அத்தகைய மொழி, பண்பாடு என்பன ஒரு தேசிய சமூகத்தை வடிவப்படுத்தி முன்னேறச் செய்யும் ஒரு உந்துசக்தியாகவும், ஆன்மாவாகவும் உள்ளன.

சமூகத்தின் தொன்மையை நிகழ்காலத்தோடு இணைக்கும் ஒரு மின்சார சக்தியாக தாய்மொழி விளங்குகிறது. அதேவேளை தேசிய எல்லைகளைக் கடந்து பொருளாதாரம் மனிதனை உருக்கி ஒட்டுகின்ற போதிலும் அவ்வாறு ஒட்டப்படும்  ஒவ்வொரு ஒட்டுத் துண்டையும் அடையாளப்படுத்தி நிற்கின்ற ஒரு குறிகாட்டி அம்சமாக தாய்மொழி உள்ளது.

மொழி, பண்பாடு, வரலாறு என்பது தேசியத் தன்மைகளை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. அதனால்தான், இன்றைய இந்தியாவின் அரசியல் வரைபடம் அந்தந்த தேசிய இனங்களின் வரலாற்று வளர்ச்சி நிலைமைகளுக்கும் தனித்துவத்திற்கும் ஏற்ப காவியாக கறுப்பாகவும் சிவப்பாகவும் காட்சித் தந்து கொண்டிருக்கிறது. பாசக ஆளும் மாநிலங்கள், பாசக ஆளாத மாநிலங்கள் என்று பகுத்துப் பார்த்தாலே இவற்றின் தனித்துவங்களைப் புரிந்து கொள்ளமுடியும்.

நாம் என்ற எண்ணம் உருப்பெற

பொது மொழி என்ற அம்சம் ( தமிழன் என்ற உணர்வு) அதிகம் பங்களிக்கக் கூடியதா?

அல்லது

மொழி கடந்த பொது நிலப்பரப்பு என்ற அம்சம் ( இந்தியன் என்ற உணர்வு) கூடுதலாக பங்களிக்கக் கூடியதா?  

இக்கேள்வியை எழுப்பிப் பார்த்தால் பொது மொழி என்ற அம்சம்தான் அதிகம் பங்களிக்கக் கூடியது என்ற முடிவுக்கு எளிதில் வரமுடியும்.

சமூக ஓர்மை மனிதநேயமா? தவிர்க்க முடியாத தேவையா?

மனிதர்களுக்கு இடையிலான உறவு எவ்வளவு பகையானதாக இருப்பினும் அவை நல்ன்களின் பெயரால் நட்பாக மாறும். அதேபோல், மனிதர்களுக்கு இடையிலான உறவு எவ்வள்வு ந்ட்பானதாக இருப்பினும் அவை நல்ன்களின் பெயரால் பகையாக மாறிப் போகும். இங்கு பரஸ்பர நல்னகளே உறவின் தன்மையை நிர்ணயிக்கவல்லதாகவும் உறவுக்கான அச்சாரமாகவும் அமைகிறது.

மனிதநேயமோ அல்லது அன்போ அல்லது அறவுணர்வோ நலன்களின் பெயரிலான உறவின் நிர்வாணத் தன்மையை மூடி மறைப்பதற்குரிய மேல் பூச்சுகளாகும். தனிமனிதர்களுக்கு இடையிலும் குழுக்களுக்கு இடையிலும் தேசங்களுக்கு இடையிலுமான உறவை மேற்படி நலன்களின் அடிபப்டையிலான விதியே தீர்மானித்துக் கொண்டிருக்கிறது.

சாதி ஆதிக்கத்தையும் சாதிக் குழு உணர்ச்சியையும் பேணுவதால் பெறக்கூடிய நலன்களைவிடவும் சாதி ஆதிக்கத்தை கைவிடுவதாலும் சாதிக் குழு உணர்ச்சியையும் கைவிடுவதாலும் பெறக்கூடிய நல்ன்கள் கூடுதலாக அமையும் இடத்தே மனிதன் நிர்பந்தத்தின் பெயரால் சாதியக் கட்டமைப்பை கைவிட்டுவிட்டு முன்னேறிச் செல்லப் போகிறான்.

பொருளாக்க முரையில் ஏற்பட்டுள்ள தலைகீழான மாற்றங்களின் ஊடாக, கடந்த மூன்று நூற்றாண்டுகளாக மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த மாற்றங்கள் சிந்தனை, அரசியல், சமூக வாழ்க்கை, பண்பாடு என்று அனைத்து தளங்களையும் பழையக் கட்டமைப்பை, சிந்தனை வடிவங்களைக் கைவிடுமாறு நிர்பந்தம் தந்து கொண்டிருக்கிறது.

சாதிக்குழு உணர்வைக் கைவிட்டு பொது உணர்வை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பதுகூட நலன்களின் பெயரால்தான் நடந்தேற வேண்டும். அது சிறுக சிறுக நடந்து கொண்டு இருக்கிறது.

பொதுவான நலன்களின் பெயரால் பொதுவான உணர்வு வளர்ந்துசெல்ல முடியுமே ஒழிய பின்னுக்கு செல்ல முடியாது. மேலும் அயல் ஒடுக்குமுறை, சுரண்டல், நிலவுரிமை பறிப்பு, ஆற்று நிர் உரிமை மறுப்பு, வரி உரிமை மறுப்பு, சட்டம் இயற்றும் உரிமை மறுப்பு, சூழலியல் சீர்கேடுகள், கடலோரப் பாதுகாப்பு, இயற்கை பேரிடர்கள் ஆகிய நெருக்கடிகள் பொதுவான உணர்வின் கீழ் இம்மக்களை ஒன்றுதிரளுமாறு நிர்பந்திக்கும்; நிர்பந்தித்துக் கொண்டிருக்கின்றன.

அதேநேரத்தில் சாதியால் பெற்றுவரும் நல்னகளைக் கைவிட மறுக்கும் வகுப்பினர் ( classes) சாதியுணர்வை உயர்த்திப்பிடித்து பொது உணர்வைப் பின்னுக்கு தள்ள முயல்வர், முயன்று கொண்டிருக்கின்றனர் இந்த முரண் இயக்கத்தில்தான் சமூகம் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது.

பொது உணர்வு என்பது  வெறும் அரசமைப்பு சட்டத்தின் வழியாக பலாத்காரமாக திணிக்கப்படும் ’இந்தியன்’ என்ற உணர்வாக வளர்வதற்குக் நலன் சார்ந்த அடிப்படைகள் இருந்தாக வேண்டும். ஆனால், பெரும்பாலான மக்களுக்கு அப்படியான நலன் சார்ந்த அடிப்படைகள் இல்லை.

மாறாக மொழி அடிப்படையிலான இயற்கையாக பீறிட்டெழும் தமிழர் என்ற உணர்வை மென்மேலும் வளர்துது செல்வதற்கான பொருண்மிய அடிப்படைகள் இருக்கின்றன.

தமிழன் என்ற உணர்வு வளர்ந்து செல்லக் கூடியதா? இந்தியன் என்ற உணர்வு வளர்ந்து செல்லக் கூடியதா? என்பதற்கு அதற்குரிய பொருண்மிய அடிப்படைகள் இருக்கின்றதா? என்பதில் இருந்து முடிவுக்கு வர வேண்டும். அதற்குரிய நல்னகளின் கூட்டல் கழித்தல் கணக்கில் இருந்து முடிவு செய்ய வேண்டும் வெறும் நல்லெண்ணமோ மனவிருப்பமோ மட்டுமே இத்தகைய பொது உணர்வு வளர்ந்து செல்வதற்குப் போதுமானது கிடையாது.

இந்திய தேசியம் என்பது சமுக தேசியமாக ஒரு வரலாற்றுக் காலப் பகுதியில் தோற்றம் பெற்றும் பிறிதொரு காலத்தில் அரச தேசியமாகவும் உள்நாட்டு தேசிய இன ஆதிக்கமாகவும் வெளிநாடுகளின் மீதான விரிவாதிக்கமாகவும் நிலைப்பெற்றிருப்பது ஒருபுறம். இன்னொருபுறம் காட்டாற்று வெள்ளமென அடித்து சென்று கொண்டிருக்கும் இந்து தேசியத்தின் முன்னால் நின்று பிடிக்க முடியாமல் கடந்த மூன்று பத்தாண்டுகளாக தடுமாறிக் கொண்டிரூக்கிறது. இந்திய தேசியம் அதன் வளர்ச்சிப் போக்கில் வக்கிரம் அடைந்து இந்து தேசியமாக பரிணமித்துக் கொண்டிருக்கும் காலம் இது.

இந்திய தேசியத்தின் தோல்வி இடித்து நொறுக்கப்பட்ட பாபர் மசூதியின் இடத்தில் கட்டப்பட்டிருக்கும் இராமர் கோயிலாகவும் இரு துண்டுகளாக பிளக்கப்பட்டும் ஒன்றிய ஆட்சிபுலமாக தகுதிநீக்கம் செயய்ப்பட்டும் இருக்கும் சம்மு காசுமீராகவும் காட்சி தந்து கொண்டிருக்கிறது.

இக்காலப்பகுதியில் சாதி மறுக்கும் பொது உணர்வாக, சனநாயக அடிப்படையிலான தமிழ்த்தேசிய உணர்வு அதாவது தமிழன் எனற உணர்வுதான் இருக்க  முடியும்.

முடிவாக, சாதி தேசத்திற்கு எதிரானது என்றார் அம்பேத்கர். அதை மறுவளமாக சொன்னால் தேசத்தின்  பிரிக்க முடியாத உயிர்க்கூறாக சாதி எதிர்ப்பு இருக்கிறது. Caste is anti-national. Nation is anti-caste).

இந்தக் கூற்றுக்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. சாதி மறுப்பு இல்லாமல் தேசியம் இருக்க முடியாது என்பது போல் தேசியம் என்ற பொது உணர்வு ,நாம் என்ற உணர்வு வளர்த்தெடுக்கப் படாமல் சாதி மறுப்பு சாத்தியமில்லை. அப்படி எனில் சாத்தியப்படக்கூடிய,  பொது உணர்வுக்கு எதிரான கருத்தாக்கங்களும் செயல்பாடுகளும் எத்தகைய உயரிய நோக்கத்தைக் கொண்டிருப்பினும் அவை சாதி இருப்புக்கு சேவை செய்யக் கூடிய விளைவையே ஏற்படுத்தும்.

இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டங்களிலும்   சல்லிக்கட்டுப் போராட்டத்திலும் நீட் விலக்குப் போராட்டத்திலும் சூழல் காப்புப் போராட்டங்களிலும் இயற்கை பேரிடர்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான போராட்டங்களிலும் நலன்களின் பெயரால் சாதி, சமயம் கட்ந்து தமிழ் மக்கள் இணைந்து நின்று போராடுவதன் மூலமும் இதற்கு குறுக்கே வரும் சாதி ஆதிக்கத்திற்கும் குறுகிய குழு உணர்ச்சி அரசியலுக்கு எதிராக நலன்களின் பாற்பட்டு போராடுவதிலும் தமக்கான தேசிய வாழ்வை வளர்த்துச் சென்று, தமக்கான தேசத்தை பிரசவித்துக் கொள்வர் என்பது வரலாற்று செல்நெறியாக தெள்ளத் தெளிவாக கண்ணுக்குப் புலப்படுகிறது.

இந்த வரலாற்று வ்ளர்ச்சி நெறியைப் புரிந்து கொண்டு, வரலாற்றில் இருந்து பாடம் கற்று அந்த வளர்ச்சிப் போக்கை விரைவுபடுத்துவதே நமது கடமையாகும். அந்த கடமையின் பகுதியாக ஆய்வுகளும் உரையாடல்களும் அதில் இருந்து பெறத்தக்க முடிவுகளின் அடிப்படையிலான செயல்பாடுகளும் அமைகின்றன. அத்தகைய ஒரு முயற்சிதான் இந்த உரையாடலும் ஆகும்.

உதவிய நூல்கள்

  1. மார்க்சியமும் தேசிய இனச் சிக்கலும் – ஜோசப் ஸ்டாலின்
  2. பூகோளவாதம், புதிய தேசியவாதம் –மு. திருநாவுக்கரசு
  3. சமஷ்டியா? தனிநாடா?  – மு. திருநாவுக்கரசு
  4. தேசியத்தின் உரையாடல் – தியாகு
  • முற்றும்
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW