அம்பேத்கரின் ஒரே தேசம், ஒரே மொழி – புனிதபாண்டியன் கட்டுரைக்கு மறுமொழி – பகுதி 4

கேள்விகளில் உள்ள முரண்பாடு
தோழர் புனித பாண்டியன் தமது கட்டுரையில் எழுப்பும் கேள்விகளில் உள்ள முரண்பாடுகளைப் பார்த்துவிட்டு சகோதரத்துவத்திற்கும் மொழிவழித்தேசியத்திற்குமான உறவைப் பார்க்கலாம்.
///மதத்தை வேராகக் கொண்டுள்ள சாதியை வாழ்க்கை முறையாகவும் பண்பாடாகவும் ஏற்றுக்கொண்டிருக்கும் மக்களை மொழி மட்டுமே பிணைத்து, அவர்கள் ‘ஒரே நாட்டினர்’ என்ற உணர்வை ஏற்படுத்துமா என்ற அய்யம் அம்பேத்கருக்கு இருந்ததாக கட்டுரையாளர் எழுதுகிறார்.//
தமிழ்நாட்டில் நடக்கும் சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக உத்தரபிரதேசத்திலும் மேற்குவங்கத்திலும் தலித் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடும் உணர்வு – நாம் ஒரு மண்ணின் மக்கள் என்ற உணர்வு எத்தனை ஆண்டு காலத்தில் உருப்பெறும்? எப்படி வளர்த்தெடுக்கப்பட முடியும்?
ஒரு பொது மொழியால் இம்மக்களைப் பிணைக்க முடியாது போன விடத்து பலமொழி பேசக் கூடிய மக்களிடையே ஒரு பொது உணர்ச்சியை வளர்ப்பதற்கான பொருண்மிய அடிப்படைகள் என்ன இருக்கின்றன?
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மொழிவழி மாநிலங்களைக் கடந்து நாடு தழுவிய போராட்டங்கள் எழுந்த அதேவேளையில் அன்றாடம் நடைபெறும் வன்கொடுமைகளுக்கு எதிராக அரிதான நிலைமைகளிலேயே நாடு தழுவிய போராட்டங்கள் எழுந்துள்ளன.
//இந்நிலையில் சாதியால் பிளவுபட்டுள்ள மக்களை மொழி பிணைக்கவில்லை என்பதும் மொழியுணர்வு சாதியுணர்வை மழுங்கடித்துவிடவில்லை என்பதும் தெளிவாகிறது///
இது கறுப்பு வெள்ளையாக வளர்ச்சியைப் பார்ப்பதாகும். மொழியுணர்வு சாதியுணர்வை முற்றாக மழுங்கடித்துவிட வில்லை என முடிந்த முடிவாகவும் அறுதியிட்டு தமிழ்த்தேசியத்தை விமர்சித்துவிட்டு ’இந்தியன்’ என்ற இந்திய தேசிய உணர்வைப் பரிந்துரைக்கிறார் கட்டுரையாளர்.
ஆனால், அவர் இந்திய தேசிய உணர்வு மொழியுணர்வைவிடவும் அதிகமாக சாதியுணர்வை மழுங்கடித்திருப்பதற்கான சான்றுகளைக் காட்டவில்லை.
மொழியுரிமைப் போராட்டங்கள், தொழிற்சங்கப் போராட்டங்கள், கூலி விவசாயிகளின் போராட்டங்கள், சூழலியல் போராட்டங்கள், சல்லிக்கட்டுப் போராட்டம், நீட் எதிர்ப்புப் போராட்டம் ஆகியவை மக்களின் வாழ்க்கை நிலைமைகளில் இருந்து எழுந்து, சாதியுணர்வைப் பின்னுக்குத் தள்ளிப் பொதுவான உணர்வை மேலோங்கச் செய்திருப்பதைக் காட்டுகின்றன.
பொதுக் கல்வி, பொது சுகாதாரம், கலை , இலக்கியம் , செய்தித்தாள், தொலைக்காட்சி, திரைப்படங்கள், கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடம்பெயர்தல் போன்றவை மக்களிடம் பொது உணர்வை வேகமாக வளர்த்துக் கொண்டிருக்கின்றன.
சாதி உணர்வுக்கும் தமிழ்த்தேசிய உணர்வுக்கும் இடையிலான முரணியக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் வளர்ச்சியின் பக்கம் நின்று விரைவுபடுத்த வேண்டியதே பொது உணர்ச்சியை வளர்ப்பதில் அக்கறை கொண்டோரின் கடமையாக இருக்க முடியும்.
//அதே நேரத்தில் மதச்சிறுபான்மையினர், தாங்கள் நாடெங்கும் சந்திக்கும் அச்சுறுத்தல்களை மொழிகளைக் கடந்தும் எதிர்கொண்டு, ஒருமித்த உணர்வைப் பெறுவது, அவர்களுக்கு உளவியல் பலத்தை அளிக்கிறது. ஆனால் தலித் மக்கள் இந்து மதத்தினராக இருந்தாலும் வன்கொடுமைகளுக்கு எதிரான ஒருமித்த ஆதரவு, அம்மதத்தினரிடமிருந்தோ, அவர்கள் சார்ந்திருக்கும் மொழி பேசும் மக்களிடமிருந்தோ கிடைப்பதில்லை. இத்தகைய முரண்கள் தீர்க்கப்பட வேண்டும் எனில் நாம் ’ஒரே நாட்டினர்’ என்கிற அரசமைப்புச் சட்டத்தின் அறவுணர்வை மேலோங்கச் செய்ய வேண்டும் என்று அம்பேத்கர் வலியுறுத்தினார்.//
மதச்சிறுபான்மையினர் மொழிகளைக் கடந்தும் எதிர்கொண்டு ஒருமித்த உணர்வைப் பெறுவது ஒரு வரம்புக்கு உட்பட்டுதான். மொழிபேசும் மக்கள் கூட்டத்தின் பகுதியாக தம்மை வரித்துக் கொண்டு இந்துத்துவத்திற்கு எதிராகப் போராடும் போதுதான் அப்போராட்டம் மிகுந்த வலிமை பெறுகிறது. அதற்கு தமிழ்நாடே சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ஒரு மொழிபேசும் மக்களிடம் இருந்து தலித் மக்களுக்கு ஆத்ரவு கிடைப்பதில்லை என்று சொல்லும் அதேநேரத்தில் வெவ்வேறு மொழிபேசும் மக்களிடம் இருந்து தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக எந்தளவுக்கு ஆதரவு வந்திருக்கிறது? இந்த 75 ஆண்டுகால பட்டறிவு என்ன?
தலித் மக்களிடையே இந்தியன் என்ற பொது உணர்வு ஏற்பட்டால் மட்டும் போதாது, தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக ’இந்தியன்’ என்ற பொது உணர்வின் அடிப்படையில் தலித் அல்லாதோர் போராட முன்வர வேண்டும். அப்போதுதான் அம்பேத்கர் விரும்பக்கூடிய சகோதரத்துவம் உருப்பெற்றதாக அர்த்தம்.
அப்படியெனில் தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக தமிழ் பேசக்கூடிய தலித் அல்லாதவர்கள் போராடுவதற்கு புறநிலை அடிப்படைகளும் சாத்தியப்பாடுகளும் இருக்கின்றனவா?
அல்லது
குஜராத்தை சேர்ந்த தலித் அல்லாதவர்கள் ’இந்தியன்’ என்ற உணர்வு பீறிட்டெழுந்து தமிழ்நாட்டில் உள்ள தலித் மக்களுக்கு ஆதரவு கொடுப்பதற்கான பொருண்மிய அடிபப்டைகளும் சாத்தியப்பாடுகளும் இருக்கின்றனவா?
//ஒரே நாட்டினர்’ என்கிற அரசமைப்புச் சட்டத்தின் அறவுணர்வை மேலோங்கச் செய்ய வேண்டும் என்று அம்பேத்கர் வலியுறுத்தினார். ஒன்றிய அரசின் ஆதிக்கத்திற்கு எதிரான மாநில சுயாட்சிக் கொள்கையோ, தனிநாடு கோரிக்கையோ இச்சமூகச் சிக்கலுக்கானத் தீர்வாகாது. //
அரச்மைப்புச் சட்டம் முன்வைக்கும் ’இந்தியன்’ என்ற உணர்வு இந்திய தேசிய உணர்வுதான். அரசமைப்புச் சட்டம் ஒற்றையாட்சித் தன்மையைக் கொண்ட அரசமைப்பாக இருக்கிறது. மாநில சுயாட்சிக் கொள்கையோ தனிநாடு கோரிக்கையோ இச்சமூகச் சிக்கலுக்கான தீர்வாகாது என்று அடித்துச் சொல்லும் அதேவேளையில் இதன் மறுப்பக்கமாக ஒற்றையாட்சி அரசமைப்பும் ஒன்றிய அரசின் ஆதிக்கமும் இச்சமூக சிக்கலுக்கு தீர்வாகாது என்பதையும் கட்டுரையாளர் ஏற்கிறாரா?
மாநில சுயாட்சி, தனிநாட்டுக் கோரிக்கை என்பது ஒருமொழி பேசும் மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமை அடிப்படையில் கேட்பதாகும். இதற்கானப் போராட்டம் என்பது தேசிய உணர்வை மேலெழச் செய்யும் சாதியுணர்வைப் பின்னுக்கு தள்ளும் ; அப்படி பின்னுக்கு தள்ளுமாறு கட்டாயப்படுத்தும்.
இன்றளவில் இந்திய தேசம், இந்திய தேசியம், இந்திய தேச அரசு என்பது இந்துக்கள் அல்லாத மக்களைக் கொண்ட காசுமீர், பஞ்சாப், வடகிழக்கு மாநிலங்கள் போன்ற மாநிலங்களின் தேசிய விடுதலை இயக்கங்களை படைவலிமையின் வழியாக ஒடுக்கிக் கொண்டிருக்கிறது.
இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு தனிநாட்டுக்கோரிக்கையை முன்வைத்த போது பிரிவினை தடைச்சட்டம் இயற்றப்பட்டு பலாத்கார வழியில்தான் அக்கோரிக்கை நசுக்கப்பட்டது. அந்த ச்ட்டம் இயற்றப்பட்ட பின்ன்ணியில்தான் திராவிட நாடு கேட்டுக்கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழகம், ”காரணங்கள் அப்படியே இருக்க கோரிக்கையைக் கைவிடுவது” என்ற முடிவை எடுத்தது.
எனவே, இந்தியன் என்ற உணர்வை வளர்ப்பது என்பது இந்திய தேசிய உணர்வை வளர்ப்பது, ஒன்றிய அரசின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டு அதற்கு துணை போவதாக அமைந்துவிடும்.
// எனவேதான் மதச்சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் ‘மதவாதம் தலைதூக்குகிறது’ என நாடு முழுவதும் கண்டனம் கிளம்பும் என அஞ்சும் சமூகம், சாதி ரீதியான தாக்குதல்களை நாள்தோறும் நிகழ்த்துவதற்குத் தயங்குவதே இல்லை. //
மதச்சிறுபான்மையினர் மீதான தாக்குதலை நடத்த யார் அஞ்சுகிறார்கள்? அவர்களுக்கு ஆதரவாக யார் போராட முன்வருகிறார்கள்? இன்று இந்தியா என்பது இசுலாமியர்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கான பரிசோதனைக் கூடமாக மாறியிருக்கிறது. அவர்களின் குடியுரிமையைப் பறிப்பதற்கு சட்டம் இயற்றப்படுகிறது. ”மதச் சிறுபான்மையினரின் வாக்குகள் வேண்டாம்” என்று பிரகடனப்படுத்தி, அவர்களுக்கான பிரதிந்தித்துவம் இல்லாத நாடாளூமன்றமும் சட்டமன்றங்களும் நிரம்பிய நாடாக இந்நாடு மாறியிருக்கிறது. மேற்படி கூற்று சமகால அரசியல் நிலைமைக்கு முரணாக இருக்கிற்து.
–
// மொழி மீதான ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கு சாதிகளைக் கடந்து ஓரணியில் திரளும் எந்தவொரு மாநிலமும் – அதே மொழி பேசும் – தலித் மக்கள் மீதான ஆதிக்கத்திற்கும் பாகுபாட்டுக்கும் வன்கொடுமைகளுக்கும் எதிராக அணிதிரள்வதில்லை. தவிர, தலித் அல்லாத பிற சாதியினரும் மொழியுணர்வோடு திருமணம், கோயில், சமூக மற்றும் பண்பாட்டு உறவுகளை வளர்த்துக் கொள்ளவும் தயாராக இல்லை. அரசியல் ஓர்மையை உருவாக்கும் மொழிப் பெருமிதங்களால் ‘நாம் ஒரே மொழியினர்’ என்கிற சமூக ஓர்மையையும் சமூகக் கலந்துறவாடலையும் உருவாக்க முடிவதில்லை. //
ஒரே மொழிபேசும் மக்களிடம் சாத்தியப்படாத இவையெல்லாம் வெவ்வேறு மொழிபேசும் மக்களுக்கு இடையே சாத்தியப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற காரணத்தால்தான் ’இந்தியன்’ என்ற உணர்வை உயர்த்திப்பிடிக்க வேண்டும் என்று கட்டுரையாளர் சொல்கிறாரா? அல்லது எதிர்காலத்தில் இவை நடக்கும் என்ற நம்பிக்கையில் தமிழ்த்தேசியத்தை மறுத்து இந்திய தேசியத்தை உயர்த்திப் பிடிக்கிறாரா?
அப்படியொரு நம்பிக்கையைக் கொண்டிருந்தால் அதற்கான பொருண்மிய அடிப்படைகள் என்ன?
- தொடரும்