அம்பேத்கரின் ஒரே தேசம், ஒரே மொழி – தோழர் புனிதபாண்டியன் கட்டுரைக்கு மறுமொழி. பகுதி – 1

25 Apr 2025

அம்பேத்கர் முன்வைக்கும் சகோதரத்துவம்

மொழிச் சிக்கல், மொழிவழி மாநிலங்கள் குறித்து அம்பேத்கரின் நிலைப்பாட்டை முன்வைத்து இந்திய தேச உருவாக்கம் பற்றி அம்பேத்கர் கொண்டிருந்த இலட்சியப் பார்வைப் பற்றி விளக்கி தோழர் புனிதபாண்டியன் இந்து தமிழ் திசை நாளிதழில் ஏப்ரல் 14 ஆம் நாள் எழுதிய கட்டுரைக்கான மறுமொழி இது.

ஒரு கருத்தோ அல்லது ஒரு செயலோ அது கொண்டிருக்கும் உயர்ந்த நோக்கங்களில் இருந்தும் இலட்சியங்களில் இருந்தும் மதிப்பிடப்படுவதில்லை, அது ஏற்ப்டுத்தக்கூடிய புறஞ்சார்ந்த விளைவுகளில் இருந்து, அது கொண்டிருக்கும் சாத்தியப்பாடுகளில் இருந்து, அதற்குரிய அறிவியல் அடிப்படைகளில் இருந்து மதிப்பிடப்படுகிறது. அதாவது, நல்லெண்ணங்களும் மன விருப்பங்களும் உயரிய நோக்கங்களும்கூட அரசறிவியல் என்ற உலைக்களத்தில் போட்டு மதிபிடப்பட்டாக வேண்டும், நாம் அவ்வாறு செய்யத் தவறினாலும் வரலாறு அதை மிகுந்த கண்டிப்புடன் செய்து முடிக்கிறது.

லெனினுடைய எந்தவொரு நிலைப்பாடும் பாட்டாளி வகுப்பின் நலன் மற்றும் சோசலிசத்தின் நலன் ஆகியவற்றின் அடிப்படையில் ஏனைய விசயங்களை அதற்கு உட்படுத்தி வந்தடையப் பெற்றதாக இருக்கிறது. அதுபோல், அம்பேத்கரின் எந்தவொரு நிலைப்பாடும் தலித் மக்களின் நலன் மற்றும் சாதி ஒழிப்பு நலன் ஆகியவற்றின் அடிப்படையில் ஏனைய விசயங்களை அதற்கு உட்படுத்தி வந்தடையப் பெற்றதாக இருக்கிறது.

ஆயிரக்கணக்கான சாதிகளாக பிரிந்து கிடக்கும் மக்களிடையே சகோதரத்துவம் இல்லை, எனவே, ”இந்நாட்டை ஒரு தேசம் என்று எப்படி சொல்ல முடியும்” என்று அம்பேத்கர் கேட்டார். இவர்களிடையே சகோரத்துவத்தை வளர்த்து ’ஒரு நாட்டினர்’ என்ற உணர்வை வளர்க்க வேண்டும் என்று அம்பேத்கர் கருதினார். வலிமையான மைய அரசு என்ற நோக்கில் அதிகாரம் மையத்தில் குவிக்கப்பட்ட அரசமைப்பை உருவாக்குவதன் பகுதியாக அம்பேத்கர் இருந்தார்.

மாநிலங்களிடம் பரந்த அதிகாரம் சென்றால் அந்தந்த மாநிலங்களில் உள்ள பெரும்பான்மை சாதியினர் கையில் அந்த அதிகாரம் சென்று தலித் சிறுபான்மையினர் மீதான ஆதிக்கமாக மாறிப் போகும் என்று அவர் அஞ்சினார். எனவே,, அரசமைப்பு சட்டத்தில் தலித் மக்களின் நலன்களைப் பாதுகாக்கக்கூடிய வன்கொடுமை தடுப்புச் சட்டம், இட ஒதுக்கீடு போன்றவற்றை ஒன்றிய அரசின் அதிகார வரம்புக்குள் கொண்டு வருவது பொறுத்தமானது என்று கருதினார். அவ்வண்ணமே அவை ஒன்றிய அரசின் அதிகாரத்தின் கீழ் உள்ளன. அதேநேரத்தில், இந்திய அளவிலும் தலித் மக்களின் சிக்கல் என்பது சிறுபான்மையினர் சிக்கல் என்று பார்த்துதான் அரசமைப்புச் சட்ட தீர்வுகளை அவர் முன்வைத்தார்.

மேலும் ஒரு மொழிக்கு ஒரு மாநிலம் என்பதற்குப் பதிலாக ஒரு மாநிலத்திற்கு ஒரு மொழி என்று உருவாக்கிக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, மராட்டிய மொழி பேசும் மூன்று மாநிலங்கள் கூட இருக்கலாம் என்று அவர் முன்வைத்தார். அதுவும் பேஷ்வாக்களின் ஆதிக்கத்திற்குள் மராட்டியம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற நோக்கு நிலையில் இருந்து சொன்னாரே ஒழிய ஆர்.எஸ்.எஸ். போல் இந்து தேச நோக்குநிலையில் இருந்து மாநிலங்களை உடைக்க வேண்டும் என்று அவர் சொல்லவில்லை. இதில் தலித் மக்களின் நலன் என்ற நோக்கு நிலையில் இருந்து இத்தகைய கருத்தை அவர் கொண்டிருந்தார்.

கட்டுரையில் நிர்வாக வசதிக்காக ஒன்றிய அரசின் மொழியாக இந்தி இருக்கலாம் என்று அம்பேத்கர் எண்ணினார் என்று கூறப்படுகிறது. மாறாக, அம்பேத்கர் மொழிவழி மாநில உருவாக்கத்தை நிர்வாக ஏற்பாடாக கருதினார். ஒன்றிய அரசின் ஆட்சி மொழி, நாட்டின் பொது மொழி ஆகிய கேள்விகளில் இந்தி மொழியை முன்வைத்தார். ஏனெனில், வலிமையான மைய அரசு, அதாவது வலிமையான இந்திய தேச அரசு, இந்திய தேசம் என்பது அவர் நிலைப்பாடாக இருந்தது.

அத்தகைய மைய அரசின் மூலமாக சாதியக் கட்டமைப்புக்கு எதிரான அரசமைப்புச் சட்டக் கூறுகளின் மூலம் பழமைத் தளையில் இருந்து விடுவித்து இந்நாட்டை புத்தாக்கம் (modernisation) செய்ய முடியும் என்று அம்பேத்கர் கருதினார்.

அத்தகைய தேசமாக இம்மக்கள் மாறுவதற்கு தடையாக சாதிய உணர்ச்சி இருக்கிறது என்ற அடிப்படையில்தான் இதுவொரு தெசம் இல்லை என்றும் சாதி உணர்ச்சிக்கு மாறாக ’இந்தியன்’ என்ற உணர்ச்சி மேலோங்க வேண்டும் என்றும் சொன்னார்.

ஒரு சாதியைச் சேர்ந்த மக்களுக்கு இடையே சகோதரத்துவம் இருக்கிறது. ஆனால், சாதி கடந்த சகோதரத்துவத்தின் வழியாகத் தான் ’இந்தியன்’ என்ற் பொது உணர்வை எட்ட முடியும்.

ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் இடையேதான் சகோதரத்துவ உணர்வு பிறக்கும். பிள்ளைகள் பெற்றதப் பூனை அவை பேருக்கு ஒரு நிறம் அன்றோ, எந்த நிறம் இருந்தாலும் அவை யாவும் ஒரே தரம் அன்றோ” என்று பாரதி பாடியதும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வு இருக்க முடியாது என்ற பொருளில்தான்.

முதலியத்திற்கு ( முதலாளித்துவத்திற்கு ) முந்தைய சமூக வாழ்வு என்பது வட்டார, குழு வாழ்க்கை முறையாக இருந்தது. முதலியப் பொருளாக்கம்தான் வட்டார, குழு வாழ்க்கை முறையிலிருந்து முறித்துக் கொண்டு பரந்த சமூக வாழ்வுக்கு மக்களை இழுத்து வந்தது.

இத்தகைய பரந்த சமூக வாழ்வின் தேவையாக சாதி, சமய, நிறம், இனம், பாலினம்,, மன்னராதிக்கம் போன்ற ஏற்றத்தாழ்வுகளை ஒழித்துக்கட்ட வேண்டி வந்தது. அதாவது, ”பிறப்பால் அனைவரும் சமம்” என்ற ஏற்பின் வழியாகத்தான் அந்த மக்கள் கூட்டத்திற்கு இடையே சகோரத்துவ உணர்ச்சி மேலெழ முடியும். பிறப்பால் சமம் இல்லை என்ற பாகுபாடுதான் சகோதரத்துவ உணர்ச்சிக்கு தடையாக இருக்கிறது.

’இந்தியன்’ என்ற உணர்வு சகோதரத்துவத்தின் வழியாகத்தான் மேலெழ முடியும். அப்படி சகோதரத்துவ உணர்வு மேல் எழுவதற்கு பிறப்பின் அடிப்படையிலான சாதிப் பாகுபாடுகளை மறுத்தாக வேண்டும். இங்கு ’’இந்தியன்’’ என்ற உணர்வுதான் தேசியம் ஆகும். அதாவது இந்திய தேசியம் ஆகும்.

தேசியம் பற்றிய கோட்பாட்டு விளக்கத்தைக் கண்டுவிட்டால் விசயம் மிகவும் தெளிவாகிவிடும்.

தொடரும்…

– தோழர் செந்தில்

RELATED POST
2 comments
  1. புனிதப் பாண்டியனின் இந்து திசை கட்டுரை இணைப்பையும் பகிருங்கள் தோழர். அவருடைய கருத்துக்கள் என்ன. அதற்கு மாற்றாக நீங்கள் வைக்கும் கருத்துகள் என்ன என்பதை புரிந்து கொள்ள அந்தக் கட்டுரையையும் படிக்க வேண்டியது தேவையாக இருக்கும்.

  2. இந்தியா ஒரு தேசமல்ல. பல் தேசங்கள் கொண்ட தேசம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா ஒரே நாடாக ஒரே குடையின் கீழ், ஒரே சிந்தனையாக உருவாக வேண்டிய தேவை என்று எதுவும் இல்லை.
    பல தரப்பு மக்களின் அடையாளத்தைப் பாதுகாக்கும் ஒரு அரசை தான் மக்கள் விரும்ப முடியும்.

    தேசியம் என்று எதையாவது வந்து ஒரு தரப்பு மக்களிடம் திணிக்கும் எந்தவொரு சிந்தனையும் அது அம்பேத்கரது பார்வையிலேயே இருந்திருந்தாலும் அது தவறானது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    மொழி ஒரு கருவி மட்டும். இன, மத, மொழி அடையாளங்களை இழந்து ஒரு தேசியம் உருவாவதை விட இவற்றை எல்லாம் இணைத்த ஒரு தேசியம் உருவாவது தான் மனிதர்கள் அனைவரையும் சமமாக மதிக்கும் ஒரு அரசு செய்ய வேண்டியது.

Leave a Reply to சொ.பிரபாகரன் Cancel reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW