இனக்கொலையாளர்களோடு கூடிக்கூலாவும் மோடி!   உணர்வு மங்கிய தமிழ்நாடு! – தோழர் செந்தில்

14 Apr 2025

இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா என மேற்குலக நாடுகள் சிறிலங்காவின் முன்னாள் படைத்தளபதிகளுக்கு மனித உரிமை மீறல்களுக்காக தடை விதித்துக் கொண்டிருக்கும் போதுதான் இந்திய தலைமை அமைச்சர் மோடி அந்நாட்டோடு பாதுகாப்பு உடன்படிக்கைப் போட்டிருக்கிறார்!

மனிதனை மனிதன் வணங்கக் கூடாதென சொல்லும் மதஙகள் இருக்கையில் இன்னும் இப்பிராந்தியத்தில் மதத்தின் பெயரால் மனிதனை மனிதன் வணங்கும் அவலம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அதைவிட அவலம் என்னவென்றால் தமிழினவழிப்புப் போருக்கு ஆசி வழங்கும் மகா போதி சங்கத்தின் தலைமைத் துறவியின் காலில் உலகின் மிகப் பெரிய சனநாயக நாட்டின் தலைமை அமைச்சர் விழுந்து வணங்கி வந்துள்ளார்.

பத்து சட்ட முன்முடிவுகளுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் இழுத்தடித்துக் கொண்டிருந்த போது மக்களின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது. இந்த தீர்ப்பு மாநில உரிமைகளுக்கு கிடைத்த வெற்றி என்று நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.  

அதே தமிழ்நாட்டு மக்களின் பெயரால் அதே சட்டப்பேரவையில் ஈழத்தமிழர்களுக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் உண்டு! அதுவும் ஒருமுறை அல்ல, இரு முறை ! சிறிலங்கா அர்சு செய்த இன்வழிப்புக் குற்றங்களூக்குப் பன்னாட்டுப் புலனாய்வு வேண்டும் எனவும் அரசியல் தீர்வு காண பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தும் தீர்மானங்கள் அவை! அந்த தீர்மானங்களை இந்திய அரசு கிஞ்சித்தும் மதிக்கவில்லை என்பதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால், அந்த தீர்மானங்கள் பற்றி சற்றும் நினைவு இன்றி தமிழ்நாடு சட்டப்பேரவை இருப்பதுதான் கெடுவாய்ப்பு ஆகும்.

இன்று போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனவழிப்புக் குற்றங்கள் ஆகியவைப் பற்றி  முன்னெப்போதும் இல்லாத வகையில் உலக மக்களால் விவாதிக்கப்பட்டு வருகிறது. பாலத்தீனத்திற்கு எதிராக இசுரேல் நடத்திவரும் இனவழிப்புப் போருக்கு எதிராக பல உலக நாடுகள் குரல் கொடுத்தன. அனைத்துலக நீதிமன்றத்தில்  தென்னாப்பிரிக்கா வழக்கு தொடுத்தது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீன ஆள்புலங்கள் பற்றிய அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பேனிஸ் ‘காலனியத் துடைப்பாக இனவழிப்பு” என்று உள்தலைப்பிட்ட தமது அறிக்கையில் இனங்கண்ட காரணிகளும் சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் பற்றி 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஐ.நா. வல்லுநர் குழு அறிக்கையில் குறிப்ப்டப்பட்ட காரணிகளும் ஒன்றே. என்னென்ன காரணிகளின் பெயரால் இசுரேல் பாலத்தீனத்தில் இனவழிப்பில் ஈடுபட்டுள்ளது என்று வரையறுக்கப்படுகிற்தோ அவையாவும் சிறிலங்கா – ஈழம் விசயத்திலும் பொருந்திப் போகின்றன.

பாலத்தீனர்களுக்கு எதிரான இனவழிப்பைப் பற்றி பேசுவது சனநாயகம் எனில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்புப் பற்றி பேசுவது மட்டும் எப்படி குறுகிய இனவாதமாகவோ அல்லது கற்பனாவாதமாகவோ அல்லது முடிந்தபோன விவகாரமாகவோ ஆகும்?  

இனவழிப்பு இசுரேலுக்கு எதிராக Boycott, Disinvestment and Sanction BDS என்று ச்ருக்கமாக சொல்லப்படும் புறக்கணிப்பு, முதலீட்டு நீக்கம், தடை என்ற இயக்கம் சனநாயக ஆற்றல்களால்  முன்னெடுக்கப்படுகிறது. சிறிலங்காவுக்கு எதிராகவும் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான உடனடி ஆண்டுகளில் அத்தகைய அறைகூவல் விடப்பட்டது. ஆனால், அதுவொரு தொடர் இயக்கமாக கொன்டு செல்லப்படவில்லை.

இனவழிப்பின் பெயரால்தான் 2010 இல் சிறிலங்காவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவை ( IIFA)  தமிழ்நாடு எதிர்த்தது. அதே காரணத்திற்காகத் தான், 2013 இல் காமன்வெல்த் மாநாட்டை சிறிலங்காவில் நடத்தக் கூடாது எனவும் அப்படி நடைபெற்றால் இந்திய தலைமை அமைச்சர் அதில் கலந்து கொள்ளக் கூடாது எனவும் தமிழ்நாடு வலியுறுத்தியது. தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு காலவரையற்றப் பட்டினிப் போராட்டம் நடத்தி, எற்படுத்திய அழுத்தத்தால் இந்திய தலைமை அமைச்சர் சிறீலங்கா செலவதில் இருந்து பின் வாங்கினார். சிறிலங்காவின் விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டில் விளையாடுவதற்கு அனுமதி மறுத்தது தமிழ்நாடு அரசு. கத்தி திரைப்படத் தயாரிப்பில் சிறிலங்காவின் முதலீடுகள் இருக்கின்றன என்ற காரணத்திற்காக அதை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இப்படி, சிறிலங்காவை புறக்கணிப்போம் ( Boycott Sri Lanka) என்ற இயக்கம் தமிழ்நாட்டை சூடேற்றிக் கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு. ஆனால், சிறிலங்காவைப் புறக்கணிப்போம் என்ற இயக்கம் மட்டுமின்றி ஈழ ஆதரவு இயக்கமே மத்தியில் பாசக ஆட்சிக்கு வந்தததில் இருந்து படிப்படியாக அமுங்கிப் போனது. ஈழத்திலும் புதிய சூழலுக்கு ஏற்ற புதிய அமைப்புகளும் வழிமுறைகளும் தோற்றம் பெறாத நிலையில் ஈழத்திற்கு வெளியிலான ஆதரவு இயக்கங்கள் வடிந்து வற்றிப் போய்விட்டன.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அவர் இதுவரை நான்கு முறை சிறிலங்காவுக்கு சென்று வந்துள்ளார். சிறிலங்கா பொருளியல் நெருக்கடியில் சிக்கியதில் இருந்து இந்தியா சுமார் 4.5 பில்லியன் டாலர்கள் கடன் உதவி செய்துள்ளது. சிறிலங்காவில் சம்பூர் சூரிய மின் ஆலை, இரயில் பாதைகள், 5000 பெளத்த கோயில் கூரைகளில் சூரிய மின் ஆற்றல் தயாரிப்புக்கான் நிதியுதவி, மின்சாரம், டிஜிட்டல், சுகாதார துறைகள், அதானியின் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் என இந்தியாவின் முதலீடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. குஜ்ராத்தில் 1960 களில் கண்டுபிடிக்கப் பட்ட புத்தரின் புனித சின்னங்களை சிறிலங்காவில் காட்சிப்படுத்தலாம் என்று மோடி தெரிவித்துள்ளார். ஆனால், இந்த முதலீடுகளுக்கு எதிராக ‘சிறிலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்’ என்ற குரல் ஈழ ஆதரவு இயக்கங்களிடம் இருந்தும் எழவில்லை; தமிழ்நாட்டு அரசிடம் இருந்தும் எழ வில்லை.

முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு நீதி கிடைத்து விட்டதா? தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைத்துவிட்டதா? காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி கிடைத்துவிட்டதா? தமிழர்களின் நிலங்கள் திருப்பி அளிக்கப்பட்டுவிட்டதா? போர் முடிந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் வடக்குகிழக்கு பகுதிகளில் சிங்கள வன்கவர் படையினர் விலக்கிக் கொள்ளப் பட்டனரா? 2009 க்குப் பின்னான நிலைமையில் என்ன மாற்றம் நடந்திருக்கிறது? இது எதுவுமே நடைபெறாத போது ஈழத் தமிழர்களுக்கான கோரிக்கைகள் கைவிடப்பட்டதேன்?

மோடி சிறிலங்காவுக்கு செல்வதற்கு முன் கச்சதீவு மீட்பு பற்றி ஒரு தீர்மானத்தைச் சட்டப் பேரவையில் இயற்றிய திமுக அரசுக்கு, ஈழத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக ஒரு தீர்மானம் இயற்ற முடியாமல் போனதேன்? குறைந்தபட்சம் வடக்குகிழக்கில் படை விலக்கம் புத்த விகாரைகள் நிறுவுவதை தவிர்ப்பது, அரசியல் கைதிகள் விடுதலை, மாகாண சபை தேர்தல் போன்றவற்றை வலியுறுத்தி ஒரு தீர்மானத்தை இயற்றி இருக்கலாமே? ஈழத் தமிழரின் நீதிக்கான போராட்டம் குறித்தும் அரசியல் அதிகாரப் பகிர்வு குறித்தும் கடந்த காலத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றியும் இப்போதைய தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன?

ஒன்றிய அரசின் நிலைப்பாடுதான் செயல்படுத்தப்படும், வெளியுறவு கொள்கை மாநிலப் பட்டியலில் வரவில்லை என்று காரணம் சொல்லப்படுமாயின் அது கச்சத் தீவு மீட்பு தீர்மானத்திற்கும் குடியுரிமை திருத்தச் சட்ட தீர்மானத்திற்கும் பொருந்தும்தானே. அல்லது ’சிலோன்’ பிரச்ச்னை வெளிநாட்டுப் பிரச்சனை அதைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள தேவையில்லை என்று ஆட்சியாளர்களும் எதிர்க்கட்சியினரும் கருதுவார்களாயின் இது குறித்து வெளிப்படையாக சொல்ல வேண்டும்.

எட்டுக் கோடி தமிழர்கள் இந்தியாவின் குடிமக்களாக இருக்கும் போது அந்நாட்டின் தலைமையமைச்சர் தமிழின அழிப்பு செய்த சிறிலங்கா அரசோடு உடன்படிக்கை கண்டு, அரசின் உயரிய விருதைப் பெற்றுக் கொண்டு, வருவது தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்திற்கு நேரெதிரானது இல்லையா? தமிழ்நாட்டு மக்களை அவமதிப்பது இல்லையா?

ஒவ்வொரு மனிதரும் பிறப்பால் நிகர் என்பதில் தொடங்கி அந்த மனிதருக்கு விரும்பிய உணவை உண்ணவும் பட்டினிக் கிடக்கவும் உடையை அணியவும் உழைக்கவும் உழைக்காமல் இருக்கவும் விரும்பியவரை மணக்கவும் தனித்து வாழவும் விரும்பிய சமயத்தைப் பின்பற்றவும் சமய நம்பிக்கை அற்று இருக்கவும் சுதந்திரமாக பேசவும் எழுதவும் உரிமை உண்டு. இது போன்ற தனிமனித உரிமைகளின் தொகுப்பு மிக நீண்டது. ஒவ்வொரு மனிதரின் சுயமும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய புனிதமான ஒன்றாகும். அந்த சுயத்தை மீறும் போது தனி மனித சுயத்தின் மரியாதை ( தன்மானம்) கேள்விக்குள்ளாகிறது.

தனி மனிதருக்கு என்று சுயம் இருப்பது போல் ஒரு மக்கள் கூட்டத்திற்கு கூட்டுச்சுயம் ( Collective Self)  , கூட்டு உரிமை ( Collective Rights) போன்றவை உண்டு. ஒரு தேசிய இனத்தின் கூட்டுச்சுயத்தின் அடிப்படையிலான கூட்டு உரிமையைத்தான் சுயநிர்ணய் உரிமை என்று சொல்கிறோம்.

தனி மனித உரிமை மீறப்படும் போது அது தனி மனித சுயத்தை பாதித்து சுயமரியாதையைக் கேள்விக்கு உள்ளாக்குவது போல் கூட்டு உரிமை மீறப்படும் போது அது கூட்டுச் சுயத்தைப் பாதித்து கூட்டுச் சுயத்தின் மரியாதையைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது.

சிறிலங்காவுடனான மோடி அரசின் அரசியல் , பொருளியல் பண்பாட்டு உறவுகள் என்பது ஈழத் தமிழர் தொடர்பான தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்திற்கு எதிரானது; சட்டப்பேரவையின் முடிவுக்கு மாறானது; தமிழ்நாட்டு மக்களின் கூட்டுச் சுயத்தை மீறுவதாகும்; கூட்டுச்சுயத்தின் மரியாதையைக் கேள்விக்கு உள்ளாகுவதும் ஆகும்.

தமிழ்நாட்டின் வான் பரப்பு வழியாக பறந்து சென்று, சிறிலங்காவில் பல உடன்படிக்கைகளைக் கையெழுத்திட்டுவிட்டு மீண்டும் இராமேஸ்வரத்திற்கு வந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு போயுள்ளார் மோடி. இந்த பயணத்தின் போது தமிழர்களின் உரிமைகள் தொடர்பில் சம்பிரதாயமான வலியுறுத்தல்களுக்கு அப்பால் எதுவும் இல்லை.

இது குறித்து தமிழ்நாடு சீற்றம் கொண்டிருக்க வேண்டும். ஆனால் சீற்றம் கொள்ளவில்லை?

ஒருபுறம் இந்திய அரசுக்கும் சிங்கள அரசுக்கும் இடையிலான உறவு தமிழ்நாட்டின் மாண்பை சிதைக்கிறது என்றால் இன்னொருபுறம் இதை எதிர்க்காமலும் கண்டிக்காமலும் இருப்பதன் மூலம் தமிழ்நாடு தன்னுடைய் மாண்பை தானே சிதைத்து கொள்கிற்து என்பதை மறந்துவிடக் கூடாது.   

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW