தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25 (பகுதி-1): – தோழர் சமந்தா

26 Mar 2025

ரொம்ப வரவேற்கத்தக்க விதமா தமிழ்நாட்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்றதுக்கு முதல் நாள் முதன் முதலாக 2024-25ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை இந்த முறை வெளியிட்டுருக்காங்க. இதற்கான முன்முயற்சிகளை திறம்பட செஞ்சு வெளியிட்ட தமிழ்நாட்டின் திட்டக் குழுவுக்கும், அதன் துணைத் தலைவர் அய்யா. ஜெயரஞ்சனுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிச்சுக்குறோம். இதன் மூலமா தமிழ்நாட்டோட பொருளாதார நிலவரம் பத்திய பல தகவல்களையும் அறியத் தந்துருக்காங்க. ஆனா அதோட முக்கிய அம்சங்களை மட்டும் தான் தமிழில் கொடுத்துருக்காங்க. அதுல “real estate” என்பதற்கு “வீட்டுமனை வர்த்தகம்”னு மொழிபெயர்த்துருக்காங்க. ஆனா “medium term” என்பதை இடைக்காலம்னு குறிப்பிடுறதுக்கு பதிலா நடுத்தரக் காலம்னு தவறா மொழிபெயர்த்துருக்காங்க. இது போன்ற பிழைகள் தவிர்க்கப்படனும். தரவுகளுக்கான விளக்கப்படங்கள்ல கொடுக்கப்பட்டுருக்க வளைவுகள் (graph curves) எல்லாமே பெரும்பாலும் ஊதா நிறத்துல தான் இருக்கு. அதுனால தரவுகளை வேறுபடுத்தி பிரிச்சு அறிஞ்சு புரிஞ்சுக்குறதுக்கு ரொம்ப திண்டாட வேண்டியிருக்கு. அடுத்த முறையாவது அதையெல்லாம் வெவ்வேற நிறங்கள்ல- பல வண்ணங்கள்ல கொடுக்குமாறு கேட்டுக்குறோம். முழு அறிக்கையையும் ஆங்கிலத்துல மட்டும் தான் வெளியிட்டுருக்காங்களா, அதுனால என்ன மாதிரி ஆளுங்க வெளங்கிக்குறதுக்கு ரொம்ப கஷ்டப்படவேண்டியிருக்கு. அடுத்த முறையாவது முழு அறிக்கையையும் தமிழ்ல கொண்டுவாங்க. தமிழ்நாட்டின் பொருளாதாரம் பத்திய எந்த தகவல்களை தெரிஞ்சுக்க வேண்டியிருந்தாலும் ஒவ்வொரு முறையும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தோட வலைதளத்துக்கே போகவேண்டியிருக்கு. அதுலயும் கூட தமிழ்நாடு பத்தின எல்லா புள்ளி விவரங்களையும் தொகுத்து கொடுக்கமாட்டாங்க. ஒவ்வொரு காலாண்டிற்கும் வெளியிடுற இந்திய ஜிடிபி வளர்ச்சி பத்தின தரவுகள்ல இந்தியா முழுவதுக்குமான இறுதி புள்ளிவிவரங்களை தான் கொடுத்துருப்பாங்களே ஒழிய, மாநிலங்கள் வாரியான விரிவான தகவல்கள் இருக்காது, மத்த அறிக்கைகள்ல தமிழ்நாடு-மாநிலம் பத்திய புள்ளி விவரங்கள் இருந்தா கூட அதையெல்லாம் ஒவ்வொன்னா தேடி, தேடித் தான் கண்டுபிடிக்கனும். அதோட எல்லா அறிக்கைகளும் ஆங்கிலத்துல மட்டும் தான் கெடைக்கும். இந்த நெலைமை மாறனும். தேசியப் புள்ளியல் அலுவலகம் இந்தியாவோட உற்பத்தி வளர்ச்சி, துறைவாரியான வளர்ச்சி, பணவீக்கம், வேலையின்மை பத்திய தகவல்களை மாசா மாசம் வெளியிடுது. தமிழ்நாடு திட்டக்குழுவும் தமிழ்நாட்டிற்கான இந்த விவரங்களை தமிழில் மாசந்தோரும் வெளியிடனும். அப்போ தான் உடனுக்குடனா எல்லா தகவல்களையும் நாங்களும் தெரிஞ்சுக்க முடியும். அதுனால தமிழ்நாடு திட்டக்குழு தமிழ்நாட்டின் உற்பத்தி வளர்ச்சி, துறைவாரியான வளர்ச்சி, பணவீக்கம், வேலையின்மை, பத்திய தரவுகளை மாசந்தோறும் தமிழில் வெளியிடனும்குற கோரிக்கையையும் முன் வைக்கிறோம். 

ஒன்றிய பாஜக அரசு வெளியிடுற பொருளாதார ஆய்வறிக்கைகள் பெரும்பாலும் உண்மையைப் பேசுறதுல்ல, பாஜகவுக்கு ஒத்தூதுற பிரச்சார ஊடகமா தான் மாத்தப்பட்டுருக்கு. அதுல வர்றது மாதிரியான தேவையில்லாத, திசை திருப்பும் கதையாடல்கள் தமிழ்நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையில இல்லாதது வரவேற்கத்தக்கது.

பாஜகவோட பொருளாதார ஆய்வறிக்கையில சொல்லப்படாத ரெண்டு முக்கியமான விசயங்களை தமிழ் நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுது. அவை என்னன்னா, 1. இந்தியாவோட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உள்ளியல்பு காலப்போக்குல மாறிடுச்சு. விவசாயம் முதலான முதன்மைத் துறையின் பங்கு 2011-12ல் 20.18%லிருந்தது 2024-25ல் 15.0% ஆகக் குறைஞ்சுடுச்சு, அதே நேரத்தில் உற்பத்தி முதலான இரண்டாம் நிலைத் துறையின் பங்களிப்பு 27.17% இலிருந்து 26.2% ஆகக் குறைஞ்சுடுச்சு. இதற்கு நேர்மாறாக, சேவைசார்ந்த மூன்றாம் நிலைத் துறையின் பங்கு 45.44% இலிருந்து 50.3% ஆக அதிகரிச்சுருக்கு. இந்தியா வளர்ந்த பொருளாதாரமாக மாறுவதற்கான அதன் இலக்கை அடையனும்னா, அதோட தொழில்துறையை (industrial sector) வலுப்படுத்தனும், குறிப்பாக வேலைவாய்ப்பு உருவாக்கத்தின் மூலமும், தொழில்துறை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கும், சிறு குறு நடுத்தர நிறுவனங்களை (MSME) ஊக்குவிப்பதன் மூலமும் இதை செய்யனும். 2. அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பும் பலவீனமடைந்துள்ளது, 2017-18ல் ஒரு டாலருக்கு 64.45 ரூபாயாக இருந்த ரூபாய் மதிப்பு சமீப மாதங்கள்ல ஒரு டாலருக்கு 87 ரூபாயாகக் குறைந்துள்ளது. இந்த தேய்மானம் முதன்மையாக அதிகரித்து வரும் வர்த்தக பற்றாக்குறையால் ஊக்குவிக்கப்படுது, இறக்குமதிகள், குறிப்பாக எண்ணெய், ஏற்றுமதியை விட மிக வேகமாக வளர்ந்து வருதுன்னு சுட்டிக்காட்டிருக்கு.

ஒரு பெருநகரத்தை மட்டுமே மையமாக வெச்சு இயங்குற மகாராஷ்டிரம், கர்நாடகம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களைப் போல இல்லாம, தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது மாநிலம் முழுதும் இருக்குற நகர்ப்புற மையங்கள்ல பரவலாக்கப்பட்டுருக்கு. கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர், திருச்சிராப்பள்ளி, சேலம் போன்ற நகரங்கள் தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்குவதோட நகர்ப்புற-ஊரக இடைவெளிகளைக் குறைக்கவும் உதவுவதா பொருளாதார ஆய்வறிக்கை சொல்லுது. இந்தியாவோட நிலப்பரப்புல தமிழ்நாடு 4% தான். இந்திய மக்கள் தொகையில் தமிழ் நாட்டினர் 6% தான். ஆனாலும் கூட 2023-24ல தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில தமிழ்நாடு 9.21% பங்களிச்சுருக்கு. இப்போதைய விலையில் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) 2023-24 ஆம் ஆண்டிற்கு 27.22 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுருக்கு. உண்மையான பொருளாதார வளர்ச்சி 8.23%ஆக  மதிப்பிடப்பட்டுருக்கு. 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுருக்குன்னும் பொருளாதார ஆய்வறிக்கை சொல்லுது. இந்த 1 டிரில்லியன் டாலர் இலக்குல தான் பிரச்சினையே வருது. முற்போக்கான சமூகநலக் கொள்கைகளால தமிழ்நாடு மேம்பட்ட பொருளாதார வளர்ச்சிப்பாதையில இருப்பதாக அறிக்கைல சொல்லப்பட்டுருக்கு. முற்போக்கான சமூகநல அரசின் இலக்கு எப்படிப்பட்டதா இருக்கனும்? வறுமையை நீக்குவதாக இருக்கனும், வேலைவாய்ப்பின்மையை நீக்குவதாக இருக்கனும், சாதிய அடிப்படையில காணப்படுற பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதாக இருக்கனும். உழைக்கும் மக்களோட சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்வதா இருக்கனும், விவசாயிகளோட வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதா இருக்கனும். ஆனா இதைப் பத்தியெல்லாம் கவலைப்படாம பாஜக அரசின் புதிய தாராளமய 5 டிரில்லியன் இலக்குப் பாதையிலயே சுத்திவரும் இந்த 1 டிரில்லியன் இலக்கு மக்களுக்கு உதவாது.

(தொடரும்)

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW