சிறுகும்பலாட்சியினர் (Oligarchs)   நமது புதுமக் கால அரசர்கள்!

25 Mar 2025

பெர்னி சாண்டர்ஸ் உரையின் மொழிபெயர்ப்பு

எலான் மஸ்க்கிற்கு நன்றி சொல்லும் வழக்கம் எனக்கு இல்லை, ஆனால், நாம் பல ஆண்டுகளாக வலியுறுத்திவரும் ஓர் உண்மையை அவர் மிகத்திறமையாக விளக்கப்படுத்தியிருக்கிறார் என்பதை நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஒரு சிறுகும்பலாட்சியின் கீழ் உள்ள சமூகத்தில் நாம் வாழ்கிறோம். அதில் பில்லியனர்கள் நமது அரசியலையும் ஊடகங்களின் வழியாக நாம் பெறும் தகவல்களையும் மட்டும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கவில்லை, மாறாக நமது அரசாங்கத்தையும் ;பொருளியல் வாழ்வையும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற மெய்நடப்பை நாம் இத்தனை ஆண்டுகாலமாக சொல்லிவந்தோம்.  முன்னெப்போதையும்விட இன்று  இது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

திரு. மஸ்க் சட்டவிரோதமாகவும், அரசியலமைப்புக்கு முரணாகவும் அரசாங்க அமைப்புகளை சிதைத்து வருவது பற்றி கடந்த சில வாரங்களாக ஊடகங்கள் கவனம் குவித்து இருக்கும் நிலையில், ஊடகங்களும் பெரும்பாலான அரசியல்வாதிகளும் கேட்கத் தயங்கும் ஒரு கேள்வியை கேட்க இது சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன்.

அவரும் மற்ற பல பில்லியனர்களும் உண்மையில் எதிர்பார்ப்பது என்ன? அவர்களின் இறுதி குறிக்கோள் என்ன? என் கணிப்பில், மஸ்கும் அவரைச் சார்ந்தவர்களும் தீவிரமாக முனைவது மாறுபட்டதும் அல்ல, சிக்கலானதும் அல்ல, புதியதும்அல்ல. வரலாறு முழுவதும் ஆளும் வர்க்கங்கள் விரும்புவது இதை தான். இது தங்களுடைய  உரிமை என்று எப்போதும் நம்பி வந்துள்ளார்கள்.

மேலும் அதிகாரம், மேலும் கட்டுப்பாடு, மேலும் செல்வம்.

அவர்கள் சாதாரண மக்களை, அதாவது உங்களை, மற்றும் சனநாயகத்தை தங்களுடைய வழியில் குறுக்கே வருவதை விரும்புவதில்லை.     அவர்கள் அனைத்தையும் கைப்பற்ற விரும்புகிறார்கள். எலான்மஸ்க் மற்றும் அவருடன் உள்ள சக சிறுகும்பலாட்சியினர் அரசாங்கத்தையும் சட்டங்களையும் தங்களுடைய நலன்களுக்கு இடையூறாகப் பார்க்கின்றனர், அவர்களுடைய உரிமையெனக் கருதும் விசயங்களுக்கு தடையாகப் பார்க்கின்றனர்.

1770 களுக்கு முன்பு, புரட்சிக்கு முந்தைய அமெரிக்காவில், ஆளும்வர்க்கம்  ‘அரசர்களின் தெய்வீக உரிமைகள்’ என்ற  கோட்பாட்டின் மூலம் ஆட்சி செய்தது. இங்கிலாந்து மன்னன் கடவுளின் பிரதிநிதி என்றும், சாதாரண, மரணிக்கக் கூடிய குடிமக்கள் அவனை கேள்வி கேட்கக் கூடாது என்றும் நம்பப்பட்டது. புதுமக் காலத்தில், அரசர்களின் தெய்வீக உரிமைகள் என்பது நம்மிடையே நீடிக்காமல் போய்விட்டது..

இந்த சிறுகும்பலாட்சியினர் இன்று நம்மிடம் ஒரு கருத்தியலைப் பரப்புகின்றனர். அதாவது,தங்களை தாங்களே உருவாக்கிக் கொண்ட, மிகப் பெரிய செல்வந்தர்களாகவும் மற்றும் புதுமையான புரட்சிகர தொழில் நுட்பங்களின் உரிமையாளர்களாகவும் இருக்கும் அவர்களுக்கு  ஆட்சி செய்ய முழுமையான உரிமை உள்ளது என்று அந்த கருத்தியல் சொல்கிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த புதுமக் கால சிறுகும்பலாட்சியினர் நமது கால அரசர்களாக உருவாகியுள்ளனர். அவர்களிடம் இருப்பது வெறும் அதிகாரம்  மட்டுமல்ல, அளவற்ற செல்வமும்கூட.

இன்று, திரு. மஸ்க்கின் சொத்து மதிப்பு $402 பில்லியன் டாலர்கள். ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 252 பில்லியன் டாலர்கள். பெசோஸின் சொத்து மதிப்பு 249 பில்லியன் டாலர்கள்.

மொத்தமாக 900 பில்லியன் டாலர்களுக்கு மேல் சொத்துக்களைக் குவித்து வைத்திருக்கும் இந்த மூன்று நபர்கள், அமெரிக்கச் சமூகத்தின் கீழ் பாதியில் உள்ள மக்களின் மொத்த சொத்துக்களைவிட அதிக செல்வத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். வியப்பளிக்காத வகையில், ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, அவர்களின் செல்வம் பலமடங்கு பெருகியுள்ளது. மஸ்கின் சொத்து மதிப்பு மட்டும் 138 பில்லியன் டாலர்கள் உயர்ந்துள்ளது. ஜுக்கர்பெர்க் சொத்து மதிப்பு 49 பில்லியன் டாலர்கள் உயர்ந்துள்ளது. பெசோஸின் சொத்து மதிப்பு 28 பில்லியன் டாலர்கள் உயர்ந்துள்ளது.  இவையாவும் தேர்தல் நாளிலிருந்து ஏற்பட்டுள்ளது.

பெரும் பணக்காரர்கள் மென்மேலும் பணக்காரர்களாக ஆகிக் கொண்டிருக்கும் போது 60 சதவீத அமெரிக்கர்கள் மாத வருமானத்தைக் கொண்டு கைக்கும் வாய்க்கும் என வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.  85 மில்லியன் மக்கள் மருத்துவ காப்பீடு இல்லாமலோ அல்லது போதுமான அளவுக்கு மருத்துவ காப்பீடு இல்லாமலோ தவிக்கின்றனர். 25 சதவீத முதியவர்கள் ஆண்டுக்கு 15,000 டாலர் அல்லது அதற்கும் குறைவான வருமானத்தில் வாழ்ந்துவருகின்றனர். 8 இலட்சம் பேர் வீடற்றவர்களாக உள்ளனர். மேலும், உலகில் உள்ள பெரும்பாலான வளர்ந்த நாடுகளைவிட மிக அதிகமான குழந்தை வறுமைவிகிதம் நம்மிடம் உள்ளது.

இந்த சிறுகும்பலாட்சியினர் உழைக்கும் மக்களின் நலன் பற்றி ஒரு கணமாவது சிந்திப்பார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா?  என்னை நம்புங்கள், அவர்கள் உழைக்கும் மக்கள் குறித்து கவலைப்படமாட்டார்கள்.

அமெரிக்க அரசு நிதி ஒதுக்கும் பட்டியில் இருந்து US-AID (தொண்டு நிறுவனம்) ஐ நீக்குவது என்று மஸ்க் எடுத்த முடிவின் பொருள் – உலகில் ஏழ்மை நிலையில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் பட்டினிக் கிடக்கப் போகிறார்கள் அல்லது தடுக்கக்கூடிய நோய்களால் இறக்கப் போகிறார்கள் என்பதாகும். ஆனால், இது வெளிநாடுகளில் மட்டும் நடக்கப் போவதில்லை.

அமெரிக்காவிற்குள்ளும் அவர்கள் விரைவில் மருத்துவ சேவைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து , குடியிருப்பு திட்டங்கள் மற்றும் கல்வித் திட்டங்கள் போன்ற நாட்டின் விளிம்புநிலை மக்களைப் பாதுகாக்கும் அனைத்து திட்டங்கள் மீதும் கைவைக்கப் போகிறார்கள். அப்போதுதான், அவர்களது காங்கிரசு (தேர்தெடுக்கப்பட்ட சபை) அவர்களுக்கும் அவர்களது  சக பில்லியனர்களுக்கும் மிகப் பெரிய வரிச்சலுகைகளை வழங்க முடியும்.

புதுமக் கால அரசர்களாக தமக்கு ஆட்சி செய்யும் முழுஉரிமை இருக்கிறது என்று அவர்கள் நம்புபவர்கள், தங்கள் சொந்த நலனை பாதுகாத்துக் கொள்ள உழைக்கும் மக்களின் நலன்களை சிறிதொரு தயக்கமும் இல்லாமல் பலிகொடுக்க தயாராக இருப்பவர்கள்.

மேலும், நம்மை சாவை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் தங்களுடைய பெரும் ஊடகங்களைப் பயன்படுத்தி தங்கள் கொள்கைகளின் தாக்கத்திலிருந்து நம்முடைய கவனத்தைத் திசைதிருப்புவர்.

மஸ்க் ட்விட்டரை வைத்திருக்கிறார். ஜுக்கர்பெர்க் மெட்டா நிறுவனத்தை வைத்திருக்கிறார், அதில் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை அடங்கும். மேலும் பெசோஸ் வாசிங்டன் போஸ்ட் மற்றும் ட்விட்ச் ஆகியவற்றை வைத்திருக்கிறார்.

மேலும், இந்த சிறுகும்பலாட்சியினரும் அவர்களின் கூட்டாளிகளும் இருபெரும் அரசியல் கட்சிகளிலும் உள்ள அரசியல்வாதிகளை விலைக்கு வாங்க பெருமளவு பணத்தைச் செலவிட்டுக் கொண்டே இருப்பார்கள்.

சுருக்கமாகசொன்னால், இந்த சிறுகும்பலாட்சியினர் அவர்களின் அளப்பரிய வளங்களைக் கொண்டு, இந்த நாட்டின் உழைக்கும் மக்களுக்கு எதிராக ஓர் போரை நடத்துக் கொண்டிருக்கிறார்கள், மேலும் அவர்கள் அந்த போரில் வெல்ல உறுதியாக உள்ளனர்.

இப்போது, நான் உங்களிடம் விளையாட்டாக சொல்லவில்லை.  இந்த நாடு இப்போது சந்திக்கும் சிக்கல்கள் மிகவும் தீவிரமானவை. பொருளாதாரம் திட்டமிட்டு சீர்குலைக்கப்பட்டுள்ளது. நமது தேர்தல் நிதிமுறை ஊழல்மயமாகி உள்ளது, மேலும் நமது பூமிக்கு பேராபத்தாக இருக்கும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த நாம் போராடி வருகிறோம், இது போன்ற பற்பல முக்கிய பிரச்சனைகள் உள்ளன.

எனினும், நான் உறுதியாக அறிந்த விஷயம் இதுதான்.

இந்த நாட்டின் ஆளும்வர்க்கத்தின் பேரச்சம் யாதெனில் கறுப்பரும் வெள்ளையரும் இலத்தீன்அமெரிக்கரும் நகரவாசிகளும் கிராமவாசிகளும் ஓரினச்சேர்க்கையாளரும் மாற்றுபாலினத்தவரும் இளைஞரும் முதியோரும் என அமெரிக்கர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பெரும்பணக்கார்களை மட்டும் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கு மாறாக நமது நாட்டின் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அரசாங்கத்தை கோருவர் என்பதே ஆகும்.

இந்த சிறுகும்பலாட்சியினர் நாம் இனியும் இனம், மதம், பாலியல் நோக்குநிலை, பூர்வீகம் ஆகியவற்றின் பெயரால் நம்மைப் பிளவுபடுத்த அனுமதிக்கமாட்டோம்,.    நாம் இணைந்து நின்று அவர்களை நேருக்கு நேர் துணிவைப் பெறுவோம் என்ற கலக்கத்தில் உள்ளனர்

இந்தப் போராட்டம் இலகுவானதாக இருக்குமா?  நிச்சயமாக இல்லை.

இதற்கு ஒரு காரணம் என்னவென்றால், இந்த நாட்டின் ஆளும்வர்க்கத்தினர், தங்களுக்கு முற்றதிகாரம் இருக்கிறது என்பதை தொடர்ந்து உங்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் அரசாங்கத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள், ஊடகத்தை வைத்திருக்கிறார்கள். 

எங்களை எதிர்த்து களம் இறங்க நினைக்கிறீர்களா? இறங்குங்கள் பார்த்துக்கொள்ளலாம் என்று ஆணவத்துடன் கூறுவார்கள். உங்களால் எதுவும் செய்யமுடியாது என்று அவர்கள் சொல்வார்கள்.

எனினும், இந்த மிகவும் நெருக்கடியான தருணத்தில் நமது பணி என்னவென்றால், பல நூறு ஆண்டுகளாக கோடிக்கணக்கான மக்கள் , சனநாயகமான, நீதியான,  மனிதநேயமிக்க சமூகத்தைப் படைக்க மேற்கொண்ட வீரஞ்செறிந்த போராட்டங்களையும் ஈகங்களையும் மனதில் நிறுத்துவதே ஆகும்.

சற்று சிந்தித்துப் பாருங்கள்.!

கடந்த பல நூற்றாண்டுகளில் எத்தனை எத்தனை மக்கள் எதிர்த்து நின்று போராடியிருக்கிறார்கள்! அவர்கள் போராடிக் கொண்டிருந்தபோது, அவர்களின் சமகாலத்தவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

”ஏய், இங்கிலாந்து மன்னரைத் தூக்கியெறிந்துவிட்டு ஒரு புதிய தேசத்தையும்  சுயாட்சியையும் உருவாக்க நினைக்கிறீர்களா? மறந்துவிடுங்கள். அது சாத்தியமில்லாதது” என்றார்கள்.  

‘அனைவருக்கும் வாக்குரிமை, அதாவது அனைத்து மக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வேண்டுமா? அதுசாத்தியமில்லை. நடக்காது.’ என்றார்கள்.

 ‘அடிமைத்தனத்தையும், இனப் பாகுபாட்டையும் ஒழிக்க வேண்டுமா? அதுசாத்தியமில்லை’ என்றார்கள்.

‘தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை வழங்கி, குழந்தை தொழிலாளர்முறையை ஒழிக்க வேண்டுமா? அதுநடக்காது, சாத்தியமில்லை’ என்றார்கள்.

‘பெண்களுக்கு அவர்களின் உடல் மீது உரிமை வழங்க  வேண்டும் என்று நினைக்கிறீர்களா? யாரை ஏமாற்றுகிறீர்கள்? சாத்தியமில்லை. நடக்காது. என்றார்கள்.

 ‘சமூக பாதுகாப்பு, மருத்துவப் பாதுகாப்பு, மருத்துவக் காப்பீடு, குறைந்த பட்ச ஊதியம், தூய்மையான காற்று மற்றும் தரமான நீர் ஆகியவற்றைக் கொடுக்கும் வகையில் சட்டங்கள் இயற்ற வேண்டுமா? சாத்தியமில்லை என்றார்கள்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நெல்சன் மண்டேலா நமக்குச் சொன்னதுபோல, “எதையும் செய்து காட்டும்வரை அது சாத்தியமற்றது என்பார்கள்”.

இந்த கடினமான காலகட்டத்தில், சோர்ந்து போவது நமக்கு ஒரு தெரிவு அல்ல.

நாம் இயலும் வழிகளில் எல்லாம் எதிர்த்துப் போராட வேண்டும். அரசியல் செயல்வழியில் நாம் ஈடுபட வேண்டும், தேர்தலில்போட்டியிடவேண்டும், நமது வட்டார, மாநில, பெடரல் சட்டமன்ற உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். இந்த தேசத்தில் உள்ள உழைக்கும் மக்களின் நலனுக்காகப் போராடும் வேட்பாளர்களுக்கு நிதி கொடுங்கள். நாம் தகவல் பரிமாற்றத்திற்கும், தொடர்புகொள்வதற்கும் புதிய தளங்களை உருவாக்க வேண்டும். 

நாம் அரசியல் ரீதியாக மட்டும் பங்கேற்பதோடு நின்றுவிடக் கூடாது, உள்ளூரளவில் சமூகத்தை கட்டமைக்க முன்வர வேண்டும்.  நம்மால் இயன்ற அனைத்தையும் நாம் செய்தாக வேண்டும்.

நிச்சயமாக, நான் எனது பங்களிப்பாக பெல்ட்வேக்கு ( Beltway) உள்ளும் (அமெரிக்க மாகாணம்), நாடு முழுவதும் பயணம் செய்தும் உழைக்கும் குடும்பங்களுக்காக குரல் எழுப்பவும் சிறுகும்பலாட்சியை எதிர்த்துப் போராடவும் செய்வேன்.

வரவிருக்கும் நாட்களில்,  வாரங்களில் , மாதங்களில், இந்தப் போராட்டத்தில் நீங்களும் என்னுடன் தோளோடு தோள் நிற்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

நம்மால் வெற்றி பெற முடியும்!!!

நாம் வெற்றி பெறுவோம்!!

நாம் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.!!!

மிக்க நன்றி.

  • பெர்னி சாண்டர்ஸ் ( அமெரிக்காவில் மேலவை உறுப்பினர், சனநாயக சோசலிஸ்ட்) பிப்ரவரி 11 அன்று தமது வலையொளியில் ஆற்றிய உரை.
  • மொழிபெயர்ப்பு – லோகேஷ்

பெர்னி சேண்டர்ஸ்ஸின் ஆங்கில உரை கீழே இணைக்கப்பட்டுள்ளது

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW