அணுமின் விபத்து இழப்பீடு – சுப. உதயகுமாரன்

04 Mar 2025

ஒரு கணவனும், மனைவியும் நீண்டநாட்களாகத் திட்டமிட்டு குடும்பத்துக்குத் தேவையான ஒரு சலவை இயந்திரத்தை உள்ளூர் கடை ஒன்றில் வாங்கி வீட்டில் நிறுவுகின்றனர். அந்த வீட்டில் துணிகள் துவைப்பது மனைவியின் கடமையாக இருக்கிறது. ஒருநாள் துணி துவைத்துக் கொண்டிருக்கும்போது, எதிர்பாராதவிதமாக அப்பெண்மணியின் ஆட்காட்டிவிரல் அந்த இயந்திரத்தில் சிக்கிச் சிதைந்து விடுகிறது. சலவை இயந்திரத்தில் ஒரு பெரும் குறை இருக்கிறது என்பதைக் கண்டுணர்ந்த தம்பதியர் கடைக்குச் சென்று முறையிடுகிறார்கள்.

கடைக்காரர் வியாபார ஒப்பந்தத்தின் நகலை எடுத்துக் காண்பிக்கிறார். அதன் அடிப்பாகத்தில் இழப்பீடு பற்றிய முக்கியமான தகவல் சிறு எழுத்தில்  அச்சடிக்கப்பட்டிருக்கிறது: “இந்த இயந்திரத்தில் விபத்துக்கள் ஏதும் நிகழ்ந்தால், அதற்கு உற்பத்தியாளர் இழப்பீடு (manufacturer liability) அல்லது விநியோகஸ்தர் இழப்பீடு (supplier liability) எதுவும் தரப்பட மாட்டாது. யார் இந்த இயந்திரத்தை வாங்கி, பயன்படுத்துகிறாரோ அவரே விபத்துக்கு முழுப் பொறுப்பாவார் (operator liability).” இந்த உறுப்பின்படி குடும்பத் தலைவரான கணவர்தான் விபத்துக்கு முழுப் பொறுப்பேற்று இழப்பீடு வழங்க வேண்டும். எனவே கணவர் குடும்ப வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் ஒரு லட்சத்தை எடுத்து மனைவிக்கு இழப்பீடு வழங்குகிறார். கணவனும், ஒரு விரல் இல்லாத மனைவியும் “தின்று விளையாடி இன்புற்றிருந்து” நீண்டகாலம் வாழ்கிறார்கள். கதை நன்றாக இருக்கிறதா?

கணவன் இந்திய அரசு என்றும், மனைவி இந்திய மக்கள் என்றும், சலவை இயந்திரம் அணுஉலை என்றும், விநியோகஸ்தர் அமெரிக்கா என்றும், இயந்திரத்தின் உற்பத்தியாளர் ஜெனரல் எலக்ட்ரிக் அல்லது வெஸ்டிங்ஹவுஸ் போன்ற ஒரு கார்ப்பரேட் நிறுவனம் என்றும் வைத்துக்கொண்டு, கதையை மீண்டும் படியுங்கள். கதை இன்னும் சுவாரசியமாக இருக்கும்.

கடந்த அக்டோபர் 10, 2008 அன்று இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானப் பிறகு, ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் மாவட்டம் கொவாடா எனுமிடத்திலும், குஜராத் மாநிலத்தில் பாவ்நகர் மாவட்டம் மித்திவிர்தி எனுமிடத்திலும் அமெரிக்கக் கம்பெனிகள் அணுஉலைகள் நிறுவ இடங்களை ஒதுக்கினார்கள். ஆனால் இந்திய அரசு இழப்பீடுச் சட்டம்   ஒன்றை நிறைவேற்றாமல் தாமதித்தது அமெரிக்க நிறுவனங்கள் கடைதிறக்கத் தடையாக இருந்தது. எனவே அணுசக்தி இழப்பீடுச் சட்டம் ஒன்றை நிறைவேற்ற அமெரிக்கர்கள் ஏவிக்கொண்டேயிருந்தனர்.

அந்த சட்ட வரைவை தயாரித்த மன்மோகன் சிங் அரசு சனநாயக நெறிமுறைகள் அனைத்தையும் புறந்தள்ளி, அதனை இந்திய மக்களிடமிருந்தும், மக்கள் பிரதிநிதிகளிடமிருந்தும், பத்திரிக்கையாளர்களிடமிருந்தும் மறைத்தே வைத்திருந்தது. அப்போதே சமூகச் செயல்பாட்டாளர்களுக்கு “ஒன்றிய அரசின் அப்பன் குதிருக்குள் இல்லை” என்பது தெளிவாகப் புரிந்தது. சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையிலேயே பலத்த எதிர்ப்புகள் கிளம்பியதால், வாக்கெடுப்பு நடத்தவேண்டிவரும் என்பதாலும், அப்படி வாக்கெடுப்பு நடத்தினால் முதலுக்கே மோசமாகி ஆட்சிக் கவிழலாம் என்பதாலும், அரசு அந்த சட்ட முன்வரைவை திரும்பப் பெற்றுக்கொண்டது. அதுகாறும் தூங்கிக்கொண்டிருந்த எதிர்க்கட்சிகள் திடீரென விழித்துக்கொண்டு அரசின் கழுத்தை மேலும் இறுக்கிப் பிடித்தன.

பின்னர் 2010 மே 7-ஆம் தேதி மன்மோகன் சிங் அரசு அவசரகதியாக அணுசக்தி இழப்பீடுச் சட்ட முன்வரைவை (Civil Nuclear Liability Bill) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. ஒரு வழியாக அணுசக்தி இழப்பீடுச் சட்டம் செப்டம்பர் 21, 2010 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு சட்டமானது. இந்த அணுமின் விபத்து இழப்பீடுச் சட்டம் (The Civil Liability for Nuclear Damage Act, 2010) ஏழு பகுதிகளையும், 49 உறுப்புக்களையும் கொண்டது. இதன் குறிக்கோள் அணுமின் விபத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவது, இழப்பீடு கோரல்களுக்கு இயக்குனரை நியமிப்பது, மற்றும் அணுமின் இழப்பீடு கோரல்களுக்கான இயக்ககம் ஒன்றைத் தோற்றுவிப்பது போன்றவையாகும்.

இந்த சட்டத்தில் காணப்படும் பல பிரச்சனைகளுள் ஒன்று தனியார் நிறுவனங்கள் வெறும் இலாப நோக்கோடு அணுமின்சாரத் தயாரிப்பில் நுழைய வழிவகுப்பதுதான். இதுவரை இந்திய அணுமின் நிலையங்கள் அனைத்தும் இந்திய அணுமின் கழகம் (என்.பி.சி.ஐ.எல்) மூலமே நிறுவப்பட்டும், இயக்கப்பட்டும் வருகின்றன. இதற்குள்ளேயே எத்தனையோ பிரச்சனைகள் புரையோடிக் கொண்டிருக்கும் நிலையில், தனியாரையும் உள்ளே விடுவது உசிதமானதா என்பது விவாதத்திற்குரியது.

மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் இந்திய அணுமின் கழகமே எந்தத் தகவலையும் மக்களுக்குத் தராமல் தான்தோன்றித்தனமாக இயங்கும்போது, இலாபம் ஒன்றையே ஒரே குறிக்கோளாகக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள் என்னவெல்லாம் செய்யும், எப்படியெல்லாம் இயங்கும் என்பது வெள்ளிடைமலை. அணுமின் நிலையம் போன்ற மிகுந்த ஆபத்தான தொழிற்சாலைகளை தனியாருக்குத் தாரைவார்ப்பது பேரிடருக்கு வழிவகுக்கும். இந்தியாவில் தன்னாட்சித் திறனோடு இயங்கும் அணுசக்திக் கட்டுப்பாட்டு நிறுவனம் ஓன்று இல்லாத நிலையில், இது இன்னும் ஆபத்தாகவே அமையும்.

இந்த சட்டம் அணுமின் விபத்து இழப்பீட்டுக்கு உச்சவரம்பை (300 மில்லியன் SDR) நிர்ணயிக்கிறது. இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது, கூடாதது. ஒரு தீவிபத்து இழப்பீடு நிர்ணயம் என்றால், என்னென்னப் பொருட்கள் எரிந்து சாம்பலாகும், எவ்வளவு இழப்பு வரும், எப்படி உச்சவரம்பை நிர்ணயிக்கலாம் என்பவற்றை ஓரளவு முடிவு செய்யலாம். ஆனால் அணுமின் விபத்து எண்ணற்ற வழிகளில், எத்தனையோ தலைமுறைகளை, எப்படியெல்லாமோ பாதிக்கின்ற விடயம். இதற்கு எப்படி உச்சவரம்பை நிர்ணயிக்க முடியும்?

பத்து மெகாவாட் அல்லது அதற்கும் அதிகமாக மின் உற்பத்தி செய்யும் அணுமின் நிறுவனத்துக்கு உச்சவரம்பு ரூ.1,500 கோடி என்று இச்சட்டத்தில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க டாலரில் கணக்கிட்டால் இது சற்றொப்ப 180 மில்லியன் டாலராக இருக்கும். கடந்த 1986 ஏப்ரல் மாதம் நடந்த செர்னோபில் அணுமின் நிலைய விபத்தின் காரணமாக அண்டை நாடான பெலரூஸ் 1991 முதல் 2003 வரையிலான 13 ஆண்டு காலக்கட்டத்துக்குள் மட்டுமே 13,000 மில்லியன் டாலர் தொகையைச் செலவு செய்திருக்கிறது. இதிலிருந்து 180 மில்லியன் டாலர் இழப்பீடு ஒரு கேலிக்கூத்து என்பது தெளிவாக விளங்கும்.

அதேபோல, எரிகோல்கள் மறுசுழற்சி ஆலையில் விபத்து நடந்தால் இழப்பீடு அதிகபட்சமாக ரூ. 300 கோடியாகவும், பத்து மெகாவாட் மின்சாரத்துக்கும் குறைவாக தயாரிக்கும் ஆய்வு அணுஉலைகளில் விபத்து நிகழ்ந்தால் இழப்பீடு ரூ. 100 கோடியாகவும் இருக்கும் என இந்த சட்டம் வரையறுக்கிறது. இவையனைத்துமே யானைப் பசிக்கு சோளப் பொரி கொடுத்தக் கதை போலத்தான்.

இயக்குபவர் இழப்பீட்டை முக்கியமான நோக்கமாகக் கொள்ளும் இந்த சட்டம், உபகரணங்கள் வழங்குபவரின் (அல்லது அவரின் ஊழியரின்) தரமற்ற அல்லது குறைபாடு கொண்ட உபகரணங்கள் மற்றும் பொருட்களை வழங்குவது போன்ற செயல்பாடுகளால் விபத்து நேரிட்டால், அவர்களை உள்ளிழுத்துப் பொறுப்பாக்கிட உறுப்பு 17(b)-ன் மூலம் வழிவகை செய்கிறது. இதுதான் இப்போது அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது.

இலாபம் ஒன்றை மட்டுமே கருத்திற்கொள்ளும் ஏகாதிபத்திய மனப்பாங்கு கொண்ட அமெரிக்கக் கார்ப்பரேட்டுகளுக்கு எந்தவிதமானத் தங்குதடையும் ஏற்புடையதல்ல. பிற நாடுகளில் அனுபவிக்கும் கட்டற்றச் சுதந்திரத்தை இந்தியாவிலும் அனுபவிக்கத் துடிக்கிறார்கள் அவர்கள். இந்தியா–அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருபது ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், அவர்களால் ஓர் அணுஉலையைக்கூட இந்தியாவிற்கு விற்க முடியவில்லை.

கடந்த 2015-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுக்கு வந்தபோது, அமெரிக்காவை மகிழ்விப்பதற்காக, விநியோகஸ்தரை உள்ளிழுத்துப் பொறுப்பாக்கும்  உறுப்பு 17(b) பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டாமென்றும், விநியோகஸ்தருக்கும் இந்திய அணுமின் கழகத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் உரிய விதிகளை ஏற்படுத்தி அதனைக் கடந்துச் சென்று விடலாமென்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இழப்பீடுச் சட்டத்தில் போகிறப்போக்கில் குறிப்பிடப்படும் உள்ளிழுத்துப் பொறுப்பாக்கும் உறுப்பு 17(b) கூட அமெரிக்கா, பிரான்சு, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு ஏற்புடையதாக இல்லை. மொத்தப் பொறுப்பையும் அணுஉலைகளை இயக்குபவர் கைகளில் ஒப்படைத்துவிட்டு, முற்றிலுமாக ஒதுங்கிக்கொள்ளவே அவர்கள் விரும்புகின்றனர். இயக்குபவர் மட்டுமே இழப்பீடு வழங்குவதென்றால் இன்றைய நிலையில் இந்தியாவில் இந்திய அணுமின் கழகம் (என்.பி.சி.ஐ.எல்) மட்டுமே அணுமின் நிலையங்களை இயக்குகிறது என்பதை நாம் நினைவிற் கொள்ள வேண்டும். இது மக்கள் வரிப்பணத்தில் இயக்கப்படும் ஒரு பொதுத்துறை நிறுவனம் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆக மொத்தத்தில், இந்திய அரசு நம்முடையப் பணத்தையே நமக்கு இழப்பீடாக வழங்கிக் கொண்டிருக்க, வெளிநாட்டுக் கம்பெனிகள் கையில் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு ‘ஜுட்’ விடலாமென்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஏற்பாடு.

மேலும் இழப்பீடு வழங்கப்படவேண்டிய காலக்கட்டத்தை சொத்துக்கள் இழப்புக்கு 10 வருடங்கள் என்றும், தனிப்பட்டக் காயங்களுக்கு 20 வருடங்கள் என்றும் இந்த சட்டம் குறிப்பிடுவது நகைப்புக்குரியது. அணுமின் நிலைய விபத்து ஆண்டாண்டு காலமாய் அனைவரையும் அவதிக்குள்ளாக்கும் போது, இம்மாதிரியான வருடக் கணக்குகளும், உச்சவரம்புகளும் பத்தாம்பசலித்தனமானவையாகவே அமைகின்றன.

ஏராளமான ஓட்டைகளை உள்ளடக்கியச் சட்டத்தை நிறைவேற்றி வாஷிங்டன், பாரிஸ், மாஸ்கோ எஜமானர்களை மன்மோகன் சிங் மகிழ்வித்தார் என்றால், கடந்த பதினைந்து ஆண்டுகளாக பரணில் போடப்பட்டிருந்த சட்டத்தை நரேந்திர மோடி அரசு இப்போது கையிலெடுத்து, அதனை விநியோகஸ்தர்களுக்குச் சாதமாக மாற்றியமைக்க முயற்சிக்கிறது. இதனை நாம் அனைவரும் கடுமையாக எதிர்த்தாக வேண்டும். இந்திய குடிமக்களின் பாதுகாப்புக்கு, நல்வாழ்வுக்கு முன்னுரிமை வழங்க முன்வராத எந்த இந்திய அரசையும், வெளிநாட்டையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது, கூடாது! இந்தியர்களின் உயிருக்கு விலை உண்டு என்பதை உரக்கச் சொல்வோம்!

  • சுப. உதயகுமாரன்,

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்.

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW