ஃபலஸ்தீன்: சண்டை நிறுத்தம் நிரந்தர தீர்வைத் தருமா? – ரியாஸ்

ஜனவரி மாதத்தின் இறுதி நாட்களில் ஃபலஸ்தீனின் காஸாவின் தெற்கு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக வடக்கு காஸாவை நோக்கி நடந்த காட்சியை கண்ட பெரும்பான்மை மக்களுக்கு சந்தோஷமும் நிம்மதியும் ஏற்பட்டன. பதினைந்து மாதங்களுக்கு முன் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதல், மிரட்டல், மற்றும் அவமானங்களுக்கு மத்தியில் வடக்கில் இருந்து தெற்கை நோக்கி நிச்சயமற்ற தன்மையுடனும் அச்சத்துடனும் அவர்கள் மேற்கொண்ட பயணத்திற்கு நேர் மாறான பயணமாக இது அமைந்திருந்தது. சிதிலமடைந்த கட்டிடங்களுக்கு மத்தியில் முற்றிலும் சேதமடைந்த சாலைகள் மீது பயணித்த போதும் அவர்களின் முகங்களில் சந்தோஷமும் உள்ளத்தில் நம்பிக்கையும் மேலோங்கி இருந்தன. நிலத்தை ஆக்கிரமிக்கும் இஸ்ரேலின் திட்டத்தை தங்களின் திடமான மன உறுதி மூலம் ஃபலஸ்தீன மக்கள் முறியடித்துள்ளனர்.
ஃபலஸ்தீன காஸாவின் மண் மற்றும் மக்கள் மீது பதினைந்து மாதங்களாக இஸ்ரேல் நடத்தி வந்த கொடூர தாக்குதல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கத்தார் நாட்டின் முயற்சியில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே மேற்கொள்ளப்பட்ட சண்டை நிறுத்தம் ஜனவரி 19 அன்று நடைமுறைக்கு வந்தது. ஏழு வாரங்கள் நீடிக்கும் சண்டை நிறுத்தத்தின் முதல் கட்டத்தில் காஸாவிற்கு மனிதாபினமான உதவிகள் வழங்கப்படும், இஸ்ரேலிய படைகள் படிப்படியாக பின் வாங்கப்படும், கைதிகள் பரிமாற்றம் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டம் சீராக முடிவடைந்தால் இரண்டாம் கட்டம் மார்ச் மாதம் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த அறிவிப்பை ஜனவரி 15 அன்று வெளியிட்டன. முதல் கட்டத்தில் ஹமாஸ் விடுதலை செய்யும் 33 கைதிகளுக்கு பகரமாகஇஸ்ரேலிய சிறைகளில் உள்ள 1900 ஃபலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்யும்.
இரண்டாவது கட்டத்தில் முழுமையான சண்டை நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு எஞ்சியுள்ள இஸ்ரேலிய கைதிகளும் அதற்கேற்ப ஃபலஸ்தீன கைதிகளும் விடுதலை செய்யப்படுவர். இஸ்ரேலிய படைகள் காஸாவில் இருந்து முழுமையாக வெளியேறும். மூன்றாவது கட்டத்தில் இறந்த இஸ்ரேலிய கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்படும், காஸாவின் மறுகட்டமைப்பு பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சண்டை நிறுத்தம் தொடர்பான விபரங்களை பேசுவதற்காக 13 மாதங்களை வீணடித்துவிட்டோம். 2023 டிசம்பர் மாதமே இது குறித்து பேச ஆரம்பித்து விட்டோம் என்று கத்தார் நாட்டின் பிரதமர் ஷேக் முகம்மது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாஸிம் அல் தானி கவலையுடன் தெரிவித்தார். அக்டோபர் 7, 2023 அன்று ஆக்கிரமிப்பு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய அதிரடி தாக்குதலில் 1200 இஸ்ரேலியர்கள் கொலை செய்யப்பட்டு 251 பேர் கைதிகளாக பிடிக்கப்;பட்டனர். கடந்த இருபது வருடங்களில் காஸாவின் மீது அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் இதனை ஒரு காரணமாக வைத்துக் கொண்டு தாக்குதலை தொடங்கியது.
வான் மற்றும் தரை மார்க்கமாக நடத்தப்பட்ட மனிதநேயமற்ற தாக்குதலில் ஏறத்தாழ ஐம்பதாயிரம் ஃபலஸ்தீன மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பான்மையினர் பெண்கள் மற்றும் குழந்தைகளாவர். ஒரு குடும்ப உறுப்பினரை இழக்காத ஒரு குடும்பம் கூட காஸாவில் இல்லை என்று கூறலாம். பல குடும்பங்கள் ஓர் உறுப்பினர் கூட இல்லாமல் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டுவிட்டன. இடிபாடுகளில் சிக்கிய உடல்கள் தற்போது மீட்கப்பட்டு வரும் நிலையில் கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,000 என்று கூறப்படுகிறது. இது தவிர, இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக மருத்துவ சேவைகள் பெற இயலாமல் மரணித்தவர்களின் எண்ணிக்கை தனியாக இருக்கிறது. இனப்படுகொலையில் ‘கொலை செய்யப்பட்டவர்கள்’ பட்டியலில் இவர்கள் இணைக்கப்படாமல் ‘இறந்தவர்கள்’ பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டனர்.
வீடுகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என காஸாவின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. ஏற்கெனவே ‘வாழ்வதற்கு தகுதியற்ற இடம்’ என்று ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட 360 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காஸா எண்பதாயிரம் டன் வெடிபொருட்களால் சிதைக்கப்பட்ட பிறகு எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.
‘ஹமாஸ் இயக்கத்தை அடியோடு அழிப்போம்’, ‘கைதிகளை நாங்களாகவே மீட்டெடுப்போம்’ என்று போர் முரசு கொட்டிய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிற்கு வடக்கு காஸாவை ஆக்கிரமிக்கும் திட்டமும் இருந்தது. ஆனால் பதினைந்து மாத தாக்குதலில் இதில் எதையும் இஸ்ரேல் சாதிக்கவில்லை. ஹமாஸ் அமைப்பினர் இழந்ததைவிட அதிகமான புதிய உறுப்பினர்கள் அதில் இணைந்து விட்டனர் என்று அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார். ‘காஸாவிற்குள் ஒரு ஈ நுழைந்தாலும் எங்கள் பார்வையில் இருந்து தப்ப முடியாது’ என்று நவீன தொழில்நுட்பத்தை மொத்த குத்தகைக்கு எடுத்துக் கொண்டது போல் பேசியவர்களால் இறுதிவரை கைதிகள் இருந்த இடத்தைக் கூட கண்டுபிடிக்க இயலவில்லை. ‘இஸ்ரேல் நடத்திய தாக்குதலில்தான் கைதிகளில் சிலர் கொல்லப்பட்டனரே அல்லாமல் அவர்களில் யாரையும் நாங்கள் கொல்லவில்லை’ என்றும் ஹமாஸ் அறிவித்தது.
சண்டை நிறுத்தத்தை தொடர்ந்து முதல் கட்டமாக கைதிகளை விடுவிப்பதற்காக காஸாவில் கூடிய மக்களுக்கு மத்தியில் புத்தம் புதிய சீருடைகளுடன் இஸ்ரேலிடமிருந்து கைப்பற்றிய இராணுவ வாகனங்களுடன் ஹமாஸ் அமைப்பின் இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாம் பிரிவினரை கண்ட போது பெஞ்சமின் நேதன்யாகுவின் நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பார்ப்பதற்கு சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.
முகத்தில் புன்னகையுடனும் கையில் பரிசுப் பொருட்களையும் பிணைக் காலத்தை வெற்றிகரமாக கடந்ததற்கான பாராட்டு சான்றிதழையும் வைத்துக் கொண்டு ஏதோ சுற்றுலாவில் இருந்து திரும்புவது போல் இஸ்ரேலிய கைதிகள் திரும்பியதை கண்ட உலகம் ஆச்சர்யம் கொண்டது. அதே சமயம் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட ஃபலஸ்தீனியர்கள் மெலிந்த தேகத்துடனும் சித்திரவதை தழும்புகளுடனும் திரும்பியதையும் உலகம் கண்டது. நாகரிகம் கற்றவர்கள் யார் என்பதை சர்வதேச சமூகம் இப்போது நன்றாக உணர்ந்திருக்கும்.
தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டாலும் ஹமாஸ் இயக்கத்தின் கட்டமைப்பு நிலைத்து நிற்பதுடன் அக்டோபர் 2023யை விட அவர்கள் தற்போது பலம் பெற்றுவிட்டார்களோ என்ற சந்தேகமும் சிலருக்கு ஏற்பட்டுள்ளது. இயக்க தலைவர் இஸ்மாயில் ஹனியா, துணைத் தலைவர் ஸலாஹ் அல் அரூரி, ஹனியாவிற்கு பின் தலைமை பதவிக்கு வந்த யஹ்யா சின்வர் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாமின் தலைவர் முகம்மது ழயீஃப், அதன் தெற்கு மற்றும் வடக்கு பகுதி கமாண்டர்கள் ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டதாக ஹமாஸ் தற்போது அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மிக முக்கியமான செய்தியை இஸ்ரேலுக்கும் ஏனைய நாடுகளுக்கும் ஹமாஸ் வழங்கியுள்ளது.
ஏற்கெனவே பதவியில் இருந்தவர்கள் கொலை செய்யப்பட்டுவிட்டாலும் தங்களின் செயல்பாடுகள் முடங்கவில்லை என்பதையும் புதிய தலைமை தங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறது என்பதையும் அவர்களுடன்தான் நீங்கள் சமாதான உடன்படிக்கை குறித்த பேச்வார்த்தைகளை நடத்தினீர்கள் என்ற செய்தியையும் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.
நிரந்தர தீர்விற்கான வழி
ஒட்டுமொத்த ஃபலஸ்தீனின் 78 சதவிகித நிலத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள போதும் இருநாட்டு தீர்விற்கு ஹமாஸ் உள்ளிட்ட ஃபலஸ்தீன அமைப்புகளும் பொதுமக்களும் தயாராகவே உள்ளனர். ஆனால் தனது ஆக்டோபஸ் கரங்களை தொடர்ந்து விரிக்க விரும்பும் இஸ்ரேல் இதனை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. அமெரிக்காவின் தடையற்ற ஆதரவு இஸ்ரேலின் அயோக்கியத்தனம் நீடித்திருப்பதற்கு முக்கிய காரணமாகும். ஜான் கென்னடி ஆட்சிக் காலத்தில் இருந்து முழுவதுமாக இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ள அமெரிக்கா இனியும் அதனை தொடர்வது முறையல்ல. ஆனால் தற்போதைய அதிபர் ட்ரம்ப் பிரச்சனையை இன்னும் சிக்கலாக்குவதில்தான் கவனமாக இருப்பது போல் தெரிகிறது.
பதவிக்கு வந்தவுடன், காஸாவின் மக்களை ஏற்றுக் கொள்வதற்கு ஜோர்டனும் எகிப்தும் முன் வர வேண்டும் என்று கூறியவர், நேதன்யாகுவின் அமெரிக்க பயணத்தின் போது அண்டை நாடுகளுக்கு காஸாவின் மக்களை அனுப்பிய பிறகு அப்பகுதியை அமெரிக்கா எடுத்துக் கொள்ள விரும்புவதாகவும் ‘உலகத்தின் மக்கள்’ அங்கு வசிப்பார்கள் என்றும் முட்டாள்தனமாக தெரிவித்துள்ளார். ‘காஸாவின் மக்கள் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்’ என்று ஹமாஸ் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளது. ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, சர்வதேச நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நேதன்யாகுதான் அமெரிக்காவிற்கு சென்ற முதல் வெளிநாட்டு தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயதங்களை விற்பதிலும் அமைதியை குலைப்பதிலும் மும்முரமானவரான ட்ரம்ப் ஓர் இன சுத்திகரிப்பிற்கான திட்டத்தை தொடங்கி விடுவாரோ என்ற அச்சத்தை அவரின் பேச்சு ஏற்படுத்தியுள்ளது.
ட்ரம்ப் போன்ற தலைவர்களின் பேச்சுகளும் போர் நிறுத்தத்திற்கு பின்னரும் காஸாவின் மீது சிறியளவிலும் மேற்கு கரையில் தொடர்ச்சியாகவும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களும் சமாதான உடன்படிக்கையை நொறுக்கி விடுமோ என்ற கவலையும் ஏற்படுகிறது. கைதிகள் அனைவரையும் திரும்பப் பெற்ற பின் தனது சுயரூபத்தை இஸ்ரேல் மீண்டும் வெளிப்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது.
ஃபலஸ்தீன விவகாரத்திற்கு நிரந்தரத் தீர்வு ஏற்படாதவரை இந்த அச்சமும் நிச்சயமற்ற தன்மையும் இருந்து கொண்டேதான் இருக்கும். பிரச்சனையின் அடி வேர்களை சரி செய்யாமல் நிரந்தர தீர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்க வாய்ப்பில்லை. 1948இல் இஸ்ரேல் என்ற நாடு திருட்டுத்தனமாக அமைக்கப்பட்டதற்கு முன்னரும் பின்னரும் ஏறத்தாழ ஏழரை இலட்சம் ஃபலஸ்தீனியர்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டனர். இஸ்ரேல் என்று அறியப்பட்ட பகுதிகளில் சிலர் குடியமர்ந்தாலும்; பெரும்பான்மையினர் தங்கள் சொந்த நிலத்திற்கு திரும்பவில்லை. 1967 ஆறு நாள் யுத்தத்தின் போதும் ஃபலஸ்தீனியர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆனால் இவர்களை அகதிகள் என்றோ ஃபலஸ்தீனியர்கள் என்றோ அங்கீகரிப்பதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும் இஸ்ரேல் தயாராக இல்லை.
அகதிகள் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையும் நீதமாக நடந்து கொள்ளவில்லை. வழக்கமாக அகதிகள் விவகாரத்தை கண்காணிக்கும் சர்வதேச அகதிகள் அமைப்பை (International Refugee Organization – IRO) பயன்படுத்தாமல் ஃபலஸ்தீன அகதிகள் பிரச்சனையை தீர்ப்பதற்காக புதிய அமைப்பை உருவாக்கியது. இஸ்ரேல் மற்றும் வெளிநாடுகளில் செயல்பட்ட சியோனிச அமைப்புகளுக்கு இதில் முக்கிய பங்கு இருக்கிறது. அகதிகள் தங்கள் சொந்த நிலத்திற்கு திரும்பச் செல்வதையே சர்வதேச அகதிகள் அமைப்பு முதல் தீர்வாக முன்வைக்கும் என்பதால் அதனை ஃபலஸ்தீன் விவகாரத்திற்குள் நுழைய விடாமல் பார்த்துக் கொண்டனர் இரண்டாம் உலகப் போருக்கு பின் ஐரோப்பாவில் இருந்த யூத அகதிகளுக்கு இந்த அமைப்புதான் முழுமையாக துணை நின்றது. ஆனால் அந்த அமைப்பு இப்போது ஃபலஸ்தீனியர்களுக்கு துணை நின்றுவிடக் கூடாது என்பதிலும் ஐரோப்பாவில் தங்களுக்கு ஏற்பட்ட நிலையை இப்போதைய ஃபலஸ்தீனியர்களின் நிலையுடன் யாரும் ஒப்பிட்டு பேசிவிடக் கூடாது என்பதிலும் யூதர்கள் கவனமாக இருந்தனர்.
இவ்வாறுதான் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் சேவை அமைப்பு (United Nations Relief and Work Agency – UNRWA)1950இல் நடைமுறைக்கு வந்தது. ஃபலஸ்தீனியர்கள் தங்கள் நிலங்களுக்கு திரும்புவது குறித்து எதுவும் பேசாத இந்த அமைப்பு, முகாம்களில் உள்ள பத்து இலட்சம் ஃபலஸ்தீன மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதிலும் மானியம் வழங்குவதிலும் மட்டுமே கவனம் செலுத்தியது. இப்போதும் இதைத் தான் இந்த அமைப்பு செய்து வருகிறது. ஃபலஸ்தீன அகதிகளின் இருப்பு மற்றும் அவர்களின் மீள் குடியேற்றம் குறித்து பேசாமல் இவ்விவகாரத்தில் இறுதி அத்தியாயத்தை எட்ட முடியாது.
இரண்டாவதாக, இரு நாட்டு கொள்கையை நடைமுறைப்படுத்தாமல் இப்பிரச்சனை ஒரு முடிவுக்கு வராது. நிலங்களையும் வாழ்க்கையையும் இழந்த ஃபலஸ்தீpனயர்கள் விட்டுக் கொடுப்புகளுக்கு தயாராக உள்ள நிலையில் ‘அகண்ட இஸ்ரேல்’ கனவில் இருக்கும் சியோனிச தலைவர்கள் பிரச்சனையை அணையாமல் பார்த்துக் கொள்கின்றனர். ‘ஃபலஸ்தீன தேசம் இல்லாமல் அமைதி ஏற்படாது’ என்று தற்போதைய உடன்படிக்கை ஏற்படுவதில் முக்கிய பங்கு வகித்த கத்தார் நாட்டின் பிரதமர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவதாக, சர்வதேச சட்டங்களைத் தொடர்ந்து மீறி வரும் இஸ்ரேலுக்கு கடிவாளம் இட்டு, நடந்துள்ள மனித குலத்திற்கு எதிரானக் குற்றங்களுக்கும் இனப்படுகொலைக்கும் பொறுப்புக்கூறச்(Accountability) செய்யும் கடமை சர்வதேச சமூகத்திற்கு இருக்கிறது. இஸ்ரேலின் இனப்படுகொலையை உலகம் முழுவதும் பொது மக்கள் கண்டித்தனர். ஆனால் மக்களின் இந்த எதிர்ப்புகள் அரசின் கொள்கைகளாக மாற வேண்டும். மக்களின் தொடர் எதிர்ப்பும் போராட்டங்களுமே அரசாங்கத்தின் கொள்கைளில் மாற்றத்தை ஏற்படுத்தும். மக்கள் போராட்டத்தின் அழுத்தங்கள் காரணமாகவே சில நாடுகள் இஸ்ரேல் உடனான தூதரக உறவுகளை துண்டித்துள்ளன.
தடைகள் மற்றும் புறக்கணிப்புகள் மூலமும் இஸ்ரேல் மீது நெருக்கடிகளை ஏற்படுத்த முடியும். இனவெறியை தனது கொள்கையாகப் பின்பற்றிய தென்;னாப்பிரிக்கா மீது மேற்கொள்ளப்பட்ட தடைகளும் புறக்கணிப்புகளுமே அந்நாட்டில் இனவெறியை முடிவுக்கு கொண்டு வந்தது என்பது சமீபத்திய வரலாறு. எனவே, இனவெறி மற்றும் இனப்படுகொலையை தனது கொள்கைகளாக பின்பற்றி வரும் இஸ்ரேல் மீதும் இதே நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் மேற்கொள்ள வேண்டும். சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் BDS (Boycott, Divestment, Sanctions) அமைப்பின் கரங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். இவற்றை மேற்கொள்வதன் மூலமே ஃபலஸ்தீன விவகாரத்திற்கு தீர்வை காண முடியும். இல்லையென்றால், தாக்குதல்களும் சண்டை நிறுத்தங்களும் தொடரவே செய்யும்.