ஈழத்தில் ஜேவிபி – இனப் பிரச்சனைக்கு தீர்வு வந்துவிட்டதா? – தோழர் செந்தில்

04 Dec 2024

ஓயாத அலைகளாய் விடுதலைப் போர் எழுந்த களத்தில் அநுர அலை.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் 5 இடங்களும் கிழக்கில் 2 இடங்களும் எனத் தமிழர் தாயகப் பகுதிகளில் தென்னிலங்கையைச் சேர்ந்த கட்சியான ஜேவிபி பங்குபெற்றிருக்கும் தேசிய மக்கள் சக்தி ( National Peoples Power என்பிபி) வெற்றி பெற்றிருக்கிறது.

அதிபர் தேர்தலில் அநுரவுக்கு கிடைத்த வாக்குகளைவிட நாடாளுமன்ற தேர்தலில் அதிக ஆதரவு கிடைத்துள்ளது. தென்னிலங்கையில் மட்டுமல்ல வடக்கிலும் இதுவே நிலை. அதிபர் தேர்தலின் போது சிங்கள தேசத்தில் மட்டும் வீசிய அநுர புயல் மலையகம், கிழக்கு, வடக்கு என ஒட்டுமொத்த சிறிலங்காவையும் விட்டுவைக்கவில்லை.

கடந்த நவம்பர் 15 அன்று முடிவுகள் வெளிவந்ததில் இருந்து இன்றைக்கு வரை தேர்தல் முடிவுகள் மீதான மதிப்பாய்வுகள் வந்த வண்ணம் உள்ளன.

சிங்களர்களும் தமிழர்களும் ஒரு பொது உணர்வை வெளிப்படுத்தியிருப்பதாகச் சொல்லி தமிழ் மக்களிடையே நடந்துள்ள இந்த மாற்றத்தை வரவேற்று சிறிலங்காவின் அரசியல் வரலாற்றில் இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான புதிய தொடக்கமாக இது அமைய வேண்டும் என்று நல்மனம் படைத்தோர் தமது மனவிருப்பங்களைப் பரப்பி வருகின்றனர்.

வழமையாக வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்த்தேசியத்திற்கு வாக்களிக்காத ஒரு வாக்கு வங்கி இருக்கிறது. அதுதான் என்பிபிக்கு கிடைத்த வாக்குகள் என்றும் தமிழீழக் கோரிக்கையை ஏற்காத டக்லஸ், அங்கஜன் போன்றோர் வடக்கிலும் கருணா, பிள்ளையான் போன்றோர் கிழக்கிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஈழ உணர்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதன் மூலம் வடக்கிலும் கிழக்கிலும் என்பிபி பெற்றிருக்கும் வெற்றி சற்றே மிகைப்படுத்தப் படுவதை அறியலாம். அதேநேரத்தில், சிறிலங்கா தழுவிய அளவில் என்.பி.பி.க்கு கிடைத்திருக்கும் ஆதரவின் பகுதியாக தமிழப் பகுதிகளிலும் ஆதரவு கிட்டியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மைதான்.

தமிழர்களில் என்பிபிக்கு வாக்களித்தவர்களில் இனச்சிக்கலுக்கும் அன்றாட வாழ்க்கை நெருக்கடிக்கும் இடையே உள்ள உறவைக் காணத் தவறி அன்றாட வாழ்க்கை நெருக்கடியை முதன்மைப்படுத்துபவர்களும் ஏற்கெனவே உள்ள தமிழ்த்தேசிய கட்சிகளின் செயலின்மையால் அதிருப்தியுற்றவர்களும்   அடங்குவர் என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. அநுரவின் மனதை உருக்கும் பேச்சில் மயங்கி அவரை இனவாத அரசியலுக்கு எதிரானவராக நம்பிக்கை கொள்வோரும் இருக்கிறார்கள்.

தேசிய விடுதலைப் போராட்டங்கள் நடந்துவரும் சம்மு காசுமீரில் கூட ஒவ்வொரு தேர்தல் களத்தையும் சில உடனடிப் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான களமாக மக்கள் பாவிப்பதுண்டு. அதற்காக, அத்தேர்தல் முடிவுகளைக் கொண்டு காசுமீர் விடுதலைக் கோரிக்கையை அவர்கள் கைவிட்டு விட்டதாக மதிப்பாய்வு செய்யப்படுவதில்லை. 

இந்திய மக்களவைத் தேர்தலில் கடந்த 3 முறை பாசக தெரிவு செய்யப்பட்டு இந்திய மக்களால் ஆட்சியில் அமர்த்தப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் தமிழ்த்தேசியத்தைக் கைவிட்டுவிட்டனர் என்று மதிப்பிட்டு மகிழ்ச்சி அடையும் இந்திய இடதுசாரிகளும் தாராளியர்களும் பாசகவுக்கு வாக்களித்தோரெல்லாம் இந்துத்துவத்தை( இந்து தேசியத்தை) ஏற்றுக் கொண்டவர்கள் என்று விளக்கம் சொல்வதில்லை. 

தமிழ் மக்கள் தென்னிலங்கை கட்சிக்கு வாக்களிப்பது இனிவரும் காலங்களிலும் தொடருமானால் இந்த தேர்தல் முடிவை. ஒரு புதிய திசைப் போக்கின் தொடக்கமாக மதிப்பிடலாம்.

 இதற்கிடையே, வெவ்வெறு தரப்பினர் தமிழ் மக்கள் என்பிபிக்கு வாக்களித்ததைப் பற்றி சொல்லியிருக்கும் கருத்தை இங்கே பகிர்கிறேன்.

அண்மையில் ( 20-11-2024) யாழ்ப்பாணத்தில் உள்ள ஊடக சந்திப்பு  மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் சீனத் தூதர் ஒரு கருத்தைச் சொன்னார். இனப் பிரச்சனைக்கு தீர்வைப் பற்றிய கேள்விக்கு, “நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருப்பதாகவே தான் கருதுவதாகவும். இலங்கை வரலாற்றிலே முதல் முறையாக தெற்கை மையப்படுத்திய கட்சியான என்பிபிக்கு வாக்களித்திருக்கிறார்கள்….பருத்திதுறையில் “பலவகைமைக்குள் ஒற்றுமையே சிறிலங்காவின் பலம்” என்ற வாகசத்தைப் பார்த்ததாகவும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அந்த வாசகம் மெய்ப்பிக்கப் பட்டிருப்பதாகவும் சீனா இதை பார்த்து பெரிதும் மகிழ்வதாகவும் அவர் கூறினார்.

வட பகுதி மக்கள் இனவாதத்தைக் கைவிட்டுத் தமக்கு வாக்களித்திருப்பதாக என்.பி.பி. தலைவர் ரில்வின் சில்வா கூறுகிறார்.

”இனி வரும் காலங்களில் ஜெனிவாவில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று கூற முடியாது” என்று சட்டத்தரணி பிரதீபா மகாநாம கூறியுள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணி என்ற இனவாத அமைப்பின் தலைவர் விமல் வீரவன்ச ( நவம்பர் 18) இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்குத் தாம் எதிரானவர்கள் என்ற செய்தியை தமிழ் மக்கள் வழங்கியுள்ளதாக, ஒற்றை ஆட்சிக்குள் அனைத்து இன மக்களும் சம உரிமை கிட்டும் வகையிலான பயணத்தைத் தொடர வேண்டும் என்பதற்குரிய ஆணையே அதுவென்றும் கூறுகிறார்.

அதிபர் அநுர புதிய நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையில், ”இனவாதம்  அரசியல் கருத்தியலின் மையப் புள்ளியாக மாறும் போது அதை எதிர்க்கும் தரப்புகளிடம் இருந்து எதிர் இனவாதம் எழுந்துவரும். ஒருபகுதியில் முளைக்கும் இனவாதம் இன்னொரு பகுதியில் தேசியவாதத்திற்கு உரமூட்டும்” என்று கடந்த காலம் பற்றி பேசியுள்ளார்.

யாழ் பல்கலைக் கழக விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர் நவம்பர் 21 ஆம் தேதியிட்ட இந்து ஆங்கில ஏட்டுக்கு எழுதிய நடுபக்கக் கட்டுரையில், என்பிபி வடக்கில் வெற்றி பெற்றிருப்பது தமிழ்த்தேசிய அரசியலின் தோல்வி என்றும் இந்த தோல்வி முன்பே நிகழத் தொடங்கிவிட்டது என்றும் எழுதியுள்ளார்.

நவம்பர் 22 ஆம் தேதியிட்ட இந்து ஆங்கில ஏட்டில் திரு டி.இராமகிருஷ்ணன், தமிழரசு கட்சியைவிடவும் அதிக வாக்குகளை என்பிபி பெற்றிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி தமிழ்த்தேசிய அரசியல் ஆற்றல்களின் பிடியில் இருந்து வடக்கைச் சேர்ந்த வாக்காளர்களில் ஒரு பகுதியினர் வெளிவந்திருக்கின்றனர் என்று வல்லுநர்களில் ஒரு சாரார் தெரிவிப்பதாகவும் சிறுபான்மையினர் தேசிய மக்கள் சக்தியைப் பண்புவகைப்பட்ட மாற்றாக காணத் தொடங்கி விட்டனர் என்பதே முகன்மைச் செய்தி என்றும் எழுதியுள்ளார். 

மேற்படி பல்வேறு கருத்துகளின் மைய இழையாவது – தமிழர்கள் இனவாதத்தை அல்லது பிரிவினைவாதத்தை அல்லது தென்னிலங்கை நீரோட்டத்தில் இருந்து விலகி நிற்கும் குறுகிய அரசியலைக் கைவிட்டு விட்டனர் என்றும் தமிழ்த்தேசிய அரசியல் பிடியில் இருந்து விலகிவிட்டனர் என்றும் விளக்குவதாகும்.

சிறிலங்காவில் ஒரு புதிய அரசியல் மாற்றம் என்பது வரவேற்புக்குரியதாகப் பார்க்கப்படுகிறது. சிங்கள மக்களின் அரசியல் வரலாற்றைப் பொருத்தவரை இது ஒப்பீட்டளவில் வரவேற்கத்தக்க மாற்றம்தான். தமிழ் மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையை ஏற்கின்ற இடதுசாரி அமைப்புகளை அவர்கள் தெரிவு செய்திருந்தால் அது ஒரு புரட்சிகர மாற்றமாக அமைந்திருக்கும். ஜேவிபியைத் தெரிவு செய்ததில் இருந்து சிங்கள பெளத்த பேரினவாதப் போக்கில் இருந்து சிங்களப் பெரும்பான்மை மக்கள் விலகிவிடமில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.

 தமிழ்த் தரப்பைப் பொருத்தவரை அதில் ஒரு சாரார் தமிழ்த்தேசிய கட்சிகள் மீது ஏற்பட்ட சலிப்பில் இருந்தும் அநுரவின் வசீகரமிக்க, ஆழமற்ற பேச்சில் மயங்கியும் என்பிபிக்கு வாக்களித்தமை  தமிழ் மக்கள் தமிழ்த்தேசிய அரசியலைக் கைவிட்டுவிட்டனர் என்றும் இன்னும் ஒருபடி மேலே போய் இனவாதத்தைக் கைவிட்டுவிட்டனர் என்றும் விளக்கப்படுவதற்குத்தான் உதவியிருக்கிறது.

இன ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய தமிழர்களின் இனவுரிமைப் போராட்டத்தை குறுகிய எண்ணமாகவும் இனவாதமாகவும் சித்திரிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

ஜேவிபியை இடதுசாரிக் கட்சியாக மதிப்பிட்டு இந்த ஆட்சி மாற்றத்தைக் கண்டு பெரிதும் மகிழ்வோர் காணத் தவறும் சில வரலாற்று அடிப்படைகள் உள்ளன.

  1. சிங்களப் பெளத்த பேரினவாதத்தை எதிர்த்து உருப்பெற்றதுதான் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் ஆகும். அதுதான் முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போராக முடிவுபெற்றது. போரின்   வெற்றி நாயகர்களாக முடிசூடிக் கொண்ட இராசபக்சேக்கள் நாட்டைக் கொள்ளையடித்தனர். போரினாலும் படைச்செலவாலும் நாட்டைக் கொள்ளையடித்ததாலும் விளைந்த பொருளியல் நெருக்கடியை எதிர்த்து அரகலயப் போராட்டம் நடைபெற்று அதன் பெறுபேறாய் என்.பி.பி. ஆட்சிக்கு வந்துள்ளது. போர் – பொருளியல் நெருக்கடி – அரகலயப் போராட்டம் – என்பிபி வெற்றி என்பதைப் பிரித்துப் பார்த்துவிட முடியாது.
  2. சிக்கலின் மையம் என்ன?  தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் எல்லோரும் இலங்கையர்கள் என்பதில் சிக்கல் இல்லை. இம்மக்கள் தேசிய சிறுபான்மையினரா? தேசிய இனமா? என்பதில் தான் சிக்கல். வடக்குகிழக்கை தமிழர் தாயகமாகவும் தமிழர்களை ஒரு தேசிய இனமாகவும் தமிழர்களுக்கு தன் தீர்வுரிமை இருப்பதையும் ஏற்காத நிலைப்பாட்டில் இருந்து ஒற்றையாட்சி அரசமைப்பின் வழியாக தமிழ் மக்களின் இறைமையை மீறியதே இதுவரையான குருதி தோய்ந்த வரலாற்றுக்கு காரணம்.   
  3. இது ஒரு சில தலைவர்களின் வன்மத்தால் விளைந்தது அல்ல. சிறிலங்காவின் அரசியல் வரலாற்றுக் கட்டமைப்பாக சிங்கள பெளத்த பேரினவாதம் வளர்ந்து நிற்கிறது. ஜேவிபி வடக்கு கிழக்கை தமிழர்கள் தாயகமாக ஏற்கவில்லை, தமிழர்களை ஒரு தேசிய இனமாகவும் ஏற்கவில்லை. தமிழர்களுக்கு தன் தீர்வுரிமை வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதனால், வடக்கு கிழக்கை பிரிப்பதற்கு வழக்கு தொடுத்தது, 13 ஆவது சட்டத் திருத்தத்தை எதிர்த்தது. தமிழர்களை தேசிய சிறுபான்மையினராக பாவிப்பதே ஜேவிபியின் நிலைப்பாடாகும். இந்த வேறுபாட்டைப் புரியாதவர்கள்தான் மனதை உருக்கும் அநுரவின் பேச்சில் மயங்கிப் போகின்றனர்.                               

அரசமைப்புச் சட்டத்தில் உள்ள ஒற்றையாட்சிப் பண்பில் ஓர் எழுத்தை மாற்றுவதற்குகூட ஜேவிபி உடன்படாது. இதன் தொடர்பில் எவ்வித வாக்குறுதியையும் இதுவரை ஜேவிபி வழங்கி விடவும் இல்லை.                                                      

மாறாக, அநுர அரசின் வெளியுறவு துறை அமைச்சர் விஜித ஹேரத், செப்டம்பர் 24 ஆம் நாள் அனைத்து இலங்கை பெளத்த பேராயம் நடத்திய கருத்தரங்கில் ஆற்றிய உரையில், பெளத்திற்கு முகன்மைத்துவம் கொடுக்கும் உறுப்பு 9 மாற்றப்படாது, சிறிலங்காவின் ஒற்றையாட்சியில் எவ்வித மாற்றமும் இருக்காது, 13 ஆவது சட்டத்திருத்தமும் மாகாணங்களும் இனச்சிக்கலுக்கு தீர்வாகாது என்பதே எமது நிலைப்பாடு. ஆனாலும், அவை அரசமைப்புச் சட்டத்தில் இருக்கின்றன. நில அதிகாரமும் காவல் அதிகாரம் வழங்கப்பட மாட்டாது. நேற்று, இன்று, நாளை என என்றும் எமது நிலைப்பாடு இதுவே” என்று பேசியுள்ளார்.

  1. தமிழர்களுக்கு எதிராக இனவழிப்புக் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரானக் குற்றங்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் ஜேவிபியின் நிலைப்பாட்டிற்கும் இன்னபிற சிங்கள கட்சிகளுக்கும் வேறுபாடு எதுவும் இல்லை என்பதை கடந்த அக்டோபரில் ஐ.நா. மாந்த உரிமைப் பேரவையில் அநுர அரசு எடுத்த நிலைப்பாட்டில் இருந்து அறியலாம்.

தமிழ் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக புதிய அரசியல் தலைமையை உருவாக்கிக் கொள்வதும் போராட்டங்களை கட்டியெழுப்புவதும் தமிழ்த்தேசிய ஓர்மைக்கு பாடுபடுவதும் இன்றியமையாதது என்பதே தமிழீழ விடுதலை ஆற்றல்களுக்கு இத்தேர்தல் கொடுக்கும் செய்தியாகும்.

ஜேவிபி ஓர் இடதுசாரிக் கட்சி என்று சொல்வோர் இசுரேலை உற்று கவனிப்பாராக. 

சிங்களப் பெளத்த பேரினவாத அரசு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்காக, பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர் என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லிக் கொண்டு தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்புப் போரை நடத்தி முடித்தது.

 அதைப்போலவே யூத இனவெறி இசுரேல் அரசு ஹமாசுக்கு எதிரானப் போர் என்ற பெயரில் பாலத்தீன இனவழிப்புப் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. இதில் இனவழிப்புக் குற்றங்கள், மனிதக் குலத்திற்கு எதிரானக் குற்றங்கள், போர்க்குற்றங்கள் நடந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கடந்த வாரம், 21-4-2024 அன்று பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் இசுரேல் தலைமையமைச்சர் பென்சமின் நெதன்யாகுவையும் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவா கல்லண்ட்டையும் பாலத்தீனர்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரானக் குற்றங்கள் இழைத்த குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்வதற்கு பிடியானை பிறப்பித்திருக்கிறது. இசுரேல் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து தரப்பும் இதை எதிர்த்துள்ளன.

ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் யூதருமான ஓபர் காசிஃப் இதை வரவேற்று, ” இது யூத எதிர்ப்புவாதம் அல்ல, இது நீதிக்கான சரியான, நியாயமான அறைகூவலாகும். எவரும் பன்னாட்டுச் சட்டத்திற்கும் மாந்த நீதிக்கும் மேலானவர்கள் கிடையாது” என்று சொல்லியுள்ளார்.

ஓபர் காசிஃப் இசுரேல் கம்யூனிஸ்ட் கட்சியைக் கருவாக கொண்ட ஹடாஷ் ( Hadash) என்ற முன்னணியைச் சேர்ந்தவர். இவரை இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர் என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றனர். இனவெறி கோலோச்சும் ஒரு நாட்டில் இது போன்ற நிலைப்பாடு எடுக்கத் துணிபவர்கள்தான் இடதுசாரிகள்.

மேலோட்டமான பார்வையில் இருந்து விசயங்களைப் பார்க்காமல் இனச்சிக்கல் தொடர்பில் என்பிபியின் நிலைப்பாட்டில் இருந்து அதை மதிப்பிடப்பட வேண்டும்.

அரசியல் என்பது நல்லெண்ணங்களாலும் நம்பிக்கைகளினாலும் வழிநடத்தப்படுவதல்ல. ஏனெனில், அரசியல் அற்ற நல்லெண்ணங்கள் சில வேளைகளில் நரகத்திற்கு வழிவகுக்கக் கூடும்.

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW