தலித் மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு கிரீமிலேயர் முறை ஏன் கூடாது? – வ. ரமணி
கடந்த ஆக்ஸ்ட் மாதம் உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வானது, எஸ்சி எஸ்டி மக்களுக்கான உள் ஒதுக்கீடு செய்வதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளித்தது. இதன் மூலம் தமிழ்நாட்டில் அருந்ததியர்களுக்கான 3 சதவீதம் உள் ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. (இதுபோன்று FC,BC,MBC, ஆகிய பிரிவுகளில் உள்ள பின் தங்கிய சாதிகளுக்கும் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்ப வேண்டும்.) அதே போல் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கும் கிரீமிலேயர் முறையை அமலாக்க வேண்டும் என்று சில நீதிபதிகள் கருத்துக் கூறியிருப்பது விமர்சனமாகியிருக்கிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிலரின் இத்தகையப் போக்கு ஜனநாயக விரோதமானதாகவும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகவும் இருப்பதைக் கண்டித்துப் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இட ஒதுக்கீட்டு உரிமையிலிருந்து தலித் மக்களை, பழங்குடியினரை விலக்கி வைப்பதற்கான உள் நோக்கமாகவே இதனைப் பார்க்க வேண்டும்.
எப்பொழுதெல்லாம் இடஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்றத்தில் வழக்கு வருகிறதோ அப்போதெல்லாம் பட்டியல் சாதிகளுக்கும் பட்டியல் பழங்குடியினருக்கும் கிரீமிலேயர் முறை அமலாக்க வேண்டும் என்ற கருத்தும் அது மீடியாக்கள் வழி விவாதப்பொருளாவதும் ஆபத்தானது. இதற்கு மத்திய அரசு மறுப்புத் தெரிவித்து விட்டது. என்றாலும், சமூகத்தில் இதுகுறித்த உரையாடல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சமூகத்தில் பின்தங்கிய ஒவ்வொரு மக்கள் பிரிவினரும், மக்கள் தொகைக்கு ஏற்பக் கூடுதலாக இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்பதும் கோரிக்கையாக மாறியிருக்கின்றது. இந்தச் சூழலில் பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடியினருக்கு கிரீமி லேயர் எனும் வரைமுறை அறவே பொருந்தாது என்பதையும் தரவுகளிலிருந்து நாம் அழுத்தமாக எடுத்துரைக்க வேண்டியிருக்கிறது. முதலில் கிரீமி லேயர் என்பது குறித்துப் பார்ப்போம்.
கிரீமிலேயர் என்பது என்ன?
கிரீமி லேயர் என்பது, சமூகப் பொருளாதார ரீதியில் வசதிபடைத்தவர்கள், வாழ்க்கையில் மேம்பட்ட பிரிவினர் என்று பொருள். கிரீமி லேயர் வரையறை என்பது, அரசு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் கடைபிடிக்கப்படும் இடஒதுக்கீடு சலுகைகளில் இருந்து விலக்கி வைக்கப்படும் வரம்பாக உள்ளது. குறிப்பாக 1990 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட ஓபிசி பிரிவினருக்கான 27% இடஒதுக்கீட்டை எதிர்த்து 1992 ஆம் ஆண்டு இந்திரா சாவ்னி மற்றும் யூனியன் ஆஃப் இந்தியா தொடுத்த வழக்கில் கிரீமி லேயர் குறித்த விவாதம் வந்தது. 1991 ஆம் ஆண்டில் நரசிம்மராவ் அரசு ஓபிசி மக்கள் பிரிவினரில் ஏழை பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கிரீமிலேயர் முறை கொண்டுவரப்பட்டது.
அதன் பின் 1993ல் அமைக்கப்பட்ட ஆர்.என்.பிரசாத் தலைமையிலான நிபுணர் குழுவும் கிரீமி லேயர் வரைமுறையை தீர்மானித்தது. அதாவது உச்ச வரம்பு வருமானம் 1 லட்மாக ஆக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டில் வருமானம் 2.50 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்கள் என்று வரையறுக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் 6 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. பின் இந்த வரையறை 6 லட்சமாகவும் பின் 8 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது. தற்போது 11 லட்சமாக உயர்த்திட வேண்டும் என்ற கோரிக்கை ஓபிசி மக்களிடமிருந்து வைக்கப்படுகிறது. மேலும் குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள், மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளில் உள்ள குரூப் 1, 2 ஆகியவற்றில் உயர்மட்ட அதிகாரிகள், பொதுத்துறை நிறுவன அதிகாரிகள் ஆகியோரின் வாரிசுகளுக்கும் இட ஒதுக்கீட்டின் பலன் கிடைக்காது என்கிறது.
இத்தகைய கிரீமி லேயர் எனும் வரையறை, சமூக ரீதியாகவும் சாதிய ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கடைநிலையில் உள்ள பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின மக்களுக்குப் பொருந்துமா? என்று பார்ப்போம்.
இந்திய சாதிய சமூகத்தில் நூற்றாண்டுகளாக சமூக ரீதியாக, பின்தங்கிய மக்கள் பிரிவினராக இன்றைக்கும் இருப்பவர்கள் தலித் மக்கள் மற்றும் பழங்குடியினர் ஆவர். இந்தியா எங்கும் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் நிலமற்றக் கூலித்தொழிலாளர்களாக பெரும் எண்ணிக்கையில் உள்ளவர்கள் இப்பிரிவு மக்கள்தான். அதற்கடுத்த நிலையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளனர். தூய்மைப் பணி, பாதாள சாக்கடை சுத்தம் செய்வது, செருப்பு தைப்பது, தோல் தொழில் செய்வது, முடி திருத்தம் செய்வது போன்ற தொழில்களை செய்பவர்களாக இவர்களே இருக்கிறார்கள். இவர்கள் கண்ணியமான வேலையில் இருந்து அப்புறப்படுத்தப்படுகிறார்கள். மனுவாதக் கோட்பாட்டை நிலைநிறுத்தும் வகையில், நிலங்கள் பறிக்கப்பட்டு, கல்வி மறுக்கப்பட்ட சேவை சாதிகளாகவே வாழும் அநீதி காலம் காலமாய் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இத்தகைய நலிந்த பிரிவு மக்களின் நலனுக்காக 1892 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு செங்கல்பட்டு ஆட்சியர் முன்வைத்த தரவுகளின் அடிப்படையில் 12 லட்சம் ஏக்கருக்கும் மேலான பஞ்சமி நிலங்கள் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்டது. நிலத்தின் மீது அவர்களுக்கான அதிகாரத்தை உறுதிசெய்யும் விதமாக, 35 ஆண்டுகளுக்கு அவற்றை விற்கக் கூடாது என்பதற்கான ஆணையை பிறப்பித்தது. இன்றைய காலகட்டத்தில் அந்த நிலங்களும் இம்மக்களிடம் இல்லை. தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு சமூகத்தில் ஒரு தளர்வை உருவாக்கியிருந்தது. அதுவரை வரலாற்றில் இல்லாதவாறு மறுக்கப்பட்ட நிலவுரிமை பிரிட்டிஷ் ஆட்சியில் சற்று மூச்சுவிடும் அளவில் சுதந்தரக் காற்றை சுவாசிக்க வைத்தது. வளர்ந்து முதலாளித்துவ வளர்ச்சி சீர்திருத்தம் எனும் சில மாற்றங்களை செய்ததோடு நின்றுவிட்டது. சாதியக்கட்டமைப்பை முழுமையாக தகர்க்கும் வகையில் பெரும் மாற்றங்களை செய்யவில்லை. சாதிய தீண்டாமை ஒடுக்குமுறையை நசுக்கும் வகையில் வேறு ஒரு கட்டமைப்பை உருவாக்கிடவில்லை.
இன்றைய நூற்றாண்டிலும் நிலமற்றக் கூலிகளாக இடம்பெயர்ந்து வாழும் மக்கள் இவர்கள்தான். இவர்களுக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு மத்திய மாநில அரசுகள் ஒதுக்கும் சிறப்பு உட்கூறுத்திட்டத்திற்கான நிதியும் துணைத் திட்டத்திற்கான நிதியும் வேறு துறைக்கு செலவு செய்யப்படும் அநீதி நடக்கிறது. அல்லது களவாடப்படுகிறது; நிதி திருப்பி அனுப்பப்படுகிறது. ஆக தலித் மற்றும் பழங்குடியினர், உழைக்கின்ற சாமானிய மக்கள் சமமாக வளர்ந்துவிடக் கூடாது என்ற சா‘தீ‘ய, அதிகாரவர்க்க நோக்கமே எங்கும் தீர்மானகரமாகப் பங்காற்றுகிறது. திட்டமிட்டு இம்மக்களின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது. ஆகவேதான் இம்மக்களின் நலனிலிருந்து சமத்துவம், சனநாயகம் எனும் நோக்கிலிருந்து இடஒதுக்கீட்டு உரிமைக்கும் சமூக ரீதியிலான இம்மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பது அவசியமாகிறது. இவற்றிலும் கீழ்நிலையில் உள்ள வளர்ச்சிப்பெறாத பிரிவு மக்களுக்கு அரசு கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே முழுமையான சமூக நீதியை எட்ட முடியும்.
இத்தகைய சமூக அவலத்தை எதிர்த்துதான், தலைவர்கள் அயோத்திதாசர், ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய், சிங்காரவேலர், அம்பேத்கர், காந்தி மற்றும் தந்தை பெரியார், இரட்டைமலை சீனிவாசர், எம்.சி ராஜா, எல்.சி குருசாமி, ஜி.பி.மோரே, டி.வி.ராவ் பி.டி ரணதிவே, ஏ.எஸ்.கே. பி.வி சீனிவாசராவ், மணலூர் மணியம்மை, இரணியன், களப்பால் குப்பு, தமிழரசன், பாலன், சந்திரசேகர் சந்திரகுமார், மாடக்கோட்டை சுப்பு உள்ளிட்ட பல தலைவர்களும் அவர்கள் சார்ந்த கட்சிகளும் பார்ப்பனியத்திற்கும் பண்ணை ஆதிக்கத்திற்கும் பெண்ணடிமைத் தனத்திற்கும் எதிராகப் போராடினர். வட்டார இடைநிலை சாதிகளிலுள்ள ஆதிக்க சக்திகளுக்கு எதிராக, சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக, சாதி ஒழிப்பிற்காக பெரும் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினர். பலர் தியாகம் செய்தனர். இதன்விளைவு இந்தியா, தமிழ்நாடெங்கும் நில உரிமை, கூலி உயர்வு, சுயமரியாதை, சமத்துவம் போன்ற அடிப்படையான கோரிக்கையை வலுவாக்கியது. ஒடுக்கப்பட்ட, நீதி மறுக்கப்பட்ட பாட்டாளி மக்கள் நிமிர்ந்தெழ வழிவகுத்தது.
சாதியும் இட ஒதுக்கீடும்
இந்தியாவில் முதன் முதலில் ஏற்பட்ட இட ஒதுக்கீடே சாதி ரீதியான இடஒதுக்கீடுதான். இந்தியாவிலேயே முதன் முதலில் இட ஒதுக்கீட்டு அரசாணையைக் கொண்டுவந்த இடம் மைசூர் சமஸ்தானமும், சென்னை மாகாணமும் ஆகும். 1895 ஆம் ஆண்டில் மைசூர் சமஸ்தானத்தில் பார்ப்பனர் அதிக எண்ணிக்கையில் இருப்பதை எதிர்த்து பார்ப்பனரல்லாதார் குரல் எழுப்பினர். அதன்விளைவு 1902 ஆம் ஆண்டில் கோலாப்பூர் சமஸ்தானத்தின் சத்ரபதி சாகு மகாராஜா மன்னர், பார்ப்பனரல்லாத சாதியினருக்கு 50% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினார். அதுவரை பார்ப்பனர்கள்தான் அனைத்துத் துறைகளிலும் நிரம்பியிருந்தனர். 1921ல் நீதிக்கட்சித் தலைமையிலான மெட்ராஸ் மாகாண அரசு பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு 44%, முஸ்லிம்கள், ஆங்கிலோ இந்தியர்களுக்கு 16%, தலித் மக்களுக்கு 8% என அரசு வேலைகளில் இட ஒதுக்கீட்டை அமலாக்கியது. இதற்குத்துணை செய்யும் வகையில் 1942 ஆம் ஆண்டில் வைஸ்ராய் குழுவும் தலித் மக்களுக்கு 8% இடஒதக்கீட்டைப் பரிந்தரைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 1927 ஆம் ஆண்டில் (Communal G.O) கம்யூனல் ஜிஓ எனும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை நடைமுறையாக்கியது. இந்த இடஒதுக்கீட்டு முறை 1950 ஆம் ஆண்டுவரை அமலில் இருந்தது. இதனை எதிர்த்து வழக்குத் தொடுத்ததன் விளைவு மெட்ராஸ் மாகாணத்தில் அமலில் இருந்த கம்யூனல் ஜிஓ (Communal G.O) எனும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ அரசாணை செல்லாது என மெட்ராஸ் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இரண்டாவது வட்ட மேசை மாநாட்டின்போது தலித் மக்களுக்கு இரட்டை வாக்குரிமையுடன் கூடிய தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை டாக்டர் அம்பேத்கர் எழுப்பினார். இக்கோரிக்கையை பிரிட்டிஷ் அரசு ஏற்றுக்கொண்டது. ஆனால், காந்தி கடுமையாக எதிர்த்தார். அம்பேத்கரின் கோரிக்கையை தந்தைப் பெரியார் ஆதரித்தார். பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். காந்தியின் உண்ணாவிரத நெருக்கடியால் அம்பேத்கர் கோரிக்கையை திரும்பப்பெற்று பூனா ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பின் மாகாண சபைகளில் 148 இடங்களும், ஒன்றிய பாராளுமன்றத்தில் 10 இடங்களும் தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்டன.
1951 ஆம் ஆண்டில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக்கிட அரசியலமைப்பில் முதல் திருத்தம் செய்யப்பட்டது. 1990ல் ஓபிசி யினருக்கு 27% இட ஒதுக்கீட்டை பரிந்துரைத்து மண்டல் கமிசன் அறிக்கை அடிப்படையில் அன்றையப் பிரதமர் வி.பி. சிங் அமல்படுத்தினார். இடஒதுக்கீட்டின் வரம்பு 50% என்ற உச்ச வரம்பை நிர்ணயித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் “பொருளாதார மதிப்பீடு இட ஒதுக்கீட்டுக்கான அளவுகோல் கிடையாது“ என்றும் சுட்டிக்காட்டியது. இட ஒதுக்கீடு சட்டம் அமல்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் கடந்துவந்துள்ள நிலையில் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்திலும் நலிவுற்ற தலித் மற்றும் பழங்குடியினர் முன்னேறியிருக்கிறார்களா? மத்திய அரசின் உயர்பதவி மற்றும் அமைச்சகங்களில் இம்மக்களுக்கான பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளதா? அவர்களுக்கான இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதா? என்றால் இல்லை. அவர்கள் இன்றைக்கும் அடிமட்டத்திலுள்ள பணிகளில் மட்டுமே நியமிக்கப்படுகிறார்கள். இதுகுறித்து
ஆகஸ்ட் 4.8.2024 தேதியிட்ட “டைம்ஸ் ஆப் இந்தியா“ நாளிதழில் வெளியான மத்திய அரசின் புள்ளி விவரங்களைப் பார்க்கலாம்.
பட்டிலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினர் நலன் குறித்த 2023 நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்ட புள்ளிவிவரங்கள்,
மத்திய அரசின் அமைச்சகங்களில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் அதாவது 37% பேர் பட்டியல் சாதிகளைச் சேர்ந்தவர்கள். 7.4% பேர் பட்டியல் பழங்குடியினர் ஆவர்.
இதற்கு நேர்மாறாக, குரூப் ஏ வேலைகளில் பட்டியல் சாதிகள் 13% பேர், பட்டியல் பழங்குடியினர் 5.5% மட்டுமே உள்ளனர்.
குறைந்த அடுக்கு வேலைகளில் பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் அதிக பிரதிநிதித்துவம் காரணமாக இந்த குழுக்கள் மத்திய அரசு பதவிகள் மற்றும் சேவைகளில் அவர்களின் ஒட்டுமொத்த ஒதுக்கீட்டைவிட அதிகமாக நிரப்புவதாகத் தெரிகிறது. பட்டியல் சாதிகளைச் சேர்ந்தவர்கள் 18.4% பேர். பட்டியல் பழங்குடியினர் 7.4% பேர் இத்தகைய கீழ்நிலைப் பணிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்பெசல் டிரைவ்கள் தளர்வான தகுதிக்கான அளவுகோல்கள் மற்றும் முன் விளம்பரப் பயிற்சி இருந்தபோதிலும் மத்திய அரசின் அமைச்சகங்கள் அல்லது அரசுத் துறைகளில் ஆண்டுதோறும் நிரப்பத் தவறிய அல்லது பதவி உயர்வு அளிப்பதில் ஆயிரக்கணக்கான, ஒதுக்கப்பட்ட காலியிடங்கள் உள்ளன.
இந்தியா முழுவதும் குறிப்பாக வட மாநிலங்களில் தலித் மக்கள், பழங்குடிகள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டுக்கான போராட்டங்கள் வலுத்த வண்ணம் உள்ளன. இதற்கு செவி சாய்க்காத மோடி அரசு, உயர்சாதிகளின் வாக்குவங்கி நலனுக்காக முன்னேறிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டை அமலாக்கி சாதி ஆதிக்கத்தை உறுதிசெய்திருப்பதுடன் சாதிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த மறுக்கிறது.
45 மத்திய பல்கலைக்கழகங்களின் தரவுகள்
ஆசிரியர் பணியிடங்கள் 11% க்கும் குறைவான பட்டியல் சாதிகளும், 5% க்கும் குறைவான பட்டியல் பழங்குடியினரும் உள்ளனர். ஆசிரியர் அல்லாத பதவிகளுக்கு பட்டியல் சாதியினர் 10% க்கும் குறைவானவர்கள். பட்டியல் பழங்குடியினர் 5% க்கும் குறைவானவர்களே உள்ளனர். உண்மையில் ஒன்றிய, மாநில அரசுகளின் உயர்பதவிகளில் தலித் மக்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கான முழுமையான இட ஒதுக்கீடு நிரப்பப்படாத நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கீரீமிலேயர் குறித்துப் பேசியிருப்பது என்ன நோக்கத்திற்காக என்கிற கேள்வி எழுகிறது.
மேற்கண்ட தரவுகள் ஒருபுறம் என்றால் உண்மையிலேயே தலித் மக்கள் மற்றும் பழங்குடியினரின் சமூக பொருளாதார வாழ்க்கை நிலை எவ்வாறு உள்ளது என்பதை தரவுகளில். கவுண்டர் கரன்ட்ஸ் (countercurrents.org) எனும் ஆங்கில இணையதளத்தில் 21.8.24 தேதியில் வெளியான உபி யைச் சேர்ந்த அதில இந்திய மக்கள் முன்னணியின் மாநிலச் செயலாளர் தோழர் தினகர் கபூர் எழுதிய கட்டுரையிலுள்ள தரவுகள் என்ன சொல்கின்றன என்பதைப் பார்ப்போம்
பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினரின் வாழ்நிலை
பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியின மக்கள் கல்வி வேலைவாய்ப்பில் மட்டுமின்றி சமூகப் பொருளாதார நிலையிலும் அவர்களின் வாழ்க்கை நிலை எவ்வாறு உள்ளது என்பதைக் கள எதார்த்தத்திலிருந்து புரிந்துகொள்ள கீழ்க்கண்ட தரவுகளைக் காணலாம்.
இந்தியாவில் உயர்நிலைப் பணிகளில் 4.42 கோடி பட்டியல் சாதிக் குடும்பங்கள் உள்ளன. அதில் 3.95% குடும்பங்களுக்கு வேலை உள்ளது. இதில் 0.93% குடும்பங்கள் அரசு வேலைகளிலும் 2.47% குடும்பங்கள் தனியார் துறையிலும் வேலை செய்கின்றனர்.
- 83% தலித் குடும்பங்கள் மாதம் 5000க்கும் குறைவான வருமானத்தில் வாழ்கின்றனர்.
- 11.74% பேர் 5000 முதல் 10.000 வரையிலும், 4.67% பேர் 10.000க்கு மேல் சம்பாதிக்கிறார்கள்.
- 3.5% குடும்பங்கள் மட்டுமே 50.000க்கும் மேல் வருமானத்தில் வாழ்கின்றனர்.
- நிலமற்ற தலித் குடும்பங்கள் 42% பேர்.
- பழங்குடியினர் 35.3% பேர்.
- தலித் மக்களில் 94% பேரும் மற்றும் பழங்குடியினரில் 92% பேரும் உடல் உழைப்பை மட்டுமே நம்பியுள்ளனர். அல்லது வாழ்வாதாரத்திற்காக மற்ற மாநிலங்களுக்கு இடம் பெயர்கின்றனர்.
- 18.5% பேர் பாசனம் இல்லாத நிலத்தையும் 17.41% பேர் பாசன நிலத்தையும் 6.98% பேர் மற்ற வகை நிலங்களையும் வைத்துள்ளனர்.
- தலித் மக்களில் 23% பேர் நல்ல வீடுகளிலும் 12% பேர் பாழடைந்த வீடுகளிலும் 24% பேர் புல், பிளாஸ்டிக் அல்லாத மண்ணால் செய்யப்பட்ட குடிசைகளிலும் வாழ்கின்றனர்.
2024-25 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கை
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் மொத்த நிதி 48,20,512 கோடிகள். இவற்றில் 1,65,493 கோடி கள் (3.43%) பட்டியல் சாதியினருக்காகவும் 1,32,214 கோடிகள் (2.74 கோடி) பட்டியல் பழங்குடிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது இவர்களின் வளர்ச்சிக்கானது. இவற்றிலும் கூட கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காகவே அரசு முதன்மையாகக் கவனம் செலுத்துகிறது.
குறிப்பாக, 2023-24 மற்றும் 2024-2025 ஆம் நிதியாண்டுகளில் மோடி அரசு நிதி ஒதுக்கவில்லை. இந்தியாவில் உள்ள தூய்மைப் பணி தொழிலாளர்களுக்கு கடன்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்குவதற்கு பொறுப்பான தேசிய சஃபாய் கரம் சாரிஸ் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்திற்கு மிகக் குறைந்த தொகையான 1 லட்சம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 2022-23 க்கான பட்ஜெட்டில் 70 கோடியில் 11 கோடி மட்டுமே செலவிடப்பட்டது. தேசிய இயந்திரமயமாக்கப்பட்ட தூய்மைப்பணி திட்டத்திற்கு ஒதுக்கப்படும் 236.99 கோடிகள் போன்ற பெரிய பட்ஜெட்கள் பெரு நிறுவனங்களுக்கு பயன் அளிக்கும் நோக்கத்தில் உள்ளன. கூடுதலாக எஸ்சி-எஸ்டி நல நிதியிலிருந்து 2,140 கோடிகள் தொலைத் தொடர்பு உள் கட்டமைப்பை உருவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் இழப்பீடு வழங்குவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பழங்குடியினரின் நிலை
தலித் மக்களைவிட மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் பழங்குடி மக்கள். நாட்டின் மக்கள் தொகையில் 8.6% பேர் வசிக்கின்றனர். அவர்களில் 52% பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர். 54% மக்களுக்கு தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லை. 42.02% பேர் தொழிலாளர்கள். அதில் 54.50% பேர் விவசாயிகள். 32.60% பேர் விவசாயத் தொழிலாளர்கள். 87% மக்கள் முதன்மைத் துறையில் வேலை செய்கிறார்கள். பழங்குடியினரின் கல்வியறிவு விகிதம் 58.96% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 68.53% ஆகும். பெண்களின் கல்வியறிவு 49.35% ஆகும். 26.4% பேர் 5 ஆம் வகுப்புவரை படித்தவர்கள் 18.3% பேர் 8 ஆம் வகுப்பு படித்தவர்கள். 11.1% பேர் 10 ஆம் வகுப்பு வரையிலும் 5.7% பேர் 12 ஆம் வகுப்பு வரையிலும் 0.6% பேர் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பை முடித்தவர்கள். 2.2% பேர் பட்டம் பெற்றுள்ளனர். ஏறத்தாழ 70.6% பழங்குடியின ஆண்களும், 71.3% பழங்குடியின பெண்களும் 10 ஆம் வகுப்பிற்குப் பிறகு பள்ளியை விட்டு வெளியேறுகிறார்கள்.
மேற்கண்ட இரு தரவுகளும் எதைக்காட்டுகிறது? இத்தகைய சமூகப் பொருளாதார நிலையைக் கொண்டுள்ள பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கும் எவ்வாறு கிரீமிலேயர் வரையறை பொருந்தும்?
இச்சமூகத்தில் ஒரு பிரிவினர் வளர்ச்சியடைந்துள்ளனரா? இல்லையா? என்பதைக் கண்டறிய கீழ்க்கண்ட அம்சங்களை கணக்கில் கொள்ள வண்டும். நில உடைமை, மூலதன உடைமை, அரசு எந்திரத்தில் பிரதிநிதித்துவம், சட்டம் இயற்றும் அவையில் பிரதிதிநிதித்துவம் ஆகியனவாகும். இந்த நான்கு வரையறைகளில் நிலவுடமையும் மூலதன உடைமையும் முக்கியமானவை. இவைதான் உற்பத்தி சாதனங்களின் அங்கமாகும். ஒரு சமூகப் பிரிவினருக்கு உற்பத்தி சாதனங்களின் மீதான பிடி எந்தளவிற்கு இருக்கிறதோ அதிலிருந்துதான் கிரீமிலேயருடைய விழுக்காட்டை ஒதுக்கமுடியும். அவ்வாறு இருக்கையில் மேற்கண்டவற்றில் தலித் மக்கள் மற்றும் பழங்குடியினரின் பங்கேற்பு எந்தளவிற்கு உள்ளது என்பதையும் மத்திய மாநில அரசுகள் தரவுகளை வெளியிட வேண்டும். அப்பொழுது மட்டுமே கிரீமிலேயர் குறித்து விவாதிக்க வேண்டும்.
அதேபோல அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பில் இதுவரை என்னென்ன சாதிகள் பலன் பெற்றுள்ளனர் என்பதற்கான புள்ளி விவரங்களை மத்திய மாநில அரசுகள் வெளியிட வேண்டும். இன்றைய மக்கள் தொகைக்கு ஏற்றவாறு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். அதற்கு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அப்பொழுது மட்டும்தான் பலன் பெறாத மக்கள் பலன் பெற வழிவகுக்கும்.
தலித் மக்களின் சிக்கல் என்பது கல்வி வேலைவாய்பபில் முன்னேற்றம் என்பது மட்டுமல்ல, சமூகரீதியில் மட்டுமல்ல, அரசுக் கட்டமைப்பும் நிர்வாகமும் பெரும்பான்மை சாதிகளின் செல்வாக்கில் இயங்குகிறது. சாதிய அணிதிரட்சிக்கான தேர்தல் ஆதாயங்கள் சாதியை வலுப்படுத்துகிறது. ஆதலால்தான் தலித் மற்றும் பழங்குடி மக்கள் மீதான சாதிய வன்கொடுமையும் ஆதிக்க வெறிச்செயலும் சாதி ஆணவக் கொலைகளும் காவல்துறை, நிர்வாகத்தின் துணையோடு நாடு முழுவதும் அதிகரித்து கொண்டேயிருக்கிறது. அவற்றிலும் பாஜக ஆட்சிக்கு வந்தபின் இட ஒதுக்கீடு தொடர்ந்து கேள்விக்குட்படுத்தப்படுவதும் ஒரு பெரும்பான்மை சாதிக்கு எதிராக சிறிய சாதிகளை, மத ரீதியாக சிறுபான்மையினரை எதிராக நிறுத்தும் தந்திரத்தைக் கடைபிடித்து வருகிறது. இதன்மூலம் சாதிய வலிமையை உறுதி செய்கிறது. இது போன்று மக்களை பிளவுபடுத்தும் நோக்கத்தை முறியடித்திட, ஒன்றுபட்ட மக்கள் போராட்டத்தையும் இட ஒதுக்கீடு உரிமை, சமூக நீதிக்குரலையும் வலிமையாக்குவோம்.