மறைந்தார் சம்பந்தன் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் சேவகனாய்.. – செந்தில்
தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தன் தமது 91 ஆவது அகவையில் மறைந்துவிட்டார். கடந்த 60 ஆண்டுகால வரலாற்றின் ஏற்ற இறக்கங்களின் சாட்சியாகவும் பங்காளியாகவும் இருந்தவர்.
95% இந்துக்களைக் கொண்ட ஒட்டுமொத்த தமிழீழ மக்களில் 1% மட்டும் உள்ள புரோட்டஸ்டண்ட் கிறித்தவ சமயத்தைச் சேர்ந்த எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தமிழ்த்தேசியத்தின் தலைவராக செயல்பட்டாரெனில், வடக்கென்றும் கிழக்கென்றும் பிரதேச முரண்பாடு கொண்ட தமிழீழ மக்களிடையே, கிழக்கின் திருகோணமலையைச் சேர்ந்த சம்பந்தன் கடந்த 20 ஆண்டுகளாக ஈழத் தமிழ்த்தேசியத்தின் தலைவராக செயல்பட்டவர், தமிழ் மக்களிடையே வட்டார, சமய வேறுபாடு கடந்த தமிழ்த்தேசிய அரசியல் உணர்வு இருப்பதை விளங்கிக் கொள்வதற்கு செல்வநாயகமும் சம்பந்தனும் நல்ல எடுத்துக்காட்டுகளாகும்.
சம்பந்தன் ஒன்றுபட்ட இலங்கையில் அரசியல் தீர்வென்றும் நீதிக்கான போராட்டத்தில் நம்பிக்கையற்றும் இருந்தார். புலிகள் மீது விமர்சனம் கொண்ட இவர், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான காலத்தில் தமிழ் மக்களின் மீட்சிக்கு உழைத்திருக்க வேண்டும். மாறாக, சிங்களப் பேரினவாதத்தின் தொண்டராக மாறிப்போனார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் அமர்ந்தார்; இனவழிப்புக் குற்றவாளி சரத் பொன்சேகாவுக்கு ஃபீல்டு மார்சல் பட்டம் தர துணை போனார்; தமிழ் பகுதிகளில் பெளத்த விகாரைகள் நிறுவும் பண்பாட்டு இனவழிப்புக்குப் பக்கபலமாய் இருந்தார்; ஐ.நா. வில் சிறிலங்காவுக்கு கால அவகாசம் பெறுவதற்கும் துணை நின்று தமிழர்களின் முதுகில் குத்தினார். உண்மையில் அழிக்கமுடியாத கறைகளோடு அவர் மறைந்துவிட்டார்!
மரணம் மட்டுமே ஒருவருக்கு மன்னிப்புக் கொடுத்துவிடுவதில்லை. வரலாறு என்னும் கண்டிப்பான கிழவிக்கு தெரியாததென்று எதுவும் இல்லை, மன்னிக்கத் தெரியாததைத் தவிர.
தமக்கு செய்த சேவைக்காக எதிர்க்கட்சி தலைவர் பதவிக் காலம் முடிந்த பின்னும் சம்பந்தனை எதிர்க்கட்சி தலைவருக்கான வீட்டில் சிங்கள ஆட்சியாளர்கள் தங்க வைத்தனர். அவர் தமிழ் மக்களுக்கு செய்த இரண்டகத்திற்காக வரலாற்றில் சிறை வைக்கப்படுவார்.
நன்றி உரிமை